அன்புள்ள அம்மாவிற்கு,

       தங்கள் வயிற்றில் உதிக்கும் பெரும்பேறு பெற்ற அன்பு மகன் சண்முகம் எழுதும் கடிதம். இந்தக் கடிதத்தை நானோ இல்லை என்னுடன் பிறந்த மற்ற எழுவரில் ஒருவரோ, தங்களுக்குப் படித்துக்காட்டத் தாங்கள் இவுலகில் இல்லை என்ற எண்ணம், இலந்தை முள்ளில் சிக்கிக் கொண்ட வெளவாலைப் போல என் மனத்தைக் கிழித்தாலும், அரூபமாக நின்று எங்களைக் காக்கத் தொடங்கி இருக்கும் தாங்கள் நிச்சயம் இம்மடலுக்குச் செவிமடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

      பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், பெரும் செல்வம் சேர்க்கவில்லை எனினும், வாழ்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு, பொருளாதாரச்சுமை வாழ்க்கையை நெருக்கடிக்கு ஆளாக்காத வகையில் இன்று உன் மக்களாகிய நாங்கள் வாழுகிறோம் என்றால், அதற்காக வாழ்க்கை முழுவதும், நீங்களும் அப்பாவும் எதிர்கொண்ட இன்னல்களும், வறுமையை எதிர்த்துப் போரிட்டு, வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் எங்களைக் கரையேற்ற வேண்டும் என்ற எண்ண வெள்ளத்தில் நீங்கள் இருவரும் நீந்தியதே காரணம் என்பதை நாங்கள் அனைவரும் மனப்பூர்வமாக உணர்கிறோம்!

      பெரும் தமிழ்ப்புலமையும், கணித அறிவும் பெற்றிருந்த அப்பாவால், எட்டுப் பிள்ளைகளையும் காப்பாற்றுவதற்குத் தேவையான பொருளீட்ட முடியாமல் போக, எப்பாடுபட்டாவது பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற உந்துதலால், அவர் பொருள் தேடி பல ஊர்களுக்குச் சென்றுவிட்ட சமயங்களில் தனி ஆளாக நின்று சிறுவர், சிறுமிகளாகவும், மழலைகளாகவும் இருந்த எங்களைக் காத்த தங்களின் துணிவை எண்ணினால் இன்றும் மெய்சிலிர்க்கிறது.

      பொருள் தேடிப் பிரிந்து சென்ற அப்பா, மாதக் கணக்கில் திரும்பி வராத நிலையில், வயிற்றிற்கான உணவைக் கூடப் பெறமுடியாமல், வயல்வெளி ஓரங்களில் வளர்ந்திருந்த கீரைகளைப் பறித்து, உப்பை மட்டும் இட்டு வேகவைத்து எங்கள் பசியாற்றிய ஒரு இரவு வேளையில், நாற்பது வயதைக் கடந்திருந்த  உங்களிடம் தவறாக நடந்து கொள்ளும் கீழ்த்தரமான எண்ணம் கொண்ட சில ஆணாதிக்க வல்லூறுகள், நம் வீட்டுக் கதவின் மீது கற்களை எரிந்து நம்மை அச்சுறுத்த முயல, ஓரிரு நிமிடம் அச்சத்தில் உறைந்த நீங்கள், எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் தீயாக எரிந்து கொண்டிருந்ததாலோ என்னவோ, வீட்டில் இருந்த அரிவாளைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு,

“டேய், எவன்டா அது பொட்டப் பசங்களா, தைரியமான ஆம்பளையா இருந்த உள்ள வந்து பாருங்கடா”

என்று பேருருவம் எடுத்து நின்று, பெருங்குரலெடுத்துக் கத்திய, ஒரு சில நொடிகளில், கதவின் மீது மோதிய கற்களின் ஓசை நின்று போக, எங்களைக் கட்டியணைத்துக் கொண்டு கண்ணீர் விட்ட உன் வயிற்றில் உதிக்க நாங்கள் பெருந்தவம் செய்திருக்க வேண்டும் அம்மா!

வாழையடி வாழையாய் வறுமையைக் கண்டும்,

வாய்மைமதி தூய்மையுடன் வாழ்வியல் கொண்டு,

வானுயரச் சிந்தனையை வழுவாமல்  கொண்டு,

வாழ்க்கையைக் கற்பித்த தேவதை நீயே!

       அப்பா பெருள் தேடிப் பிரிந்து சென்றிருந்த மற்றொரு தருணத்தில், வறுமையின் கோர முகத்தைப் பார்த்துப் பார்த்து சலிப்படைந்திருந்த நீ, புலியிடம் சிக்கிக் கொண்ட கலைமான், முதலில் உயிரைப் பிடித்துக் கொண்டு தப்பித்து ஓட முயன்று, பின்னர் தப்பிச் செல்ல வாய்ப்பில்லை என்று உணர்ந்தவுடன், மரணத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை அடைவதுபோல, வறுமைப் புலியிடமிருந்து வாழ்க்கைக் கலைமானைக் காத்துக் கொள்ள இயலாமல், மரணத்தை தழுவிடும் மனநிலையை அடைந்து, உணவில் நஞ்சினைக் கலந்து, எங்கள் அனைவருக்கும் கொடுத்து, நீயும் உட்கொண்டு, வாழ்க்கையை முடித்துக் கொள்ள இருந்த தருணத்தில், எங்கிருந்தோ திடீரென்று இறைவன் போலத் தோன்றி, நம் அனைவரையும் தடுத்துக் காப்பாற்றி, தன் குடும்பம் வறுமையில் இருந்த நிலையிலும் நமது பசியை ஆற்றிய, உன் சகோதரியும் என் சிற்றன்னையுமான “சின்னக்காள்” அம்மாளை, இன்றும் ஒவ்வொரு வேளை உணவு உண்ணும் முன்னும் நான் வணங்கத் தவறுவது இல்லை. அந்த நிகழ்வுகளை இன்று நினைத்தாலும் என் கண்களில் பெருக்கெடுக்கும் கண்ணீரின் வெப்பத்தில் என் கன்னங்கள் இரண்டும் வெந்துவிடுவது போல உணர்கிறேன்.

            வறுமையின் உச்சக் கட்டத்தில் நம் வாழ்க்கை இருந்த காலகட்டத்தில், நம்மை அரவணைத்து வாழ வைத்த தெய்வங்களான பொன்னம்மா அத்தை, தங்களது மற்றொரு சகோதரியும் என் சிற்றன்னையுமான காமாட்சியம்மாள், இன்னும் பலரையும் என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு இணையான இடத்தில் வைத்துப் போற்றி வருகிறேன் அம்மா!.

 இளமையினில் வறுமையறு புதல்வரொடு மடிவதென,

ஈன்றோர் விதித்த கெடுவில்,

நளசுவையி லுணவுவகை கனிவொடுறு பசியகல,

பாங்காய் அளித்த தெய்வம்,

பண்புநிறை சின்னக்காள் பாரிலொரு தெய்வமன்றோ!

அன்புபெரு கிடுமன்னை காமாட்சி, பொன்னத்தை,

வளமான வாழ்வுக்கு வழிகோல வித்திட்ட,

மகிழ்வான தெய்வங்களே!

ஏழ்மையிலு மேழைக்கு இன்முகத் தோடுதவி,

செய்தவர்கள் தெய்வமன்றோ!

வாழ்வில்நெறி பிறழாது எனைவகுத் துய்விக்க,

வள்ளலென வந்த பேரும்,

காலத்தி லிவரன்றி ஞாலத்தி லொருதெய்வம்,

என்னுள்ளம் கண்ட திலையே!

ஆலயம் சென்றாலு மங்குந் தினம்தொழும்,

தெய்வங்கள் இவர்களன்றோ!

      இதுபோல வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தாலும், எங்களைக் காப்பாற்றி வெற்றிப் படிகளில் ஏற்றிவிட வேண்டும் என்ற உங்களின் நெஞ்சுரத்திற்கு முன்னால் புலியைக் கண்டு அஞ்சி ஓடும் யானையைப் போல, வறுமை உங்கள் உழைப்பிற்கும், தாய்மை உணர்வுக்கும் பணிந்து மெல்ல மெல்லப் பின்வாங்கத்தொடங்க, நம்பிக்கையுடன் எங்களைக் கல்வி கற்கத் தூண்டி, கிடைத்த சின்னச்சின்ன வாய்ப்புகளையும் முறையாகப் பயன்படுத்தி, எட்டுப் பிள்ளைகளையும் ஒருவர் பின் ஒருவராகக் கரையேற்றிய உங்களின் அசாத்தியத் திறமையை இன்றும் நாங்கள் வியந்து போற்றி, உங்களின்  பெயரன் மற்றும் பெயர்த்திகளுக்குத் தொடர்ந்து, அவர்களது மழலைப் பருவத்தில் இருந்து எடுத்துச் சொல்லி வந்தோம்.

இன்று அவர்களும் கல்வியை முடித்து, தங்களுக்கென ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து, அதில் வேரூன்றி வெற்றிபெற்று உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கலியாணம் முடிந்து, தத்தம் குடும்ப வாழ்க்கையில், மகிழ்வாக ஈடுபட்டு வருவதைக் கண்டு, உங்கள் மக்களாகிய நாங்கள் எட்டுப் பேரும் ஆனந்தம் அடைந்து நிற்கிறோம்.

      இந்நிலையில் உங்கள் பெயரன் மற்றும் பெயர்த்திகள், நம் குடும்பம் இந்த அளவிற்கு சிறப்பாக மேம்பட்டு வருவதற்கு ஆணிவேராக நின்ற தங்களின் பாட்டியையும், தாத்தாவையும் மகிழ்ச்சி நிறைந்த அன்புடனும், நன்றியுடனும் நினைவு கூர்ந்து போற்றுவதற்காக ஒருவிழா எடுக்க  முடிவு செய்தனர்.

      மூன்று நாட்கள், உங்களின் மக்கள் மற்றும் பெயரன் பெயர்த்திக்ள என மொத்தம் 83 பேர் ஒன்றுகூடி உங்கள் இருவரின் பெருமையையும், தியாகத்தையும் மட்டுமே பேசிப் பேசி மகிழ்ந்தோம்.

தாத்தா, பாட்டியின் நினைவாக “ஒன்றுகூடி மகிழும் விழா” என்று இதற்குப் பெயரிட்டு, உங்களைப் பெருமைப் படுத்தினர்.

      திருச்செங்கோடு அருகிலுள்ள மோர்ப்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்த நீங்களும், பெருந்துறை அருகிலுள்ள தச்சம்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்த அப்பாவும்,  சிறுவர், சிறுமியராக இருந்த பொழுது உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான நிகழ்வுகளையும், (உங்கள் வாயிலாக நாங்கள் அறிந்து கொண்டது) நாங்கள் எட்டுப் பேரும் சிறுவர் சிறுமிகளாக இருந்த பொழுது நம் வாழ்க்கையில் நடந்த சுவையான, கசப்பான நிகழ்வுகளையும், உங்கள் பெயரன் பெயர்த்திகளுடன் பகிர்ந்து கொண்டோம்.

      அந்த நிகழ்வுகளைக் கேட்டு சில நேரங்களில் கண்ணீரோடும், சில நேரங்களில்  மனம் நிறைந்த சிரிப்புடனும் அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியது மறக்க முடியாததாக அமைந்துவிட்டது.

      மூன்று நாட்கள் நடந்த விழாவின் முத்தாய்ப்பாக, சிலர் நம் வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளையும் ஓவியங்களாக வரைந்து எங்களுக்கு அளித்தனர்.

      “விழுதுகளின் விழா” என்னும் தலைப்பில் ஒரு கவிதையை எங்களுக்குப் பரிசாக வழங்கி எங்களை ஆனந்தக் கடலில் ஆழ்த்தினர். அந்தக் கவிதையையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

விழுதுகளின் விழா

போற்றும் புகழ்மோர்ப் பாளையம் பிறந்து,

பாவளத் தச்சம் பாளையம் புகுந்து,

போர்க்குணம் நிறைந்த சின்னம் மாள்நற்,

பாத்திறம் நிறைந்த மாரிமுத்துவுடன்,

பூக்கும் இல்லற வாழ்வில் இணைந்தார்!

வாமன வடிவில் இருந்த வறுமை,

வான்வரை வளர்ந்து வெறுமை காட்ட,

வறுமையை வீழ்த்தும் வேகம் கொண்டு,

வெற்றிப் படிகளில் மக்களை ஏற்றினர்!

நுட்பமதி சின்னம்மாள் நோன் பிருந்து,

வித்தகஞ்செய் முத்துமாரி தோள் இணைந்து,

வெப்பமுமிழ் வாழ்வுதனை வெற்றி கொண்டு,

இப்புவியில் வாழ்வாங்கு வாழுகின்றார்!

 

அட்ட மா சித்தி களைப்,

பெற் றெடுத்த ஆலமரம்,

சுட்ட மா வறுமை யிலும்,

சிற்பமென வாழ்ந்து நின்று,

தொட்டு வானை எட்டிவிடும்,

வித்தை களைக் கற்பித்து,

விழுதுகளை வளர்த் தெடுக்க,

விழுதுகளின் விழுதுகளும்,

பழுதின்றிப் படர்ந்து நின்று,

பணிவுடனே வணங்கு கின்றோம்!

அன்புடன்,

விழுதுகளின் விழுதுகள்.

குறிப்பு:

      மாரிமுத்து-சின்னம்மாள் தம்பதியரின் மக்களுக்காக, அம்மக்களின் பிள்ளைகள் இணைந்து நடத்திய “ஒன்றுகூடி மகிழும் விழாவில்” வழங்கப்பட்ட கவிதை.

தாத்தா பெயர்                                                           :               மாரிமுத்து.

தாத்தாவின் ஊர்                                                      :               தச்சம்பாளையம்

பாட்டி பெயர்                                                             :               சின்னம்மாள்

பாட்டியின் ஊர்                                                        :               மோர்ப்பாளையம்

மக்கட் செல்வங்களின் எண்ணிக்கை             :               எட்டு (8)

பெயரன், பெயர்த்திகளின் எண்ணிக்கை         :              இருபத்து இரண்டு (22)

கொள்ளு/எள்ளுப் பெயரன் பெயர்த்திகள்      :              இருபத்து ஏழு(27)

      இந்தக் கடிதத்தை எழுதியதன் மூலம் உங்களுடனும் அப்பாவுடனும் நேரடியாகப் பேசிய மனநிறைவை அடைகிறேன் அம்மா!

இப்படிக்கு,

உங்கள் அன்பு மகன்,

சண்முகம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அன்புள்ள (மணிமொழி) அம்மாவுக்கு!

  1. அந்த இருபது-ஏழு கொள்ளு பெயரன் பேத்திகலுள் நானும் ஒருவன் எண்டு நினைக்கும் பொழுது மிகவும் பெருமையாக உள்ளது. இந்த குதம்பாத்தில் பிறந்திருக்க கடவுழுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *