ராகு – கேது தோஷம் போக்கும் மணல்மேடு நாகநாதர் கோவில்

1

விசாலம்

Vishalamவைத்தீஸ்வரன் கோயில், அங்காரக க்ஷேத்ரமாக விளங்குகிறது. செவ்வாய் தோஷத்திற்குப் பரிகாரம் தேட, இங்கு பலர் வருகின்றனர். இதே போல் ராகுவுக்குப் பரிகார ஸ்தலமாகத் திருநாகேஸ்வரமும் கேதுவுக்குக் கீழ்ப்பெரும்பள்ளம் என்றும் கூறப்பட்டுள்ளது. திருநாகேஸ்வரம் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இதே போல் ராகு, கேது பரிகார ஸ்தலமாகக் காளஹஸ்தியும் சொல்லப்பட்டிருக்கிறது.

ராகு, கேது பெயர்ச்சி 16.05.2011இல் திங்கட்கிழமையன்று ஏற்பட்டு, தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு ராகுவும் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்குக் கேது பகவானும் பெயர்ச்சியடைந்து விட்டன. இந்த ராகு, கேதுப் பெயர்ச்சியால் இயற்கைச் சீற்றங்கள் அதிகமாக வரும் என ஜோதிடர்கள் கூறுகிறார்கள். கேதுவுக்குக் கணபதியையும் ராகுவுக்குத் துர்க்கை – அனுமானையும் வழிபட, மனம் அமைதி அடையும்.

இந்த ராகு, கேதுவுக்குப் பரிகாரம் செய்ய, மணல்மேடு என்ற ஸ்தலமும் இருக்கிறது. இந்த ஸ்தலம், வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து சுமார் 14 கிமீ தொலைவில் உள்ளது. இந்த ஸ்தலத்தில் தான் ராகுவும் கேதுவும் திருமணக் கோலத்தோடு இங்கு வந்து ஈசனைத் தரிசித்துப் பூசித்தார்களாம். ஆகையால் கால சர்ப்ப தோஷத்தினால் திருமணத் தடை ஏற்படும் ஆண்கள், பெண்கள் இங்கு வந்து பரிகாரம் செய்ய, விவாகம் நிச்சயப்படுகிறது.  இங்கு அருள் புரியும் இறைவன், அருள்மிகு நாகநாதன். இறைவியின் பெயர், சௌந்தர நாயகி.

முன்பு இந்த இடத்தில் புன்னை மரங்கள் நிரம்பி வழிந்தன. இதனால் காட்டின் பலம் அதிகமாகி, அந்தப் பூமியைத் தாங்கிப் பிடித்த ஆதிசேஷன்  கனம் தாங்காமல் திணறிப் போனான். தனக்குப் பலம் கிடைக்க, அவன் நினைத்தது அந்த ஈசனை……..

ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, தினமும் வழிபட்டான். அவனது தவத்தால் மகிழ்ந்து சிவன், அவன் முன் தோன்றினார். நாகராஜனும் அவரை அங்கேயே இருக்க வேண்டினான். இவர்தான் நாகநாதன் என்ற பெயரில் இந்தக் கோயிலில் அருள் பாலிக்கிறார். இங்கு ஸ்தல  விருட்சம், புன்னை மரம். அருகே இருக்கும் தீர்த்தம் “நாக தீர்த்தம்”.

இது, ராகு – கேது பரிகார ஸ்தலமாக எல்லாத் தடைகளையும் நீக்குகிறது. இந்தக் கோயிலினுள் நுழைந்தவுடன் நாம் ஒரு மண்டபத்தைக் காண்கிறோம். அதன் தெற்கில் தல விநாயகர் அமர்ந்திருக்கிறார். வடக்கில் நந்தீஸ்வரர் இருக்க, சனீஸ்வரரும் காட்சி தருகிறார். பின் பலிபீடம்  கடந்து வர, தட்சிணாமூர்த்தி, முருகப் பெருமான், இடும்பன், கெஜ லக்ஷ்மி போன்ற சன்னதிகளையும் பார்க்கிறோம்.

சண்டீஸ்வரர் சன்னதியும் கடந்து வந்தால் உட்பிரகாரத்தில் தென்கோடியில் நர்த்தன விநாயகரைத் தரிசிக்க முடிகிறது. வடக்குக் கோட்டத்தில் பிரும்மாவும் அருள் பாலிக்கிறார். நவகிரக சன்னதிகளும் இருக்க, பலர் சனி பகவானுக்குக் கறுப்பு எள் விளக்கும் ஏற்றுகிறார்கள். அம்பாள் அருள்மிகு சௌந்தரநாயகி, உள்ளே மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்.

இந்த ஸ்தலத்தில்தான் இடும்பனுக்கு முருகப் பெருமான் பங்குனி உத்திரம் நாளில் மூல மந்திரம் உபதேசம் செய்தாராம். ஆகையால் பங்குனி  உத்திரத்தன்று, கொள்ளிடம் நதிக்கரையில் கந்தனுக்குக் காவடி எடுத்துக் கொண்டாடி பக்தர்கள் சிறப்பாக வழிபடுகிறார்கள்.

ராகு – கேது தோஷம் போக்கிக்கொள்ள, சில கோயில்கள் போல் கூட்டத்தில் மோதாமல், பல மணி நேரம் காத்து நிற்காமல், இந்தக் கோயிலில் வந்து பூஜிக்கலாமே.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ராகு – கேது தோஷம் போக்கும் மணல்மேடு நாகநாதர் கோவில்

  1. முதல்முறையாக, அந்தக் கோயிலை பற்றி அறிகிறேன். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.