தமிழ்த்தேனீ

Tamil_thenee“15 நாளா நினைவில்லை, டாக்டர் வந்து பாத்துட்டு, இந்த அம்மா கோமா ஸ்டேஜுக்குப் போயிட்டாங்க, ஜாக்கிரதையா பாத்துக்கோங்க. வேற ஒண்ணும் பண்ண முடியாது,. ஒரு வேளை  நினைவு வரலாம். அல்லது வராமலே இருக்கலாம். ஜாக்கிரதை என்று சொல்லிவிட்டுப் போனார்.”

நினைவில்லாமல் படுத்திருந்த கமலத்துக்கு இதுவும் காதில் விழுந்தது. ஆனால் ஒரு உணர்ச்சியையும் காட்ட முடியலை. உணர்ச்சியை காட்ட முடியலை. ஆனா உள்ளே ஓடற நினைவுகளை நிறுத்த முடியலை. கோமா ஸ்டேஜிலே இருக்கேன்னு டாக்டர் சொன்னது, எனக்குக் காதிலே விழுந்துது. மனசே உனக்கு காதிலே விழல்லையா? என்று மனதுக்குள்ளேயே கேட்டுக்கொண்டாள் கமலம்.

கமலத்துக்கு அவளோட ஆத்துக்காரர் அடிக்கடி சொல்றது ஞாபகம் வந்துது.

‘அவ நாம சொல்ற எதையுமே காதிலேயே வாங்கமாட்டா, அப்பிடியே காதிலே வாங்கினாலும் மனசுலே போட்டுக்க மாட்டா!’

சிரிப்பாய் வந்தது கமலத்துக்கு! மனசிலே போட்டுண்டு இருந்தா, இத்தனை நாள் வாழ்க்கையை ஓட்டி இருக்க முடியுமா? கோயில் காலம் ஆறது போல இருக்கு, அதான் மேளச் சத்தமும் நாதஸ்வரமும் கேக்கறது. கோயில் காலம் ஆனவுடனே கோஷ்டி ஆகும், கோஷ்டி சாதிச்சவுடனே எல்லாருக்கும் ப்ரசாதம் குடுப்பா. கோஷ்டி சாதிக்கறது காதிலே விழுமோ என்னமோ, பிரசாதத்துக்கு மனசு மட்டும் காத்துண்டு இருக்கும்.

இப்பிடித்தான் ஒருநாள் விடியக் காத்தாலே எழுந்து அடையவளைஞ்சான் பக்கமாப் போயி, வழியிலே கொழுகொழுன்னு நிக்கற பசுவையும் கூடவே ஒட்டி ஒட்டி உறவாடிண்டு துள்ளித் துள்ளிக் குதிக்கற கன்னுக்குட்டியையும் தடவிக் குடுத்துட்டு காவிரிலே குளிச்சிட்டு, துணியெல்லாம் தோச்சு தோளிலே போட்டுண்டு அப்பிடியே பித்தளைக் குடத்தை நன்னா பொன்குடம் மாதிரி தேச்சு அதிலே நல்ல இடமா பாத்து காவேரிலேருந்து தண்ணி மொண்டாள் கமலம்.

srirangam temple gopuram

ஆத்துக்கு வந்து திண்ணையிலே இருக்கற ஏணி மாதிரி படியிலே ஏறிப் போயி மொட்ட மாடிலே துணியெல்லாம்  உலத்திட்டு, கீழே வந்து ஆத்து வாசல்லே கோலம் போட்டுட்டு பரபரன்னு தளிகையெல்லாம் முடிச்சு, பெருமாளுக்கு அமிசைப் பண்ணிட்டு ஆத்திலே மத்தவாள்லாம் சாப்பிடறதுக்கு தயாரா வெச்சுட்டு கோயிலுக்குப் போகலாம்னு வெளியே வந்தாள் கமலம்.

நேரம் ஆயிடுத்து. கோயில் காலமும் முடிஞ்சு கோஷ்டி முடிஞ்சு பிரசாதமும் குடுத்தாச்சு… கடைசியா நின்ன அவளுக்கு பிரசாதம் கிடைக்கலே, தீந்து போச்சு, செத்த முன்னே வரதுக்கென்ன? போயிட்டு நாளைக்கு வாங்கோ அப்பிடீன்னார் பட்டாச்சாரியார். மனசே ஒடைஞ்சு போச்சு. அது சரி, எதுக்கு இவ்ளோ கோவம் வரது நமக்கு.

அப்பிடீன்னு ஒரு மனசு நெனைச்சாலும் இன்னொரு மனசு, பட்டாச்சாரியாரைப் பெருமாளுக்கு அடுத்தபடியா நெனைச்சிண்டு இருக்கோம், அதான் அவர் பிரசாதம் குடுக்கலைன்னா ஏதோ நம்மளைப் பெருமாளே ஒதுக்கிட்டா மாதிரி ஒரு அழுகை வரது. சரி நமக்குக் குடுத்து வெச்சது அவ்ளோதான் அப்பிடீன்னு நெனைச்சிண்டு திரை திறந்ததும் பெருமாளைப் போயி சேவிச்சிட்டு அப்பிடியே பிரதக்ஷணமா வந்துண்டே இருக்கச்சே, எல்லார் கையிலேயும் ப்ரசாதம், அவாவா சாப்டுண்டே, பேசிண்டே போயிண்டிருக்கா…..

‘என்ன இருந்தாலும் பெருமாளுக்கு அமிசைப் பண்ணதுன்னா அதுக்கு ஒரு தனி ருசி வந்துர்றது, பொங்கல் மணக்கறது பாரும்’, என்றார் ஒருவர்.

‘அது நெய் வாசம் ஓய்’ என்றார் இன்னொருவர்.

‘எல்லாரும்தான் நெய் குத்தி, பொங்கல் பண்றா. இந்த வாசமும் ருசியும் வரதா என்ன? இது தனி ருசி. பெருமாள் அமிசைப் பண்ணினாத்தான் வரும்’ என்றார் இன்னொருவர்.

நாக்கில் ஜலம் ஊறியது. மனசு ஒடிஞ்சு போச்சு, அது எப்பிடி எனக்குப் பிரசாதம் கிடைக்காம போகலாம்? நான் என்ன இன்னிக்கு நேத்தா வரேன். நெனைவு தெரிஞ்ச நாளிலேருந்து உன்னைச் சேவிக்க வந்துண்டேதானே இருக்கேன். இது உனக்கே அடுக்குமா? மனசு பொருமிற்று. திடீர்ன்னு ஒரே சத்தம். யார்கிட்டேயோ இருந்த பிரசாத தொன்னையைக் குரங்கு பிடிங்கிண்டு போயிடுத்தாம்.

monkey in temple‘ஜாக்கிரதையா வெச்சிக்கப்படாதோ, இங்கதான் குரங்கு வரும்னு தெரியுமோன்னோ?’ என்று ஒரு அங்கலாய்ப்பு.

‘இல்லே கெட்டியாதான் பிடிச்சிண்டு இருந்தேன். கண்மூடிக் கண் திறக்கறதுக்குள்ளே எங்கேந்து வந்துதுன்னே தெரியாம திடீர்ன்னு வந்து பிடுங்கிண்டு போயிடுத்து. கைக்கெட்டினது வாய்க்கெட்டலையே’ என்றார் அவர்.

‘நல்ல வேளை நான் வெச்சிருக்கேன். இந்தாங்கோ..’ என்று இன்னொருவர், அவருக்குக் கொஞ்சம் பிரசாதம் கொடுத்தார்.

‘ஆஹா, தேவாமிர்தமா இருக்கு. இதைப் போயி அந்தக் குரங்கு பிடுங்கிண்டு போயிடுத்தே’ என்று அங்கலாய்த்தார் அவர்.

‘குரங்குன்னு சொல்லாதீங்கோ. ஆஞ்சனேயர், அவர் அப்பிடித்தான். நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்’ என்று சொல்லிவிட்டு ‘கெக்கெக்கே’ என்று சிரித்தார் அவர்.

இவா யாருக்கும் கண்ணிலே படாதோ, எனக்குப் பிரசாதமே கிடைக்கலையே. எனக்குக் கொஞ்சம் குடுக்கணும்னு இவாளுக்குத் தோணாதோ?
நாமளா கேட்டு வாங்கிச் சாப்படலாம்னா அதுக்கும் மனசு கேக்க மாட்டேங்கறது. எனக்கு மனசுக்குள்ளே ஒரு சுய இரக்கம், எனக்கு மட்டும் கிடைக்கலையே, பகவானே நான் என்ன பாவம் பண்ணேன். என்னை மட்டும் சோதிக்கிறயே என்று.

இதென்னது இன்னிக்கு, கொஞ்சூண்டு பொங்கல் அது கிடைக்கலேன்னு இவ்ளோ கஷ்டமாயிருக்கு மனசு? இந்த மனசு கஷ்டப்படறது பொங்கலுக்கு இல்லே, நமக்கு எப்பிடி பிரசாதம் கிடைக்கலேன்னு பொருமல், வேற ஒண்ணும் இல்லே..

‘பகவானே’ அப்பிடீன்னு கை ரெண்டுத்தையும் சேத்து கூப்பிண்டு, ‘நீதான் என்னைக் காப்பாத்தணும். வரவர  எனக்கு மனசு திடமே இல்லாமே அலைக்கழிக்கறது. என் மனசுக்குத்  திடத்தைக் குடு’ அப்பிடீன்னு வேண்டிண்டு திரும்பினாள் கமலம்.

அவள் கையில் ஏதோ விழுந்தது.

அப்பிடியே கெட்டியா பிடிச்சிண்டு, என்னான்னு பார்த்தா, ஒரு தொன்னையிலே பொங்கல்.

மேலே அந்தக் குரங்கு உக்காந்துண்டு இவளையே பாத்துண்டு இருக்கு. அந்தக் குரங்கோட கண்ணிலே ஒரு கருணை, நமக்குத்தான் இப்பிடியெல்லாம் தோண்றதா, இல்லே உண்மையாவே கருணையா? புரியலை. இருந்தாலும் பயம். அது வந்து பிடுங்கிண்டு போயிடுத்துன்னா, என்ன பண்றது? பொங்கலை எடுத்துச் சாப்பிடலாம்னு கையிலே எடுத்தா, மனசு சொல்றது, அந்தக் குரங்கு வாயை வெச்சிருக்குமே. அதைப் போயி நாம் சாப்படலாமான்னு. இப்போ அந்தப் பொங்கலைச் சாப்பிடறதா, வேண்டாமான்னு தெரியலை.

அதெல்லாம் வாயை வெச்சிருக்காது. அது கையிலே கிடைச்சா ஒரு  நிமிஷத்திலே சாப்ட்ருமே. ஒரு வேளை நம்ம மனசு புரிஞ்சுதான், நமக்குக் கொண்டுவந்து குடுத்துதோ இந்தக் குரங்கு. ஒரு வேளை ஆஞ்சனேயர்தானோ இந்தக் குரங்கு? சரி பெருமாள் பிரசாதம் சாப்புடுவோம்னு முடிவு பண்ணி ஒரு கவளம் கையில் எடுத்தாள் கமலம். அந்தக் குரங்கு இவளையே பார்த்துக்கொண்டிருந்தது.

கையில் எடுத்த அந்தக் கவளத்தை அப்பிடியே அந்தக் குரங்குக்கு நீட்டினாள்.

குரங்கு இப்போது இறங்கி வந்தது.

இவள் மனக் குரங்கும்தான் இறங்கியது.

இவள் கையிலிருந்து ஸ்வாதீனமாக வாங்கி பொங்கலை வாயில் போட்டுக்கொண்டது குரங்கு. ஒரு சீற்றமில்லை, சாதுவாக இவளுடன் நடந்து வந்துகொண்டிருந்தது. இவள் ஒரு வாய், குரங்கு ஒரு வாய் என்று இருவரும் பிரசாதத்தை முடித்தனர்.

குரங்கு இவள் புடவையைப் பிடித்து, இவள் மேலேறி, தோளில் உட்கார்ந்து முகத்தோடு முகமாக வைத்துக்கொண்டு இவளையே தன் கண்களால் உற்றுப் பார்த்தது. அதன் கண்களில் கருணையா?!

மூலஸ்தானத்தில் இருக்கும் பெருமாளின் உருவம் அந்தக் குரங்கின் கண்ணில் தெரிந்தது. பிரமையா என்று யோசிப்பதற்குள் குரங்கு மதில் சுவருக்குத் தாண்டியது. அங்கே உட்கார்ந்துகொண்டு, தன் தலையில் கை வைத்துக்கொண்டு, தன் பல் தெரிய கிர்ரென்றது. யார் யாருக்கு என்ன பிராப்தமோ அதுதான் கிடைக்கும். கமலத்துக்கு புரிந்தது, ஓ இன்னிக்கு  ஹனுமத் பிரசாதம்ன்னு.

அவளுக்கு சிரிப்பு வந்தது. அவள் சிரித்தாள், வாய்விட்டுச் சிரித்தாள், ஆனால்  உதடு அசையவில்லை. உடலில் ஒரு குலுங்கல் இல்லை. ஆமாம் அவளுக்குக் கோமாவாயிற்றே. அதான் ஒண்ணும் அசையலை.

மானச யாத்திரை தொடரும்.

============================================

படங்களுக்கு நன்றி: http://southindiadownloads-world.blogspot.com, http://gaurangakishore.blogspot.com

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “மானச யாத்திரை

  1. 1.’…இப்பிடித்தான் ஒருநாள் விடியக் காத்தாலே எழுந்து அடையவளைஞ்சான் பக்கமாப் போயி, வழியிலே கொழுகொழுன்னு நிக்கற பசுவையும் கூடவே ஒட்டி ஒட்டி உறவாடிண்டு துள்ளித் துள்ளிக் குதிக்கற கன்னுக்குட்டியையும் தடவிக் குடுத்துட்டு காவிரிலே குளிச்சிட்டு, துணியெல்லாம் தோச்சு தோளிலே போட்டுண்டு அப்பிடியே பித்தளைக் குடத்தை நன்னா பொன்குடம் மாதிரி தேச்சு அதிலே நல்ல இடமா பாத்து காவேரிலேருந்து தண்ணி மொண்டாள் கமலம்…’
    => எம்பி, எம்பி, ஓட்டமும், நடையுமா, அருமையான சொற்றொடர்.

    2. அனுமார் தான் போல! குரங்கெல்லாம், இத்தனை சுளுவா மனுஷாளோடு ஒட்டிக்காது.

  2. ஓ, தொடராக வரப் போகிறதா, மானச யாத்திரை? தொடருங்கள் ஐயா, நன்றாக இருக்கும். தங்கள் எழுத்து நடையில் மெருகு கூடியிருப்பது போல் தெரிகிறது. வாழ்த்துகள். நல்ல கற்பனையும் கூட!

  3. மனசிலே போட்டுண்டு இருந்தா, இத்தனை நாள் வாழ்க்கையை ஓட்டி இருக்க முடியுமா? //

    வாழ்க்கையின் நுணுக்கத்தைத் தொட்டுக் காட்டிய வரிகள். நன்றி, தொடருமா என்ன?? முடிஞ்சுட்டாப்போல் தெரியலையே?

  4. kadhai migavum arumaiyai irundhadhu. kadavulidam unmayaiyana paasamum, bakthiyum kondirundhal nam chinna manakkurai kooda kadavulal theerthu vaikkappadugiradhu. ennum nambikkayai ik kadhai unarthugiradhu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *