பூக்களைப் பறியுங்கள்!
சீர்காழி உ. செல்வராஜு
புதைந்து செரிந்த புலனெறி வழக்கங்கள்
புதைபொருள் போலப் புராணங்கள் பற்பல!
பூத்துக் குலுங்கும் சொற்பூக்கள் ஏராளம்
பூஞ்சோலை போன்றதே பைந்தமிழைப் பாரீரோ?
எதுகையும் மோனையும் எழிலாய் மின்னிடும்!
எழுத்துகள் யாவையும் எக்காலும் இனித்திடும்!
ஆடலாய்ப் பாடலாய் ஆகமங்கள் கமழ்ந்திடும்!
ஆலம் விழுதுபோல் அத்தனையும் தோரணங்கள்!
கலையும் சுவையும் இரண்டறக் கலந்த
கன்னித் தமிழோ கவிநயம் புகட்டிடும்!
காப்பியப் படைப்புகள் கண்முன் நிறுத்திடும்
காலத்தால் அழியாக் கலைச்சொற்கள் பாரீரோ?
எளிதில் புரிந்திடவே எடுத்தாள்வோம் புதுமுறையில்
எங்கெங்கும் மணம்வீச எழுத்துப்பணி செய்திடுவோம்!
புலமையோர் ஆக்கங்கள் புதுமை படைத்திடவே
புவியெங்கும் பரப்பிடுவோம் பூக்களைப் பறியுங்கள்!!