பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 30

0

சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

 

E.Annamalai

செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி – 4:

உலக நாடுகளில் தாய்மொழி வழிக் கல்வியினால் ஏற்பட்ட ஆராய்ச்சி வளர்ச்சி நிலைகளைத் தமிழ்நாட்டின் தமிழ்வழிக் கல்வியோடு ஒப்பிட்டுக் கருத்துரைக்க வேண்டுகிறேன்.

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

ஆராய்ச்சி வளர்ச்சி நிலை என்பதை அறிவு வளர்ச்சி நிலை என்று புரிந்துகொண்டு பதில் எழுதுகிறேன். ஐரோப்பாவில் கிறிஸ்துவ மதச் சீர்திருத்தம் (Reformation) நடந்த காலம், பதினாறாம் நூற்றாண்டு. அந்தக் காலத்தில் ஐரோப்பாவின் வீட்டு மொழிகள் மத போதனையிலும் கல்வியிலும் கலையிலும் லத்தீன் பெற்றிருந்த இடத்தைப் பிடித்தன. பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து அங்கு வளர்ந்த அச்சுக் கலை, குறைந்த விலையில் நூல் வெளியிட்டு,  இந்த மொழி மாற்றத்திற்கு உறுதுணை செய்தது.

கத்தோலிக்க மதத்தின் இறுக்கமும் லத்தீன் மொழியின் பிடியும் தளர்ந்த இந்தக் காலக்கட்டம் கல்வியிலும் கலையிலும் நடந்துகொண்டிருந்த ஐரோப்பிய மறுமலர்ச்சியை (Renaissance) உன்னத நிலைக்கு எடுத்துச் சென்றது. பதினாறாம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் பள்ளிக் கல்வியில் லத்தீன் இடத்தில் ஆங்கிலம் வரத் தொடங்கியது. இது அறிவு தேடலைச் சமூகத்தில் பரவலாக்கியது; பல்கலைக்கழகங்களுக்கு வெளியே புதிய சாதனங்களின் கண்டுபிடிப்புகள் வந்ததற்கு இதுவும் ஒரு காரணம். பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொடங்கிய தொழில் புரட்சிக்கு உந்து சக்தியாக இந்த மாற்றங்கள் அமைந்தன.

தமிழ்நாட்டில் காலனிய காலம் வரை கல்வி, தமிழ் வழியே நடந்து இலக்கியமும் கலையும் செழித்தன. கணிதம், வானவியல் போன்ற பரம்பரை அறிவியல் கல்வி, சமஸ்கிருதம் மூலம் சிலரையே சென்றடைந்திருக்கலாம். தமிழுக்கு இந்த அறிவு வந்து சேரவில்லை. காலனிய காலத்தில் ஐரோப்பாவில் வளர்ந்த புதிய அறிவியல், ஆங்கிலம் மூலமே தமிழ்நாட்டில் கற்றுக் கொடுக்கப்பட்டது. அந்த நிலையே இன்று வரை தொடர்கிறது. உயர்நிலைக் கல்வியில் இதை மாற்ற முடியாது என்ற எண்ணம் வேரூன்றியிருக்கிறது. ஐரோப்பாவில் போல் தமிழ்நாட்டில் அறிவுத் துறை வளர்ச்சி பெருக வேண்டுமென்றால் இந்த மனநிலை மாற வேண்டும்.

ஆங்கிலத்தின் அறிவியல் ஆதிக்கம் உலகளாவி நிற்கும் இன்றைய நிலையில் ஐரோப்பிய நாடுகளிலும் உயர் கல்வியில் ஆங்கிலத்தின் செல்வாக்கு கூடி வரும்போது தமிழ்நாட்டு நிலையை மாற்ற நினைப்பது பின்னோக்கிச் செல்வதாகும் என்னும் வாதம் புறக்கணிக்கக் கூடியது அல்ல. ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு இருப்பதைக் கவனிக்க வேண்டும். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து முதலிய ஐரோப்பிய நாட்டுப் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் மொழிகளுக்கு மேலாக ஆங்கிலத்திலும் அறிவியல் பயில்கிறார்கள்; ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகிறார்கள். தங்கள் மொழிகளில் அறிவுத் துறைகளில் படிக்க, எழுத முடியாது என்று நினைப்பதில்லை. ஆங்கிலமும் தெரியாமல் அறிவியல் பயில முடியாது, ஆய்வு செய்ய முடியாது என்றுதான் நினைப்பார்கள். தேவைப்படும் நேரங்களில், இடங்களில், அவர்களால் தங்கள் மொழிகளில் அறிவியல் செய்ய முடியும்.

தமிழ்நாட்டிலும் இது சாத்தியம். பயிற்று மொழியாக இல்லாமல் ஆங்கிலத்தைக் கற்றுத் தேர்ச்சி பெற முடியும். தமிழை விடாமல், ஆங்கிலத்திலும் அறிவியல் செய்யலாம். தமிழ் மொழியிலும் இது சாத்தியம். இதற்குத் தமிழ் தன் சொல்லில் காக்கும் தூய்மையை விட்டுக் கொடுக்க வேண்டும். தமிழ்ப் பண்டிதர் எழுதும் தமிழே நல்ல தமிழ், அறிவியலாளர் ஆங்கிலத்திலிருந்து சொற்களைப் பெற்று எழுதும் தமிழ் பாழும் தமிழ் என்னும் பாகுபாடு மறைய வேண்டும். இரண்டும் தமிழே. லத்தீன் இடத்தை ஆங்கிலம் பிடித்த பிறகும் லத்தீன் சொற்களின் இடம் ஆங்கிலத்திலிருந்து போகவில்லை. ஆங்கிலத்தின் அறிவு வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம். தமிழைக் காக்கின்ற பேரில் தமிழில் அறிவைத் தடுப்பது, தமிழுக்கு அறிவைக் கொண்டு வருபவர்களைத் தடுப்பது அறிவுடைமை ஆகாது.

=====================================

(தமிழ் மொழி தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.