புதுவை பிரபா

அன்புள்ள மணிமொழிக்கு..

                                                                அப்பா எழுதுவது. நலமா அம்மு? எப்படி இருக்கிறது கல்லூரி வாழ்க்கை? எப்படி இருக்கிறது விடுதி உணவு? எப்படி இருக்கிறது  இந்த தற்காலிகப் பிரிவு? பனிரெண்டாம் வகுப்புவரை உனை பார்க்காமல் நானும்..எனை பார்க்காமல் நீயும் இருந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

பதினெட்டு ஆண்டு காலமாக இத்தகைய நீ…ளமான பிரிவை காலம் எனக்கு தராமல் இருந்ததற்கு அதை பாராட்டுவதா? அல்லது கொடுத்து கொடுத்து பழக்காமல் விட்டதற்கு அதன் மீது கோவித்துக்கொள்வதா என்று தெரியவில்லை எனக்கு.

                                உன்னை நான் விடுதியில் விட்டுவிட்டுவந்து சரியாய் பதினைந்து நாட்கள்தான் ஆகிறது. ஆனால் மாதங்கள் பல ஆனதுபோல் இருக்கிறது. அழுதுகொண்டே இருக்கும் உன் அம்மாவிற்கு ஆறுதல் வார்த்தைகள் கூற முற்படும் வேளைகளிலெல்லாம் மௌனம் என்னை ஆட்படுத்திக்கொள்கிறது. சரி.. உன் தவிப்பையும் நன்கு உணர்ந்தவன் நான் என்கிற முறையில் உன்னை மேலும் சங்கடப்படுத்த விரும்பவில்லை நான்.

                                சில நாட்களுக்கு, புதிய இடம்.. புதிய தோழர் தோழியர்.. புதிய வகை உணவு.. இவற்றை ஏற்றுக்கொள்ள சற்று சிரமமாய் இருக்கும். அப்பா அம்மாவைவிட்டு பிரிந்திருக்கும் உணர்வும் உன் உழற்றும். நிதானமாய் நீ இருக்கவேண்டிய மிக முக்கிய தருணம் இது. சிறுவயதிலிருந்தே நான் சொல்லி சொல்லி வளர்த்த வாசகம் உனக்கு நினைவிருக்கிறதா? படிப்பிற்காக எதையும் விட்டுவிட துணியலாம். ஆனால் எதற்காகவும் படிப்பை விட்டுவிடக்கூடாது. ஆம். உன் வாழ்க்கையின் இலக்கு நோக்கி வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறாய் நீ. உனக்கு ஆர்வமான பாடப்பிரிவு ஆயிரத்து ஐநூறு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் கல்லூரியில்தான் கிடைக்கும் என்று தெரிந்தும் துணிவுடன் நீ படிக்க புறப்பட்டது மட்டற்ற மகிழ்ச்சியை எனக்குள் பாய்ச்சியது. இலக்கே இல்லாமல் படிப்பதும், கிடைக்கும் பாடப்பிரிவை எடுப்பதும், அற்ப காரியத்திற்கெல்லாம் தங்களது எண்ணங்களை சமரசம் செய்துக்கொள்ளும் சராசரி மாணவ மாணவியர் மத்தியில் கொள்கை பிடிப்போடு படிக்கும் நீ, நான் பிரமிக்கும் பெருமை.

                                அப்பா அம்மாவைவிட்டு இவ்வளவு தொலைவு வந்து இத்தகைய படிப்பு தேவையா? தவறு செய்துவிட்டாய் நீ என்று சக தோழர் தோழியர் கூறலாம். அல்லது  உனக்கேகூட தோன்றலாம். அவர்களது சொற்களோ..உனது மாற்று எண்ணமோ.. உனது கொள்கையின் ஆணிவேரில் அமிலம் ஊற்றிவிடாமல் பார்த்துக்கொள். படி. ஆழ்ந்து படி.. தெளி. தெளிந்தபின் தொடந்து படி. எழும் ஐயங்களை உடனுக்குடன் தீர்த்துக்கொள். அறிவு என்பது பாடப்புத்தகங்களால் மட்டுமே வாய்ப்பது கிடையாது என்று நன்கு உணர்ந்தவள் நீ. ஆகையால்…நேரம் கிடைக்கும்போது இலக்கியம் படி. தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தங்களை கல்லூரி நூலகத்தில் தேடித்தேடி படி. ஆரோக்கியமான சிந்தனைகளை உன்னுள் விதைத்துக்கொண்டே இரு.

                                மகளே!… மனதை உன் முழு கட்டுப்பாட்டில் வை. உன் கட்டுப்பாட்டைவிட்டு விலகிவிலகி ஓட ஆசைப்படுகிற இயல்பு இந்த பருவ வயது மனதுக்குடையது. அதை சமாளிக்க கற்றுக்கொள். இயன்றவரை தனிமை தவிர். இயங்கிக்கொண்டே இரு. தூக்கம் தொடர்ந்து தொந்தரவு செய்தால்மட்டும் படுக்கைக்கு போ! விழியின்  நுனிக்கு விழிப்பு வரும்போதே கண்விழி. படுப்பதற்கு மட்டும் கட்டிலை பயன்படுத்து. படிப்பதற்கு அதை உபயோகிக்காதே. உட்கார்ந்து படி.

                                கட்டிடத்திற்கு அடித்தளம்போல உடல்நலம். அதைப்பேணு. உணவு வகை, உணவு முறை மாற்றத்தால் சிற்சிறு பிரச்சனைகள் தலைதூக்கலாம். கவனத்தோடு அதை கையாள். எக்காரணம் கொண்டும் பட்டினி கிடக்காதே. உடலுக்கும் அறிவு இருக்கிறது என்று சிறு வயதிலேயே உனக்கு நான் எடுத்துக்காட்டுடன் கூறியவை நினைவிருக்கிறதா? ஆம். உன் உடல் மிகவிரைவில் உன் புதுவகை உணவை ஏற்றுக்கொள்ள பழகிவிடும்.

                                மகளே… மணிமொழி… உன்னை இன்னும் ஆறுமாத காலம் கழித்துதான் பார்ப்பேன் என்று நினைக்கும்போதே நெஞ்சு கனக்கிறது. உன் பிரிவினை பழகிக்கொள்ள இன்னும் எத்தனை நாட்கள் பிடிக்கப்போகிறதோ தெரியவில்லை. பரவாயில்லையம்மா. நீ எங்களைப்பற்றிய கவலையை மற. மறக்க முடியாவிடில் முயற்சிசெய். அதைவிட மறக்காமல் கடிதம் எழுது.. அடிக்கடி எழுது. நானும் எழுதுகிறேன்.

அன்பு மகளுக்கு…ஆசை முத்தங்களோடு….

அப்பா.

2 thoughts on “அன்புள்ள மணிமொழிக்கு

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க