செண்பக ஜெகதீசன்

 

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

-திருக்குறள்-100 (இனியவை கூறல்)

 

புதுக் கவிதையில்…

 

இனிய சொற்கள்தான்

இருக்குது பலவாய்,

இருப்பினும் மனிதா ஏன்

விரும்புகிறாய் இன்னாத சொற்களை..

 

மரம் நிறையப் பழமிருந்தும்

மனம் விரும்பி

காய்பறிக்கும் கதைதான் இது…!

 

குறும்பாவில்…

 

இனியவை ஒதுக்கிப் பேசும்

இன்னாசொல், பழம் தவிர்த்து

விரும்பித் தின்னும் காய்தானே…!

 

           மரபுக் கவிதையில்…

 

கிளைமுறிய பழம்பழுத்துத் தொங்கும்

கீழ்க்கிடக்கும் பழுத்தபழம் எங்கும்,

பளபளக்கும் காய்பறித்துக் கடித்தால்

பைத்தியம்தான் என்றுலகு எடுக்கும்,

அளவிதுதான் நீயுரைக்கும் சொல்லும்

அன்பான இன்சொல்லே வெல்லும்,

களையெனவே கொடுஞ்சொல்லை உரைத்தால்

கவலைப்பட இன்னலது வருமே…!

 

லிமரைக்கூவில்…

 

இன்சொல்லிருக்கக் கொடுஞ்சொல்லை ஒதுக்கு,

இனிக்கும் கனிநிறைந்த மரத்தில்

கனியைவிட்டுக் காய்பறித்தல் எதுக்கு…!

 

கிராமிய பாணியில்…

 

காயிருக்கு பழமிருக்கு

கடிச்சித்தின்ன அணிலிருக்கு

கம்மாக்கர தோட்டத்தில,

சும்மாநீயும் பாத்துக்கோ

சேதிசொல்றேன் கேட்டுக்கோ..

 

பழுத்தபழம் பாத்துத்திங்குது

பச்சக்கிளிதான்- நீயும்

பழத்தவுட்டு காபறிச்சா

பயித்தியந்தான் பயித்தியந்தான்..

 

நல்ல வார்த்த நெறஞ்சிருக்க

கெட்டவார்த்த பேசுறியே

கேடுகெட்ட மனுசாயிது

காபறிச்ச கதயாச்சே- நீயும்

நல்லதயே பேசிப்புடு

கெட்டதயே வீசிப்புடு…!

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “குறளின் கதிர்களாய்…(5)

 1. “நல்லதயே பேசிப்புடு
  கெட்டதயே வீசிப்புடு…!”

  குறளைவிட சுருக்கி நாலே வார்த்தையில் எத்தனை அருமையாய் சொல்லிவிட்டீர்கள். அற்புதம் அற்புதம். மற்றவையும் நெஞ்சில் பதிந்து விட்டது. திங்கள் வந்தாலே
  குறளின் கதிர்களை எதிர் பார்த்து வருகிறேன்.

 2. மிக அருமையான தொடர்பதிவு, நன்றி ஐயா. 
  பறவைகளுக்கு இருக்கும் அறிவு மனிதர்களுக்கு இல்லாமல் போனது, கனியிருக்க காயை ஏனோ விரும்புகிறார்கள்.  பறவையுடன் ஒப்பிட்டது மனத்தைக் கவர்ந்தது. 

  அன்புடன் 
  ….. தேமொழி 

 3. குறளின் கதிர்கள்           வளர்ச்சி
  வித்தியாசமான             முயற்சி
  விறுவிறுப்பான             சுழற்சி – வல்லமையில்
  கவிபரிமாணங்களின் தொடர்ச்சி
  வளர்க இனிதே! வாழ்த்துகள்!
  இன்னோர் குறளோவியம் உருவாகட்டும்

 4. குறளின் கதிர்களை வரவேற்று,
  ஆதரவு மற்றும் ஊக்கம் அளித்துவரும்
  திருவாளர்கள் பார்வதி இராமச்சந்திரன், தனுசு,
  தேமொழி, சத்தியமணி ஆகியோருக்கு
  என்
  நெஞ்சார்ந்த நன்றி…!
  -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *