எண்ணெய்ப் பனை வளர்க்க ரூ.300 கோடி ஒதுக்கீடு
எண்ணெய்ப் பனை வளர்ப்பதற்கு 60 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு கூடுதலாக சிறப்புத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது எண்ணெய்ப்பனை 1.71 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு வருகிறது. இதற்கான விரிவான திட்டத்தை வேளாண் அமைச்சகம் தயாரித்துள்ளது.
இந்தச் சிறப்புத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக எட்டு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்கள் விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்தவுடன் நிதி விடுவிக்கப்படும். இத்திட்டத்திற்காக தமிழகத்திற்கு ரூ.33.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.192 கோடியும் கர்நாடக மாநிலத்திற்கு ரூ.33.6 கோடியும் ஒரிசாவிற்கு ரூ.17.76 கோடியும் மிசோராம் மாநிலத்திற்கு ரூ.14.8 கோடியும் குஜராத்திற்கு ரூ.4.8 கோடியும் மகாராஷ்டிர மாநிலத்திற்கு ரூ.96 லட்சமும் சட்டீஸ்கர் மாநிலத்திற்கு ரூ.48 லட்சமும் விடுவிக்கப்பட்டுள்ளது. தேசிய வேளான் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் இத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆராய்ச்சி மற்றும் ஆதார உதவிகளை வழங்க இந்திய வேளான் ஆராய்ச்சிக் குழுமத்திற்கு ரூ.இரண்டு கோடி வழங்கப்படும்.
எண்ணெய்ப் பனை மரங்கள் வளர்ந்து கனி கொடுக்க ஆரம்பிக்கும் வரையிலான நான்காண்டு காலத்திற்கு முழுவதுமாக பாதுகாப்புடன் பராமரிக்கப்பட வேண்டும். இந்த நான்காண்டு காலத்திற்கான பராமரிப்பு செலவை ஈடுகட்டவும் வருவாய் இழப்பை ஈடுகட்டவும் அடுத்த மூன்றாண்டுகளுக்கு மேலும் கூடுதலாக ரூ.150 கோடி தேவைப்படும். இதற்கான வரைவு அறிக்கையை வேளாண் அமைச்சகம் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ளது.
பாமாயில் உற்பத்தியை அடுத்த ஐந்தாண்டு காலத்திற்குள் ஐந்து லட்சம் டன் அளவுக்கு அதிகரிக்க வேண்டும். இதற்கான திட்டத்தை மத்திய வேளாண் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
===================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை