குறவன் பாட்டு – 18
கரும்பு ஒடித்தல்
மலையில் புதராய் வளர்ந்த கரும்பினில்,
கணுக்கள் தொலைவினில் அமைந்த கரும்பினை,
வேருடன் பிடுங்கித் தோகையை ஒடித்து,
மன்மதக் கரும்பைத் தன்வசம் கொண்டாள்! 140
பலாச்சுளை சேகரித்தல்
தொடர்ந்து நடந்த குறத்தியின் நாசியை,
திரண்டு கனிந்த பலாவின் வாசம்,
திகட்டத் திகட்டத் தாக்கியதாலே தன்னைமறந்து,
வாசம் வீசிய திசையை நோக்கி நடந்தாளே! 141
முள்ளாய் இருந்த மேல்தோல் தேய்ந்து,
மெலிந்து கனிந்து வெடித்த நிலையிலும்,
தாயைப் பிரிய மனமற்ற சேய்போல்,
சுளைகள் சடையில் ஒட்டிக் கொண்டன! 142
குறமகள் கரும்பின் அடிக்குப் பணிந்து,
கனியது கிளையில் தங்கிக் கொள்ள,
அருவியில் குதிக்கும் சிறுவர்கள் போல,
வரிசையில் சுளைகள் தரையில் குதித்தன! 143
தரையில் விழுந்த சுளைகளை எடுத்து,
ஒட்டிய மண்ணை ஒருமுறை துடைத்து,
தலையில் சுமந்த கூடையில் வைத்து,
தன்வழிப் பயணத்தைத் தொடர்ந்தாள் குறத்தி! 144
இஞ்சி தின்ற குரங்கு
மஞ்சளொடு இஞ்சியும் வளர்ந்திருந்த புதரில்,
மந்தி ஒன்று வாசம் கண்டு,
மஞ்சள் என்று எண்ணிக் கொஞ்சம்,
ஆசையோடு “இஞ்சி தின்ற குரங்கு” 145
இஞ்சி தின்ற மந்தி, கோபம்
கொண்டு, புயலடித்த வயலைப் போல்
புதர் பறித்துப் பிய்த்தெறிய, எளிமையாக
மஞ்சளொடு இஞ்சி கொண்டாள் குறத்தி! 146
பப்பாளி மற்றும் சுண்டைக்காய் சேகரித்தல்
அடி பெருத்து நுனி சிறுத்த,
அழகான பப்பாளி மரம் கொண்ட,
பழுக்காமல் திரண்டு நிற்கும் காய்களை
அலுங்காமல் அடிஎற்றிப் பறித்து நின்றாள்! 147
மரம் போலப் பெரிதாய் வளர்ந்து,
பெரும் புதராகப் பரவி விரிந்து,
பருந்தின் நகம் போல முட்கள் கொண்ட,
சுண்டைச்செடி உலுக்கிக் காய் கொண்டாள்! 148
ஊனுண்ண மறந்த குறத்தி
தேனுண்டு, உயர் தினையுண்டு, அடர்
பாலுண்டு, மலர் பலவுண்டு, இன்னும்
காயுண்டு, கனியுண்டு சுவைத்துக் களித்து
ஊனுண்ணும், மீனுன்னும் ஆசைதுறந்த குறத்தி! 149