சுயநலம்
சுயநலம்
சி. ஜெயபாரதன், கனடா
சுயநலம் நமது பிறப்புரிமை !
குருதியில் கலந்தது !
கூடப் பிறந்தது !
மனித ஆணிவேர் ஆவது !
சுதந்திரம் மனிதர் இறப்புரிமை !
பறி போவது ! மரிப்பது !
பற்றியும் பற்றாமல் குறைவது !
புலி அதோ வருகுது !
புலிக்குப் பயந்தவர் என்மேல்
தலை வைப்பீர் !
கடவுள் படைப்பிலே
பெண் சுயநலம் !
ஆண் பொது நலம் !
ஆயினும் சுயநலம் இல்லையேல்
பொது நலம் இல்லை !
அன்னை தெரேசாவின்
காப்பில்லம் பொது நலமா ?
ஆத்மீகச் சுயநலம்,
மனச் சாந்தி !
சுயநலம் வளர்பிறை !
பொது நலம் தேய்பிறை !
வளர்பிறை, தேய்பிறை ஒருவித
ஒளிச் சுழற்சி மாயை !
நீர்க் குமிழியாய்
மேல் மிதக்கும் பொது நலம் !
நுனி மட்டும் தெரிய
பனிப் பாறைப் பெருங்குடல்
மூழ்கிடும் சுயநலமாய் !
முதல் மந்திரி போட்ட மாலைக்கு
தையல் மெஷின் அளிப்பார்
தன் பயணம் தொடர !
பொது நலத்தைப் பிளந்துள்ளே
பார்த்தேன்
பதுங்கி விழித்திருந்தது
சுயநலச் சிங்கம் !
பொது நலம் விரியும் ஆலமரம்
சுயநலம் விழுது !
மேடையில்
தன் வாடை மணக்க
பொன்னாடை போர்த்துவார்
முன்னோடி மனிதர் !
சுயநலம் ஒரு செங்கல் !
பொதுநலம் கட்டிய கோபுரம் !
புவி வியப்பான
தாஜ்மகாலைக் கட்டியது
ஷாஜஹானின் சுய நலமா ?
பொது நலமா ?
++++++++++++
சுயநலத்தைப் பற்றிய துணிச்சலான தங்களின் கவிதை அருமை. வாழ்த்துக்கள் ஐயா!