ஒற்றை வண்ண ஓவியம்

1

அருண் காந்தி

colours_and_brush

அவன் தூரிகை பட்ட
இடமெல்லாம் வண்ணமாகிறது
அவன் தூரிகை தொட்ட
வண்ணத்திலும் வண்ணம் பிறக்கிறது

அவன் கை பட்ட வெண்தாளெல்லாம்
விந்தையாய்த் தெரிகிறது
கண்ணாடிப் பேழைக்குள்ளும்
அவன் கைவண்ணம் சிரிக்கிறது

பலகையில் இளஞ்சிவப்புச் சூரியனை
செந்நீலக் கடல் நீராட்ட
விண்மீனும் நீர்மீனும் பல்வண்ணத்தில்
கூடி நடுவீட்டில் நடனமாடுகிறது

முயல்களும் மான்களும் காகிதம் விட்டு
அவன் வீட்டுக் கட்டிலுக்குத் தாவ
பாறை இடுக்குத் தவளைகளும்
பலகையில் பளிச்சென்று சிரிக்கின்றன

அறையின் கிண்ணமெல்லாம் வண்ணம்-அவன்
மனத்தின் எண்ணமெல்லாம் வண்ணம்
அந்த வண்ணங்களில் எப்பொழுதுமே
உடலும் உயிரும் நனைந்த வண்ணம் அவன்

அவன் உடலெங்கும் வண்ணம்
எழும்பிய வானவில் கோடுகள்
ஓவியத்தின் வண்ணங்களைத் தவிர
வாழ்வின் பிற வண்ணங்களை இழந்த
ஒற்றை வண்ண ஓவியமாய்
அந்த ஓவியன்…

======================================

படத்திற்கு நன்றி: http://www.afreevector.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஒற்றை வண்ண ஓவியம்

  1. கவிதையொன்று ஓவியமாயிற்று, இங்கே.
    ஓவியம் தான் கவிதை தந்தது, அங்கே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *