அமெரிக்காவில் துணை தேடும் முறை: அன்றும் இன்றும்
முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை
பருவ வயது வந்தவுடன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலுணர்வு தோன்றுவது இயற்கை. அதற்கு வடிகால் அமைத்து அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு ஒவ்வொரு சமூகமும் சில விதிகளை வகுத்திருக்கிறது. அமெரிக்கச் சமூகம் என்ன செய்திருக்கிறது என்று பார்ப்போம்.
அமெரிக்காவில் எனக்குத் தெரிந்தவரை என்றுமே பெற்றோர் மட்டுமே பார்த்து – திருமணம் செய்துகொண்டு வாழப் போகும் இருவர் ஒருவரையொருவர் பார்க்காமலேயே – திருமணம் செய்துகொண்டதாகத் தெரியவில்லை. இரு குடும்பத்துப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்தால் இருவரையும் அறிமுகப்படுத்தி வைப்பார்கள். பெரியவர்களின் மேற்பார்வையில் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயலுவார்கள். திருமணம் செய்துகொள்ளப் போகும் இருவரும் தனியாகச் சந்தித்து ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயன்றதாகத் தெரியவில்லை.
பெற்றோர் பார்த்துப் பழக ஏற்பாடு செய்த பிறகு அல்லது தாங்களாகவே பார்த்துப் பழக முடிவெடுத்த பிறகு, ஆணும் பெண்ணும் எங்கும் தனியாகச் செல்வது என்பது சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன்பு வரை கூட அமெரிக்காவில் பழக்கத்தில் இல்லை. ஒரு பெண் ஒரு முறை என்னிடம் சொன்னது இது: “நானும் என்னுடைய காதல் தோழனும் (boyfriend) – அதாவது என்னுடைய இப்போதைய கணவரும் – ஒரு முறை எங்கள் வீட்டுப் பின் பக்கத் தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்சம் நேரம் அதிகமாகிவிட்டதால் என் தாய் ‘மேரி, அங்கு இன்னும் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டு, வீட்டின் உள்ளே வரும்படி கூறினார்” என்றார். இது நடந்து ஐம்பது வருஷங்கள்தான் ஆகின்றன. இப்போது ஆணும் பெண்ணும் பழகும் முறை மிகவும் மாறிப் போயிருக்கிறது.
பெற்றோர்களின் கண்காணிப்பில் இப்படி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயன்ற நிலை மாறி, தங்களாகவே பல இடங்களுக்கும் தனியாகப் போகும் நிலையாக மாறி, பின் திருமணத்திற்கு முன்பே உடலுறவு வைத்துக்கொள்வதாக முன்னேற்றம் கண்டு, இப்போது திருமணத்திற்கு முன்பே ஓரிரு ஆண்டுகளாவது கணவன் – மனைவி போல் சேர்ந்து வாழ்ந்தால்தான் ஒருவரை ஒருவர் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும், மேலும் அப்படிப்பட்டவர்கள் திருமணம் செய்துகொண்டால்தான் அவர்களுடைய திருமணம் விவாகரத்து இல்லாத சிறப்பான திருமணமாக அமையும் என்று எல்லோரும் – பெற்றோர்களும் சேர்ந்து – எண்ணும் அளவிற்கு வளர்ந்துவிட்டிருக்கிறது. ஆனால் இப்போதும் முன்னை விட விவாகரத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை என்று புள்ளி விபரங்கள் சொல்கின்றன.
துணை தேடும் முறையில் ஏற்பட்ட மாற்றத்திற்குச் சில பொருளாதாரக் காரணங்கள் உள்ளன. இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு அமெரிக்காவின் தொழில் வளர்ச்சி அதிகமாக, அதிகமாக வேலைக்கு ஆள் தேவைப்பட்டது. பெண்களும் வேலைக்குப் போக ஆரம்பித்தார்கள். இதன் விளைவாக, பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் கிடைத்து, அதுவரை கணவனைச் சார்ந்திருந்த பெண்களுக்குத் தாங்கள் தனித்து வாழலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதே சமயத்தில் பெண்ணுரிமை இயக்கம் தோன்ற ஆரம்பித்து, ஆண்களைப் போல் தங்களுக்கும் பாலுறவுச் சுதந்திரம் வேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்குத் தோன்ற ஆரம்பித்தது. திருமண வயது தள்ளிக்கொண்டே போயிற்று. ஆனாலும் இரு பாலாருக்கும் தங்கள் பாலுணர்வுத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும் அவசியமும் இருந்தது. இதனால் திருமணத்திற்கு முன்னால் சேர்ந்து வாழும் வழக்கம் மெதுவாக வந்தது. அறுபதுகளின் கடைசியில் ஆணும் பெண்ணுமான இருவர் ஒரே இடத்தில் வசித்தபோது அவர்கள் இருவரும் ஒன்றாக அலுவலகத்திற்கு வருவார்கள். அவர்களைப் பற்றி அலுவலகமே கிசுகிசுக்கும்.
இப்படிச் சேர்ந்து வாழும் முறையில் ஆணுக்கு அதிகமாகவே சௌகரியம் இருந்தது. திருமணமாகிப் பிரிந்தால் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும். சேர்ந்து வாழும் அமைப்பில் ஆணிற்கு இந்த மாதிரியான பொறுப்பு இல்லை. இருந்தாலும் பெரும்பாலான பெண்கள் அப்படி வாழ்ந்த பிறகு திருமணம் செய்துகொள்வதையே விரும்புவதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. பெண்ணிற்கும் பிரிந்துவிடும் சுதந்திரம் இருக்கிறது என்றாலும் ஆண்களே அதிகமாக விட்டுப் போகிறார்கள். பிள்ளை பிறந்தவுடன் பொறுப்புக்குப் பயந்து விட்டுப் போகும் ஆண்களும் உண்டு, ஒரு பெரிய பதவியில் இருக்கும் பெண்ணின் மகள் காதலனோடு வாழ்ந்துகொண்டிருக்கும் போதே கருவுற்றாள். குழந்தை பிறப்பதற்கு முன்பே பிள்ளைக்குத் தகப்பன் அவளை விட்டுச் சென்றுவிட்டான். கருவுற்றிருந்த பெண்ணின் தாயோ, மகளைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாள். குழந்தை பிறந்ததும் தான் பாட்டி ஆகிவிட்டோம் என்று அந்தத் தாய்க்கு ஒரே சந்தோஷம். குழந்தைக்கு மூன்று மாதங்கள் ஆவதற்குள் மகளுக்கு இன்னொரு காதலன் கிடைத்துவிட்டான். அதிலும் அந்தத் தாய்க்கு சந்தோஷமே. முந்தைய காதலன்போல் அல்லாமல் இவன் பொறுப்பாக நடந்துகொள்வான் என்று நினைத்ததே அந்தத் தாயின் சந்தோஷத்திற்குக் காரணம்.
சேர்ந்து வாழ்ந்து பார்த்த பிறகுதான் திருமணம் நடக்கும் என்பதே மரபு (norm) ஆகிவிட்டதால், இப்போது பெண்ணின் தாய்மார்களும் – தன் மகளின் பெண்மைக்குப் பங்கம் வந்துவிடுமோ என்று முன் பயந்த தாய்மார்கள்தான் – சேர்ந்து வாழ்வதை ஊக்குவிக்கவில்லை என்றாலும் தடுப்பதில்லை. மரபாகிவிட்ட ஒன்றை எதிர்த்து நின்றால் அதனால் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் பெண்கள்தான் என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். பழமைவாதக் கிறிஸ்தவர்கள் சிலர் இன்னும் தங்கள் பெண்கள், கணவனாக வரப் போகிறவனோடு உடலுறவு கொள்வது தவறு என்று நினைக்கிறார்கள். அவர்கள் இன்று பத்தாம்பசலிகள் என்று எள்ளப்படுகிறார்கள்..
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு ஆண்களும் பெண்களும் பெற்றோரை விட்டுத் தனித்து வாழத் தொடங்குகிறார்கள். பெற்றோரிடம் எந்த வித உதவியும் எதிர்பார்ப்பதில்லை. தாங்களாகவே எந்தப் பல்கலைக்கழகத்தில் படிப்பது, என்ன பாடத்தில் பட்டம் பெறுவது போன்ற விஷயங்ளை முடிவுசெய்வது போலவே, யாரைத் திருமணம் செய்துகொள்வது என்பதையும் முடிவுசெய்கிறார்கள். துணை தேடும் படலத்தைச் சிலர் பள்ளியிலேயே ஆரம்பித்துவிடுகிறார்கள். சிலர் கல்லூரியில் ஆரம்பிக்கிறார்கள். காதலன் இல்லாத பெண் மற்றவர்களின் கேலிக்கு ஆளாகிறாள், இவளால் எந்தப் பையனையும் வசீகரிக்க முடியவில்லை என்பதால். காதலன் இல்லாததால் கன்னிமை கெடாமல் இருந்த பெண்களைப் பலர் ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். பள்ளியிலோ, கல்லூரியிலோ துணை தேடும் வாய்ப்பைத் தவற விட்டவர்களுக்கு பின்னால் இது சிரமமாகி விடுகிறது.
கல்லூரிக் காலத்திலிருந்தே தங்களுக்குப் பிடித்த ஆணையோ, பெண்ணையோ துணை சேர்த்துக்கொண்டு தம்பதிகள் போல் வாழ ஆரம்பிக்கிறார்கள். பெண்ணிற்கு சேர்ந்து வாழும் துணை பிடித்துவிட்டால் அவனுடனே இருந்து எப்படியாவது அவனோடு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்து அதற்கேற்றவாறு செயல்படுகிறாள். அதே மாதிரி ஆணுக்குச் சேர்ந்து வாழும் பெண்ணைப் பிடித்துவிட்டால் அவளை எல்லா வழிகளிலும் திருப்திப்படுத்தி, அந்த உறவு திருமணத்தில் முடிய முயல்கிறான். ஏதாவது மன வேறுபாடு ஏற்பட்டுப் பிரிய நேர்ந்தால் பிரிந்துவிடுகிறார்கள். இவர்கள் சட்டப்படி கணவன் – மனைவி இல்லையாதலால் பிரிவதும் எளிதாகி விடுகிறது. இப்படிச் சேர்ந்து வாழும்போது சில பெண்கள் தெரிந்தோ, தெரியாமலோ பிள்ளை பெற்றுக்கொள்கிறார்கள். இது சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருப்பவர்களிடம்தான் அதிகம் காணப்படுகிறது என்கிறார்கள். இதை உறுதிப்படுத்துவது போல் கருப்பர்கள் குடும்பங்களில்தான் இது அதிகம் இருக்கிறது என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. இருப்பினும், முன்னாள் அலாஸ்கா கவர்னர் சாரா பேலினின் மகளும் இப்படிப் பிள்ளை பெற்றுக்கொண்டவள்தான்.
மக்களுக்கு வருமான வரி தயாரிக்க உதவும் ஒரு அலுவலகத்தில் நான் வேலை பார்த்தபோது, பல பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் திருமணம் ஆனதற்குரிய மோதிரம் விரலில் இருக்காது. கேட்டால் எனக்குத் திருமணம் ஆகவில்லை என்பார்கள். குழந்தைகள் இருப்பவர்களுக்கு அரசாங்கம் சில வரிவிலக்கு அளிக்கிறது. அந்தப் பிள்ளை அவளுடையது என்பதற்கு ஆதாரமும் தகப்பன் பெயரும் வருமான வரி தயாரிப்பவரிடம் கொடுக்க வேண்டும். ஒரு முறை ஒரு பெண், ஒரு ஆணின் பெயரைக் கொடுத்தபோது இவர்தான் உன் கணவரா என்று கேட்டுவிட்டேன். உடனே அந்தப் பெண் ‘அவர் என் குழந்தையின் தந்தை, ஆனால் என் கணவர் இல்லை’ என்றார். இது திருமணம் செய்துகொள்ளாமலே பிள்ளை பெற்றுக்கொள்வதால் வரும் நிலை.
அமெரிக்காவிலும் முன்னால் திருமணம் செய்துகொண்ட பிறகுதான் பிள்ளை பெற்றுக்கொள்வது என்ற வழக்கம் இருந்தது. ஆனால் இப்போது திருமணம் செய்துகொள்ளாமலே பிள்ளை பெற்றுக்கொள்கிறார்கள். வயது வந்தவுடனேயே பாலுறவு வைத்துக்கொள்ளும் உரிமை, அமெரிக்காவில் எல்லோருக்கும் இருக்கிறது. வயிற்றுப் பசி போல் உடல் பசிக்கும் இரை போடலாம், போட வேண்டும், என்ற எண்ணம் இப்போது அமெரிக்காவில் இருக்கிறது. இதனால் திருமணத்தையும் உடலுறவையும் பிரித்துவிட்டது அமெரிக்கச் சமூகம்.
==============================================
படங்களுக்கு நன்றி: http://weheartit.com, http://www.dvorak.org, http://www.yourmodernliving.com, http://www.thegreengirls.com
இந்தியாவிலும் விரைவில் இது வந்து விடும் அபாயம் இருக்கிறது
கலாச்சாரம் இயங்கும் விதம் விநோதம் தான். இங்கிலாந்தில், மக்கள் ஆலோசனை மன்றத்தில், பலதரப்பட்ட சிக்கலான பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டி இருக்கும். ஒரு யுவதி; ஏகப்பட்ட கடன்; கருவுற்றிருக்கிறாள்; அவளுக்கு பொறுப்பின்மை என்பதால், சமூக உதவியாளரின் துணை. ‘உன் சிசுவின் தந்தை உதவுவானா?’. ‘அவன் யார் என்று தெரியாதே.’ ‘நீ கருவடைவதை தடுக்க நினைத்தாயா?’ ‘இல்லை. இல்லை. அரசு உதவி கிடைக்கும் என்று விரும்பி கருவுற்றேன்’. பின்னணி: 18 வயதிற்கு பிறகு, அந்த பொருளியல் நிலை பெற்றோர்கள், சிறார்களை விரட்டிவிடுகிறார்கள்.
மற்றொரு கேஸ்: ஒரு தம்பதி (19 & 19) & சிசு (நான்கு மாதம்). மணமாகவில்லை. ஆண் சிசுவை அன்போடு தழுவியபடி. இத்தனைக்கும், அது வேறு ஒருவனுக்கு பிறந்தது. அவன் (தந்தை) சட்டரீதியாக, அதை தன் விடுமுறை போது எடுத்து செல்ல கட்டாயப்படுத்துகிறான். நான் சொன்னேன், ” குழந்தை முலைப்பால் பருகுகிறது. அந்த வசதியை உன்னுடன் அனுப்ப இயலாது” என்று எழுதிக்கொடுத்து விடு’. கேஸ் சால்வ்ட்.
அமெரிக்காவின் அலங்கோலத்தை அப்படியே படம்
பிடித்துக்காட்டியது போல் சொல்லியது அருமை.
பராக் ஒபாமா அமெரிக்கப் பெற்றோர்களை நம்பி
பயனில்லை என்று எண்ணித்தான் அமெரிக்கக்
குழந்தைகளிடம்,” இந்தியக் குழந்தைகள் போலும்
சீனக் குழந்தைகள் போலும் படியுங்கள்” என்று
சொல்கிறார் போலும்! அவர் படிப்பை மட்டும்
சொல்லவில்லை, படிப்பினையையும் சேர்த்துத்தான்!
“அமெரிக்க சகோதர சகோதரிகளே” என்று சுவாமி
விவேகானந்தர் அன்று காட்டிய சகோதரத்துவம்
இன்றும் போற்றத் தக்கது.
இரா. தீத்தாரப்பன், இராஜபாளையம்.