வைரமணி நடராஜன்

மார்ச்சு 31, 2014.

5, திருவள்ளுவர் தெரு,

அயப்பாக்கம்,

சென்னை-53.

அன்புத்தோழி மணிமொழி,

     உனதருமை தோழி கண்மணி வரையும் மடல். உன் நலம் அறிய ஆவல்.

     செல்பேசியில் குறுந்தகவல், கணினியில் மின்னஞ்சல் என தகவல் தொடர்பு சாதனங்களின் புதுவரவால்  தொலைந்து போன தந்தியைப் போல மெல்ல மெல்லத் தொலைந்து கொண்டிருக்கும் அஞ்சலை உயிர்ப்பிக்க நான் எழுதும் மடல் இது. குறுஞ்செய்தி, மின்னஞ்சல் போன்றவற்றில் நாம் அஞ்சலில் எழுதும் செய்தியில் உள்ள உயிர்ப்பு இருக்காது. மடலைப் படிக்கும் போது அனுப்பியவரின் மனநிலை, அவர் செய்த தவறுகள், அவற்றைத் திருத்திய விதம் என அனைத்தையும் அறிய இயலும். இதெல்லாம் புதுயுகத் தகவல் பரிமாற்றத்தில் கிடைக்காத நிகழ்வுகள். நிற்க!

     நீ முதுகலை அறிவியல் பட்டத்தில் விவசாய விஞ்ஞானம் கற்றுத் தேர்ந்து நம் கிராமத்தில் விவசாயம் செய்து வருபவள். உன் அப்பா நம் மகள் விஞ்ஞான விவசாயமுறைகளைக் கற்று நம் கிராமத்தைச் செழிப்பாக்குவாள் என தீர்க்கதரிசியாய்ச் சிந்தித்து உன்னைக் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் கஷ்டப்பட்டு சேர்த்தார். நீயும் அவரை ஏமாற்றாமல் குடும்ப சூழ்நிலை அறிந்து நன்றாகப் படித்துப் பல்கலைக்கழகத் தேர்வில் மூன்றாவது இடத்தைப் பிடித்து பட்டம் பெற்று நம் கிராமத்து முதல் முதுகலை பட்டதாரி என்ற பெயர் பெற்று, நீ கற்ற அறிவியல் வேளாண் முறைகளை உன் தந்தையுடன் பகிர்ந்து உழைத்து வந்தாய். ஆண்பிள்ளை இல்லாத வீட்டில் நீயே மகனாகவும், மகளாகவும் இருந்து உன் குடும்பத்தைத் தலை நிமிரச்செய்தாய். அதைக் கண்டு நானும் இன்புற்றிருந்தேன்.

     மணவாழ்க்கை எனும் நிகழ்வு உன்னை விவசாயத்தை விட்டு விலகச் செய்து விட்டதோ? என எண்ணும்படியாக நீ செல்பேசியில் சொன்ன செய்தி என்னைச் சற்று கலங்கடித்து விட்டது. கிராமத்தை விட்டு பட்டணத்திற்கு வர உள்ளதாகவும் உனக்குத் தகுந்த வேலை ஒன்றை பெற்றுத்தர உதவ வேண்டும் என கேட்டாய். உன்னை நினைத்து அழுவதா? சிரிப்பதா? என தெரியவில்லை. உன் அப்பா காலத்திற்குப்பின் உன் கணவனுடன் விவசாயத்தினைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதைக் கண்டு நான் பெருமைப்பட்டுக் கொண்டேன். கிராமத்து வயலைக் கவனிக்க ஆள் கிடைக்கவில்லை, தண்ணீர் இல்லை என்ற காரணங்களுக்காகத் தொழிற்சாலை கட்டுவதற்கு நிலத்தைக் கேட்கிறார்கள். விற்று விட்டு பட்டணம் வருகிறேன் என்கிறாய்.

     நம் பள்ளிப்படிப்பில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் – ”‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்‘ என்பதை மறந்து விட்டாயோ? எனும் ஐயம் என்னுள் எழுந்தது. நீ சொன்ன சொல்லானது ‘விதை நெல்லை விற்று வயிறு வளர்த்த கதையாய்‘ உள்ளது. நம் கிராமத்தில் உள்ள சுத்தமான சுகாதாரமான காற்று (இங்கு எங்கு நோக்கினும் வாகனப் புகையால் மாசான காற்று), மாசில்லா குடிநீர் (இங்கு கேனில் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை), அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின் அன்பு, அந்நியோன்யம் (இங்கு யார் அடுத்த வீட்டில் உள்ளார் என்பதே தெரியாத நிலை), அமைதியான ஆலயங்கள், அதனருகே அழகிய அல்லி நிறைந்த அல்லிக்குளம், மனதிற்கு ரம்மியமான பட்டாம் பூச்சி, சித்திரை மாதத்து வேப்பமரக்காற்று, சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகளின் ரீங்கார ஓசை, ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே வந்து செல்லும் நகரப்பேருந்து, ஒரு நாளில் ஒரே ஒரு முறை வந்து செல்லும் தொடர்வண்டி, பள்ளி செல்லும் மாணவ மாணவியரின் சைக்கிள் பெல் ஓசை, சைக்கிளில் வந்து அஞ்சல் அட்டை விற்றும், பணவிடைத்தாள் மூலம் வந்த பணத்தைக் கொடுத்தும் கிராமத்தில் உள்ள அனைவரையும் அறிந்து வைத்திருக்கும் தபால்காரர் என எதுவுமே பட்டணத்தில் கிடையாது. மாநகர வாழ்க்கையா? மாநரக வாழ்க்கையா? என இங்கு அலுத்துக் கொண்டு வாழும் நாங்கள் கிராம வாழ்க்கை சுகத்திற்கு ஏங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீயோ பட்டணத்திற்கு வருகிறேன் என்கிறாய்.

     நான் இங்கு வேலைக்குச் செல்கிறேன் என்றால் அதற்குக் காரணம் எனக்குக் கிராமத்தில் நிலம் இல்லை. அதனால் பிழைப்பு தேடி வந்தேன். அலுவலக வேலை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை என்றிருந்தாலும் எங்களுக்கு அந்த 8 மணிநேரமும் 8 யுகமாகத்தான் கழிகிறது. கடும் வேலை நெருக்கடி, கூட்ட நெருக்கடியில் சிக்கித் தவித்து பேருந்து பயணம், மேலதிகாரிகளின் அதிகாரத்  தொல்லை, பணியிடத்துத் தொல்லைகள் என உழன்று கொண்டு வாழும் நிலை உனக்கு வேண்டாம். உழவன்(வி) சேற்றில் கால் வைக்கவில்லை என்றால் நாம் சோற்றில் கை வைக்கமுடியுமா? கிராமங்களும் காங்கிரீட் காடுகளாக மாறத் தான் வேண்டுமா? வயலை விற்கும் எண்ணத்தை விட்டொழி. ஆடு, மாடு, கோழி, கிளி, குருவி, வாத்து, நாய், பூனை என மண் மணக்கும் உயிரினங்களோடு வாழும் கொடுப்பினை எங்களுக்குத் தான் இல்லை. நீ கொடுத்து வைத்தவள். அவற்றை நேசி. உனக்கு நான் சொல்வது புரியும். இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் நீ உன் வயலினை பொன் விளையும் பூமியாக மாற்றிக் காட்டுவாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஒளிமயமான உன் எதிர்காலம் என் கண்களில் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது. எங்களுக்கும் காலம் வரும் என கூட்டுப்பண்ணை விவசாயம் தொடங்கி  செயல்படு. வெற்றி உறுதி.

என்றும் அன்புடன்,

உன் அன்புத்தோழி,

கண்மணி.

பெறுநர்

திருமதி. மணிமொழி,

7, பாரதி சாலை,

பூஞ்சோலை கிராமம்,

தஞ்சாவூர் அஞ்சல்.

தஞ்சை மாவட்டம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *