பி.தமிழ் முகில்

22.02.2014

சென்னை.

அன்புள்ள  மணிமொழிக்கு,

உன் தோழி மலர்விழி எழுதிக் கொள்வது. நான் இங்கு நலம். உன் நலம் பற்றி அறிய ஆவல். அம்மா, அப்பா மற்றும் கனிமொழி நலம் குறித்தும் அறிய ஆவல். அனைவரது நலனுக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

கல்லூரி  எனும்   நந்தவனத்தில்  மணம்  கமழும்  வண்ண மலராய் முகிழ்த்தது நம் நட்பு. அந்த நட்பு எனும் மலரில், இன்பமெனும் தேன் பருகிய கவலையிலா  வண்ணத்துப்  பூச்சிகள் நாம். நினைவுகளில்  பசுமையாய்  நிறைந்து  நிற்கும் வசந்த காலம் அது. காலங்களும் மாறின. காட்சிகளும் மாறின. நமது வாழ்க்கைப் பயணம் திசைக்கு ஒன்றாய் ஆகிப் போக, வாழ்வு இட்டுச் சென்ற திசையிலேயே நமது பயணத்தைத் தொடர்ந்தோம்.

காலமது நம்மைப் பிரித்தாலும் கடிதங்கள் நம் நட்பை உரமூட்டி வளர்க்கின்றன. தொலைபேசி வழியே குரல் கேட்டு மகிழ்ந்தாலும், காலமும் கட்டணமும் நம் உரையாடல்களை சுருக்கி விடுகின்றன. விலாவாரியாக உன் மனதை என்னிடமும், என் மனதை உன்னிடமும் விளக்கிக் கூறுபவை நாம் அனுப்பிக் கொள்ளும் கடிதங்களே. இன்லேன்ட் லெட்டெர் எல்லாம் நம் எண்ணங்களையும் அன்பையும் கொட்டித் தீர்க்க போதுமானதாக இல்லை. எனவே, முழுநீள தாளில் ஐந்து ஆறு பக்கம் வரை தொடரும் கடிதம்.

இப்படியே நாட்கள் நகர, அவ்வப்போது எவரேனும் உன்னைக் காதலிப்பதாக சொல்லி கடிதத்தில் எழுதுவாய். அதைக் கண்டதும் என் மனதில் பயம் புளியைக் கரைத்திடும். வெ ள்ளந்தியான உன்னிடம் காதல் என்ற பெயரைச் சொல்லி எவரேனும் உன்னை ஏமாற்றி விட்டால், என்ன செய்வதென்று மனம் பதைபதைக்கும். உனக்கோ, உன்னிடம் உண்மையாகப் பழகுபவர் யார், சந்தர்ப்பத்திற்கேற்ப உன்னை பயன்படுத்திக் கொள்பவர்கள் யார்  என்பது தெரியாது. உன்னைப் பொறுத்த வரை அனைவரும் நல்லவர்களே. வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணிக் கொள்பவள் நீ. உன்னருகே நான் இல்லையே என்றெண்ணி என் மனம் துடிதுடிக்கும். ஒவ்வொரு முறையும் உன்னிடம் “கவனமாய் இரு! கவனமாய் இரு!! “  என்று எச்சரிக்கை செய்து வந்தேன். என்னிடம் எதையுமே என்றுமே மறைத்திட மாட்டாய் என்று  மலையளவு உன் மீது நம்பிக்கை வைத்தேன். ஆனால் !

சில  மாதங்களாக  உன்னிடமிருந்து  கடிதங்களும்  இல்லை. தொலைபேசி  அழைப்புகளும் இல்லை. கடிதம் அனுப்பினால் பதிலேதும்  இல்லை. மாதங்கள்  வருடங்களாயின. என்னவோ ஏதோ  என்றெண்ணி  பதறித் துடித்தது  மனம். ஒரு நாள்  திடீரென்று  தொலைபேசியில் அழைத்தாய்.  மனம் குதூகலித்தது.  ஆனால்,  எனக்கு பெரும்  அதிர்ச்சி தரும்  செய்தி ஒன்றை சொல்வாயென எதிர்பார்க்கவில்லை. ஆம்!

உனக்கு திருமணம்  ஆகி விட்டதென்று கூறினாய். பெற்றோர் சம்மதமில்லாமல் நீயே காதல் திருமணம் செய்து கொண்டேனென்றாய். மனம் போல் உனக்கு மாங்கல்யம் அமைந்ததென்று மகிழ்ந்தேன்.

“என்னிடம் சொல்லக் கூட முடியவில்லை உன்னால்?“ என்று  சற்று  காட்டமாக  கேட்க,

“சொல்லியிருந்தால் நீ செய்ய விட்டிருக்க மாட்டாயே ! என்னை எப்படியேனும்  தடுத்து  நிறுத்தியிருப்பாயே!“  என்றாய்.

கணவரைப் பற்றிக் கேட்க, வானமே என் மீது இடிந்து விழுந்தது போல் ஓர் பதிலை சர்வ சாதாரணமாகச் சொன்னாயே!  கணவருடன்  வாழ  விருப்பமில்லை. அதனால், பெற்ற  பிள்ளையுடனும் தாய் தங்கையுடன் வாழ்வதாய் சொன்னாய். உனக்கு  ஆதரவளிக்க தாயும், தங்கையும்  உன்னுடன்  வந்துவிட, தந்தையோ, உனக்கு  ஆதரவளித்ததற்காக  தாயை  பகைத்துக்  கொள்ள, இன்று  குடும்பமே  சின்னாபின்னப் பட்டுப் போய்  நிற்கிறதே !

உன் நிலை கண்டு தங்கை கனிமொழியோ மண வாழ்க்கை என்ற ஒன்றையே  வெறுத்து ஒதுக்கி விட்டு உனக்காகவும் உன் பிள்ளைக்காகவும் உன்னுடனே  வாழ்கிறாள்.

தாயும் தங்கையும் உன் மீது கோபப்படுவதாக மிகவும் வருத்தம் கொள்கிறாயே. இந்நிலைக்குக் காரணம் நீயே தானென்பதை ஏன் உணர மறுக்கிறாய். உனக்காக உன் தாய், தந்தையை பிரிந்து வாழ்கிறார். திருமணத்திற்கு பின் உன் கஷ்டங்களைக் கண்டு உன் தங்கை மணவாழ்வே வேண்டாமென்று இருக்கிறாள். உனக்காகவே  வாழும் அவர்களை புரிந்து கொள். அவர்களுக்கு  மன நிம்மதியைக் கொடு.

உன் மீது பாசமும் நேசமும் அக்கறையும் கொண்ட உறவுகளை, அவர்களின் உணர்வுகளை, உன்னால் அவர்களுக்கு ஏற்பட்ட வலிகளையும் வேதனைகளையும் புரிந்து கொள். அவர்களது கோபம் என்பது நியாயமானதே. சொல்லப் போனால், அவர்கள் தான் உனக்காக தங்களது இன்பங்களையும் வாழ்வையும் மறந்து நிற்கின்றனர். நீ ஏதும் துன்பம் துயரத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக உனக்கு உறுதுணையாய் இருக்கிறார்கள். அடங்காத பிள்ளை மீது என்ன அக்கறை வேண்டியிருக்கிறது என்று உன் தாயும் சகோதரியும் உன் அப்பாவுடனே இருந்திருக்கலாம். ஆனால், உனக்காக அவரது கோபத்திற்கும், சமூகத்தின் கேலிப் பேச்சிற்கும் ஆளாகி நிற்கிறார்கள் உன் தாயும் சகோதரியும். ஒரு நாளும் அவர்களை குறைவாய் எண்ணாதே. கோயில் கட்டி வணங்க வேண்டிய தெய்வங்கள் அவர்கள். நினைவில் கொள்.

காதல்  உன்  கண்களை  மறைக்க, காதலன் என்று  வந்தவனின்  ஆசை  வார்த்தைகள்  உன் புத்தியை  மழுங்கடிக்க, சிறிதும்  யோசிக்காமல்,  புத்தி  கெட்டவளாய்  வீட்டிலிருந்த நகை பணம் அனைத்தையும்  வாரிச்  சுருட்டிக் கொண்டு  அவன் பின் ஓடினாயே! இன்று  உனக்கு உறுதுணையாய்  இருப்பவர்  யார் ?  நீ  நம்பிப்  போன உன்  காதலனா அல்லது நீ நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு  ஓடி வந்த உன் குடும்பமா? நம்பி வந்தவன், உன் கையில் ஓர் குழந்தையை கொடுத்துவிட்டு ஓடி விட்டான். இன்று உன்னைக் காத்து நிற்பது உன்னை நம்பி ஏமார்ந்து போன உன் தாய் தான். அதை ஓர் நாளும் மறவாதே.

கற்ற கல்வியை உறுதுணையாகக் கொள். நல்லதொரு வேலையில் சேர்ந்து வருமானம் ஈட்டு. நியாயமாக செய்யும் தொழில் அனைத்தும்  உயர் தொழிலே. உன் கல்வித் தகுதியை  உயர்த்திக்  கொள். கற்ற கல்வியே என்றென்றும் துணை நிற்கும். உன் பிள்ளைக்கு கல்விச் செல்வத்தை வழங்கிடு. நம்பிக்கையை எந்நாளும் துணை கொள். உன் நல்வாழ்வுக்காய் நாளும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

 அம்மாவிற்கு என் வணக்கங்களை சொல்லவும். கனிமொழிக்கு என் அன்பை தெரிவிக்கவும். மற்றவை உன் கடிதம் கண்டு.

என்றும் அன்புள்ள,

உன் தோழி மலர்விழி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.