இசைக்கவி ரமணன்

1, கண்விழிப்பு

இயற்கை சேதி சொல்லும்

வாழ்க்கை பாடம் புகட்டும்..

10312554_10152094623552919_2699388480590915909_n

உலகம் ஓயாமல் சுழன்றுகொண்டே இருக்கிறது; ஒழியாமல் சுற்றிக் கொண்டே இருக்கிறது. வீதிகளற்ற வானத்தில்தான் எதற்கு இத்தனை இயக்கங்கள்! வெட்டவெளிப் பொட்டலிலே கொட்டிக்கிடக்கும் வைரக்குவைகள்! ஆ! வெட்டவெளி¢, பொட்டலில்லை! ஒரு மகாகவியின் கற்பனைபோல், கணந்தோறும் விரிந்துகொண்டே இருக்கும் அண்டத்தில், வாழ்க்கை என்னும் வீம்பின் முரசம், பொட்டலைப் பூஞ்சோலையாக்கியிருக்கிறது. அதோ, முந்திவந்துவிட்ட அந்தக் குளிர்வீசும் முழுநிலவிலிருந்து, இந்த விரலளவுப் பறவைவரை ஒரே கரம்தான் ஆக்கியிருக்கிறது. இந்த முழுவானத்தின் மூச்சிலிருந்து, அந்தச் சின்னஞ்சிறு பூச்சியின் இதயத் துடிப்பு வரை ஒரே நோக்கம்தான் தொனித்துக் கொண்டிருக்கிறது.

மொட்டை மாடியில் உள்ளங்கைகளைச் சேர்த்துத் தலையணையாக்கி நீல விதானத்தை மூலைக்கு மூலை பார்த்தாலும் வாழத்தலைப்படும் விசைப்புத்தான் வாசகமாகப் பதிந்திருக்கிறது. ‘சக்திப் பொய்கையிலே ஞாயிறு ஒரு குமிழ்,’ என்பான் பாரதி. பிரபஞ்சத்தின் விரிவைக் கற்பனையில் சுருக்கப் பார்த்தாலும் உலகம் தூசளவு கூட இல்லை. இதில் எத்தனை நான்கள் நீக்கள் அவர்கள் அவைகள்! அண்டத்தின் விரிவும், ‘முடிந்தால் என்னைப் புரிந்துகொள்’ என்ற பாவனையில் ஒரு முழுநேரச் சவாலாய் அது இறைந்து கிடப்பதும் என்னை நிர்மூலமாக்கி விட்டது. இத்தனைப் பெரிய இருப்பில், நான் பரிகசிக்கத்தக்க இன்மையா? இல்லை; அப்படி இருந்தால், இந்தச் சித்தம் போதாத நிம்மதி எனக்கு வாய்த்திருக்குமா? அறிவென்று கொண்ட கயிறுகள் அறுந்தன; கண்ணாடி காட்டும் அம்மணம் போலத் தெரிந்த அறியாமையின் நிதர்சனத்தில் ‘இன்று புதிதாய்ப் பிறந்தேன்.’

அறிவே சிம்மசொப்பனம்

அறியாமை சிம்மாசனம்!

சோறுதின்ன அடம்பிடித்த வேளையில், அம்மா என்னெல்லாம் கதைசொன்னாள்! ‘அதோ பார்! நிலா அந்தத் தென்னங் கீற்றில் வந்து உட்கார்ந்துகொண்டு உன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறது!.’ அட ஆமாம்! அப்படித்தானே இருந்தது, இந்த அறிவு என்னும் காற்றுவந்து அசைக்கும் வரை!

மறுபடி மறுபடி ஒரே காட்சிதான். பாசையால் கட்டுண்டு அசையாமல் கிடக்கும் குளம். அதன் அடர்த்தியும், நிலைப்பும் ஈர்க்கின்றன. அதில், முகம் தெரிவதற்கில்லை. அதுவே முகமாகத் தெரிகிறது. என் முகம் கரைந்து அதனோடு கலக்கும் தருணம், எங்கிருந்தோ ஒரு கல் வந்து அதன் மையத்தில் விழுந்தது.

அப்போது துவங்கிய அலைகள் இன்னமும் நிற்கவில்லை. சுருள்சுருளாக, வளையம் வளையமாக அவை தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

ஆடாத கொளத்துத் தண்ணி

அறியாம எறிஞ்சகல்லு

ஆளெத் தொரத்துதம்மா அலையலையாக…

பூமியில் புதைந்து கிடக்கிறது வித்து. உயிர், அதிலே உறங்கிக்கொண்டிருக்கிறதா, அல்லது ஏதேனும் ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறதா என்று நிர்ணயிக்க முடியாது. விண்ணிலிருந்து வருகிறது மழை. ஏதோ ஒரு துளி உள்ளே நுழைந்து உயிர் விழிக்கிறது, அல்லது சிலிர்க்கிறது.

