இந்தியா – ஆப்பிரிக்க அமைச்சர்கள் சந்திப்பு
ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள இந்திய – ஆப்பிரிக்க வர்த்தக அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையில் குழு ஒன்று ஆப்பிரிக்கா செல்கிறது. 2011 மே 21ஆம் தேதி இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது.
இரண்டாவது ஆப்பிரிக்க, இந்திய அமைப்பு மாநாட்டிற்கு முன்பாக இந்த வர்த்தக – தொழில் துறை அமைச்சர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த மாநாடு இம்மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் நான்கு நாள் பயணமாக எத்தியோப்பியா செல்கிறார்.
வளர்ந்து வரும் நாடுகளிள் நலனைப் பாதுகாக்கும் வகையில் பல தரப்பட்ட வர்த்தக பிரச்சினைகள் குறித்து தங்களது கருத்துகளை அமைச்சர்கள் பகிர்ந்துகொள்வார்கள். உலகளவிலான பொருளாதார நிலை, அவரவர்கள் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள், இந்திய, ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையே வர்த்தக மற்றும் முதலீடுகளை வலுப்படுத்துவது ஆகியவை குறித்து அமைச்சர்கள் தங்களது கருத்துகளைப் பரிமாறிக்கொள்வார்கள்.
புதுதில்லியில் நடைபெற்ற மாநாட்டைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாநாடு, நடைபெற இருக்கிறது. தில்லியில் நடந்த மாநாட்டின்போது இந்திய, ஆப்பிரிக்க ஒத்துழைப்பிற்கான திட்ட வரைவு நடவடிக்கை உருவாக்கப்பட்டது. இம்மாநாட்டையொட்டி இந்திய வர்த்தக – தொழில் துறை அமைச்சர் சர்மா, எத்தியோப்பிய நாட்டுப் பிரதமரை மே 21ஆம் தேதியன்று சந்தித்துப் பேசுவார். இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுகள் மற்றும் முதலீடுகள் குறித்து இச் சந்திப்பின்போது ஆலோசனை செய்யப்படும் என்று அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா இடையிலான வர்த்தகம், 2010ஆம் ஆண்டு 4600 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்தது. இது 2015ஆம் ஆண்டு 7000 கோடி அமெரிக்க டாலராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொலைத் தொடர்பு ஆட்டோ மொபைல், தகவல் தொழில்நுட்பம், மருந்துப் பொருட்கள், வேளாண்மை ஆகிய துறைகளில் இந்திய தனியார் நிறுவனங்கள் 2500 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடுகள் செய்துள்ளன என்று அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
==================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை