பெரிய இடத்தில் சின்னப் புத்தி

1

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

Nageswari_Annamalai2011 மே மாத மத்தியில் சர்வதேச நிதி அமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் என்பவர், நியுயார்க் நகரில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது அவர் தங்கியிருந்த அறையைச் சுத்தம் செய்ய வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதால் பாரிஸுக்குப் போகும் விமானத்திலிருந்து விமானம் கிளம்பப் பத்து நிமிஷங்களே இருந்தபோது, விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

நேரே நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, நீதிபதி அவர் மேல் ஒரு வழக்குப் பதிவு செய்து, அவர் செய்த தவறுக்கு அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து, அவரை விசாரணைக் கைதியாகச் சிறையில் வைத்தார். அவர் கைகளுக்கு விலங்கு மாட்டி, அவரை யாரும் அணுக முடியாத ஒரு தீவில் தனிச் சிறையில் வைத்தனர். அவர் இழைக்கவிருந்த குற்றம் அத்தனை மோசமானது என்று அமெரிக்க நீதிமன்றம் கருதியது.

அவரைக் காட்டிலும் செல்வமும் சீர்வாக்கும் மிகுந்த அவர் மனைவி, உடனே தன் கணவன் அவர் மேல் சுமத்தப்பட்ட குற்றத்தைச் செய்திருக்க முடியாது என்று அழுத்தமாகக் கூறியதோடு, உடனேயே அமெரிக்காவிற்குப் பறந்துவந்து, கணவனை ஜாமீனில் எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.  கான் பண பலமும் ஆள் பலமும் உள்ளவர் என்பதாலும் இப்படிப்பட்ட குற்றங்களை இவர் இதற்கு முன் இழைத்திருப்பதாலும் எளிதாக அமெரிக்காவை விட்டு பிரான்ஸுக்கு ஓடிவிடலாம் என்பதாலும் அப்படி ஓடிவிட்டால், இப்படிச் சந்தேகத்திற்கு உரியவர்களை மறுபடி குற்றம் நடந்த நாட்டிற்குக் கொண்டு வருவதற்குரிய ஒப்பந்தம் எதுவும் அமெரிக்காவிற்கும் பிரான்ஸுக்கும் இடையில் இல்லை என்பதாலும் இவருக்கு ஜாமீன் கொடுக்க நீதிபதி மறுத்தார்.

strauss kahn

இவருடைய வழக்கறிஞர்கள் இவரை ஜாமீனில் எடுப்பதற்குப் பத்து லட்சம் டாலர் ஜாமீன் பணமாகக் கொடுக்க ஒப்புக்கொண்டபோது, இவரை வீட்டுக் காவலில் வைத்து இவருடைய நடமாட்டத்தை இரவும் பகலும் கண்காணிக்கப் பாதுகாவலர்களை அமர்த்துவதென்றும் இவர் தன் கணுக்காலில் ஒரு சிறிய கருவியை (இவருடைய நடவடிக்கைகளைக் கண்காணிக்க) கட்டிக்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் முடிவுசெய்து இவருக்கு ஜாமீன் கொடுத்தது.

ஜாமீன் பெற்ற பிறகு இவரை எங்கே தங்கவைப்பது என்ற கேள்வி எழுந்தது. அவர் மனைவி வாடகைக்கு எடுத்திருக்கும் ஒரு வசதிகள் மிகுந்த அபார்ட்மெண்ட் கட்டத்தில் வைப்பது என்று முடிவானது. ஆனால் பத்திரிகைக்கார்களின் தொந்தரவு அதிகம் இருக்கும் என்பதால் அங்கு அவரைத் தங்கவைக்க, அந்தக் கட்டடத்தைச் சேர்ந்த பலர் எதிர்ப்புத் தெரிவித்ததால், இப்போதைக்கு அந்தத் திட்டம் கைவிடப்பட்டு இன்னொரு இடம் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவரைப் பாதுகாக்க நியமிக்கப்படும் பாதுகாவலர்களுக்கு ஆகும் செலவிற்கு கான் மாதம் $200,000 பணம் கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கட்டளை இட்டிருக்கிறது.

இவர், சர்வதேச நிதியமைப்பின் நிர்வாக இயக்குநர் என்றாலும் இவரையும் கைகளில் விலங்குகளைப் போட்டே அமெரிக்க போலீஸ் இவரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தது. இந்தச் செய்தியை அறிந்த பிரான்ஸ், எப்படி எங்கள் நாட்டின் செல்வாக்குள்ள ஒரு அரசியல்வாதியை இப்படி ஒரு சாதாரண மனிதரைப் போல் நடத்தலாம் என்று கொதித்தெழுந்தது. மேலும் பிரான்ஸில் அவர் இந்த விதமான குற்றம் புரிந்திருந்தால் அவர் சட்டத்திலிருந்து தப்பியிருக்கலாம் என்று அமெரிக்கப் பத்திரிகைகள் வெளியிட்ட செய்தியையும் கடுமையாக எதிர்த்தது.

Strauss Kahn

ஆனால் அமெரிக்கப் பத்திரிகைகள் அப்படி எழுதியதில் பெரிய தவறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் சர்வதேச நிதியமைப்பின் கட்டடத்திற்குள் அமெரிக்கச் சட்டங்கள எதுவும் செல்லுபடியாகாதாம். இதற்கு முன் இவர் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த, தன் கீழ் வேலை பார்த்த இரண்டு பெண்களோடு தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் அதைப் பற்றி அந்த நிறுவனம் எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்கவில்லை என்றும் அமெரிக்கப் பத்திரிகைகள் வாதிக்கின்றன. அந்த அமைப்பின் கட்டடத்திற்கு வெளியேயும் தான் செய்யும் இந்த மாதிரித் தவறுகள் தண்டிக்கப்படாமலே போய்விடலாம் என்று அவர் நினைத்துத்தான் இந்தத் தவறைச் செய்ய முயன்றார் என்பது இந்தப் பத்திரிகைகளின் வாதம்.

இவை ஒரு புறம் இருக்கட்டும். இவரை அமெரிக்கச் சட்டத்திலிருந்து விடுவிக்க வந்த இவர் மனைவி – தன் கணவன் இந்தத் தவறைச் செய்திருக்கவே முடியாது என்று ஆணித்தரமாகக் கூறியவர் – 2008இல் இவர் தன் கீழ் வேலை பார்த்த ஒரு ஹங்கேரியப் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதைப் பற்றி தன்னுடைய வலைப் பூவில் (blog) ‘அமெரிக்காவில் கண்டதும் கேட்டதும்’ என்ற தலைப்பில் எழுதியபோது “இம்மாதிரிச் சம்பவங்கள் தம்பதிகள் வாழ்க்கையில் நிகழுவது சகஜம்தான். அந்த ஒரு இரவுச் சம்பவத்தை நாங்கள் அப்போதே மறந்துவிட்டோம்” என்று எழுதியிருக்கிறார்! கணவன் – மனைவிக்கிடையில் ஒழுக்க விஷயத்தில் மனைவி இவ்வளவு தாராளமாக நடந்துகொள்வார் என்று இதுவரை எனக்குத் தெரியாது.

“இம்மாதிரியான இயற்கை உணர்வுகள் எல்லோருக்கும் ஏற்படலாம் என்றே வைத்துக்கொள்ளுவோம். ஆனாலும் மனித நாகரிகம் இது தவறு என்று அவருக்கு உணர்த்தவில்லையா?” என்று வியக்கிறார் அவருடைய நண்பர் குழாமில் ஒருவர்.

Strauss Kahn

Nafissatou_Diallo

அமெரிக்கச் சட்டத்தின் இரும்புப் பிடியிலிருந்து யாரும் – சர்வதேச நிதியமைப்பின் நிர்வாக இயக்குநர் உட்பட – தப்ப முடியாது என்பதை அறியும் போது மனதில் ஒரு நிறைவு ஏற்படுகிறது.  உலக நாடுகளிடையே தடாலடித்தனமாக நடந்துகொள்ளும் அமெரிக்கா, உள்நாட்டு அளவிலாவது சமதர்மத்தைக் கடைப்பிடிக்கிறது என்று அதைப் பாராட்டியே ஆக வேண்டும்.

இந்தியாவில் ‘ஒரு ஓட்டலில் கான் இப்படி ஒரு தவறு செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை பண்ணிப் பார்த்தேன். அறையைச் சுத்தம் செய்யும் அந்தப் பெண் கூறியதை யாரும் காது கொடுத்துக் கேட்டிருப்பார்களா? அப்படியே கேட்டிருந்தாலும் அந்தப் பெரிய மனிதரைக்  கைது செய்திருப்பார்களா? முதலில் அந்த மாநிலத்தின் தலைவரைக் கலந்து ஆலோசித்திருப்பார்கள். எளியவர்களுக்கு ஒரு சட்டம், வலியவர்களுக்கு ஒரு சட்டம் என்று நினைப்பவர்கள் இந்திய அரசியவாதிகள். கான் எந்தச் சலனமும் இல்லாமல் இந்தியாவை விட்டுப் பறந்திருப்பார்.

====================================================

படங்களுக்கு நன்றி: http://www.zimbio.com, http://www.browsebiography.com, http://news1.ghananation.com, http://badgals-radio.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பெரிய இடத்தில் சின்னப் புத்தி

  1. ஸ்ட்ராஸ் கான் விஷயத்தில் அமெரிக்க நீதிமன்றம் சரியான முறையில் நடவடிக்கை எடுத்தமைக்கு மனம் உவந்து பாராட்டலாம். இத்தகைய நிகழ்ச்சி, இந்தியாவில் நடந்தால் வழக்குப் பதிவு செய்யப்படாது! லாட்ஜ் நிர்வாகமும் அரசியல்வாதிகளும் காவல் துறை அதிகாரிகளும் ஸ்ட்ராஸ் கானிடம் பல லட்சங்களைப்
    பெற்று அவரைப் பறக்கவிட்டிருப்பார்கள்! சின்னப் புத்திக்குப் பல கோடிகளை விலை கொடுக்கும் நிலைக்கு கான் தள்ளப்பட்ட பிறகும் தண்டனையையும் எதிர் நோக்கி இருக்கிறார். பழைய தவறுகளுக்கும் சேர்த்து தண்டனை இறைவன் கொடுக்கிறான் போலும். வள்ளுவர் குறள் “தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
    வீயாது அடிஉறைந் தற்று” பொருத்தமாக உள்ளது.

    – இரா. தீத்தாரப்பன், இராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.