புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள் – பகுதி 2

7

-மேகலா இராமமூர்த்தி

 

(அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டில் நான் ஆற்றிய உரையின் தொடர்ச்சி)

’சோழ வளநாடு சோறுடைத்து’ என்னும் பெருமை பெற்ற சோழ நாட்டிலுள்ள அழகிய சிறிய கிராமம் வெள்ளைக்குடி. ஊரின் பெயர்போலவே அங்கு வாழ்ந்துவந்த மக்களின் உள்ளமும் பால்போல் வெள்ளையானது. மருதநிலப் பகுதியான அவ்வூரில் விவசாயமே மக்களின் முதற் தொழிலாகவும், முக்கியத் தொழிலாகவும் விளங்கியது. பொன் விளையும் அப் பூமியிலே சில ஆண்டுகளாக நெல்கூட விளையவில்லை; காரணம்….இரண்டு மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து பருவமழை பொய்த்துப்போனதே. விதை விதைத்துவிட்டு வானையே நம்பியிருந்த அம்மக்களை மழை ஏமாற்றிவிட, வேறு ஏதும் தொழிலறியா அம்மக்கள் செய்வதறியாது திகைத்தனர். ஒருபுறம் உணவுப் பஞ்சம்; மறுபுறம் அரசனுக்குச் செலுத்தவேண்டிய நிலவரி பாக்கி.. என்று துயரம் அவர்களை வாட்டியது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாய் நிலவரி கட்டாத காரணத்தால் அரசனிடமிருந்து கடுமையான நெருக்கடிக்கு ஆளாயினர் அம்மக்கள்.

இப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்து ஊர்ப் பெரியவர்கள் கூடிப்பேசி ஓர் முடிவெடுத்தனர். நிலவரியைக் கட்டமுடியாத தங்கள் இக்கட்டான சூழ்நிலையை மன்னனிடம் சாதுரியமாக எடுத்துக்கூறி எப்படியாவது அவ்வரியை மன்னன்  தள்ளுபடி செய்யுமாறு செய்துவிடல்வேண்டும் என்று விரும்பினர். ஆனால் அதனை மன்னனிடம் யார்மூலமாய்ச் சொல்லி அனுப்புவது என்று அவர்கள் சிந்தித்திருந்த வேளையில் அவர்கள் எதிரில் தென்பட்டார் வீரமும், விவேகமும், நுண்மாண் நுழைபுலமும் நிரம்பிய தமிழ்ப் புலவரான ‘நாகனார்’.

அவரைக் கண்டதும் ‘கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல்’ மகிழ்ந்த ஊர்ப் பெரியவர்கள் அவரே அரசனிடம் பேசுவதற்குச் சரியான ஆள் என முடிவுசெய்துத் தங்கள் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தனர். அதற்கு மகிழ்ச்சியோடு சம்மதித்த நாகனார் மன்னனிடம் இப்பிரச்சனை குறித்துத் தாமே பேசுவதாகக் கூறி வீறுநடைபோட்டுப் புறப்பட்டார்.

அவையிலே கம்பீரமாகக் கொலுவீற்றிருந்த சோழ மன்னன் ‘கிள்ளி வளவன்’ புலவரின் வரவு குறித்து அறிந்து அவரைச் சந்திக்க இசைவு தெரிவிக்க, அவனைப்போய்க் கண்டார் வெள்ளைக்குடி நாகனார். சற்றே இறுமாப்புடன் புலவரை நோக்கிய வளவன் ‘தன்னைச் சந்திக்கவந்த காரணம் யாது?’ என அவரை வினவினான்.

குடிமக்களின் துயர்தன்னை எடுத்துக்கூற இதுவே தக்க தருணம் என உணர்ந்த நாகனார் ’அரசே! நீர் நிறைந்த பெரிய கடலை எல்லையாக உடைய இவ்வுலகத்திலே குளிர்ச்சி பொருந்திய தமிழ்நாட்டின்கண் உள்ள மூவேந்தருள்ளும் சிறந்த அரசு உன்னுடையதேயாகும். நாடென்று   சொல்லப்படுவது  உன்னுடைய  நாடேயாகும். அப்படிப்பட்ட சிறந்த ஆட்சியாளனாகிய உனக்கு, நீ செய்யவேண்டிய செயல்கள் சிலவற்றைப் பற்றிக் கூறவந்திருக்கின்றேன் கேட்பாயாக!’ என்றார்.

அதுகேட்ட வளவன் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்து அவரை ஆவலோடு நோக்கினான்.

தன் உரையைத் தொடர்ந்த நாகனார், ’அரசே! செங்கோல் பிழையாமல் அறத்தோடு நீ நல்லாட்சி செய்யும் வேளையில், மக்களுக்கு எளிதில் அணுகக் கூடியவனாகவும், இனியவனாகவும் இருத்தல் மிக அவசியம். அதுமட்டுமல்ல, உன்னிடம் உள்ள வெண்கொற்றக் குடையானது வெயிலுக்குப் பிடித்துக்கொள்வதற்கான சாதாரணக் குடை அன்று! அது மக்களின் துயரத்தைத் துடைத்து அவர்களுக்குப் பாதுகாப்பையும், நிழலையும் தருவதற்கேயானது அல்லவா?’ (ஆகா…அரசனிடம் இவ்வாறு பேச இந்தப் புலவருக்குத்தான் எத்துணை துணிச்சல் பாருங்கள் !!)

’மன்னர் மன்னா! நாட்டிலே மழை பெய்யாமல் போனாலோ, இயற்கை வளங்கள் குன்றினாலோ அல்லது இயற்கைக்கு மாறானவை (இயற்கைச் சீற்றங்கள் முதலியவை) நாட்டில் ஏற்பட்டாலோ குடிமக்கள் தம் மன்னனையே பழிதூற்றுவர்; அரசன் சரியில்லை; அதனால்தான் இத்தகைய தீங்குகளெல்லாம் நாட்டிற்கு ஏற்படுகின்றன என்று கூறிவிடுவர். இவையெல்லாம் நீயே நன்றாக அறிந்த உண்மைகள்தானே மன்னா! நான்வேறு உனக்கு இன்னொருமுறை சொல்லவேண்டுமா என்ன? ஆகவே, மக்கள் நலனில் அக்கறையில்லாத சிலர் கூறும் மொழிகளைக் கேட்டு நடவாதே! காளை மாடுகளை வைத்துக் கொண்டு பாடுபடும் விவசாயப் பெருங்குடி மக்களையும், ஏனையோரையும் நீ நன்கு பாதுகாத்தல் வேண்டும்; அவர்தம் துயரங்களைக் களைதல் வேண்டும்; அப்படிச் செய்வாய் என்றால் நின்னுடைய பகைவேந்தரும் நின்னைப் போற்றிப் பணிவர்; இதனை மனத்தில் கொள்வாயாக!’ என்கிறார்.

இப்புலவரின் ’செவியறிவுறூஉ’ என்ற துறையைச் சேர்ந்த கருத்துச் செறிவுள்ள புறப்பாடல் நம் பார்வைக்கு:

”…………………………………………………………………………………….
கண்பொர   விளங்கும்நின்   விண்பொரு   வியன்குடை
வெயில்மறைக்   கொண்டன்றோ?   அன்றே;   வருந்திய
குடிமறைப் பதுவே;   கூர்வேல்   வளவ!
………………………………………………………………………………………………
மாரி   பொய்ப்பினும்,   வாரி   குன்றினும்,
இயற்கை   யல்லன   செயற்கையில்   தோன்றினும்,
காவலர்ப்   பழிக்குமிக்   கண்ணகன்   ஞாலம்;
அதுநற்கு   அறிந்தனை   யாயின்,   நீயும்
நொதும   லாளர்   பொதுமொழி   கொள்ளாது,
பகடுபுறந்   தருநர்   பாரம்  ஓம்பிக்,
குடிபுறந்   தருகுவை   யாயின்,   நின்
அடிபுறந்   தருகுவர்,   அடங்கா   தோரே.” (புறம்: 35)

இதைத்தான் வான்புகழ் வள்ளுவரும்,
”குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.”  (குறள்: 549) என்கிறார்.

வெள்ளைக்குடி நாகனாரின் பாடலில் கூறப்படும் செய்திகளுக்குப் பெரிதும் ஒத்துப்போகும் கருத்தமைந்த ஓர் பாடலை நாம் ‘சிலப்பதிகாரத்திலும்’ காண முடிகின்றது. மதுரையைச் சேர்ந்த புலவரான சீத்தலைச் சாத்தனார், (மணிமேகலைக் காப்பியத்தின் ஆசிரியரான அதே சாத்தனாரே!) மதுரையில் பாண்டிய மன்னன் நீதி தவறியது; கண்ணகி அதனைச் சுட்டிக்காட்ட, அவன் செங்கோல் தவறியதற்குப் பெரிதும் வருந்தி உயிர் துறந்தது; அரசமாதேவியான கோப்பெருந்தேவியும் அவனோடு உயிர்நீத்தது; பின்னர்க் கண்ணகி மதுரையை எரியூட்டியது போன்ற வியத்தகு செய்திகளைச் சேர மன்னன் செங்குட்டுவனைக் காண வந்துபோது அவனிடம் விளக்கிக் கூறுகின்றார். அதுகேட்ட சேரன் பெருமூச்செறிந்தவாறே, “எம்மைப் போன்ற வேந்தர்களுக்கு, மழை பொய்த்துப்போனால் மக்கள் அரசனைக் குறை சொல்வார்களே என்ற அச்சம்; குடிமக்களுக்கு ஏதேனும் துயர் நேர்ந்தால் அரசனின் ஆட்சிமுறை சரியில்லை என்று தூற்றுவார்களே என்ற அச்சம். குடிமக்களை நல்ல முறையில் பேணிப் பாதுகாத்து, அவர்களிடம் கொடுங்கோலன் என்ற அவப்பெயர் வாங்கக்கூடாதே என்று அஞ்சி, இப்படி எண்ணற்ற பொறுப்புக்களைத் தலையில் சுமக்கும் மன்னர் குடியில் பிறப்பது ஒன்றும் தொழத்தக்கதோ, போற்றத்தக்கதோ இல்லை; அஃது மிகுந்த துன்பம் நிறைந்ததாகும்” என்று வருந்திக் கூறுகின்றான்.

அப்பாடல்….
”……………………………………………………………….
எம்மோரன்ன   வேந்தற்கு…………………..
மழைவளங்   கரப்பின்   வான்பே   ரச்சம்
பிழையுயி   ரெய்திற்   பெரும்பே   ரச்சம்
குடிபுர   வுண்டுங்   கொடுங்கோ   லஞ்சி
மன்பதை   காக்கும்   நன்குடிப்   பிறத்தல்
துன்ப   மல்லது   தொழுதக   வில்…………” (சிலம்பு: காட்சிக் காதை: வரிகள்: 95 -104)

ஆகவே செங்கோல் வழுவாது நாட்டைக் காத்து, மக்களின் துயர் களைவது என்பது மன்னர்களுக்குச் சவால் நிறைந்த பணியாகவே திகழ்ந்துவந்துள்ளது என்பது மேற்கண்ட பாடல்கள் மூலம் தெரியவருகின்றது.
மன்னன் நல்லாட்சி செய்யவேண்டிய முறையினைச் சற்றுக் கடுமையான மொழிகளாலேயே  ’நாகனார்’ விளக்கியுள்ளார் என்பதற்கு அவருடைய பாடலே சான்றாகத் திகழ்கின்றது. மன்னனாகிய தன்னையே இடித்துரைக்கும் அந்த வீரப்புலவரிடம் ’வளவன்’ வெகுளாமல், அவர்தரப்பு நியாயத்தைக் கனிவோடு ஏற்றுக்கொண்டு விவசாயக் குடிகளின் நிலவரியைத் தள்ளுபடி செய்தான் என்ற செய்தியையும் புறநானூறு நமக்குத் தெரிவிக்கின்றது. போற்றத்தக்கதுதானே இப்புலவர் பெருமானின் நுண்மாண் நுழைபுலம்!

அன்று நிகழ்ந்தது போலவே இன்றும் நாட்டில் வறட்சியோ அல்லது வெள்ளமோ ஏற்படுகின்ற வேளையில் விவசாயச் சகோதரர்களின் நிலவரி அரசால் தள்ளுபடி செய்யப்படுவதைக் காண்கிறோம்; இதைத்தான் நாம் இப்போது “remission of tax” என்று ஆங்கிலத்தில் கூறுகிறோம். அதுமட்டுமல்லாமல் விளைபயிர்களின் சேதத்திற்குத் தகுந்த நட்ட ஈட்டையும்கூட விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கிவருகின்றது அல்லவா? இதற்கெல்லாம் அடித்தளம் அமைத்துத் தந்தவர் ’வெள்ளைக்குடி நாகனாரே’ என்றவகையில் நாம் அவரைப் போற்றுவதில் தவறில்லைதானே?

அடுத்து, நமக்கு மிகவும் பரிச்சயமான புலவரான பிசிராந்தையார் (ஆம்….கோப்பெருஞ்சோழனின் உயிர்நண்பர்தான்!) பாண்டிய மன்னன் அறிவுடைநம்பிக்கு யானைக் கதை ஒன்று சொல்கிறார். அதன் விபரம் அடுத்த பகுதியில்…

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள் – பகுதி 2

  1. அருமையான கருத்துக்களை பகிர்ந்தும் அதன் தொடர்பு இன்றைய அரசுகளிடமும்  இருப்பதை சுட்டி  சுவைமிகு  உரை…

    நாட்டில்  கொண்ட  பஞ்சமதை  அறிந்தும்  சொந்த  கருத்தில்  தெளியாத  மன்னன்  நல்லவேளையாக  புலவரின்  அறிவுரைக்கு  செவி சாய்த்தது…

    இன்னும்  ஒரு  கூற்று… அங்கேயும்  சில புல்லுருவிகள்  அமைச்சிலே  இருந்துக் கொண்டு  மன்னனை  மடை திருப்பி  இருக்கிறார்கள்!

    மக்களின் பழி சொல்லுக்கு ஆளாகக் கூடாது என்று கவலைப் பட்டதாக புறம் காட்டு  மன்னர்களில் பாண்டியன்  மாத்திரமே  இருந்திருக்கிறான்  அதுவும்  இரண்டு  மூன்றுப் பாடல்களில் காண்பதாகவும்  தமிழறிஞர்  கூற  அறிகிறேன்…

    நல்லுரையை தொடர்ந்து  செவிமடக்கும் ஆவலுடன்…

    பகிவிற்கு நன்றி. 

  2. மிக அழகாக எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள். சங்க இலக்கியம் என்றாலே படித்துப் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமான ஒன்று என்ற நிலையை மாற்றி, தங்களைப் போன்றவர்களின் விளக்கங்களே, அனைவரையும் சங்க இலக்கியம் படிக்கத் தூண்டும் ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்று கூறினால் மிகையன்று சகோதரி. வாழ்த்துக்கள்.

  3. இன்று விவசாயமும் இல்லை விளை நிலமும் இல்லை. ஆனால் வரி ரத்து தேர்தலை பொறுத்து அமலுக்கு வருகிறது. அன்றைய அரசியல் இன்றும் தொடர்கிறது .அதை கட்டுரை தெளிவாக சொல்கிறது. தவறை திருத்த புலவர்கள் தயங்கவில்லை. ஆனால் இது மட்டும் இன்றைய அரசியலில் கணமுடியவில்லை.

  4. அருமை.
    இந்தக் கட்டுரையின் விளைவாக, நான் இப்போது செய்யப் போவது என்னவென்றால், மகாபாரத முத்துக்கள் தொடரில் கொஞ்ச நாள் போர்க்களத்தை தள்ளி வைத்து விட்டு, ராஜநீதி உபதேசங்கள் வரும் பகுதிகளை முதலில் எழுதி விடுவது. அப்போது, இந்தத் தமிழ் நூல்களில் வரும் உபதேசங்களும் மகாபாரதத்தில் வரும் உபதேசங்களும் எவ்வாறு ஒத்துப் போகின்றன என்று படிப்போர்க்குப் பசுமரத்தாணி போலப் பதியும்.
    இதில் வியப்பொன்றும் இல்லை. இரண்டுமே நம் நாட்டு பண்பாட்டைப் பிரதிபலிப்பனவே.
    inspirationனுக்கு நன்றி, மேகலா!

    பணிவன்புடன்,
    புவனேஷ்வர்

  5. “இன்னதை நான் செய்து முடிக்காவிட்டால், என்னை மக்களை வாட்டிய கொடுங்கோலன் என்று புலவர்கள் தூற்றட்டும்” என்று சூளுரைப்பது நமது தமிழ் அரசர்களுக்கு வெல்லக்கட்டி 🙂
    தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் (போன கட்டுரையில் வந்தனே அவன்தான்) இந்த மாதிரி ஒரு சபதம் போட்டான். அதுவும் ஒரு புலவர் document செய்துள்ளார்………

  6. கட்டுரையின் நடையை அமைத்தவிதம், ஒரு கதைபோல சங்கப் பாடல்களின் நிகழ்ச்சிகளை விவரிக்கும் முறை அருமையாக இருக்கிறது மேகலா.  அடுத்த தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    அன்புடன்
    ….. தேமொழி 

  7. புறநானூறு குறித்த என் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து ஊக்கமளித்துவரும் அன்பு நண்பர்கள் திரு. ஆலாசியம், திரு. சச்சிதானந்தம், திரு. தனுசு, திரு. புவனேஷ்வர், அருமைத் தோழி தேமொழி அனைவருக்கும் என் உளம்நிறைந்த நன்றிகள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.