மணிமொழியே ஒரு மடல்
தில்லி-16 உ 23-02-14
மணிமொழியே மின்மினி மொழியே!
மின்வழியால் ஒரு மடல் செம்மொழி அருட்பெருங்கடல்
காதற்கடிதம் கவியானால் சாதற்கடிதமும் கவிதானே
காதில்சேரும் இசையெனவே தொடர்ந்தேன்நா மணிவழியே!
மறந்திடும் உன் குணம் சுகந்தானா ? மறைத்திடும் வதனமும் சுகந்தானா?
உறைந்தவுன் இன்குரல் சுகந்தானா? மனமிருந்தால் அது சுகந்தானா?
பக்க பக்கமாய் எழுவதற்கு பாச(ர)மும் இல்லை சுமப்பதற்கு
படிக்க நேருமுன் கசக்கிடுவாய் பகுத்துசுருக்கி எழுதுகிறேன்
முப்பது வருடங்கள் கழிந்ததன்பின் முகப்பினில் இட்ட அத்திகதி
இப்பவும் மூலையில்கிடக்குது பார்..இன்னும் மூளையில் கிடைக்குது பார்
அப்பவும் முகவரி அறியாமல் அயலான் தேசம் சென்றவளே
கப்பலின் பயணம் காற்றாலே! காதலும் அப்படி யென்றவளே!
மஞ்சள் அட்டையில் கடிதமெலாம் அழியாதெனநீ சொன்னதடி
நெஞ்சில் பதியவைத்து விட்டாய்! மணவாளன் பெயர் மாற்றியடி
பின்கோடிட்டு காட்டவென பெயராகல்லில் செதுக்கியடி – அடி
உள்ளூடிட்டு வலித்த வண்ணம் காலமும் நேரமும் கடந்ததடி
இட்டப் பசையது விட்டதனால் அஞ்சல்தலையும் விட்டதடி
வட்டப் பொறிப்புரு முத்திரையால் தொலைந்த குப்பையும் ஆனதடி
நட்டதை வேருடன் பிடுங்குதல்போல் நலம்தரு யாழினைப் பாழாக்கி
இட்டதை வேடிக்கை யாக்குதலோ இத்தமிழ் நாட்டினர் மரபாமோ ?
கற்புயர்க் கண்ணகி குலத்தாரும் கம்பனின் இராமன் இனத்தாரும்
நற்பெயர் ஆர்த்தக் குறளாரும் நலிந்திடின் மானுடம் பாழாகும்
முற்பிறப் பளித்த பயனெனவே மூடர்திருமண பந்தமெலாம்
கற்பனைக் கட்டிலில் நாடிடுவார் கர்ப்பங்கலைத்திட ஓடிடுவார்
பணத்தைத் தேடிடும் பரிவாரம் மணநாண் மந்திரம் ஓதிடினும்
குணத்தை நாடாக் குணத்தாலே குலத்தை கெடுக்கும் காலமிது
முகவரி மாற்றிட போய்சேரும் முத்திரைப் பெற்றிடும் கடிதமென
தலைவரைத் தேடிச் சார்பவர்க்கு வணிகந்தானோ திருமணமும்?
இல்லறம் இன்பம் அன்பாலே சொல்லறம் என்பது அறிவாலே
நல்லறம் காண்பாள் வாழ்வாலே நலமென்றென செய்ததெல்லாம்
வில்லங்க மாக்கி விட்டவர்யார் ? விவாகராத்தில் முடித்துவிட்டாய்
கல்மனந் தாங்கியும் ஆகிடநீ காலமும் விதியெனச் சபித்துவிட்டாய்
இப்படி எத்தனை எத்தனையோ இக்கலி தன்னில் நடக்குதடி
தப்படி என்றும் சொன்னாலும் தவறிய மங்கையர் பலகோடி
அப்படி ஆகா(தினி) செய்திடவே அபாய மணிஒலி எழுப்புகிறேன்
எப்படி யுமவர் திருந்திடுவார் என்றே கடிதம் அனுப்புகிறேன்
தன்நலங் காணும் நிலைவிட்டு தவிக்கும் மனதைப் பண்படுத்து
உன்நலங் காணும் உறவுகளை அடைந்து உறவைப் பலப்படுத்து
முன்நலங் கூறும் மொழியாலே எழுந்து வாழ்வைச் சீர்படுத்து
பின்நலம் சேரும் வகையாலே வாழ்வின் அர்த்தம் நிலைநிறுத்து!!