யாரடா மனிதன் இங்கே….
— கவிஞர் காவிரி மைந்தன்
யாரடா மனிதன் இங்கே….
கவிஞர் கண்ணதாசனும் கவிஞர் வாலியும் எதிரெதிரே கடை விரித்தவர்கள்.. ஒருவருக்கு வரவு என்றால் ஒருவருக்கு பொருளாதார ரீதியில் இழப்பு! எனினும் தமிழுக்கும் இருவராலும் வரவு!!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் இருவரும் பாடல்கள் எழுதிக் குவித்திருக்கிறார்கள். அப்படி இருவரிடம் பாடலைப் பெறுகின்ற வேலையை மிகவும் சாதுரியமாக.. வெற்றிகரமாக செய்திருக்கிறார் மெல்லிசை மன்னர். காலையிலே கவிஞர் ஒரு பாடல் எழுதினார் பாரு.. அதைப்போல உன்னாலே எல்லாம் எழுத முடியாது என்று கவிஞர் வாலியிடமும் .. .. வாலி ஒரு பாடல் எழுதினான் பாரு.. அதைப்போல உன்னாலே எழுத முடியாது என கண்ணதாசனிடமும் சொல்லி அவர்களை கிளர்ந்தெழச்செய்து பாட்டு இன்னும் நன்றாக வர வேண்டும் என்று பல வகைகளில் போராடியிருக்கிறார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
அப்படி.. வாங்கப்பட்ட பாட்டு இது.. கவிஞர் வாலி எழுதிய ஒளிவிளக்கு படப்பாடல்.. தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா? இதற்கு இணையாக கண்ணதாசன் எழுதித்தந்த லட்சுமி கல்யாணம் திரைப்படப்பாடல்.. யாரடா மனிதன் இங்கே கூட்டி வா அவனை இங்கே..
மனிதன் என்பவன் ஒரு நாகரீகமான மிருகம் அவ்வளவுதான். இதில் மாற்றுக் கருத்தில்லை.. மற்றவர்கள் முன்னாடி நம்ம பெயர் கெட்டுவிடுமே என்று கட்டுப்படுகிறானே தவிர. அடிப்படையில் மிருக குணமே நிறைந்திருக்கும்.
வாழ்க்கையை முற்றிலும் உணர்ந்தவர்கள்.. மனவியல் படித்தவர்கள்.. உளவியல் அறிஞர்கள்.. ஞானிகள்.. உணர்ந்தபடி.. மனிதன் என்னும் நிலை என்ன தெரியுமா..?
மிருகத்திற்கும் தெய்வத்திற்கும் இடையிலான ஒரு நிலைதான் மனிதன் என்பதாகும். மிருகமாக இருந்தவனை தெய்வமாக உயர்த்தும் நிலையில் இடையில் வாழ்பவன்தான் மனிதனாகிறான்.
கண்ணதாசன் வரிகளிலேயே இதற்கான விளக்கமிருக்கிறது.
ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
மனிதன் என்பவன் யார்? இவனது குணங்கள் என்னென்ன? மிருகத்திடமிருந்து எப்படி வேறுபடுகிறான்? இந்தப் பகுத்தாய்வை ஒரு திரைப்பாடலில் கொண்டுவந்து சேர்த்த பெருமை கண்ணதாசனையே சேரும்!
சிரிப்பினில் மனிதனில்லை
அழுகையில் மனிதனில்லை
உள்ளத்தில் மனிதனில்லை
உறக்கத்தில் மனிதனுண்டு
வாழும் மிருகம் தூங்கும் தெய்வம்
நடுவே மனிதனடா
எங்கோ ஒருவன் இருந்தால்–அவனை
உலகம் வணங்குமடா
இந்தப்பாடலைப் பார்த்தால்.. மிருகத்திற்கும் தெய்வத்திற்கும் இடையிடையிலுள்ள தூரத்தை வரையறுத்துத் தந்த கண்ணதாசன்.. மனிதன் இதற்கிடையில் இருக்கிறான் என்பதையும் சூசகமாக சொல்கிறார் பாருங்கள்!
http://youtu.be/RABmwdzsOYw
பாடல் : யாரடா மனிதன் இங்கே
http://youtu.be/RABmwdzsOYw
யாரடா மனிதன் இங்கே
கூட்டிவா அவனை அங்கே
இறைவன் படைப்பில்
குரங்குதான் மீதி இங்கேமனிதரில் நாய்கள் உண்டு
மனதினில் நரிகள் உண்டு
பார்வையில் புலிகள் உண்டு
பழக்கத்தில் பாம்பு உண்டுநாயும் நரியும் புலியும் பாம்பும்
வாழும் பூமியிலே
மானம் பண்பு ஞானம் கொண்ட
மனிதனைக் காணவில்லைசிரிப்பினில் மனிதனில்லை
அழுகையில் மனிதனில்லை
உள்ளத்தில் மனிதனில்லை
உறக்கத்தில் மனிதனுண்டுவாழும் மிருகம் தூங்கும் தெய்வம்
நடுவே மனிதனடா
எங்கோ ஒருவன் இருந்தால்—அவனை
உலகம் வணங்குமடா