ரியாத்

நாள்: 31 மார்ச் 2014

பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்) 

அன்பு மகள் மணிமொழிக்கு

பாசமிகுந்த உன் தந்தை எழுதிக்கொள்வது.  இங்கே நானும், உன் அம்மாவும், தம்பியும்,தங்கையும், உறவுகளும், நட்புகளும் இன்னபிற நம் சுற்றங்களும் இறையருளால் நலம். நீயும் நலமாக இருப்பாய் என்று நம்புகிறோம்.  உனக்கான எங்களின் பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் நேசத்துடன் இந்த கடிதத்தினூடே தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்பு மகளே,

father-daughter-e1342147565718நேற்று தான் போலிருக்கிறது, நீ பிறந்த அந்த ஒப்பிலாத் தருணம். பதினெட்டு வருடங்கள் பறந்துவிட்டன. கண்ணுக்குத் தெரியாத சிறகுகளோடு காலம் பறந்துகொண்டிருப்பதை உணர்த்துகிறது உன் வயதும் வளர்ச்சியும். அழகிய பூக்குட்டியாய் கண்மலர்ந்த உன்னை ‘உள்ள’ங்கைகளில் ஏந்தி மகிழ்ந்த அந்த இனிய நாள் இன்னமும் நினைவிலிருக்கிறது. அந்தத் தருணத்தில் எனக்கேற்பட்ட புளகாங்கிதம் வார்த்தைகளில் சொல்லித்தீராது.  அன்றிலிருந்து நீ வளர்ந்த ஒவ்வொருப் பொழுதிலும் நீ என்னில் ஒளியாய்; கண்ணின் மணியாய் ஆகிப் போனாய்.

இதோ, இன்று கல்லூரி வாழ்க்கைக்குத் தயாராகி, பெற்றோராகிய எங்களை விட்டுப் பிரிந்து, தொலைதூர நகரத்தில் விடுதி வாசம் செய்கிறாய்.

எப்போதும் உன் நினைவுகளுடனும் இங்கே வீட்டில் நீ விட்டுச் சென்றிருக்கும் அடையாளங்களுடனும் பிரியங்கள் நிறைத்த வாசங்களுடனும் எங்கள் பொழுதுகள் கழிகின்றன.

மணிமொழி,

உனக்கு நினைவிருக்கிறதா? சிறுவயதில் “யாரெல்லாம் உன் தோழியர், அவர்களின் பெயரைச் சொல்லேன்” என்று உன்னைக் கேட்கும்போது  “என்னோட ஃபர்ஸ்ட் அண்ட் பெஸ்ட் ஃப்ரண்ட் நீங்க தான் டாடி” என்று சொல்வாய்.  முறைக்கும் அம்மாவை சமாதானப்படுத்த “அப்புறமாய் மம்மியும் தான்” என்பாய், லேசாக முறுவலித்து.  எல்லாக் குழந்தைக்கும் தந்தைதான் முதல் ஹீரோ என நான் உன் அம்மாவை சமாதானப்படுத்தினாலும்  அந்த உணர்வும் வார்த்தைகளும் பொய்யொன்றுமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தான் நாங்களும் பொறுப்பான தோழமையுடனே உன்னை வழிநடத்தினோம்.

உறவுநிலை வரைமுறை என்பதற்குட்பட்டு, வானத்திற்குக் கீழிருக்கும் அனைத்து விதயங்கள் குறித்தும் நாம் உரையாடியிருக்கிறோம்.கேள்விகளால் என் பெரும்பொழுதுகளை நிரப்பியிருக்கிறாய்..உனக்கான பதில் தேடல்களில் உன் அப்பா இன்னும் வளர்ந்து கொண்டே இருந்தேன்.

உன் வாழ்வில் நிகழ்ந்த எந்த ஒரு சிறுசம்பவத்தையும் நீ எங்களிடம் இதுவரை பகிர்ந்து கொள்ளாமல் விட்டதில்லை. உன் நெருங்கிய தோழியுடன் கொண்ட பொய்க்கோபம் முதல் ஓவியப் போட்டியில் நீ வேறொரு தோழிக்கு உதவியது வரை. இன்னும் அடிபட்ட புறாவுக்கு அழுது தீர்த்த நாள் பொழுதும், உடல்நலம் குன்றியதொரு பொழுதில் என் நெற்றி நீவி தலை கோதி உறங்க வைத்த பொழுதில் உணர்த்தினாய் என் தாய் என்றும்..  .

ஈன்ற பொழுதின் பெரிதுவந்த இனிய தருணங்கள் அவை.

ஒருமுறை பள்ளியில் மாதாந்திரத் தேர்வில் கணக்குப் பாடத்தில் மதிப்பெண் சற்று குறைந்துபோனதென்று அழுதுகொண்டேயிருந்தாய். அப்போது ஆறுதலாக நான் சொன்னேன்: “மதிப்பெண்ணை வைத்து அறிவை அளந்துவிட முடியாதம்மா; இந்த முறை ஏதோ காரணங்களால் மதிப்பெண் குறைந்திருக்கும். ஆனால், நீதான் அடுத்த முறை  முதல் மதிப்பெண் பெறுவாய் பார்” . என்னுடைய இந்த அறிவுரைக்குப் பின் எதையும் நீ எளிதாக எடுத்துக்கொண்டாய். ஆனாலும் அப்போதும் உன் முதலிடத்தை நீ விட்டுத்தந்ததில்லை.தப்பும் தவறுமாக நான் பேசிய ஆங்கிலம் குறித்து உன்னிடம் வெட்கி நிற்பேன்.ஆங்கிலம் அறிவல்ல அப்பா அது மொழிதான் என்று அன்புடன் அரவணைத்த ஆசிரியையும் ஆகிப்போனாய் அன்றிலிருந்து நீ..

“உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்” என்று கலீல் ஜிப்ரான் கூறியதன் பொருள் புரிந்த பெற்றோராகவே இருந்தோம். எங்கள் வழிகாட்டுதலில், கண்டிப்பில் ஒரு புரிதலும் பக்குவமும் இருந்ததை நீயும் இப்போது உணர்கிறாய் என்பதை உனது அண்மைக்காலப் பகிர்தலில் அறிந்து கொள்ள நேரிடலில் இன்னும் அகமகிழ்ந்து போகிறேன் நான்..

நீ ஆசைப்பட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்த ‘ஆசைமிக்கப் பெற்றோராக’ நாங்கள் இருக்கவில்லை என்றாலும், நியாயமான எந்த ஆசையையும் நாங்கள் மறுதலிக்கவில்லை.  பனிக்காலத்தில் ஐஸ்கிரீமை மறுத்தாலும், கோடைக்காலத்தில் நீ கேட்கும் முன்பே அதை வாங்கித் தந்திருக்கிறோம். இப்போது கூட இந்தக் கல்லூரியில் படிக்கிறேன் என்று உன் விருப்பத்தைச் சொன்னதால் தான், அதன்படியே இடம் வாங்கிச் சேர்த்துள்ளோம். படிப்பில் நீ சோடை போக மாட்டாய் என்பது தெரியும். அன்பு மகளே உலக கல்வியோடு உன்னதமான வாழ்க்கை கல்வியும் கற்றலில் சமர்த்தாக இருக்க வேண்டும் என்பதும் எங்கள் பேரெதிர்பார்ப்பாக இருக்கிறது..

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல

மாதவஞ் செய்திட வேண்டுமம்மா

பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ- இந்தப்

பாரில் அறங்கள் வளருமம்மா

 

என்கிற கவிமணியின் பாடலை உணர்ந்து பெண்ணாகப் பிறந்ததன் பெருமையை நீ முழுமையாகத் துய்க்க வேண்டும் மணிமொழியே. பெண்களால் உலகம் செழிக்கும். அறம் வளரும். அன்பு மலரும். அதுவே இந்த உலகின் வரம்.

பிறந்து வளர்ந்து திருமணமாகி பிள்ளைகள் ஈன்று,  பின்பு மடிவதல்ல பிறப்பின் நோக்கம். ஆணோ, பெண்ணோ , மானுடம் பயனுறச் செய்வதற்கே இந்த வாழ்நாளை நாம் செலவிட வேண்டும் – என்பதை நன்கு அறிந்தவள் அல்லவா என் மணிமொழி.

சிறுவயதில் உன் புத்திசாலித்தனம் எங்களை வியக்க வைத்தது.  ஓரளவு விவரம் அறிந்தவளான உனக்கு, குட் டச், பேட் டச் பற்றி நாங்கள் சொல்லிக் கொடுத்தபோது, பின்பு அதையே உன் தம்பி தங்கைகளுக்கு அவர்களுக்கே புரியும் விதமாக நீ திருப்பிச் சொல்லிக் காட்டிய போதும், வார இதழ்களில் குறுக்கெழுத்துப் புதிர்களில்  பரிசுகள் – இன்றளவும் – வெல்லும் போதும் உன் புத்திசாலித்தனம் எங்களை வியக்க வைத்தது.. வைக்கிறது மகளே.  அதே சமயம், வாழ்வின் எல்லாத் துறைகளிலும் நீ தேர்ச்சி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் மகளே.சின்ன சின்ன வெற்றிகள் உனக்கு கொடுக்கும் தன்னம்பிக்கையும் எதிர்கால வாழ்வைப்பற்றிய பயமற்ற பாடங்களையும் நீ எதிர்கொள்ள வேண்டும் என்பதும் எங்களின் அவா. நம்பிக்கை. நீ வெல்வாய் நிச்சயம்.

பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில் சமையல் செய்வதை பெண்கள் இழிவாகக் கருதும் சூழல் நிலவிவருகிறது. ஆனால், நட்சத்திர அடுக்களைகளில் அதே வேலையை ஆண்கள் கர்வத்துடன் செய்து வருகிற முரண்பாட்டையும் நீ புரிந்து கொண்டிருப்பாய். ஆகவே, சமையல் போன்ற அடிப்படைகளை இழிவென்று தள்ளாதே, . ‘எந்தப் பெண்ணும் தனக்கான ஆணின் மனதில் இடம் பிடிப்பதெல்லாம் வயிற்றின் வழியாகத் தான்’ என்றும் சொல்வார்கள்.

ஆக, இன்றைய சூழல் குறித்த தெளிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் முதலில். ஒரு பக்கம் முன்னேற்றம் என்ற பெயரில் சுரண்டல்களும் உண்டு என்பதை விளங்க வேண்டும்.  பெண்கள் ஒடுக்கப்பட்டு ஓரமாக உட்காரவைக்கப்படுவது எவ்வளவு தவறோ, அதற்கும் சற்றும் குறையாத தவறாக, ஏன், அதனினும் பெரிய தவறாக, அதே பெண்கள், அவர்களையறியாமலே முற்றும் ‘திறந்த’வர்களாகப்பட்டு சுரண்டலுக்கு உட்படுத்தப் படும் ஒரு சமூகத்தில் தான் நாம் வாழ்ந்துவருகிறோம்.பொறுப்பற்ற சுதந்திரம் ஏற்படுத்தும் புறவிளைவுகள் பற்றியும் உனக்கு நன்கு தெரியும் தானே மணி.. ‘பொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்’ என்கிற என் வரியொன்றை சிலாகித்து உன் பள்ளி ஆண்டு விழாவில் நீ பேசியதும் நினைவுக்கு வருகிறதடா!

எப்போதும் நீ சுதந்திரமாக, நல்லது கெட்டது புரிந்து நடந்துகொள்பவள் தான் என்றாலும் இப்போது இந்த பதின்பருவத்தில் கல்வியின் வாயிலாக வாய்த்திருக்கும் சுதந்திரம்  மிகவும் குறிப்பிடத்தக்கது. என்னுடைய ஆசிரியர் ஐயா சொல்லக் கேட்டிருக்கிறேன்: “டீன் ஏஜை ஒருவன்/ஒருத்தி வெற்றிகரமாக எந்த உணர்ச்சித் தாக்கத்திற்கும் ஆளாகாமல் கடந்துவிட்டால் போதும், அதன்பின் கவலைப்பட தேவையில்லை” என்று. ஆம் மகளே, இந்த வயதுகளில்தான் வெறும் உடற்கவர்ச்சியால் உந்தப்பட்டு பொய்க்காதல்களில் பிள்ளைகள் வீழ்வதுண்டு. நான் இப்படி எழுதுவதை ஒரு தகப்பனின் பொறுப்பான புலம்பல் என்று கருதிவிடாதே. நாட்டில் நடக்கும்  சூழலின் கண்ணாடியாகவே இந்தக் கருத்தை எழுதுகிறேன். மனோதிடம் மிகுந்த உனக்கு நான் சொல்லவருவது புரிந்திருக்கும் – உண்மையான, சரியான நேசம் என்பது பற்றி தெளிந்த புரிதலையுடையவள் அல்லவா நீ.   நமது நாட்டில் காலம் முதிராமலும் கருத்து தவறியும் நிகழ்வுறும் ஒன்றாக காதல் என்பது மாறிவிட்டுள்ளது அல்லவா! –

உனக்கு அதிகம் கூறத் தேவையில்லை.  உன் உடல் மீதோ, மனம் மீதோ, சூழல் மீதோ, ஆளுமை மீதோ மற்றவர்களின் எந்த விதமான அத்துமீறலையும் அனுமதிக்காதிரு.  ஆணோ, பெண்ணோ, யாராக இருந்தாலும் தன்னைக் காத்துக் கொள்வதே தலையாயக் கடமையாகும் அல்லவா.

உனக்கான வாழ்வை நீயே தேர்ந்தெடுக்கலாம், ஆனால் அதில் பெற்றவர்களின், உற்றவர்களின் வழிகாட்டுதலே சிறக்கும் என்பதைப் புரிந்துகொள்வாய் தானே.

இந்தக் கணினியுகத்தில் என்னதான் ‘ஸ்கைப்’பில் நாம் பேசிக் கொண்டாலும், இந்தக் கடிதம் எழுதும் முறை எத்தனை அழகாயிருக்கிறது பார்.

உன்னைக் கல்லூரியில் சேர்ப்பதற்குத் தயங்கிய உன் அம்மா இப்போது மிகுந்த நம்பிக்கையும் தைரியமும் கொண்டிருக்கிறாள் ‘என் மகள் புத்திசாலி; எப்போதும் சரியாகவே செயற்படுவாள்’ என்று பெருமிதங்கொள்கிறாள். அந்த நம்பிக்கை எப்போதும் எனக்கிருக்கிறது.நிறையவே இருக்கிறது.

வாழ்கின்ற பொழுதுகளில் நல் எண்ணங்களையும் போராட்டங்கள் பொழுதில் நம்பிகையையும் ஒருபோதும் தளரவிடாத  போராட்டக் குணம் எப்போதுமிருக்கட்டும் உனக்கு என்பதே எனது எல்லாநேர வாழ்த்தாக இருக்கிறது.

நாம் இருக்கும் நிலையிலிருந்து நாம் விரும்பும் நிலைக்குச் செல்ல தடைகளோடு கூடிய போராட்டங்களை வெல்லும் பொழுதுகளுக்குதான் வாழ்க்கை என்று பெயர்.. நீ விரும்பும் இனிய நல்ல நீண்ட வாழ்க்கை அமைய இறையருள் துணை நிற்கட்டும். அதுவே காலாகாலத்துக்கும் எங்கள் பிரார்த்தனை.

தம்பியும் தங்கையும் நன்றாகப் படிக்கிறார்கள். அவ்வப்போது உன்னை அவர்களே பிரதிபலித்துக் காண்பிக்கிறார்கள். தம்பி இனியன் கடந்த மாதம் மாவட்ட அளவில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் முதற்பரிசு பெற்றிருக்கிறான்.  தம்பி இனியனும் தங்கை ஓவியாவும் உன்னைப் போலவே வகுப்பில் முதல் மாணவர்களாகத் திகழ்வதும் இன்னமும் பெருமிதம் அளிக்கிறது.

பணத்தைத் தேவைக்கேற்ப செலவு செய். இதில் நான் உனக்கு அதிகம் அறிவுறுத்த ஏதுமில்லை. நீ எத்தனை பொறுப்பு மிக்கவள் என்று முன்பே உணர்த்தியிருக்கிறாய். ஏதும் அவசரம் என்றால் அங்கே உன் அத்தையிடம் பெற்றுக்கொள். அன்றாடம் அலைபேசு. உடல்நலத்தில் பெரிதும் அக்கறையாயிரு. சுவர் இருந்தால் தான் சித்திரம். தினமும் போதுமான அளவுக்கு உறக்கம் கொள்.

மற்றவை பிறகு..

பொங்கி வழியும் அன்புடனும் ப்ரியங்களுடனும்

உன் அப்பா.

பெறுநர் முகவரி:

ப.மணிமொழி

சாந்தி நிலையம்

முதலாம் தெரு,

நுங்கம்பாக்கம்

சென்னை – 34

 படத்திற்கு நன்றி:

http://growingleaders.com/blog/strong-fathers-strong-daughters-guest-post-by-dr-meg-meeker/

பதிவாசிரியரைப் பற்றி

17 thoughts on “அன்பு மகள் மணிமொழிக்கு

  1. ஓர் தந்தை எழுத வேண்டிய கடிதம் இது. அதை மகள் படிக்க வேண்டிய கடிதம் இது. கடிதம் என்ற பழைமையான சொல்லிலிருந்தும். பாசம் என்ற தொண்று தொட்ட உணர்விலிருந்தும். இதை படித்த பிறகு புதுப்பிக்கபடுகிறது நமக்கான உணர்ச்சிகள். வாழ்த்துக்கள். (தஞ்சை-மீரான்)

  2. அட்டகாசமாக எழுதியுள்ளீர்கள் ..வாழ்த்துகள்

  3. தம்பி,அருமையான  கடிதம்…ஒரு தந்தைக்கே உரித்தான பொறுப்புடன் கூடிய பக்குவமான வரிகள்…..இதைவிட பக்குவமாய் ஒரு மகளுக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை…மணிக்கு கிடைத்தமாதிரி,  (இப்படி அழகாய் எடுத்துரைக்க )எனக்கு  ஒரு தந்தைஇல்லையே என பொறாமை பட வைக்கிறது…என்ன ஒரு அக்கறை மகள் மீது…..உண்மையில் மணிமொழி பாக்கியம் செய்தவள் ,இப்படியொரு தந்தை கிடைத்தமைக்கு…ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால் நீ தந்தைமட்டுமல்ல…”தாயுமானவர்””

  4. Anaithu magalgalum padikka vendiya kadidham. Azhgaana elimaiyaana vaazkkaikku thevaiyaana mukkiya karuththukkal. Arumai nanbar Fakhrudeen.

  5. நாம் இருக்கும் நிலையிலிருந்து நாம் விரும்பும் நிலைக்குச் செல்ல தடைகளோடு கூடிய போராட்டங்களை வெல்லும் பொழுதுகளுக்குதான் வாழ்க்கை என்று பெயர்.. நீ விரும்பும் இனிய நல்ல நீண்ட வாழ்க்கை அமைய இறையருள் துணை நிற்கட்டும். அதுவே காலாகாலத்துக்கும் எங்கள் பிரார்த்தனை./// mikavum rasiththa kaditham sago..

    ungkaL magal koduthu vaithaval. vaazgha valamudan. solla vendiyathu anaithaiyum pooranamaga positive aasa solli viteergal. en mukanoolil pakirkiren. 🙂

  6. “நாம் இருக்கும் நிலையிலிருந்து நாம் விரும்பும் நிலைக்குச் செல்ல தடைகளோடு செல்லும் போராட்டங்களை வெல்லும் பயணங்களுப் பெயர்தான் வாழ்க்கை!”

    யதார்த்தம் மிளிரும் இவ்வார்த்தைக்கு… நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்!

    வாசிப்போரின் சிந்தனையை இடருவது:
    வாழ்நாளில் எழுதிய ஒரே கடிதம்போன்ற மாயையை தவிர்த்திருக்கவேண்டும்… சுறுங்கக் கூறி!

  7. சிறப்பாக இருக்கிறது..பரிசு கிடைக்க வாழ்த்துகள் சகோதரரே!

  8. அன்பும் கவலைகளும் பொங்கியெழும் பாச மடல்.

    //பனிக்காலத்தில் ஐஸ்கிரீமை மறுத்தாலும், கோடைக்காலத்தில் நீ கேட்கும் முன்பே அதை வாங்கித் தந்திருக்கிறோம்.//

    அழுத்தமான வரிகள். Very nice.

  9. இன்றைய நவீன காலகட்டத்தில் பொறுப்புள்ள ஒவ்வொரு தகப்பனும் தன் மகளின் மீது அக்கறையையும், அன்பையும், பொறுப்புணர்ச்சியையும் எடுத்து சொல்லும் அற்புதமான கடிதம்.

  10. அன்பு அப்பாவிடமிருந்து அற்புதமான கடிதம் மணிமொழிக்கு. மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துகள்!

  11. ஆகவே, சமையல் போன்ற அடிப்படைகளை இழிவென்று தள்ளாதே, . ‘எந்தப் பெண்ணும் தனக்கான ஆணின் மனதில் இடம் பிடிப்பதெல்லாம் வயிற்றின் வழியாகத் தான்’ என்றும் சொல்வார்கள்.
    இவ்வரிகள் கொஞ்சம் ஓவர்.
    அடுக்களையில் நிற்கக்கூட நேரமின்றி பணியாற்றும் பெண்களும் உளர்.வெறும்காய்கறிகளை பச்சையாகவே உண்டும், பணிக்குச் செல்லும் அவசரத்தில் காலை உணவை உட்கொளளவே நேரமில்லாமல் குடும்பத்திற்காகவே ஓடும் கடவுள்போன்று பன்னிரு கைகளிலும் பணியினை ஏற்றுக்கொண்டு இயங்கும் இயந்திரத்திற்கு சமைக்க …………வரி அழுத்தம் குறைத்திருக்கலாம்.அடுக்களை இருவருக்கும் பொது.ஆணுக்கு அறிவை வைத்தவன்தான் பெண்ணுக்கும் அறிவை வைத்தான்.சமைத்துக் களைத்து முடித்து இக்கடிதத்தில் காணும் தாயின் கருத்தினையும் பதிவு செய்திருந்தால் நான் சொல்வது புரியும்.தந்தையுமாகி நின்றாலும் நல்ல அறிவுரை பகன்றாலும் திருமணமான பின் அடுத்தவீட்டிற்குச் சென்றவள்தானே! (அடுத்தவீட்டுப்பெண்)என்று வாழும் ஊர்ப்பண்பாட்டு தந்தைக்குலம் மாறுவது எப்போது? இத்தகைய சூழலை பாசமகள் விரும்புவதில்லை.ஒருநாளும் செல்லிடைப்பேசியில் மறவாது பேசியவள் வாழ்வினில் இடர்்பாடு நேரும்போது திருமணத்திற்குப்பின் என்ன ஆனாள் என்பதைக்கூட கருதுவது கிடையாது.(ஊர்ப்பண்“பாடு)இதுதான் காலந்தொட்ட இந்திய ஊர்ப்பண்பாட்டுநடைமுறை.மாறுவது என்றுதான் புரியவில்லை.(கல்லானாலும் கணவன்) பெண்சுதந்திரம் என்று மேடையிலும்,கவிதையிலும்தான் முழக்கம்.அறிவுரை எல்லாம் பெண்ணுக்குத்தானா! ஆணின் மனம் எப்போது மாறுமோ அன்றுதான் பெண் சுதந்திரம் முழுமை பெறும்.ஆணின் மனதில் இடம்பிடிக்க சமையல் மட்டும்தானா?என்பது புரியவில்லை. நல்ல அறிவு,குடும்பப்பாங்கு, இன்முகம், பிரச்னைகளை எதிர்நோக்கும்வல்லமை,சுற்றம்பேணல்,பொருளீட்டும்திறன்,உண்மைத்தன்மை இவை போதும்என நினைக்கிறேன்.
    நல்ல கடிதம்.பாராட்டுகள்.

  12. நிறைவான. மடல் . நல்ல அறிவுரைகள். தகப்பன் மகள் பாசம் நன்கு சுட்டி காட்டப்பட்டுள்ளது . ரசித்தேன் .

  13. மிக இயல்பான நலம் விசாரிப்பில் தொடங்கி பல்வேறு திக்கில் பயணக்கிறது கடிதம். மகள் தந்தைக்கும் மகன் தாய்க்கும் எழுதுகிற கடிதத்தில் இருக்கும் இலக்குகளும் எண்ண ஓட்டங்களும் வெவ்வேறானவை.வயது வந்த பெண்ணுக்கு தந்தை எழுதும் இந்த கடிதம் நிறைய விஷயங்களை சொல்லிப் போகிறது. நெகிழ்வும் பரவசமும் அலை அலையாய் பொங்கி வழிகிறது பெரு வெள்ளப் போக்காய்.. தூக்கி வளர்த்துக் குழந்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது பெரிய பெண்ணாகி விடுவது ஒரு தந்தையாய் திகைப்பாய் நோக்குவதை உங்கள் கடிதம் அழகாய் பதிவு செய்திருக்கிறது. //உனக்கு அதிகம் கூறத் தேவையில்லை.  உன் உடல் மீதோ, மனம் மீதோ, சூழல் மீதோ, ஆளுமை மீதோ மற்றவர்களின் எந்த விதமான அத்துமீறலையும் அனுமதிக்காதிரு.  ஆணோ, பெண்ணோ, யாராக இருந்தாலும் தன்னைக் காத்துக் கொள்வதே தலையாயக் கடமையாகும் அல்லவா.

    உனக்கான வாழ்வை நீயே தேர்ந்தெடுக்கலாம், ஆனால் அதில் பெற்றவர்களின், உற்றவர்களின் வழிகாட்டுதலே சிறக்கும் என்பதைப் புரிந்துகொள்வாய்// ஒவ்வொரு தந்தைக்கும் மகளுக்கும் இந்த புரிதல் இருப்பின் அந்தப் பெண் எவ்வளவு ஆனந்தமாக அழகாக வாழ்வை எதிர்கொள்ள முடியும் என யோசிக்க வைக்கும் வரிகள். இது போன்ற வெகு இடங்கள் இந்த கடிதத்தை ஆனந்தமாக அதே சமயத்தில் வாசிக்க வைத்தன . நன்றி கவிஞர்.. மெதுவாக நம்மைவிட்டு போய்க்கொண்டிருக்கும் ஒரு வாசிப்பனுவத்தை கடிதம் வடிவில் தந்தமைக்கு

  14. பாராட்டியும் வாழ்த்தியும் கருத்தளித்த அனைவருக்கும் மிகுந்த நன்றியுடையவனாகிறேன். ஒரு தந்தையாக மகளுக்கு எழுதிய கடிதத்தில் ஓரிரு வரிகள் ஓவராகி விட்டதாக Dr. Lakshmi (பொன்ராம்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அப்படியில்லை, ஒரு தாயாக, மகன் மணிமொழிக்கு கடிதம் எழுதியிருந்தாலும், அதைப்படிக்கும் ஓர் ஆண், அதிலும் ஓரிருவரிகள் ‘ஓவர்’ என்று கூறியிருப்பார் என்றே கருதுகிறேன்.

    ஆண் பெண் சமத்துவக் கருத்துகளில், யதார்த்த அளவில் சிலவற்றில் பெண்ணும், வேறு சிலவற்றிலும் ஆணும், ஒருவரையொருவர் விஞ்சியிருக்கிறார்கள்.

    இரண்டு கடிதங்கள் எழுதக் கருதியிருந்தும், கடைசி நேரத்தில் அரக்கப் பரக்க, மீள்பார்வையும் செய்யாமல், செய்ய இயலாமல், இந்த ஒன்றையேனும் அனுப்புமாறு ஆகியது.

    அனைவருக்கும் மீண்டும் நன்றிபல.

  15. வாசிக்க வாசிக்க தந்தை பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.