கவிஞர் காவிரி மைந்தன்

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
ஆயிரம் இருக்குது சுப தினம்

சுபதினம் என்கிற திரைப்படத்திற்காக கவிஞர் வாலி எழுதிக்கொடுத்த மங்கலச்சீட்டு.. வரிக்கு வரி சுபதினம் என்று எழுதுவது என்பது அந்த வரிகள் எல்லாம் சொல்கின்ற சேதியைப் பொறுத்து பெருமை பெறுகின்றது. வாழ்த்திப்பாடும் மங்கலங்களை அந்நாள்முதல் அரசர் முதல் ஆண்டி வரை அனைவரும் வரவேற்று மகிழ்ந்தார்கள். அதுவும் கற்றறிந்த புலவர்தம் திருவாயில் கிட்டும் அமுதமொழியது என்பதால்தான்! நான்கே வரிகளில் நல்வாழ்த்து கிடைத்தாலும் கிடைத்தற்கரிய பேறு என்பது உண்மைதானே!
திரைப்படத்தின் பெயரில் உள்ள சுபதினத்தைப் பற்றி கவிஞரின் எண்ணரதம் ஊர்வலம் வருகிறது! எழுதிக்குவித்த அனைத்துவரிகளிலும் சுபதினத்தைத் தருகிறது!

அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்
இதைவிட வேறென்ன சொல் வேண்டும் நண்பர்களே.. எண்ணம்போல் வாழ்வு என்பார்கள்.. நல்லன எண்ணி நாளும் பொழுதும் வாழும் உள்ளங்கள் ஒருநாளும் அல்லலுறுவதில்லை. தானும் வாழ்வதுடன் இத்தரணியில் எல்லா உயிர்களும் நலம்பெற வாழவேண்டும் என்கிற எண்ணம்தானே உயர்ந்தது. அதுவும் அடுத்தவர் நலத்தை நினைப்பவர்களுக்கு ஆயுள்முழுவதும் சுபதினம் அமையவேண்டும் என்று கவிஞர் வாழ்த்தியிருக்கிறார்.

தன்னலம் மறக்கச் சொல்லவில்லை.. பொதுநலம் எண்ண வேண்டும்.

தன்னைப் போல பிறரையும் எண்ணுதல் தவத்தினும் பெரியதாம்.

லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
கிடைத்தவருக்கு அது சுபதினம்
வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால்
எளியவர்க்கெல்லாம் சுப தினம்

எதார்த்தங்களைக்கூட இந்தப் பட்டியலில் இட்டு சராசரி மனிதனையும் தட்டி எழுப்புகிற யுக்தி வாலியினுடையது. மொத்தத்தில் வெண்கலக் குரலோன் தெய்வத்திரு சீர்காழி கோவிந்தராஜன் பாடிய மறக்க முடியாத பாடல்களுள் இதுவும் ஒன்று!

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்

வள்ளுவன் பிறந்து குறளைச் சொன்னால் அறிவுக்கு அது தான் சுப தினம்
வள்ளுவன் பிறந்து குறளைச் சொன்னால் அறிவுக்கு அது தான் சுப தினம்
புத்தன் பிறந்து போதனை செய்தால் அன்புக்கு அதுதான் சுபதினம்
புத்தன் பிறந்து போதனை செய்தால் அன்புக்கு அதுதான் சுபதினம்

காந்தி பிறந்து விடுதலை தந்தார் காந்தி பிறந்து விடுதலை தந்தார்
உரிமைக்கு அதுதான் சுப தினம்

ஒருவன் துணிந்து தியாகம் செய்தால்
உலகுக்கு அதுதான் சுப தினம்

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்

நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கு அதுதான் சுப தினம்
நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கு அதுதான் சுப தினம்
உழுதுண்டு வாழும் மக்களுக்கெல்லாம்
அறுவடை நாளே சுப தினம்
உழுதுண்டு வாழும் மக்களுக்கெல்லாம்
அறுவடை நாளே சுப தினம்

லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
கிடைத்தவருக்கு அது சுபதினம்
லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
கிடைத்தவருக்கு அது சுபதினம்
வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால்
எளியவர்க்கெல்லாம் சுப தினம்

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *