ராமஸ்வாமி சம்பத்

images (3)

images

images (1)

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     புருஷோத்தமன் கூறியதுபோல். அக்காட்டு வழி கரடு முரடான பாதையாகத்தான் இருந்தது.  பல இடைஞ்சல்களைத் தாண்டி ஆசுதோஷரின் ஆசிரமத்தை அவ்விருவரும் அடைந்தனர்.

“மாசிடோனிய மன்னரே! இதுதான் ஆசுதோஷ முனிவரின் குடில். நீங்கள் அவருடன் உரையாடி வரும் வரை நமது குதிரைகளுக்குப் பாதுகாப்பாக நான் இங்கு இருக்கிறேன். நீங்கள் சென்று வாருங்கள்” என்றான் உடன் வந்தவன்.

அலெக்சாண்டர் ஆசிரமத்திற்குள் நுழைந்து மோன நிலையில் இருந்த ஆசுதோஷரைக் கண்டான். சதைப்பற்றே இல்லாத ஒரு எலும்புக்கூட்டைப் போல் காணப்பட்ட அவர் மேனியைப் பார்த்த்தும் அவனுக்கு உள்ளூற சிரிப்பு மேலிட்டது. ‘இவரா நமக்கு ஆன்மீக பலம் தரப்போகிறார்?’ என்ற எண்ணம் ஏற்பட்டாலும், வெளியே அதைக் காட்டாமல் இருகரம் கூப்பி, “முனிவரே! மாவீரன் அலெக்சாண்டரின் வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்”  என்றான்.

ஆழ்நிலை தியானத்தில் இருந்த அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. அலெக்சாண்டர் சற்று தன் குரலை உயர்த்தி மீண்டும் தன் வணக்கங்களைத் தெரிவித்தான். அவரிடம் எந்த சலனமும் காணாது, அவன் மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளை மொழிந்தான். ஒரு பயனும் இல்லை. அவர் மோன நிலையிலேயே இருந்தார்.

ஆத்திரமடைந்த அலெக்சாண்டர், ’இந்த கர்வம்படைத்த முனிவருக்கு என் வாளின் கூர்மையால்தான் புத்தி புகட்டவேண்டும்’ என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டு தன் வலது கையை உயர்த்தி அவரைத் தாக்கப் போனான்.

என்ன ஆச்சரியம்! அவனது உயர்த்தப்பட்ட வலது கரம் உறையிலிருந்து உறுவப்பட்ட வாளோடு சித்திரங்களில் காணப்படுவதுபோல் அப்படியே நின்றுவிட்டது. அவ்வாறு எவ்வளவு நொடிகள் இருந்தானோ அவனுக்கே தெரியவில்லை.

“நீ யாரப்பா? எதற்காக வாளோந்திய கையோடு இப்படி நிற்கிறாய்? உனக்கு யார்மீது கோபம்?” சட்டென்று வந்த முனிவரின் வார்த்தைகள் அவனை மண்ணுலகிற்குத் திரும்பி கொண்டு வந்தன.

வியப்பினால் நிலைகுலைந்த அலெக்சாண்டர்,” ஓஹோ, நீங்கள்தான் மாய மந்திரம் செய்து என்னை இப்படி நிறுத்திவிட்டீரோ?” என்றான்.

புன்னகை ததும்பும் முகத்தோடு அம்முனிவர், “குழந்தாய்! நான் மாய மந்திர வேலை எதுவும் செய்யவில்லை. ஆத்திரத்தாலும் அவசரமாகவும் நீதான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் உன் வலது கையை வாளோடு உயர்த்தியிருப்பாய். அது அந்த மரக்கிளையில் வகையாக மாட்டிக்கொண்டு விட்டது” என்றார்.

அலெக்சாண்டருகு ஒரே ஆச்சரியம். அவனை யாரும் இவ்வாறு செல்லமாக அழைத்ததில்லை. தலை நிமிர்ந்து பார்த்த அவ்வரசன் தன் கை அம்மரக்கிளையில் சிக்கியிருப்பதைக் கண்டு வெட்கித் தலை குனிந்தான். ஆனால் என்ன முயற்சி செய்தாலும் கை விடுபடவில்லை. ஆசுதோஷர் மெள்ள அவன் கையை அக்கிளையிலிருந்து மீட்டார்.

