நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

அன்பே மணிமொழி! என் ஆனந்தக் காதலி!

காதலின் மொழி ஒன்று நம்மிடையே கலந்திருப்பதால் காலமெல்லாம் சுகம்! சுகமே!!  அன்பின் நெருக்கத்தால் என்னுள் அணுக்களாகி என்றும் கலந்திருக்கும் இனியவளே.. உனக்கான மடல் எழுதுவதென்பது எத்தனை சுகம் தெரியுமா? அது ஒன்றும் ஏட்டினில் எழுதுகோல் செய்திடும் அசைவுகள் அல்ல.. என் இதயத் துடிப்பின் பதிவுகள்!  மட்டிலா மகிழ்ச்சி பொங்க என் மனராணிக்கு இடம்பெயர்ந்து வாழுகின்ற இவ்வாழ்க்கையின் பக்கங்களிலிருந்து நான் வீசுகின்ற சாமரம்!  பிரிவு என்பது சுகமான வேதனைதான்!  உறவின் பெருமையை பறைசாற்ற பிரிவு வேண்டும் என்றுகூட நான் நினைப்பதுண்டு!  அருகில் இருக்கும் போது தெரியாத அருமையெல்லாம் அன்பே உன்னருகே நான் இல்லாதபோதே பெரிதும் உணர்கிறேன்!  கண்ணே.. மணியே.. அன்பே.. அமுதே என்று ஆயிரம் முறை எழுதினாலும் அனைத்தும் என் மனதில் நின்றிருக்கும் மணிமொழி உனக்கானது என்பதை நீ அறிவாயல்லவா?

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்கிற கவியரசு கண்ணதாசன் பாடல் மொழிந்திருக்கும் அத்தனை வரிகளையும் வாழ்ந்து காட்ட வேண்டுமடி! கற்பனைகளில் மட்டும் இந்த மடல் பூத்துவிடுவதில்லை!  கனவுகளில் மட்டும் இந்த உலா நின்றுவிடுவதில்லை! சொந்தம், பந்தம், நேசம், பாசம் என்று பல சொற்களால் அழைக்கப்படும் அன்பிற்கு இலக்கெல்லாம் நீயென்கிற உரிமையிருக்கிறதே.. அதைத்தானே இப்பிறவியின் பெரும்பாக்கியமாய் கருதுகிறேன்!  சிரபுஞ்சிமழைபோல சில்லென்று பொழியும் அந்த இன்பநினைவுகள் என்னை எந்நாளும் உன்னோடு இணைத்துவைக்கும்! குற்றாலத் தென்றலோடு நாம் நடந்துபோன அந்தப் பாதை நினைக்கும்போதெல்லாம் இன்பக்கதைகள் சொல்லும்!  பத்தோடு பதினொன்றாய் வாழ்ந்து மறைவதில் லாபமென்ன?  கட்டாயம் நாம் அதைத்தாண்டி வாழ்ந்துகாட்டுவோம் என்கிற உன் வார்த்தைகள் என்னை ஒவ்வொரு நாளும் உயர்ந்துகாட்டச் சொல்கிறதே!!

புரிதல் என்பதன் முழு அர்த்தமும் புரிந்தவள் நீ என்பதால் வாழ்க்கை எனக்கு சொர்க்கமானது என்று நான் சொல்லிய நாளில் என் தோள்மீது வந்து சாய்ந்து “போதுமடா.. இந்த ஒரு வாக்கியம்” என்றாயே.. மறப்பதில்லை! நீண்ட நெடிய வாழ்க்கையில்.. நீயும் நானும் சந்தித்தது இடையில்தான் என்கிற ஒரு குறையைத்தவிர.. நமக்கென்ன குறை என்று நான் கேட்க.. எதற்கு அந்த குறையும்.. என்று குழந்தைபோல் இருவரும் விளையாடிவிட்டால் போகிறது என்றாய் நீ!  அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்கிற வள்ளுவன் குறள்விளங்க வாழ்ந்துகாட்டுகிற உன்னை.. அடைந்தது என்பது என்றைக்கோ நான் செய்த தவம் என்பேனா? இல்லை.. இறைவன் எனக்குத் தந்த வரமென்பேனா?

ஒரு நாள் என்பது மறுநாள் போல் இல்லை என்கிற நியதியை மாற்றி.. முதல்நாள் போலவே நீ என்றும் என்னுடன் என்பது என் அதிர்ஷ்டமன்றி வேறென்ன?  பிறந்தாய்.. வளர்ந்தாய்.. கனிந்தாய்.. இனிதாய்.. என்னை மணந்தாய்.. என் வாழ்வில் புதிதாய் இணைந்தாய்! அமிழ்தாய் மொழிந்தாய்! அன்பைப் பொழிந்தாய்! இன்பம் சுரந்தாய்! இதயம் திறந்தாய்! சுகம் தந்தாய்! சொந்தம் என்றாய்! சொல்லி மகிழ்ந்தாய்! ஸ்வரம் பாடினாய்!  உள்ளம் இனித்தாய்!  தொட்டுக் களித்தாய்! தொடர்ந்து சுவைத்தாய்! தேகம் தீண்டினாய்!  தேன் கலந்தாய்! நாணத்தில் நகைத்தாய்! பூமுகம் சிலிர்த்தாய்!  புன்னகை உதிர்த்தாய்! அன்பே என்றாய்! அள்ளி அணைத்தாய்! அடுத்து எடுத்தாய்! உச்சி முகந்தாய்! உள்ளம் குளிர்ந்தாய்! என்னில் நீயும் இத்தனைத் தாயானாய்! உன்னையே எண்ணியே நானுமே வாழ்கிறேன்! உள்ளங்கள் நெருங்கியே நித்தமும் சாய்கிறேன்!  கவிதைமலர்களால் காலம் முழுவதும் அர்ச்சனை செய்கிறேன்! காலையோ மாலையோ.. நாளும் பொழுதுமே.. உன்னில்தானே இரண்டறக் கலக்கிறேன்!!

சித்திரம்போல் சிரிக்கின்ற என் முத்தழகே! என் இதயத்தில் விழுந்த உன்னை நான் எப்படி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் தெரியுமா? பிறகென்ன.. நாளும் பொழுதும் உன்னுடனே உறவுமலர் பூத்தது!  உள்ளத்தில் சந்தோஷ சாம்ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது! தினம்தோறும் இன்பவிழா நடந்தது! இதயம் மகிழ்ச்சியிலே மிதந்தது! என் வானம் வண்ணமயமாய் விடிந்தது. ஒற்றைச் சொல் என்றாலும் உந்தன் சொல் என்றால் உயிர்ச்சொல்லானது!  கட்டிமுடித்த காதல் மாளிகையில் உன்னோடு என் காலம் கழிந்தது! யார் கண் பட்டதோ.. பிரிவின் வலியில் நெஞ்சம் துடித்தேன்! அப்போதுகூட அன்பே உன்னைத்தான் நினைத்தேன்! உடலின் ஏதோ ஒரு பாகத்தில் வலி ஏற்படும்போதும் கண்கள் கலங்குவதுதானே இயற்கை! அப்படித்தான் உனக்கும் இதயம் வலிக்குமே என்று எண்ணியபோதே நான் கலங்கிப்போனேன்!

பாத்திரப்படைப்பின்படி நீ எனக்கு என்றும் நான் உனக்கு என்றும் படைக்கப்பட்டிருந்தாலும் இந்த உறவை எப்படி நடிப்பென்று நாம் கொள்ள முடியும்? வந்துபோவதுதான் வாழ்க்கை என்கிற வறட்டுத்தத்துவங்களை வழங்கிக் கொண்டிருக்காமல்.. வாழ்ந்துகாட்டுவது என்கிற வைராக்கியம் கொண்டு வா! வசந்தம் வானவில்லில் மட்டுமல்ல.. வாழ்வின் ஒவ்வொரு பக்கங்களிலும் இருக்கிறது என்பதை நெஞ்சத்தின் எல்லாப் பக்கங்களிலும் நிறைத்து எழுதிவை!  மனதிற்குள் உள்ள ஆசைகளை மறைத்து வைத்துக்கொண்டு மெளனத்தோட்டத்தில் நீ செய்யும் ஒத்திகைகள் அம்மாடி.. அங்கேயே நான் தொலைந்துபோகிறேன்.. மெல்லமாய் நீ வந்து “ஊடல் என்பதும் உங்களுக்குப் பிடிக்குமே என்றுதான்” என்று.. என்னிடம் கதையளப்பாயே..  எங்கே சொல்ல அந்த சாதுர்யத்தை!

மாற்றுவழியேதும் மனதில் வந்துவிடக்கூடாதென்று மளமளவென்று அனைத்துக் கதவுகளையும் அடைத்துவிடுவதும் நீயன்றோ? “பார்த்துக்கொள்கிறேன் என்று வாசகம் உச்சரிக்கப்படாமல்” உன்னுள்! எப்படி கண்டுபிடித்தேன் என்று பார்த்தாயா? அதுதான் உன் கண்கள் காட்டிக்கொடுத்துவிடுகிறதே!!  மறுபடி எப்போது என்று மனம் வருந்தி நான் கேட்டபோது.. வாய்ப்பில்லை இன்னும் சில திங்களுக்கு என்று ஒரு திங்கள் என்னிடம் சொல்ல.. அதைக்கேட்ட நான் அதிர்வில் துள்ள.. வருகிறேன் என்று சொல்லி வாரதிருத்தலைவிட.. வருவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லி வந்துவிடும்போது இன்பம் பன்மடங்கல்லவா என்று எனைப் பரிகாசம் செய்தாய்!  ஆம்.. அப்படித்தான் எங்கே வரப்போகிறாய் என்று ஏங்கிக்கிடந்தபோது.. என் விழிகளை உன் கரங்கள்கொண்டு மூடிவிளையாடினாய்!

அந்த மென்மையான கைகளின் உஷ்ணரேகைகள் என் உள்ளத்திற்கு தந்த உற்சாக வெள்ளத்தை எந்த அளவுகோலாலும் அளந்துவிடமுடியாது என்றேன்! அப்படியா என்றாய்! இன்றைக்கு இதுபோதுமா என்று வேறு கேள்வி!!  என்றைக்கும் தீராத தாகமடி காதல்..  படியளந்ததற்கு வேண்டுமானால் நன்றி சொல்லலாமே தவிர.. இன்னும் ஒரு பிடி கிடைக்குமா என்கிற ஏக்கத்திற்கு குறைவில்லை என்றேன்!   இன்பத்தின் அகராதியை எப்படி எழுதி முடிக்க முடியும்?

எண்ண அலைகளில் சிக்கிய எந்த மனமும் இதுவரை அதன் எல்லைகளைச் சந்தித்ததாய் வரலாறில்லை!  சந்திக்க வேண்டும் என்கிற ஆசையும்.. சங்கமிக்க வேண்டும் என்கிற தேடலும் இயற்கையாய் ஆனபின்பு நாம் மட்டும் இதற்கென்ன விதிவிலக்காக ஆக முடியுமா?  ஆசை வழிந்தோடி வருகிற வழியில் எல்லாம் மகிழ்ச்சியின் அலைகள் கவிதை பாட.. இதயக்கடலில் எழுகின்ற அலைகள்.. அங்கே சுகராகம் பாட.. மாலையிளங்கருக்கல் இதமாய் மையலைக் கொண்டாட.. சேலைகட்டிய சிங்காரி உன்வசம் நான் என்னைத் தந்தாக.. முத்துச்சிரிப்பை கொட்டிக் கவிழ்த்து மோகனப் பண்பாடும் உன்னை முற்றிலும் கவர்ந்த கள்வன் என்பதில்தான் எத்தனைப் பெருமையோ எனக்கு!!

கள்ளச்சிரிப்பில் உள்ளம்திருடிய உங்கள் செயலில் எனக்கும் பங்குண்டு என்பதாலே நடந்திட்ட திருட்டில் பாருங்கள் உங்கள் இதயம் என் வசம் என்று ரகசியமாய் காட்டினாய்! இன்பக்கனல் மூட்டினாய்! நாளை சந்திப்போம் என்று நகர முயன்றாய்! நல்லது.. நாளைவரை.. என்று நானிழுக்க.. நாணத்தில் உன் பார்வை போர்தொடுக்க.. ஏனத்தான் என்று சொல்லி இறுக அணைத்தாய்! போதும் எனும்வரை போவோமா என்றேன்.. போகக்கூடாது என்பதற்கு இப்படி ஒரு பொருளா என்றாய் நீ!  தேவை அறிந்த நீ எந்தன் தேவதையாய் தெரிந்தாய்!

அன்பெனும் யாழ்மீட்டி இன்பராகங்கள் கூட்டுகின்ற இதயம் கொண்டவள் நீயென்பதால் எனக்கென்ன .. நான் ஒரு ராகமாளிகையில் வசிக்கிறேன் என்பதாக உணர்கிறேன்! நீ அழைக்கும் போது கூட ஒரு இன்பலயம் பிறக்கும்! ஸ்ருதிபேதமில்லாத பயணம் என்பதால் என் மனதில் என்றென்றும்  தென்றலடிக்கும்!  கவலைகள் ஏதும் என்னை அண்டுவதில்லை.. காரணம் உன் நாமாவளிகள்!  உதடுகள் அதையே முணுமுணுப்பதால் இதயதேசத்தில் ஆனந்த பைரவி..  ஆளப்பிறந்தவள் நீ என்பதால் அடிமையாகவும் நான் சம்மதிக்க.. அன்பில் சிறந்தவள் நீ என்பதை நிரூபித்து என்னை ஆதரிக்கும் உன்னை என்ன வார்த்தை சொல்லிப் பாராட்ட? நெஞ்சக்கமலத்தில் நீ வீற்றிருக்கும் பேரழகை.. எந்தக் கவிதையில் முழுமையாக நான் பதிவுசெய்யப் போகிறேன்? அது சாத்தியமா? சொல்லிலே அடங்கிடாத அழகு அது.. சொல்லத்தான் முயன்றாலும் கொஞ்சம்தான் என்றாக.. பார்வையின் பதிவுகளே பக்கம் பக்கமாய் நீள.. வேறெதை நான் இங்கே எழிலென்று கூற? 

ஒரு பார்வை சொல்லும்.. மொழியை உள்வாங்கி உயிர்மெய் எழுத்துக்களில் உலவ வைத்து ஊர்வலம் போகின்றேன் பாரடி நீ!  காதலின்பம் யாது என்று அறிந்த நாள் முதல் கண்ணருகே ஓவியமாய் நீ தெரிந்த நாள் முதல்.. வேறு மனச் சிந்தனைகள் ஏதுமில்லையே? கொள்ளையிட்ட உன் மனதைக் கொஞ்சும் கோலங்கள்.. கோடையிலும் என் மனதில் குளிர்காலங்கள்! ஆவியிலே கலந்துவிட்ட ராகபாவங்கள்.. அனுதினமும் எனைவந்து சூழும் நினைவு மேகங்கள்!!   தொட்டவுடன் துள்ளல்தரும் பவளமல்லிகை.. நீ கிட்டவந்து கட்டிக்கொண்டால் நித்தம் புன்னகை! அடிமனதில் குடியிருக்கும் அன்புத்தாரகை.. நீ ஆதரித்தால் என்றும்தானே ராஜபேரிகை!!

மொட்டவிழும் நேரம் நோக்கிக் காத்திருக்கவா.. பின்பு தொட்டணைத்தல் போதுமென்று பார்த்திருக்க வா.. விட்டுவிட்டு நீ சென்றால் விழிகள் வலிக்குமே! விரசமின்றி சரசம்பயில நெஞ்சம் துடிக்குமே!! மனக்கதவை திறந்து வைத்த கள்ளி யாரடி?  நீ மறுபடியும் மறுபடியும் என்னைப் பாரடி!!  மோகனங்கள் கூடுவது தாகம் தீரவா? தேகமது வீணையென இங்கு மாற வா!!  கார்குழலில் வெள்ளைமாளிகை கட்டுகின்றாயே.. அது மல்லிகையின் மற்றுமொரு பரிமாணமா? துள்ளிவரும் என் மனதை நீயும் அள்ளிக்கொள்ளடி! நீ தொட்டவுடன் ஆறுமந்த அனலைப் பாரடி!!

உன் கால்சலங்கை சொல்லுகின்ற ஜதியில்தானடி.. நான் எழுதும் கவிதையிது நடந்து பார்க்குமே! தேனளந்து தருகின்ற இதழ்கள்கூடவே தித்திக்க வேண்டுமெனில் இங்கு வருகவே என்று தாமாகத் தேடி எனை நாடி அழைக்குமே!! போர்க்களத்தில் வீரமது வெற்றிகொள்ளலாம்!  உன் புன்னகைபூத்த முகத்தின் முன் அதுவும் தோற்குமே!!  கேட்ட வரம் தருவதற்கு நானும் வரட்டுமா? நீ கேட்காத சுகங்களையும் அள்ளித்தரட்டுமா?  சுற்றிவரும் பூமியினை நிற்கச் செய்வதும்.. சுழல்க என மறுபடியும் அருளச் செய்வதும் சத்தியமாய் நீ தரும் வாசகத்தில்தான் என்னுலகம் இருப்பதனைச் சுட்டிக்காட்டினேன்!  கட்டழகு தேவதையே.. கருணையதன் பூமழையே..  இனியுந்தன் விருப்பம்போல் இதயத்தைக் கொண்டுவா! இன்பப்பயிர் விளையட்டும்!! இருவர் உயிர் ஒன்றட்டும்! இமைமூடும் நாள்வரையில் இருவரல்ல ஒருவரென வளர்காதல் நாம் வளர்ப்போம்!

இந்தப் பிறவியில் உந்தன் உறவிது ஒன்றுதான் உள்ளத்தின் கொண்டாட்டம் என்று உணர்கிறேன்!  ஒருவேளை உன்னை நான் சந்திக்காதிருந்திருந்தால் என் வாழ்க்கை சஹாரா பாலைவனம் போலன்றோ இருந்திருக்கும்!  மீட்டும் ஸ்வரஸ்தானம்.. மகிழ்ச்சியலை.. மாறாத புன்னகை.. உள்ளம்தொடும் உயிரின் வாசம், உங்களுக்காக என்று காத்திருக்கும் உன்னதம்.. எதை நான் இன்னும் பெரிதாகக் கருதமுடியும்?  வரிவரியாக.. எழுதிக் குவித்தாலும் மாளாத காதல் நாம் கொண்டது!  ஆதாம் ஏவாள் காலம் தொடங்கியே இந்த பரிமாற்றம் தொடர்ந்தாலும் ஒவ்வொரு காதலிலும் அது புதுப்பிக்கப்படுகிறது!  நம்மைப் பொறுத்தவரை ஒவ்வொரு நொடியிலும் அது உணரப்படுகிறது என்பதுதான் பெருமையே!

இத்தனை நீளமாய் நான் மடல் எழுதியபின் நான் வேறென்ன எதிர்பார்க்கப் போகிறேன்.. அன்பின் அளவீடு என்று நாம் எதையும் சொல்லிவிட முடியாது என்றாலும் இந்த மடல்கள் அன்பிற்கு குறியீடுகளாய் காலத்தால் கணக்கில் கொள்ளப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு! எங்கே நீ எழுதும் மடல் எப்போது என்னை வந்தடையப்போகிறது என்கிற கனவில் இப்போது நான் மூழ்குகிறேன்!!

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்.

வள்ளுவன் தந்த குறள்கள் ஆயிரமே இருந்தாலும் நாம் வாய்மொழிய வேண்டிய குறள் இதுதானே என்றொரு குரல் கேட்கிறதே.. உனக்குக் கேட்கிறதா?

அன்புடன் கவிச்சந்திரன் 

மு.இரவிச்சந்திரன் (காவிரிமைந்தன்)

பி.கு:  அன்பே, ஆருயிரே, என் கண்ணின் மணியே.. மொழியில் தமிழமுதே, இடைத் தேர்தலை  ஏதோ  எடைத்  தேர்தல் போல்   ஆக்கிவிடாதே   என்  மெல்லிடையாளே!

இது உன் இடைத் தேர்தலில் என் காதல் சின்னம்  வெற்றி முத்திரை இடுவதற்கான ஒத்திகை என்பேன் …..)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.