நம்பிக்கை.. அதானே எல்லாம்!

சங்கர் ராமன்

நிராகரிப்பை நிராகரியுங்கள்;

“சக்சஸ்images

சக்சஸ்

சக்சஸ்…”

வெற்றி பெறத் துடிக்கும் அனைவரின் காதுகளிலும் ஒலிக்கவேண்டிய அற்புதமான வார்த்தைகள். வெற்றி என்பதற்கு ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படும் அழகான வார்த்தைகள்..

உச்சரித்த உதடுகள் சாதாரணமானவை அல்ல. தமிழ்த் திரையுலக வரலாற்றைப் புரட்டிப்போட்ட படம் “பராசக்தி”. அப்படத்தில் அறிமுகமாகி பின்னாளில் நடிப்பிற்குப் பல்கலைக்கழகமாக விளங்கும் செவாலியே டாக்டர். சிவாஜி கணேசன் அவர்களால் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள்தான் அவை. திரையுலக வாழ்க்கையில் தனது முதல் காட்சியில் அவர் பதிவு செய்த வார்த்தைகள் அவரின் வாழ்க்கைப் பதிவையே பின்னாளில் மாற்றியது என்றால் அது மிகையாகாது.

வார்த்தைகளுக்கு எப்போதுமே வலிமையுண்டு. “நீங்கள் எதுவாக நினைக்கிறீர்களோ அதுவாகவே மாறுவீர்கள்” என்பது விவேகானந்தரின் வாக்கு. முயற்சியோடு பயிற்சியும் இருந்தால் எல்லா வெற்றிகளும் எளிதில் வரும் என்பதில் ஐயமில்லை. பராசக்தி படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த சமயம் பாரம்பரியமிக்க ஒரு வார இதழில் அப்படம் பற்றிய திரைவிமர்சனம் வெளிவந்தது. அதில் “பராசக்தி படம் மிகப்பொpய வெற்றிப்படமாக அமைந்து தமிழ்த்திரைஉலகம் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகச்சிறப்பான கதை வசனத்தை கருணாநிதி எழுதியுள்ளார். அனைத்தும் சரியான முறையில் இருந்தாலும் அறிமுகமாகியிருக்கும் கதைநாயகன் மட்டும் சரியான தேர்வல்ல. அவரை மாற்றியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்” என்ற கருத்துகள் இடம் பெற்றிருந்தன. அதே போன்று அவருக்கு ஒப்பனை செய்ய வந்த ஒப்பனைக்காரரும் “இவரின் முகம் சரியில்லை. இவருக்கு ஒப்பனை செய்ய விருப்பமில்லை” என்று சொல்லிவிட்டார்… இவர்கள் அத்தனை பேருக்கும் சிவாஜி பதில் சொல்லவில்லை காலம் பதில் சொல்லியது.

என்னுடைய வெற்றிக்குக் காரணமாக நான் சொல்வது கடின உழைப்பைத்தவிர வேறொன்றுமில்லை

– சிவாஜிகணேசன்.

எந்த வார இதழ் இவரை குறை கூறியதோ அதே வார இதழ் தனது பொன்விழா மலரில் உலகின் மிகச்சிறந்த நடிகர்களின் பட்டியலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் முதல் இடம்பெற்றவர் ‘செவாலியே’ டாக்டர். சிவாஜிகணேசன் அவர்கள்தான். ஆம் நிராகரிப்புகளையே நிராகரித்தவர் அவர்.

அவருடைய வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் பிரான்ஸ் நாட்டில் நடிப்புப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. உலகின் எந்த நடிகரும் இவரின் சாயல் இல்லாமல் நடிக்க முடியாது என்பதே நிதர்சனமாக உண்மையாகும். இவரின் முகம் சரியில்லை என்று கூறிய ஒப்பனைக்காரருக்கு பிற்காலத்தில் உதவி செய்த மாமனிதர் சிவாஜி என்பதும் குறிப்பிடத்தக்கதே ஆகும்.

எல்லோருக்கும் வெற்றிபெற விருப்பமிருக்கிறது.

ஆனால் வெகுசிலரே வெற்றி பெற தங்களைத் தயார் செய்துகொள்கிறார்கள்.

உழைப்பே வெற்றியின் திறவுகோலாக அமைகிறது. தோல்வியடையக்கூடாது என்ற வகையிலே பலரும் போராடி வருகின்றனர். வெற்றி பெற போராட்டம் தேவையில்லை. செய்யும் வேலைகளை ஆர்வமுடன் செய்தாலே வெற்றி நம் வாசல் தேடி அலையும்.

உண்ணுவதையும், உறங்குவதையும் மட்டுமே வேலையாகக் கொண்டவர்களை இவ்வுலகம் விழுங்கிவிடும். உங்களிடம் இந்த உலகம் எதையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. வெற்றி எல்லோருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. நிராகரிக்கப்பட்ட பலரும் பின்னாளில் தொடர்ந்த உழைப்பினாலும் முயற்சியாலும் வெற்றி பெற்றிருக்கின்றனர். இதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம்.

அமெரிக்காவில் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் 5ம் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அதில் பறவைகள் பற்றிய பாடத்தை ஒரு ஆசிரியப் பெண்மணி நடத்திக் கொண்டிருந்தார். கோழி எப்படி முட்டையிடும்? அவற்றை எப்படி அடைகாக்கும்? என்பது பற்றி கூறிக் கொண்டிருந்தாள். அதைக்கேட்ட சிறுவன் வீட்டிற்குச் சென்றான். அம்மாவிடம் அடம்பிடித்து பத்து முட்டைகளை வாங்கி வரச் சொன்னான். நடுவீட்டில் அவற்றை வரிசையாக வைத்து அதன்மீது ஏறி அமர்ந்தான். வீடு முழுக்க அசுத்தம் செய்த தன் மகனைத் திட்டினாலும் அவன் செய்து பார்த்த செயலை தனக்குள் ரசித்துக் கொண்டாள்.

அவர்தான் தாமஸ்ஆல்வாஎடிசன்!

மறுநாள் வீட்டில் நடந்தவற்றை ஆசியரிடம் சொல்லி “நீங்கள் சரியான முறையில் கற்றுத்தரவில்லை. அதனால் தான் இந்தத் தவறு நடந்தது” என்று தைரியமாக எதிர்த்து நின்றான். எதிர்த்தவுடன் அந்த ஆசிரியப் பெண்மணி சிறுவன் என்று பார்க்காமலே அவனை அடித்து,அழவைத்தாள். அவன் சட்டைப் பையில் ஒரு கடிதத்தை எழுதிவைத்து உடனே வீட்டிற்கு அனுப்பினார். அழுதுகொண்டே வீடு வந்து சேர்ந்த தன் பையனை தேற்றி விட்டு விவரங்களைக் கேட்டறிந்தாள் அவன் தாய்.

அவனது சட்டைப்பையில் கடிதம் வடிவில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்! அதில் “உங்கள் பையன் அடிமுட்டாள். இவன் இன்று முதல் எங்கள் பள்ளியில் மட்டுமல்ல… உலகத்தின் எந்தப்பள்ளியிலும் படிப்பதற்கு லாயக்கற்றவன்” என்று எழுதப்பட்டிருந்தது. அந்த நிராகரிப்பு அந்தத் தாயினை வேதனைப்படுத்தியது. ஆனால் அந்த வேதனை அவளுக்குள் உரமானது. அந்த உரமே அவள் பையனுக்குள் கருவானது.

தன் மகனிடம் அன்று அவள் சொன்ன வார்த்தைகளே பிற்காலத்தில் நிதர்சனமான உண்மையானது. “நீ இனி எந்தப் பள்ளிக்கூடத்திற்கும் செல்ல வேண்டாம் என் கூடவே இருந்து கற்றுக்கொள். எதிர்காலத்தில் உன்னைப் பற்றிய பாடங்கள் உலகப் பள்ளிக் கூடங்கள் அனைத்திலும் இருக்கும்” என்ற வார்த்தைகள்தான் அவை. அந்த வார்த்தைகள் உண்மையானது.

பள்ளியிலிருந்து நிராகரிக்கப்பட்டு விரட்டப்பட்ட அந்த அமெரிக்கச் சிறுவன் வேறுயாருமல்ல… அவர்தான் 1600 கண்டுபிடிப்புகளுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன். உலக அளவில் 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்ற ஒரே விஞ்ஞானி இவர்தான். ஆம் நிராகரிக்கப்பட்டவர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதே உலகம் அறிந்த உண்மையாகும்.

எந்தத் தடைகளுக்கும் அஞ்சாதீர்கள்.

அவற்றை வரவேற்று கொண்டாடுங்கள்.

ஏனெனில்

தடைகள்தான் உங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும்.

நெருக்கடியான காலகட்டம்தான் மிகச் சிறந்த மனிதனை அடையாளம் காட்டுகின்றன. சராசரி வாழ்க்கையோடு சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.

“இருந்தாலும் இறந்தாலும்

பேர் சொல்ல வேண்டும்

இவர் போல யாரென்று

ஊர் சொல்ல வேண்டும்”

என்ற வரிகள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மட்டும் எழுதப்பட்ட வைர வரிகள் அல்ல. நம் ஒவ்வொருவருக்கும் உரித்தான வரிகளே இவை. எதையாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற நினைப்போடு வாழுங்கள். எதிர்காலம் உங்களை கட்டி அணைத்துக் கொள்ளும்.

இது நம்ம ஊருல நடந்த கதை. பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த கதை இது. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது “கண்ணன்” என்ற சிறுவர் பத்திரிக்கைக்குக் கதை எழுதி அனுப்பியிருந்தான் ஒரு மாணவன். பள்ளிக்கூட முகவரிக்கு அந்தக் கதை பிரசுரமாகாமலே திரும்பி வந்து விட்டது. வகுப்பாசிரியர் கையில் கதை கிடைத்துவிட்டது. அவ்வளவுதான் ஆசிரியர் காதைப் பிடித்து திருகி அவரைப் படாதபாடு படுத்திவிட்டார்.

“படிக்குற வயசுல உனக்கெல்லாம் எதுக்குடா இந்தக் கதை எழுதுற வேலை. படிப்புல அக்கறை இல்ல. “வாங்கற மார்க்கைப் பாரு” என்று கேலி செய்து அவர் காதைப் பிடித்துத் திருகியிருக்கிறார். அதன் பிறகு எதற்கெடுத்தாலும் காது திருகும் பணியினை அவர் அடிக்கடி செய்து கொண்டிருந்தார். அவர் வகுப்பில் அடிக்கடி தண்டனைக்குள்ளாகும் காதுகளைப் பெற்றவர் வேறுயாருமல்ல. பல்லாண்டுகளாக வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் “இன்று ஒரு தகவல்” சொல்லி வந்த தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களே ஆவார்.

தென்கச்சி.கோ.சுவாமிநாதன்

அவர் வானொலியில் புகழ்பெற்று உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அவருக்கு ஒரு கடிதம் வருகிறது. ‘ஐயா… சென்னை வானொலி நிலையம் கடந்த சில வருடங்களாக ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் ‘இன்று ஒரு தகவல்’ என்ற நிகழ்ச்சியை நான் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவன். தினந்தோறும் வானொலியில் தகவல் தரும் அந்த மதிப்பிற்குரிய பெரியவருடன் தொடர்புகொள்ள விரும்புகிறேன். எனவே அவருடைய பெயர் என்ன? முகவரி என்ன என்பதைத் தெரியப்படுத்த இயலுமா?’ என்று கேட்டு அடிக்கையெழுத்திட்டிருந்தார்.

அந்தக் கடிதத்தை எழுதியவர் வேறு யாருமல்லர். தென்கச்சியாரின் காதுகளைத் திருகிய மதிப்பிற்குரிய ஆசிரியரே ஆவார். இதனைத் தன் கூட்டங்களில் அடிக்கடி தென்கச்சியாரே கூறியிருக்கிறார். “நீ என்ன பெரிய ஆளா? என்று கூறி ஏளனம் செய்த ஆசிரியரே பிற்காலத்தில் மதிப்பிற்குரிய பெரியவருக்கு… எனக் கடிதம் எழுதக் காரணம் என்ன? வேறு எதுவுமில்லை. தென்கச்சி சுவாமிநாதனின் அயராத உழைப்பு மட்டுமே ஆகும்.

நாம் அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அற்புதமான வரிகள் “எதனால் நீங்கள் நிராகரிக்கப்பட்டீர்களோ அதனைக் கொண்டே வெல்ல வேண்டும்” என்பதே ஆகும். இவை இளைய சமுதாயத்தின் எழுச்சி நாயகன் விவேகானந்தனின் வரிகள். புரிந்து கொள்ளுங்கள். இந்த உலகில் வெற்றியாளர்கள் அனைவரும் நிராகரிப்பை வென்றவர்களே. ஆம் உங்களை ஒதுக்கித் தள்ளுபவர்களை பாராட்டுங்கள். ஆம்! உங்களின் வளர்ச்சிக்கு அவர்கள் வழிகாட்டுகிறார்கள். புறக்கணிப்பை புறக்கணியுங்கள்… முதல் புறக்கணிப்பிலேயே முடிந்து போகாதீர்கள்… சில அடிகள் நடந்து பாருங்கள். வெற்றி தேவதை உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்.

தோல்வியடைந்தவர்கள் இரண்டு வகையினர்.

சிந்திக்காமல் செயலாற்றியவர் ஒரு வகை.

சிந்தித்துவிட்டு செயலாற்றாமல் விட்டவர்கள் மற்றவர்கள்.

செயல்படுங்கள். வெற்றி அருகில்தான் உள்ளது.

படத்திற்கு நன்றி:

http://www.google.co.in/imgres?imgurl=http://successonline.com.au/wp-content/uploads/2011/04/building-the-bridge-to-success.jpg&imgrefurl=http://successonline.com.au/&h=1200&w=1600&sz=606&tbnid=FjvY4Hf915FvtM:&tbnh=90&tbnw=120&zoom=1&usg=__003ZAzIdnMU-215nHnUKGyHprVo=&docid=V_FclXvLjj3_kM&sa=X&ei=foccUsrgN4iMrQf_3ICoCA&ved=0CEQQ9QEwAg&dur=1336

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க