இதயக் கதவை மெதுவாய்த் திறந்து……..

0

சக்தி சக்திதாசன்

sakthidasanஎமது இதயத்தில் பல வகையான நினைவுகள் புதைந்து போயிருக்கின்றன. அவற்றுள் சில இனிமையான ராகங்களை மீட்டுபவையாகவும், வேறு சில சோக முஹாரிகளாகவும் அமைந்திருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை மீளப் பரிசோதிக்கும் போது உணர்வுகள் மீட்டப்பட்டு ஒருவிதமான அமைதி மனதுக்குக் கிடைக்கிறது. அப்படியாக என் மனத்திலே புதைந்து கிடக்கும் ஒருவரின் நினவைச் சிறிது அலசிப் பார்க்கும் முயற்சிதான் இது.

சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பாக எமது வழமையான வருடாந்தச் சென்னைப் பயணத்தின் போது, எமது இல்லத்துக்கு முன்பாக ஒரு ஆட்டோவை வழிமறித்தோம்.

உள்ளே அமர்ந்திருந்த ஆட்டோ சாரதி சாதாரணமானவராகத்தான் தெரிந்தார். வயது சுமார் அறுபதைத் தாண்டியிருக்கும். முகத்திலே வெள்ளை வெளேரென்று வளர்ந்திருக்கும் தாடி மீசையுடன் ஒருங்கே அமைந்திருந்த அமைதி என்னை ஈர்த்தது.

என் மனைவிக்கு ஒரு நல்ல பண்புண்டு. அதாவது நாம் காரிலோ, ஆட்டோவிலோ, பேருந்திலோ எங்கு பயணித்தாலும், சாரதியுடனோ அன்றி எம்மைச் சூழ்ந்திருக்கும் பயணிகளுடனோ பேச்சுக் கொடுப்பதை மிகவும் விரும்புவாள். ஆட்டோவில் அமர்ந்து தி.நகரை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் போது வழக்கம் போல என் மனைவி சாரதியுடன் பேச்சுக் கொடுத்தாள்.

“நான் அரசாங்கச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றவன் அம்மா. ஓய்வு பெற்ற பின்னாலும் வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல் ஆட்டோ ஓட்டுகிறேன்” என்ற அவரை எனது கண்கள் வியப்புடன் நோக்கின.

வியப்புடன் நோக்கிய எனது கண்களில் இருந்த ஆச்சர்யத்தைக் கண்ணுற்ற அந்த மனிதர், “என்னங்க ஐயா? திகைச்சுப் போயிட்டீங்க போலிருக்கே! ஒரு அரசாங்க ஆபிசரின் டிரைவராக சர்வீஸ் போட்டிருக்கேன்” என்றார்.

பயண முடிவில் தி.நகரில் இறங்கும் போது மிகவும் சாதாரணமான ஒரு தொகையை எம்மிடம் கேட்டுப் பெற்றுக்கொண்ட அவர், என் மனைவியைப் பார்த்து “கைப்பையை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோங்கம்மா. இந்த ஏரியாவில திருட்டு அதிகம்” என்று ஒரு அன்பான உறவினருக்குரிய தோரணையில் அறிவுரை சொன்னார்.

அன்று முழுவதும் அந்த மனிதரின் பண்பும் மனிதாபிமானமும் எமது மனங்களை விட்டு அகலவில்லை என்பது அன்றிரவு படுக்கையில் எனது மனைவியுடன் அன்றைய நிகழ்வுகளை அலசும்போதுதான் எமக்குப் புரிந்தது.

அப்படி ஆரம்பித்ததுதான் ராமானுஜம் அவர்களின் அறிமுகம். அதன் பின்பு நாம் வெளியே எங்காவது போவது என்றால் ஆட்டோவைத் தேடும் எமது கண்கள் அதனுள் அமர்ந்திருக்கும் சாரதியைத் தேடுவது வழக்கமாகிவிட்டது.

அப்போது ஒருநாள் “ராமானுஜம் சார், நீங்க ஒரு செல்போன் வாங்கீட்டிங்கன்னா சிக்கலே இல்லையே! தேவையான போது உங்களையே நாம கூப்பிட்டுக்கலாமே!” என்ற என்னைப் பார்த்துச் சிரித்த அவர், “அது என்னமோங்கய்யா. எனக்கும் அந்த செல்போனுக்கு சரிப்பட்டு வராது என்னு தோணிச்சு..” என்றார். மீண்டும் ஏதோ நினைத்தவராக “நீங்க அடுத்த வாட்டி வரும்போது நான் ஒரு செல்போன் எடுத்திருப்பேன்” என்று சொன்னார்.

அடுத்த வருடம் நான் லண்டனிலிருந்து சென்னைக்கு வரும் வேளையில், என் மாமனாரின் மூலம் நான் வரும் தேதியை அறிந்துகொண்ட அண்ணன் ராமானுஜம், வீடு தேடி வந்து நம்மிடம் தனது செல் எண்ணைக் கொடுத்தார்.

அன்றிலிருந்து எங்கு போவதென்றாலும் அவர்தான் எம்மை அழைத்துச் செல்வார் (ஏற்கனவே யாரையாவது எங்காவது அழைத்துச் செல்லாமலிருந்தால்). அது மட்டுமல்ல தனக்கு வர முடியாது இருந்தால் நாம் போகும் இடத்துக்கு எவ்வளவு நியாயமான ஆட்டோ கட்டணம் என்பதை எமக்கு அறிவுரையாகச் சொல்லி விடுவார்.

