குறளின் கதிர்களாய்… (15)
செண்பக ஜெகதீசன்
குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்போ டுயிரிடை நட்பு.
-திருக்குறள்- 338 (நிலையாமை)
புதுக் கவிதையில்…
மண்ணில் மனிதனின்
உடலுயிர்
தொடர்பு இதுவே-
முட்டை ஓட்டைத்
தனியே
விட்டுவிட்டுப் பறவைக் குஞ்சு
வெளியேறிடும் நிலைதான்…!
குறும்பாவில்…
முட்டை ஓட்டைத் தனியேவிட்டு
பறவைக்குஞ்சு பறந்திடுவதாய்,
உடலைவிட்டு உயிர் பிரிவதும்…!
மரபுக் கவிதையில்…
முட்டை மீது தாய்ப்பறவை
மிகுந்த அன்பால் அடைகாக்கும்,
முட்டையை விட்டு வரும்குஞ்சு
முட்டை ஓட்டை விட்டுவிட்டே
எட்டிக் கூடப் பாராமல்
எட்டப் பறக்கும் கதையதுதான்,
விட்டுச் செல்லும் உயிரதுவும்
உடம்பும் கொண்ட தொடர்பதுவே…!
லிமரைக்கூ…
குஞ்சுவந்ததும் கைவிடப்படும் முட்டை ஓடு,
உடலதைத் தனியேவிட்டு
உயிர்போன இடமதுதான் எங்கே தேடு…!
கிராமியப் பாணியில்…
கூடுகெட்டி முட்டவுட்டு
அடகாக்கும் பறவ- பாசமா
அடகாக்கும் பறவ..
குஞ்சி வந்தா,
மறந்துபோவும் ஒறவ
முட்டஓட்டு ஒறவ- காத்த
முட்டஓட்டு ஒறவ..
முட்டஓட்டத் தனியாவுட்டு
பறந்துபோவும் பறவ- ஒறவ
மறந்துபோவும் பறவ..
மனுச உசுரு கதயிதுதான்,
ஒடம்பத் தனியா உட்டுப்புட்டு
உசுரு போவும்- இந்த
உசுரு போவும் தன்னந்தனியா…!
குறும்பா குறளை மிக எளிமையாக விளக்குகிறது, கிராமியப் பாணி பாடலின் எளிமையும் வழக்கம் போலவே மிக அருமை.
அன்புடன்
….. தேமொழி
எந்தக்கவிதையிலும் சுவையும் கருத்தும் மாறாமல் அழகாய் குறளை பதிய வைக்கும் உங்கள் எழுத்துக்கள் இதிலும் அற்புதமாய் இருக்கிறது, பாராட்டுக்கள்.
கிராமியப் பறவையின் சிறகுகள், மற்ற கவிதைகளைவிட சற்று உயரவே எப்பொழுதும் பறக்கின்றன. வாழ்த்துக்கள் நண்பரே!
‘குறளின் கதிர்கள்’ தொடர,
மறவாமல்
மதிப்புரை எழுதி ஊக்கப்படுத்தும்
திருவாளர்கள் தேமொழி, தனுசு, சச்சிதானந்தம்
ஆகியோருக்கு மிக்க நன்றி…!