ஊழிற் பெருவலி யாதுள ?…..
சி. ஜெயபாரதன், கனடா
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.
ஊழிற் பெருவலி யாவுள ? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.
இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.
ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.
திருவள்ளுவர்
“ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப்பட வேண்டும்.”
கார்ல் சேகன் (விண்வெளி உயிரியல் விஞ்ஞானி)
வகுத்தான் வகுத்த வகையில்தான் கோடான கோடிப் படைப்புகள்
அகிலத்தில் வடிக்கப் பட்டுள்ளன.
கட்டுரை ஆசிரியர்
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=SBB2qHgZvLY
[Physicist Dr. Michio Kaku on God]
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kEK6WtHxNfw
[Dr. Albert Einstein on God]
இக்கட்டுரை மதிப்புக்குரிய நண்பர் மலர்மன்னன் சென்ற வாரம் (மார்ச் 6, 2011) திண்ணையில் எழுதிய “விதியை அறிதல்” என்னும் கட்டுரைக்கு மறுப்புரை இல்லை. ஊழ் விதியைப் பற்றி நான் விஞ்ஞான ரீதியாக அறிந்துள்ள சிந்தனையின் பிரதிபலிப்பே இக்கட்டுரையின் சாரம் ! இங்கு நான் ஊழ் என்று குறிப்பிடுவது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத ஓர் இயற்கைச் சக்தியைக் குறிப்பிடுகிறேன். பிரபஞ்சத்தைப் படைத்துக் கட்டுப்படுத்தும் படைப்பாளியே மனித இயக்கத்தையும், போக்கையும் வழி நடத்தி வருகிறது என்பதுதான் என் கோட்பாடு. அதைக் கடவுள் என்றாலும் ஒன்றுதான். இயற்கை என்றாலும் ஒன்றுதான். பிரபஞ்சப் படைப்பாளி என்றாலும் ஒன்றுதான். ஊழ் விதி என்பது விளைவை மட்டும் காட்டி மனிதர் காணாமல் மறைந்திருக்கும் ஓர் இயற்கை நியதி.
ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப் பட வேண்டும் என்று விண்வெளி உயிரியல் விஞ்ஞானி கார்ல் சேகன் கூறுகிறார். அதாவது பிரபஞ்சம் உருவானதும், காலக்ஸி, பரிதி மண்டலங்கள், மற்றும் உயிரின, தாவர உட்பிறப்புப் தோற்றங்களும் ஒரு காரண-விளைவு நியதியைப் பின்பற்றிச், சுழலும் ஓர் தொடரியக் கத்தை முன்னிட்டு உண்டானவையே. இந்தப் பிரபஞ்சமும், பேரண்டங்களும், அவற்றில் உதித்த பயிரினமும், உயிரினமும் மந்திர சக்தியால் ஒரு சில நாட்களில் தோன்றியவை அல்ல. பிரபஞ்சப் படைப்பாளி பல யுகங்களாய்த் திட்டமிட்டுச் செய்து தோற்றங்களை மாற்றி மாற்றிச் செம்மைப் படுத்தி உருவாக்கியதுதான் நாம் வாழும் உலகம். பிரபஞ்சம் தோன்றி சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகள் கடந்து விட்டன வென்று கணிக்கப் பட்டுள்ளது. பூர்வீகத் தாதுக்களின் கதிரியக்க தேய்வின் அரை ஆயுளை வைத்துத்தான் அந்த எண்ணிக்கையைக் கணக்கிட்டி ருக்கிறார். மெய்யாக அது விஞ்ஞானிகளின் துல்லிய காலக் கணிப்பாகப் பலர் ஏற்றுக் கொண்டாலும், அந்தக் கணக்குக்கு மூல காரணமான தாது உண்டானது எந்த யுகத்தில் ? எவற்றிலிருந்து எப்படிச் சேர்ந்து அந்தத் தாது விளைந்தது ? அதன் மூலப் பொருட்கள் தோன்ற எத்தனை யுகங்கள் ஆயின போன்ற கேள்விகள் மேலும் எழுகின்றன. நமது கருத்தாடலுக்குப் பிரபஞ்சத்தின் வயது 13.7 பில்லியன் ஆண்டுகள் என்று வைத்துக் கொள்வோம். அதாவது படிப்படியாக, ஒன்றிலிருந்து இன்னொன்று பிறந்து, சிறிது சிறிதாய்ச் செம்மையாக்கிக் கடவுளே நமது காலவெளிப் பிரபஞ்சத்தைப் படைக்க 13.7 பில்லிய ஆண்டுகள் எடுத்திருக்கிறது. ஆயினும் பூரணம் அடையாத பூமியும் அதில் பூரணம் அடையாத மனிதப் பிறவிகள்தான் இதுவரைத் தோன்றியுள்ளன.
பிரபஞ்சத்தை ஒரு பிரம்மாண்டமான நூலகமாக ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வியந்து நோக்குகிறார். அதன் விண்வெளியில் உள்ள கரும்பிண்டம், கருஞ்சக்தி, கருந்துளைகள், கோடான கோடி காலக்ஸி ஒளி மந்தைகள், பில்லியன் கணக்கான பரிதி மண்டலங்கள், அண்டக் கோள்கள், துணைக் கோள்கள், அவற்றைப் பிணைத்துள்ள ஈர்ப்பு விசைகள், விலக்கு விசைகள் அத்தனையும் நூலகத்தில் முன்னமே எழுதப் பட்டு சீராக, வகையாக அடுக்கப்பட்டுள்ளன ! அந்த நூல்களை யார் எழுதி வைத்தார், எப்போது எழுதி வைத்தார், ஏன் எழுதி வைத்தார், எப்படி எழுதி வைத்தார் எந்த விதிகளைக் கையாண்டார் என்பதை அறிந்து கொள்ளவே நான் முனைகிறேன் என்று மொழிகிறார் ஐன்ஸ்டைன்.
பிரபஞ்சம் ஓர் உன்னத சக்தியான கடவுளால் படைக்கப் படவில்லை. அது தானாக உருவானது என்று விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறுவது முதலில் ஒரு விஞ்ஞான முடிவில்லை. அப்படி மேலாகச் சொல்லித் தப்பிக் கொள்வது ஒரு விஞ்ஞான மேதையின் இயலாமையைத்தான் குறிக்கிறது.
பிரபஞ்சப் படைப்பாளி ஒரு மந்திரவாதியோ, மாஜிஸியனோ இல்லை. இரசாயனக் கதிர் ஏகமூலங்களின் (Radio Isotopes) அரை ஆயுள் தேய்வு நியதிப்படிப் பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டுக்கு முன்னே தோன்றியிருக்க வேண்டும் என்று பல்வேறு விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளார். அதாவது படைப்பாளியே இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியை உண்டாக்க 13.7 பில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்கிறது. இதுவரை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ள பெரு வெடிப்பு நியதியின் (The Big Bang Theory) ஆரம்பமே ஓர் அனுமான ஊகிப்புதான். மெய்யாக இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று இதுவரை எந்த விஞ்ஞானியாலும் தர்க்கரீதியாக விளக்க முடியவில்லை. எல்லாம் மாறி, மாறிப்போகும் விஞ்ஞானத்தின் வெறும் அனுமான ஊகிப்புகள்தான். விஞ்ஞானம் பிரபஞ்ச ஆதி அந்தங்களை ஆராய முடியாது இடைப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு மட்டும் விளக்கம் அளிக்கிறது.
காரண-விளைவு நியதியைத் (Cause & Effect Theory) தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளும் உலக விஞ்ஞானிகள், பிரபஞ்சம் தானாக உருவானது, தானாக இயங்குவது, தானாக மாறுவது என்று ஆதாரமின்றிக் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
விஞ்ஞானிகள் இதுவரை உயிர் என்றால் என்ன என்று விஞ்ஞான விளக்கம் தர முடிய வில்லை. எந்த இரசாயன மூலகங்களோ, மூலக்கூறுகளோ உயிரை உண்டாக்குவதில்லை. ஆங்கிலத்தில் உயிர் என்பதற்கு ஒரு தனிச்சொல் கூடக் கிடையாது. உயிர், ஆத்மா இரண்டு மட்டுமே மனிதனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள இணைப்பைக் காட்டுபவை.
இந்தப் பிரபஞ்சத்தின் உள்ளே இயங்கிவரும் காலக்ஸி ஒளிமந்தைகள், அவற்றில் உள்ள விண்மீண்கள், அண்டக் கோள்கள், கருந்துளைகள், கருஞ்சக்தி, கரும் பிண்டம், பூமியில் உள்ள பயிரினங்கள், உயிரினங்கள் அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்றாய், அடுத்தடுத்துச் சங்கிலித் தொடர்பில் பிறந்தவை. அதாவது அவை யாவும் இயற்கை விதியான “காரண-விளைவு நியதியைப்” (Cause & Effect Theory) பின்பற்றித் தோன்றியவை. தற்போதைய நவீனக் கணினி மேற் பார்க்கும் மோட்டார் வாகனம் விருத்தியாகச் சுமார் 100 ஆண்டுகள் எடுத்துள்ளன. எலும்புக் கூடு போன்று ஹென்றி ஃபோர்டு செய்த முதல் கார் எத்தனை முறை மாற்றம் அடைந்து செம்மையாகி மாறி யுள்ளது ? ரைட் சகோதரர் முதன்முதல் செய்த சைக்கிள் உறுப்புகளில் உருவான வான ஊர்தி 100 ஆண்டுகளில் சந்திரனுக்குச் செல்லும் ராக்கெட்டாய், சூரிய மண்டலத்தைத் தாண்டிய முதல் வாயேஜர் விண்கப்பலாய் முன்னேறியுள்ளது. கணினி மின்கருவி எத்தனை ஆண்டுகள், எத்தனை முறைகள் சீராகி நவீன வல்லமை மிக்க கணினியாக உருவாகி உள்ளது ? சார்லஸ் டார்வின் அறிவித்த மனித உயிரின விருத்திக் கோட்பாடு இயற்கை முறையில் எத்தனை தரம் உருமாறிச் செயல் மாறிச் சீராகித் தற்போதைய ஆறறிவு படைத்த மனிதனாய் உலவி வருகிறது ?
உலகில் நிகழும் வினைகள் அனைத்தும் இரண்டு முறைப்பாட்டில் நேர்கின்றன. ஒன்று இயற்கை நிகழ்ச்சி : இரவு பகல் சுழற்சி. பருவக் காலச் சுழற்சி, இடி மழை வெள்ளம், புயல், சுனாமி, பூகம்பம், எரிமலை போன்றவை யுகயுகமாய் நேரும் இயற்கையின் திருவிளை யாடல்கள் ! அதே சமயம் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், ஜப்பான் அணுகுண்டு வீச்சுகள், ஆறு மில்லியன் யூதரைக் கொன்ற கோலோஹாஸ்ட் கொடூரம், ஈராக் படை யெடுப்பு, சமீபத்தில் நிகழ்ந்த ஈழப் போர் ஆகிய அனைத்தும் ஆக்கிரமிப்பு மனிதரால் உண்டாக்கப் பட்டவை. அதாவது இயற்கை செய்வதை மனிதர் செய்ய முடியாது. மனிதர் செய்வதில் இயற்கை ஈடுபடாது, தலையிடாது, தடுக்கவும் செய்யாது ! ஒரு சிலர் ஹிட்லராய் உருவா கிறார். ஒரு சிலர் அன்னை தெரேஸாவாகவும், ஆல்பர்ட் சுவைட்ஸராகவும் உருவாகிறார். அவற்றுக்குக் காரணம் என்ன ? சில மோட்டர் வாகனங்கள் மெதுவாகத்தான் ஓடுகின்றன ! சில வாகனஙள் வேகமாகச் செல்கின்றன. சில வாகனங்கள் அதி வேகத்தில் பந்தயக் கார்களாய்ப் போட்டி இடுகின்றன ! காரணம் அந்த மாதிரி வாகனங்கள் அத்தகைய பணிக்காகத் தயாரிக்கப் படுகின்றன. அதே காரணம் தான் பல்வேறு மனிதப் படைப்புக்கும் ஒத்து வருகிறது.
படைப்புக்கு ஓர் உதாரண மாடல் : கருப்பையில் உருவாகும் சிசுவுக்குத் தாய் காரணமாகிறாள். பிறந்த பிறகே சிசு தானாக விருத்தி அடைகிறது. அதுபோல் தானாக உருவாகும் பிரபஞ்சம் முதலில் ஒரு படைப்பாளியின் கைத்திறனால் தோன்றி உதயமானது.
மனித இயக்கத்தை ஓரளவு Y = MX + C (M என்பது மனிதனின் தனித்துவம்) (C என்பது மனிதனின் நிலைத்துவம்) (Y & X கால/வயது மாறுபாடுகள்) என்னும் ஓர் எளியச் சமன்பாட்டில் காட்டலாம். ஒரு சந்தர்ப்பத்தில் மனிதனின் இயக்கம் அவனது அப்போதுள்ள தனித்துவ & மனித நிலைப் பாடுகளால் நிர்ணயம் ஆகிறது. ஒரு மனிதன் 707 ஜெட் விமானத்தில் பயணம் செய்யும் போது அவன் விதி விமானியின் கையிலும், விமானத்தின் இயக்கத்திலும் சார்ந்துள்ளது. விமானத்தில் பழுது ஏற்பட்டாலோ அல்லது விமானி தவறு செய்தாலோ விமானப் போக்கு மாறிப் பயணிகள் பூமியின் ஈர்ப்பாற்றலுக்குப் பலியாவார். கடலருகில் மனிதன் உலாவச் செல்லும் போது அவன் விதி சுனாமி போன்ற எதிர்பாராத இயற்கைத் தாக்குதலில் சிக்கிக் கொள்ள ஏதுவாகிறது, இடி மின்னலில் நடக்கும் போது மின்னலின் தாக்குதலில் மனிதன் அடிபட்டு விதி மாறி உடனே உயிர் போகலாம். அதாவது பூமியில் வாழும் மனிதன் சதா காலமும் பூகோள விதியின் கைப் பொம்மையே தவிர பூரண விடுதலைப் பிறவி இல்லை.
மனிதன் குறிப்பிட்ட ஊழ்விதி வேலிக்குள் தனித்தியங்கும் ஓர் உயிரியல் சுய யந்திரம் ! ஒவ்வொரு மனிதனுக்கும் இடப்பட்டுள்ள தனித்துவத்துக்கு அவனது ஊழ்விதியே காரணம் ! தாய் தந்தையரின் வெறும் டியென்ஏ (DNA) மட்டும் சேயின் தனித்துவத்துக்குக் காரணம் கூற இயலாது. ஒரு தாயிக்குப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளின் டியென்ஏ 100% ஒருமையில் இருப்பதில்லை. அவையும் ஓரளவு வெவ்வேறாகத் தனித்துவம் கொண்டுள்ளன. ஒரு சில கணினிகளை இன்னும் இயக்கி வருவது விண்டோஸ் 98 இயக்க ஏற்பாடு (Operating System), அல்லது விண்டோஸ் 2000, அல்லது விண்டோஸ் NT, தற்போது விண்டோஸ் XP, விண்டோஸ் Vista, விண்டோஸ் 7 இயக்கு ஏற்பாடுகளாகக் கணினியில் இடப்பட்டுள்ளன. மனிதனின் அனுதினப் பழக்கமும், தனித்துவ இயக்கமும் அவனது மூளை நினைவுக் களஞ்சியத்தில் (Brain Memory Units) ஆரம்பத்திலோ அல்லது அதற்குப் பிறகோ நிரப்பப்பட்டுள்ள நிகழ்ச்சிகளைப் பொருத்தவை. கணினி தினம் எழுப்பப் படுவது போல் காலையில் மனிதன் விழிக்கும் போது அவனை மீண்டும் சுய இயக்க மனிதனாய் ஆக்குவது அவனது நினைவுக் களஞ்சிய நிரப்புகளே ! நினைவுக் களஞ்சியத்தில் நினைவுகள் அழிந்து போனால் மனிதன் தான் யார் என்பதே மறந்து போய் மயக்க நிலைக்கு (Coma) வந்து விடுகிறது.
மனிதன் பிறக்கும் போதே அவனது தலையில் “கணினித் தாய்மைப் பீடம் (Computer Mother Board), மூளை இயக்கி (CPU -Central Processing Unit) நினைவுத் தகுதி (Memory Capacity), இயக்க ஏற்பாடு (Operating System Like Windows XP, Vista or Window : 7) என்ன வென்று இயற்கை அல்லது ஊழ் விதி தேர்ந்தெடுத்துப் பதிவாக்கி விடுகிறது என்பது என் கருத்து. பிறந்த பிறகு மனிதன் அவற்றை ஓரளவு மேம்பாடு (Upgrade) செய்து கொள்ள அவனுக்குத் திறமை அளிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் மனிதனால் தனக்குப் பிறவியிலேயே இடப்பட்டுள்ள தாய்மைப் பீடம், மூளை இயக்கி, நினைவுக் களஞ்சியத்தைப் (Mother Board, CPU, Memory Units) பின்னால் அவனாலோ அல்லது எவனாலோ மாற்ற இயலாது ! இயக்க ஏற்பாடு (Operating System) மாறலாம் ! ஆதலால் மனிதன் ஊழ் விதியின் கைப்பிள்ளைதான் ! ஊழ்விதியின் தீராத ஒரு விளையாட்டுப் பிள்ளைதான்.
கடவுளை அதன் படைப்புகளில் ஒன்றான புவி மனிதன் கண்ணால் காண முடியாது.
எப்படி அதை விளக்குவது ?
வயிற்றில் தொப்புள் கொடியுடன் பின்னி வளரும் குட்டி யானை தன் தாயைக் காண முடியாது. வயிற்றிலிருந்து வெளிவந்த பின்னே குட்டி தாய் யானையைக் காண்கிறது. ஆதலால் பிரபஞ்சத்தில் அடைபட்டுப் போன மனிதன் இயற்கையின் தொப்புள் கொடி இணைப்பில் வாழ்கிறான்; மாள்கிறான்.
அதுபோல் மனிதன் பிரபஞ்சப் படைப்பாளியைக் காண வேண்டு மென்றால் இயற்கையின் தொப்புள் கொடி அறுத்து பிரபஞ்சத்தை விட்டு வெளியேற வேண்டும்.
கடவுளைப் பற்றிச் சொல்லவேண்டுமானால் அதன் படைப்புகள் மூலந்தான் நாம் விளக்க முடியும்.
1. தெரிந்தவற்றை வைத்து தெரியாதவற்றை விளக்குவோம்.
2. தெரியாவற்றை யூகித்து தெரிந்தவற்றை மேம்படுத்து வோம்.
இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.
இருவேறு உலகம் என்பவை ஆன்மீக உலகம், உலோகாயுத உலகம். சித்தாந்த ஞான உலகத்தின் இயற்கை விதிகள் வேறு. பௌதீக-ரசாயன உலகத்தின் இயற்கை நியதிகள் வேறு. திரு என்பது உலோகாயுதச் சொத்துக்கள். தெள்ளியர் என்பது ஆன்மீக ஞானிகள்.
உயிர் என்பது என்ன, உயிரினத்தை இயக்கும் ஆத்மா என்பது என்ன வென்று விஞ்ஞானம் இதுவரை விளக்க முடிய வில்லை. உயிர் என்பது எவ்வித இரசாயன மூலக்கூறுகளாலும் ஆக்கப்பட்ட தில்லை என்பது என் கருத்து. ஆத்மா ஓர் இயக்க சக்தி. ஆத்மா எந்த வாகனத்தில் (Car, Rail, Ship, Plane, Rocket or Man, Woman or Animals) நுழைகிறதோ அந்த வாகனத்தின் சாதனங்கள் ஆத்மாவின் இயக்க முறைக்கு வரையறையும், எல்லையும் வகுக்கிறது. ஊர்ந்து செல்லும் இலைப்புழு எப்படிப் பறந்து செல்லும் பட்டாம்பூச்சியாய் மாறிச் செல்கிறது ? வகுத்தான் வகுத்த விதி முறைப்படி நிகழும் ஒரு காட்சி இது. இப்படி செய்வது எது ? இது ஏன் நேர்கிறது ? இதுபோல் முட்டைக்குள் உருவாகும் குஞ்சுக்கு உயிர் எப்படி நுழைகிறது ? சிசு பிறக்கும் போது தாய்க் கருவில் உயிர் அதற்கு எப்படி நுழைகிறது ? மனிதன் இறந்த பிறகு போது உயிர் எங்கே போகிறது ?
300 பேர் அமர்ந்து பறக்கும் ஆயிரக் கணக்கான ஜெட் விமானங்களைப் படைத்த மனிதனால் ஒரு பட்டுப் பூச்சியை, மினிமினியை உண்டாக்க முடியுமா ?
மனிதனால் பூமியின் ஈர்ப்புச் சக்தியைக் காணமுடியுமா ? வகுத்தான் வகுத்த வகையில்தான் கோடான கோடி அகிலத்தில் வடிக்கப் பட்டுள்ளன.
குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது மெய்யானால், ஏனிப்போது அப்படிப் பிறப்ப தில்லை ? நிகழ்வதில்லை ? மனிதக் குரங்கு எப்படி, எப்போது ஆறறிவு படைத்த மனிதப் பிறவியாய் மாறியது ?
நம் கண்முன் ஊர்ந்திடும் இலைப்புழு பறந்திடும் பட்டாம் பூச்சியாய் ஏன், எப்படி மாறுகிறது ?
உயிர் என்பது என்ன, உயிரினத்தை இயக்கும் ஆத்மா என்பது என்ன ?
இந்த வினாக்களுக்கு விடை எவருக்கும் தெரியாமல் இவை இன்னும் மர்மமாகவும் புதிராகவும் இருந்து வருகின்றன.
+++++++++++++
தகவல்:
1. http://ogcwebb.hubpages.com/hub/WHAT-IS-DESTINY-SHOULD-WE-BELIEVE-IN-FATE-ARE-OUR-DOINGS-LEADING-US-TO-OUR-DESTINY-OR-WHAT-WE-DO-IS-AS-PER-OUR_1
+++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) மே 21, 2012 [R-3]