பட்டகாயத்திலேயே அக்கிளை உரசியிருந்ததால், குருதி பெருகிற்று. முனிவர் அவனை மெதுவாகத் தன் குடிலுக்குள் அழைத்துச் சென்று கமண்டலத்தில் உள்ள நீரை அக்காயத்தின் மேல் தெளித்து தன் வலது கையால் நீவி விட்டார். ரத்தப்பெருக்கும் விரைவில் நின்றது. அலெக்சாண்டர் அவரை நன்றியோடு பார்த்தான்.

“இப்போது சொல் நீ யாரென்று. உனக்கு என்ன வேண்டும் இந்த எலும்புக்கூட்டிடமிருந்து?” என்று கேட்டார் ஆசுதோஷர்.

அலெக்சாண்டருக்குத் தூக்கிவாரிப்போட்ட்து. ‘இவர் நம் மனத்தில் உள்ளதை அப்படியே சொல்கிறாரே’ என்று வியப்படைந்தான்.

“முனிவரே! என்னை மன்னியுங்கள். வெற்றிமேல் வெற்றிகண்டு பல நாடுகளை வீழ்த்திய மாசிடோனிய மன்னன் “மாவீரன் அலெக்சாண்டர்” நான். என் ஆணைக்கு அனைவரும் கட்டுப்பட்டே ஆகவேண்டும். இல்லாவிடில் அவர்களுக்கு மரணம்தான் தண்டனை. தாங்கள் என் வணக்கங்களை உதாசீனம் செய்வதாக நினைத்து அவசரப்பட்டு விட்டேன். உங்கள் தவ வலிமையை நான் இப்போது புரிந்து கொண்டுவிட்டேன். மீண்டும் தங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.”

“பார்த்தாயா சிகந்தர்! உன் சினம் உன்னையே எப்படி ஆட்டிப்படைத்து இருக்கிறது! ஆன்மீக பலம் வேண்டி என்னிடம் வந்த நீ என்னையே கொல்லவும் முற்பட்டு விட்டாய். கோபம் என்பது ஒவ்வொரு மனிதனிலும் காணப்படும் ஆறு உட்பகைவர்களில் ஒன்று” என்றார் ஆசுதோஷர்.

’ஆசிரமத்திற்கு வந்த என் நோக்கத்தையும் தெரிந்து கொண்டிருக்கிறாரே இந்த முனிவர்!’ என்று வியப்படைந்த அலெக்சாண்டர், “உட்பகைவர்களா? கொஞ்சம் விளக்கமாக கூறமுடியுமா?” என்றான்.

“ஆசை, சினம், அனைத்தையும் பிறர்க்குதவாமல் தனதாக்கிக் கொள்ளும் கருமித்தனம், கட்டுக்கடங்காத மோகம், ’நானே உயர்ந்தவன்’ எனும் கர்வம், பொறாமை இவை ஆறும் தான் ஒரு மனிதனின் உட்பகைவர்கள். இவற்றில் ஆசையும் சினமும் தான் மிக்க பலம் பொருந்திய விரோதிகள். மற்றவற்றை ஓரளவு கட்டுப்பாட்டில் வைக்க முடியும். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை எனும் மூன்று பிரிவாக பேராசை மனிதனைப் படுகுழியில் தள்ளுகிறது. இவ்வாசைகளை ஒரு மனிதன் தீர்க்க முடியாத போது சினம் மேலிடுகிறது. அதேபோல் விரும்பிய ஓரு பொருள் கைப்படாவிட்டாலும் கோபம் வருகிறது. வசியப்படுத்த முடியாது போதும் எரிச்சல் உண்டாகிறது. கர்வபங்கம் ஆனாலும் மூக்கின்மேல் கோபம் வரும். பொறாமையும் கோபத்திற்கு ஒரு அடிப்படையே! ஆக ஆசையும் சினமுமே ஒருவனை தவறான பாதையில் இட்டுச்செல்கின்றன. உன்னையே நீ ஆராய்ந்து பார்த்தால் இன்னும் நன்றாக விளங்கும்.

“உன்னால் என்னை எளிதாகக் கொன்றிருக்க முடியும். ஆனால் நீ என் உடலைத்தான் வதைத்திருப்பாய், என் ஆன்மாவை ஏதும் செய்திருக்க முடியாது. ஏனெனில் ஆன்மா எங்கும் நிறைந்து, சுயமாய் ஒளிர்ந்து, மற்றவற்றையும் ஒளிரவைக்கும் பரமாத்மாவைச் சேர்ந்தது. அதனை கத்தியால் வெட்ட முடியாது; தீயால் எரிக்க முடியாது; தண்ணீரால் கரைக்க முடியாது; காற்றினால் உறிஞ்ச முடியாது. கூரிய வாளைக்கொண்டு என்னைத் தாக்க நினைத்தாய். அதைவிட கூர்மை வாய்ந்த உன் அறிவென்னும் வாளைக் கொண்டு, வைராக்யம் எனும் கவசத்தை அணிந்து, உன் உட்பகைவர்களைத் தாக்கி அவற்றை வென்றால் உன் ஆன்மா பலம் பெறும்” என்றார் ஆசுதோஷர்.

அலெக்சாண்டரின் மூளையில் மின்னல்போல் திடீரென்று ஒரு தாக்கல் ஏற்பட்டது. ‘எவ்வளவு பெரிய உண்மையை இம்முனிவர் ரத்தினச் சுருக்கமாக எனக்கு எடுத்துக்காட்டிவிட்டார்! மண்ணாசையால்தானே நான் நாடு நாடாக போர் புரிந்து வருகிறேன். பொன்னாசையால் அல்லவா என் வீரர்கள் என்னைத் தொடர்கிறார்கள்; பொற்குவியல்களுக்கு மயங்கித்தானே தக்‌ஷசீல அம்பி எனக்கு உதவினான். பெண்ணாசைதானே உலகெங்கும் ஆண் ஜன்மங்களை வாட்டி வதைக்கிறது’ என்று ஆலோசனையில் வீழ்ந்தான் யவன அரசன்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “உத்தமன் அலெக்சாண்டர்!…(பகுதி-6)

 1. //“உன்னால் என்னை எளிதாகக் கொன்றிருக்க முடியும். ஆனால் நீ என் உடலைத்தான் வதைத்திருப்பாய், என் ஆன்மாவை ஏதும் செய்திருக்க முடியாது. ஏனெனில் ஆன்மா எங்கும் நிறைந்து, சுயமாய் ஒளிர்ந்து, மற்றவற்றையும் ஒளிரவைக்கும் பரமாத்மாவைச் சேர்ந்தது. அதனை கத்தியால் வெட்ட முடியாது; தீயால் எரிக்க முடியாது; தண்ணீரால் கரைக்க முடியாது; காற்றினால் உறிஞ்ச முடியாது. கூரிய வாளைக்கொண்டு என்னைத் தாக்க நினைத்தாய். அதைவிட கூர்மை வாய்ந்த உன் அறிவென்னும் வாளைக் கொண்டு, வைராக்யம் எனும் கவசத்தை அணிந்து, உன் உட்பகைவர்களைத் தாக்கி அவற்றை வென்றால் உன் ஆன்மா பலம் பெறும்” என்றார் ஆசுதோஷர்.//

  அருமை. மிகவும் பிடித்திருக்கிறது, இந்தப் பகுதி. அலெக்ஸாண்டர் தன் புரிதலை வைத்து என்ன செய்யப் போகிறான்? அறிவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்…

 2. இந்தியாவின் அற்புதமான, அழிவற்ற செல்வங்களுள் ஒன்று ஆன்ம நாட்டம். எத்தனையோ மஹான்களும் யோகிகளும் இந்தப் புண்ணிய பூமியிலே!. சிவனாருக்கு ‘ஆசுதோஷி’ என்றொரு திருநாமம். பக்தர்களின் பேரன்பிலே, மிக விரைவில் திருப்தியடைந்து அனுக்கிரஹிப்பவர் என்பது அதன் பொருள். ஆசுதோஷ முனிவர், அலெக்சாண்டர் தம்மை எதிர்த்த போதும், பின் அவன் காட்டிய சிறிதளவு அன்பிலே மகிழ்ந்து ஆன்மபலத்தைப் பற்றிப் போதித்தது, அவர் ஒரு பற்றற்ற மஹா யோகி என்பதை எடுத்துக் காட்டுகிறது.

  தங்கள் தொடரிலிருந்தும் எழுத்திலிருந்தும் நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது. தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறது தொடர். ஒவ்வொரு நாளுமே திங்களாக இருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது. அடுத்த பகுதிக்காக மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

 3. உன்னால் என்னை எளிதாகக் கொன்றிருக்க முடியும். ஆனால் நீ என் உடலைத்தான் வதைத்திருப்பாய், என் ஆன்மாவை ஏதும் செய்திருக்க முடியாது. ஏனெனில் ஆன்மா எங்கும் நிறைந்து, சுயமாய் ஒளிர்ந்து, மற்றவற்றையும் ஒளிரவைக்கும் பரமாத்மாவைச் சேர்ந்தது. அதனை கத்தியால் வெட்ட முடியாது; தீயால் எரிக்க முடியாது; தண்ணீரால் கரைக்க முடியாது; காற்றினால் உறிஞ்ச முடியாது. கூரிய வாளைக்கொண்டு என்னைத் தாக்க நினைத்தாய். அதைவிட கூர்மை வாய்ந்த உன் அறிவென்னும் வாளைக் கொண்டு, வைராக்யம் எனும் கவசத்தை அணிந்து, உன் உட்பகைவர்களைத் தாக்கி அவற்றை வென்றால் உன் ஆன்மா பலம் பெறும்” என்றார் ஆசுதோஷர்.//

  அருமையான அறிவுரை.  அனைவருக்கும் பொருந்தக் கூடியது.  நன்றி.

 4. பகவத் கீதையை மீண்டும் சொன்ன மகானை சந்தித்ததில் பேருவகை அடைகிறேன், ஐயா. 🙂
  நன்றிகள் பல.

  புவனேஷ்வர்

 5. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கீதா அம்மா, திருமதி பார்வதி ராமச்சந்திரன், சின்னப்பெண் கவிநயா, புவனேஷ்வர் ஐயா அவர்களே!
  உங்கள் உளம் கனிந்த பாராட்டுகளுக்கு நன்றி. ஆசுதோஷர் என்னும் கற்பனை யோகி கூரிய அறிவுரை உண்மயில் அடியேனை எனக்கே பரிச்சயம் செய்த ஆசான், திருப்பெருந்திரு ஹனுமத் காளி வரபிரசாத பாபுஜி மஹராஜ், அவர்களின் கூற்றே ஆகும். இக்குறுந்தொடரில் உள்ள் ஆன்மீகம் பொருந்திய கருத்துக்கள் யாவும் அடியேன் அம்மஹானிடமிருந்தே கற்றதே. ஆகவே அவை ஒரு தகவல் களஞ்சியமாக இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.
  மீண்டும் உங்கள் அன்பு உள்ளங்களுக்கு என் நன்றி.
  இவண் வணக்கதுடன்,
  ஸம்பத்

 6. எப்போதும் போல எளிய ஆனால் வலிய நடை! சம்பத் அவர்களுக்குக் கை வந்த கலை! ஆனாலும், ஆசுதோஷ் கற்பனை போலத் தோன்றவில்லை! ஏனெனின் ப்ல வெளீநாட்டவர் இந்தியாவினின்ன்றும் கற்றவர்கள் தான். 
  நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது கதை. தொடர்க உங்கள் தொண்டு.
  நரசய்யா

 7. மிகவும் அருமை ஐயா! அலெக்ஸாண்டரின் கை மரக்கிளையில் மாட்டிக் கொள்ளும் இடம் பீர்பால் நகைச்சுவைக் கதைகளில் வரும் சாதுரியத்தை நினைவு படுத்துகிறது. ஆசுதோஷர் என்பது கற்பனைக் கதாபாத்திரம் என்பது வியப்பை அளிக்கிறது ஐயா! நன்றி!

 8. அன்புள்ள திரு. சச்சிதானந்தம் அவர்ககளே!
  அலெக்சாண்டர் வனத்தில் ஒரு யோகியைக் கண்டது உண்மை. அவர் பெயர் மட்டும் கற்பனை.
  வணக்கத்துடன்
  ஸம்பத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *