நான் அறிந்த சிலம்பு – 83 (05.08.13)
முன்பு ஒரு முறை
யான் அவளைப் பிரிந்து வாழ்ந்தபோது
பிரிவாற்றாமையால்
மிக்க வருந்துபவள் போல் காண்பித்து
எனது உறவினர் முன்
தான் மிகவும் துயரப்படுபவள் போல் பாவித்து
துயரங்களை எல்லாம்
ஆராய்ந்து கூறுபவளாய் நடிப்பாளே..
வசந்தமாலையே!
இதுதான் அவள் நடித்த தேர்ச்சிவரி.
வண்டுகள் வந்து ஊதிப் பூக்கவைக்கும்
பூங்கோதையை உடைய அவள்
மாலைப் பொழுதினில்
காம நோயால் வருந்துபவள் போல் காண்பித்து
கண்ணில் படுகின்ற சுற்றத்தாரிடம்
தம் துன்பத்தைக் கூறி
அவர்கள் அனுதாபத்தைப் பெற நடிப்பாளே…
வசந்தமாலையே!
இதுதான் அவள் நடித்த காட்சிவரி.
பிரிவுத்துயர் தாங்காமல்
காமநோயுற்றவள் போல
அடுத்து அடுத்துப்
பொய் மயக்கம் கொண்டு
என் சுற்றாத்தாரிடம் தன் துயர்
எடுத்து எடுத்துக் கூறி நடிப்பாளே..
வசந்தமாலையே!
இதுதான் அவள் நடித்த எடுத்துக்கோள்வரி
ஆயிழையே,
அவள் ஒரு ஆடல் மகள் ஆதலால்
இங்ஙனம் இயல்பாய் அவள் நடித்த நடிப்புகள்
அவள் கலைக்குப் பெருமை சேர்ப்பதேயாகும்!
என்றெல்லாம் இகழ்ந்து கூறிய கோவலன்
மாதவி அவள் கடிதம் பெற மறுத்துவிட்டனன்.
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 101 – 110
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram25.html
படத்துக்கு நன்றி:
http://cheapestinindia.com/price/raja-ravi-varma-painting-title-radha-waiting-for-krishna-in-kunjavan-723379