இவள் பாரதியின் ‘வெள்ளைப் பொய்களும் கறுப்பு உண்மைகளும்’

1

(நூல் மதிப்புரை)

Ival_Bharati

நிலா தமிழன்

மதி நிலையம் வெளியீட்டில், இவள் பாரதியின் படைப்பில், அண்மையில் வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்பு ‘வெள்ளைப் பொய்களும் கறுப்பு உண்மைகளும்’. 96 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்தக் கவிதைத் தொகுப்பு, இவள் பாரதியின் நான்காவது படைப்பு.

தைக்கின்ற கவிதைகளால் மனத்தை தைக்கும் வித்தையை கற்றவராய் இவள் பாரதி உள்ளார் என்பதற்கு இவரது கவிதைகளே சான்று. காதலை அதன் இனிமையை, அதன் பிரிவு தரும் வலியை, காதல் மேல் கொண்ட கனவை எளிமையான கவிதையில் வடிக்கும் கலை, இவள் பாரதிக்கு நன்றாகவே வருகிறது.

சொல்ல வந்ததை மின்னல் வெட்டுப் போல, பளிச்செனச் சொல்லி, ஒவ்வொரு கவிதையிலும் ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் இவள் பாரதியின் கவிதைகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பூச்செண்டு.

இதயம் திருடப்பட்டவர்கள்
எல்லோரும் இரவுகளில்
சல்லடை போட்டு
தேடுகிறார்கள்
திருடிய முகத்தையும்
திருடப்பட்ட கணத்தையும்…

காதல் வயப்பட்டு இதயத்தைத் தொலைத்தவர்களுக்கு இரவுகளே அவர்கள் காதலைப் புரட்டிப் பார்க்க வைக்கும் நினைவுப் புத்தகம் என்பதை வெளிப்படுத்தும் இக்கவிதை, காதலின் நிஜப் பக்கம்.

வார்த்தைகளைத் தவிர
வேறொன்றும்
என்னிடம் வசீகரமில்லை.
நேசத்தைத் தவிர
என்னிடம்
அள்ளிக் கொடுக்க ஏதுமில்லை.
உண்மையைத் தவிர
உனக்குச் சொல்வதற்கு
என்னிடம் பொய்களில்லை.
கவிதையைத் தவிர
உன்னை ஒளித்துவைக்க
எனக்கு மறைவிடம் தெரியவில்லை.

காதலில் நேசிப்பவருக்குக் கொடுக்க நேசம் மட்டுமே தன்னிடம் உள்ளதெனக் கருதும் அந்தப் பாங்கு, உயர்ந்த காதலைச் சித்திரிப்பது ஒரு புறம் இருக்க, காதலை மறைத்து வைக்கச் சிறந்த இடம் இதயத்தை காட்டிலும் அதில் இருந்து பிறக்கும் கவிதையே என்ற கூறுவது காதலின் மெல்லுணர்வைக் காட்டும் கண்ணாடி எனலாம். அந்த உணர்வை இந்தக் கவிதை அழகுபட எடுத்துரைக்கிறது.

Ival_Bharatiஇனி சொல்வதற்கு ஒன்றுமில்லை
இதயத்தின் அத்தனை
அறைகளையும்
திறந்து காட்டிய பிறகு
சொல்வதற்கு என்ன இருக்கிறது?

பல பக்கங்களில் விவரிக்காத பொருளை ஒரிரு வரிகளில் விவரிக்க முடியும். அத்தகைய வலிமை, கவிதைக்கே உண்டு. அந்த வலிமையை காதலின் வலிமையை, இந்தக் கவிதை வரிகள் ஒளித்து வைத்துள்ளதை இங்கே காண முடிகிறது.

உன்னை எனக்குள்ளிருந்து
இறக்கிவிடச் சொல்கிறாய்
கால் வைத்து நுழைந்திருந்தால்
கோல் வைத்து விரட்டியிருப்பேன்
கண் வைத்தல்லவா
நுழைந்திருக்கிறாய்?

இதயத்தில் இறங்கிய உறவை, உணர்வை வெளியேற்றவோ, அதை மறைக்கவோ, மறக்கவோ இயலாத ஒன்று என்பது, இக்கவிதையில் எளிமையாக உணர்த்தப்பட்டு உள்ளது.

உன் தொடர்புகளிலிருந்து
துண்டிக்கப்படும் போது
என் பூமியின்
ஈர்ப்புவிசை
ஒழுங்கற்றதாகிறது

இரு இதயங்களின் இணைப்பே காதல்… காதல் வயப்பட்ட இதயத்திற்கு மறு இதயமே மையப் புள்ளியாகவும் தாங்கு சக்தியாகவும் இருக்கும். இந்தத் தொடர்பில் சிறு துளி குறைவு பட்டாலும் காதல் வயப்பட்ட மறு இதயம் துவண்டு போய்ச் செயல்பட இயலா அளவு முடங்கிப் போகும் என்பதை விளக்கும் இக்கவிதை, இவள் பாரதியின் கற்பனைத் திறனுக்கு ஒரு துளிச் சான்று…

நட்பும் காதலும்
நூலிழை வித்தியாசத்தில் தான்
பிரிக்கப்படுகின்றன

– என்ற கவிதையில் நட்பையும் காதலையும் வேறுபடுத்தி அதன் எல்லைகளை வரையறுத்துக் காட்ட, பல கேள்விகளைத் தொடுக்கிறார் இவள் பாரதி.. யாரும் புரிந்துகொள்ள இயலாத அந்த நூலிழையை இந்த கவிதையில் விளக்க முற்பட்டிருப்பது காலையில் பூத்த ரோஜாவில் ஒட்டி இருக்கும் பனித்துளி போல அழகு கவிதை.

நான்
இசைக்கருவியாகப் பிறக்க விரும்புகிறேன்
நீ மட்டும் இசைக்கும் கருவியாய்

– என்ற கவிதையில் தலை மேலே கொட்டும் குற்றால் நீர் வீழ்ச்சி போல இறுதி வரியில்

இசைகிறேன்
இசை

– என்று முடித்திருப்பது குளுமை. காதலை கவிதையினூடே வார்த்தைகளைத் தேனால் வார்க்க செய்யும் கலையை இவள் பாரதி கற்றிருக்கிறார் என்பதற்கு இந்தக் கவிதையே சான்று..

இப்படி இந்த ‘வெள்ளைப் பொய்களும் கறுப்பு உண்மைகளும்’ கவிதைப் புத்தகத்தில் காதலை அதன் வலியை, இதயத்தில் பதிந்த ஏக்கத்தை வீணையின் மெல்லிசை போல ஆங்காங்கே வார்த்தைகளால் இசைத்திருக்கிறார் இவள் பாரதி.

இவள் பாரதி, காதலை மையப் பொருளாகக் கொண்டு வடித்த கவிதைத் தொகுப்பு இதுவென்றாலும், இவள் பாரதியால் வாழ்வியலின் எல்லாக் கூறுகளையும் பாடுபொருளாகக் கொண்டு கவிதை இயற்ற முடியும் என்பதற்கு இவரது வலிமையான எழுத்துகளே சான்றாகும். அழகான ஒரு படைப்பைத் தந்த பாரதிக்குப் பாராட்டுகள்.

இந்தத் தொகுப்பில் பக்கத்திற்கு ஒரு கவிதை என வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் ஒரு கவிதை முடிந்ததும் அடுத்த கவிதைக்கு உரிய தலைப்புடன் வரிசை எண் கொடுக்கப்பட்டிருந்தால், ஒரு கவிதையின் தொடர்ச்சி தானோ மறு கவிதை என்னும் சிறு குழப்பத்தை ஓரிரண்டு கவிதைகளில் தவிர்த்து இருக்கலாம்..

மொத்தத்தில் ‘வெள்ளைப் பொய்களும் கறுப்பு உண்மைகளும்’ தொகுப்பு, காதலைப் பற்றிப் பாடப்பட்ட வெள்ளை உண்மைகள், கறுப்புக் கற்பனைகள் எனலாம்.

====================================
புத்தகத்தின் பக்கங்கள் – 96 | விலை – ரூ.50

புத்தகம் கிடைக்குமிடம்:
விஸ்வசேது இலக்கிய பாலம்,
8, வேலாயுதம் காலனி முதல் தெரு,
சாலிகிராமம், சென்னை – 93
செல்பேசி – 9566110745
மின்னஞ்சல்: visvasethu@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இவள் பாரதியின் ‘வெள்ளைப் பொய்களும் கறுப்பு உண்மைகளும்’

  1. ‘பல பக்கங்களில் விவரிக்காத பொருளை ஒரிரு வரிகளில் விவரிக்க முடியும். அத்தகைய வலிமை, கவிதைக்கே உண்டு.’

    => உண்மை. இங்கிருக்கும் கவிதைகளை போல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *