விநோதமான சந்திப்பு, விசித்திரமான நட்பு

3

(நினைவுகளின் சுவட்டில் – பாகம்  II – பகுதி 20)

வெங்கட் சாமிநாதன்

Venkat_swaminathan_paintingசீனுவாசன் மாத்திரமில்லை. ஒரு பரந்த உலகம் வெளியே விரிந்து கிடப்பதை எனக்குக் காட்டியவர்கள் பலர். மற்றவர்களைப் பற்றி அவ்வப்போது சொல்கிறேன். சீனுவாசன் என் அறையில் வசித்த காலத்தில், வெளியூரில் வேலை பார்த்திருந்த காலத்திலும் அவர் அவ்வப்போது வந்து போவார், அவருடைய பாதிப்பு என்னை மாத்திரமல்ல. என்னோடு அறையில் இருந்த நண்பர்கள் அனைவரையும், அவர் தன் அன்பாலும் அக்கறையினாலும் பாதித்தார்.

வெளித் தோற்றத்தில் அவர் கொஞ்சம் பேச்சில் கடுமை காட்டுபவராக, கிண்டல் நிறைந்தவராக, கட்டுப்பாடுகள் மிகுந்தவராக, ஒரு அலட்சிய மனோபாவம் மிகுந்தவராகத் தோற்றம் அளித்தாலும், அவர் போல் நண்பர்களின் கஷ்டங்களில், நட்புறவுகளில் பங்கு கொண்டு ஆழ்ந்த ஈடுபாடு காட்டியவர் இல்லை. வீட்டில் ஒரு பெரியண்ணாவின் கண்டிப்பும் வெளிக்காட்டாத பாசமும் அவரிடம் இருந்தன.

Androcles and the Lionஅவரது கண்டிப்பில், கேலியில் மனம் கசந்திருந்த வேலுவுக்கு ஆலிவ் ஆயில் ஏதோ கொஞ்சம் தேவை அது கிடைக்கவில்லை என்று தெரிந்ததும், ரொம்ப அமைதியாக எதுவும் சொல்லாமல் கொள்ளாமல், அதைத் தேடி ஒரு காலன் டின்னில் கொண்டு வந்து, அலட்டல் எதுவும் இல்லாமல், “இந்தாய்யா, வேலு, இனி உங்களுக்கு ஆலிவ் ஆயில் கவலை தீர்ந்தது” என்று ஆலிவ் ஆயில் டின்னை எங்கள் முன் வைத்து எங்களையெல்லாம் திகைப்பில் ஆழ்த்தியது ஒரு உதாரணம்

எங்களுக்கு அவர் இன்னும் பல விஷயங்களுக்கு ஆசானாக இருந்தார் அப்படி ஒன்றும் அவர் ரொம்பவும் வயதில் மூத்தவர் இல்லை. எங்களை விட அவர் நான்கு அல்லது ஐந்து வயது தான் மூத்தவராக இருந்திருப்பார் ஆனால் அவர் எந்த விஷயம் பற்றியும் என்ன சொல்வார் என்று ஆவலுடன் அவரைத்தான் பார்த்துக் கொண்டிருப்போம். மற்ற நண்பர்கள் எப்படியோ. எனக்கு அவர் அப்படித்தான்.

புர்லாவில் கோடை மாதங்களில் அலுவலகம் காலை ஏழு மணிக்குத் தொடங்கி ஒன்றரை மணி வரை வேலை நேரமாக இருக்கும். காலையில் Portraits from Memory and Other Essaysஎழுந்து குளித்துவிட்டு ஏதாகிலும் அவசர அவசரமாகச் சாப்பிட்டு, அலுவலகம் போனால், 1.30 மணிக்குத் திரும்ப ஹோட்டலுக்கு மதிய சாப்பாட்டுக்கு விரைவோம். வெயிலின் கடுமை கொடூரமாக இருக்கும். அஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீடுகள் இன்னும் வறுத்தெடுக்கும்.

அந்நாட்களில் அலுவலகம் தான் எனக்குக் கோடையின் தகிப்பிலிருந்து கொஞ்சம் பாதுகாப்பு தரும். 1.30 மணிக்கு அலுவலகம் முடிந்ததும் ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு, அலுவலகம் திரும்பி விடுவேன். விசாலமான இரண்டடுக்கு கொண்ட காரைக் கட்டடம். அகண்ட நீண்ட வராண்டாக்கள். சதுர வடிவில் நடுவில் பரந்த புல்தரை. அலுவலக அறைகளின் ஜன்னல்கள், கதவுகள் எல்லாம் கஸ்கஸ் தட்டிகள் தொங்கவிடப்பட்டிருக்கும். அவ்வப்போது அத்தட்டிகளில் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருப்பார்கள். உள்ளே மின் விசிரியும் ஈரம் சொட்டும் கஸ்கஸ் தட்டிகளும் தான் அந்நாளைய ஏர் கண்டிஷனிங் எங்களுக்கு.

நான் மதிய சாப்பாட்டுக்குப் பின் அலுவலகத்திலேயே மாலை ஐந்து மணி வரை A short History of the Worldகழித்துவிடுவேன். இரண்டு மேஜைகளைச் சேர்த்துப் போட்டால் படுக்கையாயிற்று. சில சமயம் தூக்கம். சில சமயம் படிப்பு. இல்லையெனில் சில சமயம் மிகுந்திருக்கும் ஆபீஸ் வேலை. இப்படித்தான் கழிந்தன கோடை மாதங்கள்.

ஐந்து அல்லது ஐந்தரை மணிக்கு அறைக்குத் திரும்புவேன். திரும்பியதும் குளித்து முடித்தால் எல்லோரும் சீனுவாசனுடன் சேர்ந்து காலனிக்கு கிட்டத்தட்ட ஒரு மைல் வெளியே போனால் மரங்கள் அடர்ந்த சாலை கிடைக்கும். அங்கு ஏதாவது ஒரு பாலத்தின் மேல், அல்லது மரத்தடியில் உட்கார்ந்துகொள்வோம். வெயிலின் தகிப்பு குறைந்து கொஞ்சம் காற்றாடவும் இருக்கும். பின் அங்கு சுமார் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் புத்தகம் ஒருவர் வாசிக்க, மற்றவர் கேட்பதாக, அந்தப் பொழுது கழியும்.

கோடைக் காலங்களில் சீனுவாசன் இருக்கும் வரை இது எங்களுக்கு அன்றாட பழக்கமாக இருந்தது. இதில் எவ்வளவு பேருக்கு எவ்வளவு ஈடுபாடு என்பது சொல்வது கடினம். எனக்கும் சீனுவாசனுக்கும் அது மனம் விரும்பிய பொழுது Why I am not a Christianபோக்காக இருந்தது. இந்தச் சமயங்களில் நாங்கள் படிக்கும் புத்தகங்கள் எளிமையானவையாக இருக்கும். பெர்னார்ட் ஷாவின் பல நாடகங்கள் (எனக்கு இப்போது நினவிலிருப்பவை Androcles and the Lion, Major Barbara, Doctor’s Dilemma, பின் பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் Portraits from Memory and Other Essays, Why I am not a Christian, Unpopular Essays, பின் H.G.Wellsஇன் A short History of the World இப்படியானவை.

சீனுவாசன் மாத்திரமில்லை. மிருணால் காந்தி சக்கரவர்த்தி என்று அலுவலகத்திலும் சீனுவாசன் மாதிரி ஒரு நண்பன் கிடைத்தான். அவன் எனக்கு இன்னுமொரு ஆசான். ஆனால், எங்கள் அறிமுகமே மிக விநோதமான அறிமுகம் தான். எல்லா அரிய நண்பர்களின் பரிச்சயமும் இப்படி நேர்வதில்லை.

முதல் சந்திப்பில் மிருணால் என்னை அணுகியபோது, அலுவலக சம்பந்தமாகத்தான், நான் அவனை அலட்சியப்படுத்தி, “இப்போ முடியாது. அப்புறமா வா. எனக்கு வேலை அதிகம்” என்று சொல்லி விரட்டினேன்.

அப்போது நான் அந்த அலுவலகத்தில் சேர்ந்த Unpopular Essaysஆரம்ப நாட்கள்.. என் வேலை தவிர அலுவலகத்திற்குத் தேவைப்படும் பேனா, பென்ஸில், பேப்பர், ஃபைல் கவர் இப்படிச் சாமான்கள் எல்லாம் என் பொறுப்பில் இருந்தது. மிருணால் என்னிடம் கேட்டது ஏதோ ஒரு அல்பப் பொருள். கொடுத்திருக்க வேண்டும். அது என் கடமை. பொறுப்பு.

ஆனால் அப்போது நான் Aldous Huxley-ன் Ape and Essense புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். படித்துக்கொண்டிருக்கும் போது என்னை அலுவலக வேலைக்காகத் தொந்தரவு செய்யலாமா? எனக்கு எரிச்சல்.

ஆனால் அந்த நண்பன் மிருணால் காந்தி சக்கரவர்த்தி தான் இன்றும் ஐம்பத்தைந்து வருடங்கள் பின்னும் மிக மன நெகிழ்வுடன், மிகுந்த இழப்புணர்வுடன் நினைவு கொள்ளும் ஒரே நண்பன்.

1956 டிஸம்பரில் அவனை விட்டுப் பிரிந்தேன். பின் 1958இலோ என்னவோ, தில்லியிலிருந்து சென்னைக்கு விடுமுறையில் திரும்பும் போது, நாக்பூருக்குத் தெற்கே உடைப்பெடுத்து ரயில் போக்குவரத்து தடைப்படவே, நாக்பூரிலிருந்து Doctor’s Dilemmaகல்கத்தா மெயிலில் பிலாஸ்பூர் போய் இறங்கி அங்கிருந்து பிலாய் போய் மிருணாலைச் சந்தித்தேன். ஒரு நாள் மாலை போய் அவன் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து மறுநாள் மாலை வரை அவனுடன் மாத்திரமில்லை. அப்போது புர்லாவிலிருந்து அங்கு மாற்றலாகியிருந்த என் பழைய அறை நண்பர்கள் தேவசகாயம், வேலு இன்னும் மற்றோருடனும் கழித்தேன். அதன் பின் மிருணால் காந்தி சக்கரவர்த்தியைப் பார்க்கவில்லை. எங்கள் வாழ்க்கைப் பாதைகள் பிரிந்துவிட்டன. பசுமையும் மன நெகிழ்வும் தரும் நினைவுகளே மிஞ்சியுள்ளன

மிருணாலைப் பற்றி நிறையச் சொல்லவேண்டி இருக்கிறது. இந்த முதல் பரிச்சயத்தின் உரசல் பின்னும் அவ்வப்போது மீண்டும் மீண்டும் தலைகாட்டியது தான். இருப்பினும் அவனுடனான நட்பு, எனக்கு அந்த ஆரம்ப வருடங்களில், என் வளர்ச்சிக் காலத்தில் கிடைத்தது என் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். அவன் Major Barbaraமாத்திரமில்லை. அவன் குடும்பம் முழுதுமே என்னிடம் மிகுந்த பாசம் காட்டியது என்று தான் சொல்ல வேண்டும்.

சற்றுக் கழித்து மிருணால் வந்தான். பக்கத்தில் ஒரு நாற்காலையை இழுத்துப் போட்டுக்கொண்டான்.

“நான் முதலில் வந்தது ஒன்றும் பெரிய விஷயமும் இல்லை. அதற்கு அவசரமும் இல்லை. எனக்கு இந்தப் புர்லாவில், இந்த அலுவலகத்தில் அல்டஸ் ஹக்ஸ்லியை, Ape and Essense படிக்கிற, அதுவும் அலுவலக நேரத்தில், அலுவலக வேலையைக் கண்டு எரிச்சல் பட்டுக்கொண்டு படிக்கிற ஆளைத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று ஆரம்பித்தான்.

நான் என்ன படிக்கிறேன், எங்கே இருக்கிறேன், என் நண்பர்கள் யார் யார் என்றெல்லாம் கேட்கத் தொடங்கினான். அப்போதைக்கு ஒரு அறிமுகத் தொடக்கமாக, அவனுக்கு நான் அவ்வப்போது Ape and Essenseசம்பல்பூரிலிருந்து சைக்கிளில் வந்து புத்தகங்கள் கொடுத்துச் செல்லும் பாதி என்பவரையும், அறை நண்பன் சீனிவாசன் பற்றியும் சொன்னேன்.

“மனைவி பள்ளி ஆசிரியை. கணவன் சம்பல்பூரிலிருந்து புர்லாவுக்கு 10 மைல் சைக்கிளில் வந்து புத்தகம் விற்கிற, நல்ல புத்தகங்களை, ஆசிரியர்களை அறிமுகம் செய்து, பொழுது கடத்துபவர். ஹைட்ரோ ஸ்டாடிக்ஸ் தெரியாத கண்ட்ராக்டரிடம் வேலை செய்ய மறுக்கும் ஒரு சீனுவாசன், இதெல்லாம் வினோதமாகத்தான் இருக்கிறது. நீ இங்கே அல்டஸ் ஹக்ஸ்லி படிக்கிறாய் அலுவலக நேரத்தில். அலுவலக வேலையோடு வந்தால் எரிந்து விழுகிறாய். எல்லாம் விசித்திரமான கூட்டம் தான். ஆனால் இந்தக் கூட்டம் எனக்குப் பிடித்திருக்கிறது” என்றான்.

(நினைவுகள் தொடரும்…..

======================================

படங்களுக்கு நன்றி: http://www.fantasticfiction.co.uk, http://openlibrary.org, linusbey’s photostream, http://horrornews.net, http://koroshiyaitchy.wordpress.com, http://digitallibrary.southdublin.ie, http://www.docstoc.com

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “விநோதமான சந்திப்பு, விசித்திரமான நட்பு

  1. இது ஒரு ஞானப் பயணம். இங்குள்ள படங்களில் உள்ள நூல்கள், என்னையும் அதே காலகட்டத்தில் ஆக்ரமித்துக்கொண்டவை என்றாலும், இந்தக் கட்டுரை எனக்கு நினைவூட்டுவது, ‘பில்கிரிம்ஸ் ப்ராக்ரெஸ்’. பிற்காலம் கிருஷ்ணப்பிள்ளை அவர்களால், இரட்சண்ய யாத்திரிகம் என்று தமிழாக்கம் செய்யப்பட்ட காப்பியம். படிக்க, படிக்கத் தெவிட்டாத தத்துவ நூல்கள் வாழ்வாதாரம் என்பதில் ஐயமில்லை.

  2. அன்பின் ஐயா,

    மிகச் சுவைபட எழுதியுள்ளீர்கள் தங்கள் அனுபவங்களை. நல்ல பகிர்வு. இந்த அழகான எழுத்து நடையைப் பயில வேண்டும் ஐயா!

  3. தொய்வில்லாத நடை. அந்தக் கால கட்டத்துக்கே இழுத்துச் சென்றுவிட்டது. அலுவலகக் கட்டட வர்ணனையும் அங்கே படுத்துக்கொண்டு புத்தகம் படித்ததும் நேரில் பார்ப்பதுபோல் இருக்கிறது. உங்களோடு சேர்ந்து அந்தக் காலகட்டங்களில் நானும் பயணம் செய்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.