அப்போதுதான் ஒருநாள் “ராமானுஜம் சார், தயவு செய்து என்னை நீங்க ஐயா என்று அழைப்பதை நிறுத்தி விடுங்கள். தம்பி என்று அழையுங்களேன்!” என்ற என்னைப் பார்த்து தனக்கேயுரிய புன்முறுவலோடு “சரி தம்பி” என்றார். எனக்கு ஒரு நேர்மையான அண்ணன் கிடைத்த திருப்தி ஏற்பட்டது.

2008 ஆண்டு ஜனவரி மாதம் நாம் சென்னை வந்த போது ஒருமுறை, அப்போது லண்டன் வைத்தியக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த என் மகன் கேட்டிருந்த இரண்டு வைத்திய நூல்களை வாங்குவதற்காக அண்ணன் ராமானுஜம் அவர்களின் ஆட்டோவில் சென்றேன்.

நான் என்ன விடயமாகச் செல்கின்றேன் என்பதை அவரும் கேட்கவில்லை (அவருக்கேயுரிய நாகரீகம்), நானும் சொல்லவில்லை.

அந்நூல்களைத் தேடி சென்ட்ரல், ஏக்மோர், பாரீஸ் கார்னர் என்று அலைந்து கொண்டிருந்த போது, “தம்பி என்ன தேடுகிறீர்கள்?” என்றார் ராமானுஜம். நான் விடயத்தைக் கூறியதும், “என்ன தம்பி, இதை முன்னாலேயே சொல்லியிருக்கக் கூடாதா?” என்று அண்ணனுக்குரிய பாணியில் கடிந்து விட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று அங்கு அந்நூலகத்தின் பிரதான பொறுப்பாளராகவிருந்த ஒரு அம்மாவிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்பு அவரே எனது தேவையை அந்த அம்மாளுக்கு எடுத்துக் கூறி, அவர் நூலகத்துக்குக் கொள்வனவு செய்யும் வழியில் எனக்குக் அந்நூலை வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

பின்பு நாம் திரும்புகையில் “தம்பி இதுதான் விஷயமென்று நீங்க சொல்லியிருந்தா, நீங்க இவ்வளவு அலைஞ்சிருக்க வேண்டாமே! நானே அந்நூல்களை வாங்கியாந்து குடுத்திருப்பேனே!” என்று சொன்ன அந்தத் தூய்மையான உள்ளத்தின் உயர்ந்த குணத்தை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

அடுத்த முறை நான் சென்னை புறப்படும்போது வழக்கம் போல அண்ணன் ராமானுஜம் அவர்களை அழைத்தபோது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அண்ணன் பேசும் போது ஜி.எச் ஹாஸ்பிட்டல் வார்ட்டில் இருந்து பேசினார். வயிற்றுப் போக்குடன் இரத்தமும் சேர்ந்ததனால், பலவிதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அங்கே அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆட்டோவை விற்று விட்டதாகச் சொன்னார்.

“கவலைப்படாதீர்கள் அண்ணா, ஆண்டவன் கைவிட மாட்டான். வந்து பார்க்கிறேன்” என்று சொல்லி சென்னை போய்ச் சேர்ந்தேன். “அண்ணாமலையாரின் தரிசனத்தை முடித்துக்கொண்டு மனைவியின் ஊரான கடையநல்லூருக்குச் சென்று திரும்பி வந்ததும் உங்களை வந்து பார்க்கிறேன்” என்று அவருடன் பேசிய எனது செல்பேசி உரையாடல் தான் அவருடனான கடைசிப் பேச்சு.

நான் ஏற்கனவே சிலருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிரைவேற்றும் பொருட்டு அவசரமாகச் சென்னையில் இருக்க முடியாமல் கிளம்பியதால் அவரை உடனடியாகப் பார்க்க முடியாமல் போய்விட்டது. கடையநல்லூரில் இருந்து அவரது மனைவியுடன் பேசும்போது, “சீரியஸான ஆபரேஷன் முடிந்து, மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார்” என்ற அவரது மனைவியின் கவலை தோய்ந்த குரலைத்தான் கேட்க முடிந்தது.

நான் லண்டன் திரும்புவதற்கு முதல் நாள் இரவு தான் சென்னைக்குத் திரும்பினேன். அவரைப் பார்ப்பதற்கு ஓடோடிச் சென்ற எனக்கு அவர் தெய்வ லோகம் போய்ச் சேர்ந்த செய்திதான் காத்திருந்தது. நான் அவருக்காகக் கொண்டு சென்ற சில பொருட்கள் மட்டும் அண்ணணின் இல்லத்தைச் சென்றடைந்தது. கனத்த இதயத்துடன் ஒரு நல்ல அண்ணனை இழந்த கனத்த மனத்துடன் அவரது இறுதி ஊர்வலத்தைப் பார்த்துவிட்டு லண்டன் திரும்பினேன்.

இப்படியான ஒரு நல்ல மனிதனின் உறவை எனக்குச் சிறிது காலம் மட்டுமே கொடுத்த அந்தக் காலத்தின் கொடூரத்தை எண்ணி நான் வேதனைப்படாத நாட்களில்லை.

சுயமரியாதை, அன்பு, பண்பு அனைத்துக்கும் ஒரு உதாரணமான ராமானுஜம் அண்ணனின் மறைவின் நினைவுகளின் ராகம், முஹாரியாக இருந்தாலும், அந்த உன்னதமான மனிதருடன் பழகிய சில நாட்களின் நினைவுகள் கல்யாணி ராகமாகத்தான் நெஞ்சிலே இசைக்கின்றது.

உலகத்தில் பிறந்தது முதல் இறக்கும்வரை பலரைச் சந்திக்கிறோம். சிலரே எமது நினைவில் நிற்கிறார்கள். என் நினைவில் நிறைந்த மனிதரைப் பற்றி என் இதயக் கதவைக் கொஞ்சம் திறந்து உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *