பகிர்தலேயன்றிப் பிறிதொன்றுமில்லை!
தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை)
ஏழை மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்க வழி செய்யும் கல்விக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகள் மொத்த மாணவர்களில் 25 சதவிகிதம் வரை ஏழை மாணவர்களுக்கு இடம் தர வேண்டுமென்று இப்போது விதிக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து, சென்னையில் சில மேட்டுக்குடி பள்ளிகள், பெற்றோருக்கு அனுப்பிய சர்க்குலரைப் படித்ததும் எனக்கு ரத்தம் கொதிக்கிறது.
அந்த ஏழை மாணவர்களின் பெற்றோர்கள் கிரிமினல்களாக இருப்பார்களாம். சுத்தமில்லாமல் இருப்பார்களாம். அந்தக் குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகள் சேர்ந்து படித்தால் கெட்டுப் போய்விடுவார்கள். நோய்கள் வரும். பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை. எனவே எங்களுடன் சேர்ந்து நீங்களும் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று சர்க்குலர்களில் விஷம் கக்கியிருக்கிறார்கள். எனக்கு அதிகாரம் கிடைத்தால் இந்தப் பள்ளி நிர்வாகங்களை, சிறையில் தள்ளி, அந்தப் பள்ளிகளை அரசுடமையாக்கிவிடுவேன். இப்படிப்பட்ட சமூக விரோத சிந்தனையுள்ளவர்கள் கல்வித் துறையில் இருக்கவே தகுதியற்றவர்கள்.
1976 வரை தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பல இடங்களிலும் ஏழைகளும், மிடில் கிளாசும், பணக்காரர்களும் ஒரே பள்ளிகளில் தான் படித்தார்கள். சி.வி.ராமன், ராமானுஜம் முதல் அப்துல் கலாம் வரை இப்போது 50 வயதுக்கு மேற்பட்ட சகல துறைப் பிரபலங்களும் அறிஞர்களும் அப்படித்தான் படித்தார்கள்.
– ஞானி (ஓ பக்கங்கள்), கல்கி, 22.-05.2011
மேற்கண்ட செய்தியைப் படித்தவுடன்தான் நண்பர்களே உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இந்த விஷயத்தில் என்னுடைய பொறுப்பு என்று நான் உணர்வதால் இப்பகிர்தல் நிகழ்கிறது.
என் மகள் இருவரும், அரசு நிதி உதவி பெறும், அறக்கட்டளையின் கீழ் நடத்தப்படும் ஒரு பள்ளியில் படித்து வந்தவர்கள்தாம். அங்கு காரில் வந்து போவோரிலிருந்து, காலில் செருப்புப் போட வழியில்லாத குழந்தைகளும் வந்து படிக்கும் பள்ளி அது. அங்கே பொருளாதார ஏற்ற இறக்கங்கள் எந்த விதத்திலும் அவர்கள் படிப்பையோ, பள்ளியின் பண்பையோ கெடுத்து விடவில்லை. மாறாக, பள்ளி அனைவருக்கும் ஒரே சீரான ‘அன்பு’ ஒன்றை அள்ளித் தந்தது. ஆதரவுக் கரங்களில் அரவணைத்தும் படிப்பைக் கற்றுக் கொடுத்தது. அவர்கள் மாணவர்கள் யாரும் ‘ஷூ’ தான் போட்டு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. துவைத்துச் சுத்தமான பருத்தித் துணியால் ஆன யூனிஃபார்ம்களை அணிய வைத்தது. அனைவரும் பள்ளிக்கு வரத்தான் விரும்புவார்களேயொழிய, விடுமுறையை விரும்ப மாட்டார்கள்.
மாணவர்களோடு மாணவர்களாய் ஆசிரியர்கள் அமர்ந்து அறிவியல் செய்முறைப் பயிற்சிக்கும் அது தொடர்பான கண்காட்சிக்கும் உழைப்பார்கள். அனைத்து மாணவர்களும் கலை நிகழ்ச்சிகளை வழங்குவார்கள். அதில் எந்தவித ஏற்றத் தாழ்வும் கிடையாது. திடீர் திடீர் என்று பணம் கொண்டு வரச் சொல்லி பெற்றோர்களைத் துன்புறுத்த மாட்டார்கள். மேலும், அங்கு உடல் குறைபாடுள்ள மாணவர்கள் படிப்பார்கள். யாரும் அதைப் பொருட்படுத்தி, கேலி செய்யாது அவர்களில் ஒருவராக அவர்களுக்கு உதவியாய்த்தான் இருப்பார்கள்.
என்ன சொல்ல வருகிறீர்கள் என்கிறீர்களா?
என் மூத்த மகள் படிக்கும்போது நடந்த நிகழ்வொன்றைப் பகிர்ந்து கொள்ளத்தான் நான் விழைகின்றேன்.
அந்தப் பள்ளியின் சிறப்பு என்னவென்றால், படிப்பைத் தாண்டி, மற்ற தளங்களிலும் சிறப்புப் பெற்று விளங்க, திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவியாய் இருக்கும். இவ்வாறுதான் என் மகள் இருவருமே, ஓவியம், நாடகம், நடனம், அறிவியல் நிகழ்ச்சிகள் என்று எல்லாவற்றிலும் முதன்மை பெற வாய்ப்பாய் அமைந்தது. இன்னமும் அந்தப் பள்ளியில் பயின்றவர்களிடம் இருக்கும் படைப்புத் திறன் போற்றும் வகையில் தான் இருக்கின்றது.
ஒவ்வொரு செப்டம்பர் எட்டு, ஒன்பது தேதிகளில் பள்ளி நிறுவப்பட்ட நாளும், ஆண்டு விழாவும் மிகவும் விமர்சையாகக் கொண்டாடுவார்கள். ‘பள்ளி நாள்’ நடக்கும் போது, கல்வி சார்ந்த பரிசுகள் மாணவியருக்கு, வகுப்பு வாரியாக அதிலும் பிரிவு வாரியாக அளிப்பார்கள். பத்தாம் வகுப்பில், +2இல் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு அநேக பரிசுகள் இருக்கும். சில சமயங்களில் ஒரே மாணவியே அத்துணை பரிசுகளையும் வாங்கிச் செல்வார்.
என் மகள் +1 படித்துக் கொண்டிருக்கும்போது நடந்த ஆண்டு விழாவில் என் மகள்தான் ஆங்கிலத்திலும் தமிழிலும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாள். சிறப்பாகச் செய்தாள் என்று எல்லோரும் பாராட்டு. தன் பெண்ணிற்குப் பாராட்டு என்றால் எந்தத் தாய்க்குத்தான் சந்தோஷமாய் இருக்காது! மிகவும் சந்தோஷமாய் அன்றிரவு வீடு வந்து சேர்ந்தோம்.
இரவு எல்லோரும் சாப்பிட்டுப் படுத்தோம். பாதி இரவில் திடீரென்று விழித்தேன். எப்போதுமே தொடர்ந்து உறங்கமாட்டேன். ஏனெனில் பெண்ணிற்கு மூச்சிரைப்புச் சிக்கல் உண்டு. எழுந்து பார்த்தால், நான் நினைத்தது போல் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து இருந்தாள்.
‘என்னம்மா’ என வினவினேன்.
‘வயிறு வலிக்கிறது’ என்று கூறினாள்.
‘ஏதாவது பள்ளியில் சாப்பிட்டாயா? ரொம்ப நேரம் வெறும் காலி வயிறாய் இருந்திருக்கும். அதனால்தான் வலிக்கிறது’ என்றேன்.
‘ஸ்கூலில் பிஸ்கட் கொடுத்தார்கள்’ என்று பதில் கூறினாள்.
அப்போதைக்கு ‘டைஜின்ஜெல்’ மாத்திரையைக் கொடுத்துத் தூங்க வைத்தேன். மறுநாள் விடுமுறை. அதற்கு மறுநாள் காலாண்டுத் தேர்வு. மறுநாள் அந்த எண்ணத்தில் மிகவும் தீவிரமாகப் படிப்பில் இருந்தாள். ஆனால் வலி இருந்துகொண்டே இருந்தது. இந்த வலியோடு இரண்டு தேர்வுகள் கழிந்தது. மூன்றாவது நாளும் கழிந்தது. ஆனால் வயிற்று வலி குறைந்தபாடில்லை. வாயுத் தொல்லையாக இருக்குமோ? என் கணவருக்கும் புரியவில்லை. நான்காம் நாள் தேர்வு எழுதிவிட்டு வீடு வந்தாள் அவள். அப்போது அவளுடைய பெரியப்பா வேறு வீட்டில், ஊரிலிருந்து வந்திருந்தார். அவர், ‘ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்’.
என் புகுந்த வீடு, ஆசிரியர்கள் நிறைந்த குடும்பம். அதனால் ஆசிரியர் பற்றி யார் குறை கூறினாலும் ‘மரியாதை’ இல்லை என நினைப்பவர்கள். அந்தப் பண்புதான் எங்கள் வீட்டிலும் இருந்து வந்தது. நான்காம் நாள் தேர்வு எழுதிய என் மகள் ஒரு கதையோடு வந்தாள்.
“அப்பா! என் கூடப் படிப்பவள் என்னிடம் விளையாடுகிறாள் அப்பா! எனக்கு ‘ஸ்லோ பாய்சன்’ வைத்துவிட்டதாகவும் டாக்டரிடம் போ என்றும் நேற்று ஒரு குறிப்புக் காகிதம் என் பையில் இருந்தது. இன்று, அதை வலியுறுத்தி நீ சாப்பிட்ட மாரி பிஸ்கட்டில் ‘ஸ்லோ பாய்சன்’ தடவி உனக்குக் கொடுத்துவிட்டேன். தயவு செய்து டாக்டரிடம் போ! என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருந்தாள். நான் அந்தக் கடிதத்தைத் தலைமையாசிரியையிடம் கொடுத்துவிட்டு வந்து விட்டேன்” என்றாள்.
எனக்குப் பொறி தட்டியது. நான் என் கணவரிடம் இவள் 4 நாட்களாக வயிற்று வலி என்று அவதிப்படுவது, இதனால் இருக்கலாம் அல்லவா என்றேன்.
அவள் பெரியப்பாவும் ‘இதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உடனே ஸ்கூலுக்குப் போய் தலைமை ஆசிரியையைப் பார்ப்பது நல்லது’ என்றார்.
அவர் இப்படி சொன்னதும், மூவரும் பள்ளிக்கு விரைந்தோம். தலைமை ஆசிரியரிடம் எதற்காக வந்தோம் என்று கூறினோம். அந்த நிமிஷம் வரை அவருடன் எங்களுக்கு மிக இணக்கமான உறவு இருந்தது. அவர்களும், நானும் ஆசிரியர்களிடம் கலந்து யாரென்று பார்க்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள் என்றார்.
யார் என்று தெரிந்தால், அவள் என்ன கொடுத்தாள் என்பது தெரிய வரும். மேலும் அவளைப் பயமுறுத்த வேண்டாம். தெரியாமல் செய்ததன் விளைவை எடுத்துச் சொல்லலாம் என்றார் என் கணவர்.
தலைமையாசிரியர் சரி, சரி என்று கூறினார். என் கணவரும், நானும் எதற்கும் (தெரிந்த டாக்டரிடம் விளக்கி அவள் வயிற்றுவலியால் அவஸ்தைப்படுவதால்) ஏதாவது மருந்து கொடுக்கப் பார்க்கிறோம் என்று கூறிவிட்டு வந்தோம்.
எங்களுக்கு மிகவும் வேண்டிய, என் மகள் பிறந்ததிலிருந்து நாங்கள் மருத்துவப் பரிசோதனைக்குப் போகும் மருத்துவ ஆய்வாளரிடம் விவரித்தோம். அவர் மலச் சோதனை செய்தால், முடிவு தெரிந்துவிடும் என்றார்.
நாளாக நாளாக 24 மணி நேரமும் அவளுக்கு வயிற்றில் வலி அதிகமாகியது. மறுநாள் பள்ளி செல்லும்போது பள்ளி மானேஜ்மெண்ட் பயந்துபோய் விட்டது தெரிந்தது. நாங்கள் எங்கே போலீஸ் என்று போய்விடுவோம் என்று. இவ்வளவு நாள் எங்களுடன் உறவு வைத்துக் கொண்டும் அவர்கள் எங்களைப் புரிந்தது அவ்வளவுதான்.
மகளின் ஆய்வக முடிவு வந்தது. ஃபங்கல் குரோத் (Fungal Growth) என்ற நச்சுப் பொருளைத் தடவிக் கொடுத்திருக்கிறாள் அந்தப் பெண். உடனே அந்த ஆய்வக மருத்துவர் (Pathologist) ஒரு எதிர்ப்பு மருந்தை (Anti Tode) எழுதிக் கொடுத்து, ஒரு வாரம் சாப்பிடச் சொன்னார். அந்தச் சோதனை முடிவைத் தலைமையாசிரியையிடம் காண்பித்ததும், இன்னமும் அவர்கள் கலவரப்பட்டுப் போனார்கள்.
இதில் ஒரு விஷயம் புரிந்துகொள்ள வேண்டும். மெய்யாகவே நாங்கள்தான் உணர்ச்சி வசப்பட வேண்டும். அது எங்கள் மகளின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். ஏற்கனவே மூச்சிரைப்பு உள்ள பெண். பாதித்தது என்றால், மிகவும் நலிந்து போய்விடுவாள். நாங்கள் தைரியமாக எடுத்துக்கொண்டு, இச்செயலைச் செய்த பெண்ணிடம் பேசி, தவறை உணர்த்தத்தான் விரும்பினோம்.
எப்பவும் அப்பள்ளி தலைமையாசிரியரோ, ஆசிரியைகளோ அணுகிப் பேச மிகவும் எளிமையானவர்கள். மேலும் அவர்களோடு 14 வருடப் பழக்கம் இருந்தது எங்களுக்கு.
இதே மகளுக்கு மூச்சிரைப்பு இருப்பதால், மிகவும் அவளது நிலைமையைப் புரிந்து கொண்டிருப்பவர்கள். பத்தாம் வகுப்பு தேர்வின்போது, மாடியேற முடியாததால், இவளை மட்டும் கீழே இருக்கும் வகுப்பில் தேர்வு எழுத அனுமதித்தார்கள். இடையில் தானே ஹார்லிக்ஸ், தண்ணீர் என்று போய் கொடுத்துத் தேர்வை வெற்றிகரமாக முடிக்க உதவினார்கள். அவளது வளர்ச்சியில் அப்பள்ளிக்குப் பெரும் பங்கு உள்ளது. நாங்கள் மிகவும் அதற்குக் கடன்பட்டவர்கள். ஆனால் அவர்களுக்கு அதெல்லாம் புரியவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு அப்புறம் அப்பள்ளியுடன் தொடர்பு, அவர்களுக்கு எங்களுடன் இயல்பாக இருக்க முடியவில்லை. ஆனால் நாங்கள் இயல்பாகத்தான் இருந்தோம். இன்னமும் அப்படித்தான் இருக்கிறோம்.
அந்த எதிர்ப்பு மருந்தின் உதவியால் எங்கள் பெண்ணை மீட்டு விட்டோம். ஆனால் பாவம்! பத்து நாட்கள் – இராப்பகலாக ஒரு வயிற்று வலியில் படித்து இருக்கிறாள். அது அவளுக்கும் எங்களுக்கும்தான் தெரியும். அந்த அவஸ்தையை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது எங்கள் மனம் எவ்வாறு பாடுபட்டிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.
பள்ளி நிர்வாகிகள் உதவாவிட்டாலும் நாங்கள் அந்த மாணவி யாரென்று கண்டுபிடித்து விட்டோம். ஆனால் அதுபற்றி அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை. அவளை என் மடியில் வைத்துக் கொண்டு ரோட்டரி கிளப், இதர விழாக்கள் என்று பல இடங்களுக்கு ஆட்டோவில் என் மகளுடனும் மற்ற மாணவிகளுடனும் அழைத்துச் சென்று இருக்கின்றேன். ஏதோ! தெரியாமல் செய்த செயல். நம் பெண்ணும் நமக்கு கிடைத்துவிட்டாள். ஆனால், அதற்குப் பிறகு அவள் வயிறு ஒரு வல்னரபிள் உறுப்புதான்.
‘ஸ்லோ பாய்ஸன்’ தடவிக் கொடுத்த பெண்ணிற்கு எல்லோரும் என் பெண்ணைப் பாராட்டுவது பிடிக்கவில்லை. இதுதான் அவளது செயலுக்குக் காரணம். இந்தப் பண்பு இப்பள்ளியின் பண்பல்ல. அப்பெண் இங்கு முதல் வகுப்பிலிருந்து படித்தவள் இல்லை. ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியிலிருந்து ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்த பெண் ஆவாள். போட்டியும், பொறாமையும் அவளுக்கு அவள் பள்ளி கொடுத்த சீதனம்.
பொருளாதார இறக்கம் என்றும் பண்பை இழக்கச் செய்யாது. பணத்தின் அடிப்படையில் உள்ளதுதான், எதையும் பணத்தால் பெறலாம் என்ற மமதைதான், அடிப்படைப் பண்பை மறக்கச் செய்கிறது. மெட்ரிகுலேஷன் பள்ளியிலிருந்து வந்த ஒரே ஒரு மாணவி, இங்கு வந்து பள்ளியின் இயல்பை மாற்றியது பற்றி அந்தத் தனியார் பள்ளி நிர்வாகிகள் என்ன சொல்வார்கள் நண்பர்களே! பணத்தால் படிப்பையும் வேண்டுமானால் வாங்கலாம். பண்பை வாங்க இயலுமா? இப்பொழுது சொல்லுங்கள்! 25 சதவீதம் ஏழை மாணவர்களைச் சேர்த்துக்கொண்டால் இவர்கள் பள்ளி அழுக்காகி விடுமா? அந்தப் பெண் செய்த காரியம் மெட்ரிகுலேஷன் நிர்வாகமாய் இருந்தால், அந்தப் பெண்ணை டிஸ்மிஸ் பண்ணியிருக்கும். மனிதாபிமானம் இருக்காது அவர்களிடம்.
சரி! அழுக்காகவே இருக்கட்டுமே! அந்த 25 சதவீதம் பேருக்குச் சுத்தத்தைக் கற்றுத் தரட்டுமே! கற்றுத் தருவதற்குத்தானே பள்ளி! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
============================================
படத்திற்கு நன்றி: http://cherished4ever.blogspot.com
பகிர்ந்தமைக்கு நன்றி..
// போட்டியும், பொறாமையும் அவளுக்கு அவள் பள்ளி கொடுத்த சீதனம். //
இது கூட தவறென்பேன்..
தனி நபரின் குணத்துக்கு ஒரு பள்ளியைக் குறை சொல்ல முடியுமா?.. அதில் வேலை செய்யும் நம்மைப் போன்ற ஆசிரியர்கள்?..
ஞானி (ஓ பக்கங்கள்), கல்கி, 22.-05.2011:
இதில் பேசப்பட்டதில் உண்மை இருக்கிறது; ஆதங்கம் புரிகிறது; சினமும் நியாயமானதே.
ஆனால், திருமதி.தி. சுபாஷிணி சொல்வது எனக்கு கொஞ்சம் கூட புரியவில்லை. ஃபங்கல் குரோத் (Fungal Growth) என்ற நச்சுப் பொருளைத் தடவிக்கொடுத்த விஷகன்னிகையின் செயலுக்கு மெட்றிகுலேஷன்/தனியார்/ அரசு பள்ளிகள் எதுவுமே காரணமாக இருந்திருக்காது, அவளின் குடும்ப/தனி பின்னணி சமுதாயத்திற்கு அவசியம் தெரியவேண்டும். முன்சாக்கிரதை தேவை. Antidote என்ன கொடுத்தார் என்பதும் தெரியவேண்டிய விஷயம். ஃபங்கல் குரோத் (Fungal Growth)க்கு Antidote இருக்கிறது என்பதே எனக்கு வியப்பான செய்தி. போட்டியும், பொறாமையும் தொட்டில் பழக்கமல்ல, குடும்பத்தின் சீரழிவினால் இல்லை, அது பள்ளி கொடுத்த சீதனம் என்பதற்கு ஆதாரமே கொடுக்கப்படவில்லை.
மாரல்: பள்ளி யாதாயினும், பெற்றோர்களின் கவனம், சிரத்தை குறையக்கூடாது.
great. we must upgrade the govt schools to the standard of so called private intellectual schools and definitely give 25 % reservation to the rich people
திருமதி சுபாஷினி அவர்களின் பெண் வயிற்று வலியால்
துடித்தது பிரசவ வேதனையை விட அதிகமாக இருக்கும்.
வயிற்றில் உள்ள அழுக்கை நீக்கியதோடு அதற்குக்
காரணமான பெண்ணின் மன அழுக்கையும் நீக்க எடுத்த
நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது. வள்ளுவர்
“அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.” என்ற குறளில்,” ஒருவனுக்கு
தன பகைவன் செய்யத் தவறிய கேட்டை அவனுடைய
பொறாமைக் குணமே தவறாமல் செய்துவிடும்” என்கிறார்.
பகைவன் எட்டி இருக்கிறான், ஆனால் பொறாமைக்
குணம் நம் நெஞ்சில் அல்லவா இருக்கிறது.
இரா. தீத்தாரப்பன், இராஜபாளையம்.