வினாக்குறியோடுதான் விதை முளைக்கிறது. ஒரு சித்திரச் சோலையையே உள்ளடக்கி இருக்கும் சிறுவிதையை எப்படிப் புதைத்தாலும், அது விழிப்புற்றதும் தலைதூக்கிப் பார்ப்பது பிரபஞ்சத்தைத்தான். அதன் கேள்வி, வையத்தைக் கண்டபின் எழுந்ததா, இல்லை அதன் விழிப்பு வினாவுக்குப் பின்பே ஏற்பட்டதா தெரியவில்லை. ஆனால், முரட்டு மண் சற்றே வெடிக்குமளவுக்கு ஒரு மூர்க்கம் இந்தச் சின்ன விதையில் எப்படி நேர்ந்தது? இன்று, கேள்வியே தன் வடிவாக அது நிற்பதன் தத்துவம்தான் என்ன? தொடரும் இலைகளும், கிளைகளும், அட ரகசிய வேர்களும் கூட அந்தக் கேள்வியின் விரிவுதானா?

பல்வேறு கேள்விகள் போல் தோன்றுகிறதேயொழிய, கேள்வி என்பது ஒன்றுதான். அதனால்தான், அது ஆயிரக்கணக்கான பதில்களாலும் திருப்தியுறுவதில்லை. கேள்வி, ஒருபோதும் பதில்களால் தீராது. ஒரு நட்சத்திரம் போலவே, கேள்வியும் வெடித்துத் தோன்றி வெடித்துத்தான் மறையவேண்டும். என்றோ வாழ்ந்து முடிந்துவிட்ட விண்மீனின் ஒளி இன்றும் காணப்படுகிறதல்லவா? கேள்விக்கு இப்படியும் ஒரு பரிமாணம் இருக்கிறது. உள்ளே எழுந்த கேள்விக்கு விடை, வெளியே இருக்க முடியாது. அறவே விடை தெரியாமல் எழுவதில்லை வினா.

விடை என்பது, வினாவுக்கு வெளியே இருப்பதற்கில்லை.

இதைத்தான் வாழ்க்கையென்னும் பள்ளியில் கற்க வேண்டும். வாழ்க்கை, விபத்தன்று, ஒப்பற்ற வாய்ப்பு. அதற்கு முன்னும், பின்னும் என்ன என்பது நமக்கு அனுபவத்தில் வரவில்லை, கேள்விப்பட்டதுதான். எனவே, எந்தத் தகவலும் நெய்யாகி கேள்வியென்பது வேள்வித் தீயாய் வளர்கிறது! வாய்விட்டுக் கேட்பதற்கும் கேள்வி என்றுதான் பெயர். காதாரக் கேட்பதற்கும் கேள்வி என்றுதான் பெயர். இதற்கிடையே நெஞ்சில் நிரந்தரமாய் நின்றுவிட்ட நெருடலுக்கும் கூடக் கேள்வியென்றுதான் பெயர்!

புறவாழ்க்கை என்கின்ற பொன்னான வாய்ப்பு, அகத்தின் கேள்வியைத் தகர்க்கக் கற்றுத் தருகிறது. இந்த வாழ்க்கை என்னும் பள்ளியில் எதை வேண்டுமானாலும் கேட்கலாம்! எந்தப் புறமும், எந்தக் கணமும் சேதிகளும், பாடங்களும் — விழைவுள்ள இதயம் தேடித் ததும்பிக் கொண்டிருக்கும் இந்த அழகான, விசாலமான — வகுப்பு, மதிப்பெண் போன்ற வம்பில்லாத பள்ளியில் நுழைந்து பார்க்கத்தான், இல்லையில்லை, கேட்கத்தான், தடையேது?!

***

2. புலரிச் சேதிகள்

ஓ! தெய்வீகக் காலையே!

பறவைகள் கூடுவிட்டுப்

பறக்கின்ற நேரம்

உழைக்க விழிக்க வேண்டும் மனிதர்கள்!

உயிரின் தேவைகள் நிறையவேண்டும்!!

(ரிக்வேதம்:06:64:06)

உஷையே! நீ புலர்கின்ற கணத்தை வசப்படுத்த முடியாமல் எங்கள் கவிதைகள் தோற்றன என்று கைவிரிக்கின்றன மறைகள். மையிருட்டிலே நீலச் சாம்பல் பூப்பது எந்தக் கணப்பின் சூட்டினால்? புலர்வு என்பது எந்தக் கணத்தின் நிகழ்வு? வெளியில் மட்டுமல்ல, நம்மிலும்தான் துயில் நீங்கி விழிப்பு நேரும் கணத்தை வகுக்க முடியுமா? வெளியே பூட்டு; உள்ளே சாவி; இதுதானே வைகறையின் நித்தியப் பரிகாசம்?! விழித்தால்தானே உறங்கியது புரிகிறது? அம்பலத்தில் ரகசியத்தை வைத்து வேடிக்கை பார்க்கிறது படைப்பு!

ஆக, அதிகாலை, எந்தக் கேள்விக்கும் பதிலல்ல, புதிருமல்ல. அது விடிவு. அதைத்தான் தரிசனம் என்று கொண்டாடுகின்றன வையத்து வாழும் உயிர்கள்.

காலை புலரும் கணம் நமக்குத் தெரியாதுதான். உறங்காமல் விழித்திருந்து பார்த்தாலும் அந்தக் கணம் கண்ணுக்குத் தென்படாதுதான். ஆனால், பறவைகளுக்கு இந்த ரகசியம் தெரிந்திருக்கிறது. கூடுகளில் துவங்கும் சலசலப்பும், புலரியின் முதற்கணமும் பொருந்துகின்றன. ஆனால், காடுகளில் ஒரு பொய்ப்புலரி உண்டு. விடியல் நேராமலேயே வானில் வெளிச்சம்போல் ஒன்று தோன்றுவதைக் கண்டு பறவைகள் குரல்தூக்கும். மீண்டும் இருள் வந்துவிடும். வெட்கிய புள்ளினம் மார்பின் இறகுகளுக்குள் முகத்தை இறுகப் புதைத்துக் கொள்ளும். எது எப்படி இருந்தாலும், பறவைகளுக்குப் பகலவன் வரவு முன்கூட்டியே தெரியும். தங்கள் சின்னஞ்சிறு நெஞ்சங்களிலிருந்து உயிரைக் கானமாய்க் கரைத்துப் பாடும் பறவைகளின் குரல்கேட்கவே கதிரவன் எழுந்து வருகிறான் என்றே சொல்லத் தோன்றும்.

கதிரவனின் முதற்கிரணங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவை, முதலில் உயிரை வருடிப் பிறகே உடலைத் தொடுகின்றன, மழை போல! கட்டிடங்களும் தூங்குகின்றன என்பது அந்தத் தருணத்தில்தான் தெரிகிறது! மரங்கள், இமையுயர்த்திக் கிழக்கைப் பார்க்கின்றன. மொட்டு, முகையவிழ்ந்த உல்லாசத்திற்குப் பனிமுத்தம் பெற்று, அழகில் ஆயாசம் சேர்த்துக்கொள்கிறது. குடிசையிலிருந்து எழுந்து நிற்கும் புகை, கொடியசைப்பாய்ப் படுகிறது. சேவலின் கூவலில் சேதி தெரிந்த கர்வம் இருக்கிறது. வைகைறை மர்மம் எனக்குத் தெரியும் என்றுதான் அது மார்புயர்த்திச் சிறகுகளை அடித்துக்கொண்டு, சிவந்த கண்களால் பார்க்கிறது. களைத்த அலைகள் கரையில் தொப்பென்று விழுகின்றன. கடலின் நட்ட நடுவில் தங்கப் பாதை தோன்றுகிறது; அது வெள்ளிச் சரிகையாவதற்குள் கட்டு மரங்கள் நெடுந்தூரம் சென்றுவிடுகின்றன. சில, திரும்பி வருகின்றன. மண், சற்றே வியர்த்ததுபோலிருக்கிறது. எருமைகள் வால் விசிறிக் கொண்டிருக்கின்றன. கொசுக்கள் தூங்கப் போயின. ஏதோவொரு சேதியுடன், வீதியில் நுழைகிறது காற்று. நோயாளிக்கு ஒவ்வொரு நாளும் இதுதான் உயிருக்கு ஒத்தடம் தரும் மருந்துக் கணம். இரைதேடப் பறக்கும் முன், எல்லாப் பறவைகளும் உற்றுப் பார்க்கின்றன கிழக்கை. பிறகு, நேற்று மாலை விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடங்குகின்றன. வயசாளி, திண்ணையில் அமர்ந்து வாழ்க்கையைப் பார்க்கிறார். ஓ! நினைவில் நீந்தவும் வெளிச்சம் தேவைப்படுகிறது!

மேலுலகிற் தான்பிறந்த

வானுலகின் வண்ணமகள்

வரும்போதே இருள்விரட்டி

வருகின்றாள்!

ஆழ்துயிலில் புதைந்திருக்கும்

மானுடரை எழுப்புகிறாள்!

தேசு மிகுந்த தன்

தெளிவழகால் இவள்

துன்ப இருளைத்

தொலைக்கக் காணுகின்றோம்

உறுத்தும் இருளை

ஊடுருவி ஊடுருவி..

(ரிக்வேதம்:07:41:07)

காலை வரும்போதே, துயிற்சுருளில் தொலைந்துபோன மனம், மறுபடி மேலே வருகிறது. காலை என்ற ஒன்று இல்லையென்றால், உலகத்தில் வேலை இல்லை. ஏன், வாழ்க்கையே இல்லை. உடம்பில் உயிரும், சித்தத்தில் பிரக்ஞையும் காலையின் கொடைகள். அறிவு, கதிரவனின் ஈகை. காலை இல்லாமல் காட்சி எங்கே? காட்சி இல்லாத ஓர் உலகத்தைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. உயிரின் நடப்பே உலகத்தின் நடப்பு. அந்த உயிரின் ஒளி, காலையிலிருந்தே பெறப்படுகிறது.

நிதானமாய் விரைக! இந்த மர்மம் பொலிந்த திறமை, விடியலுக்கு இயல்பு. அதோ, அந்தப் பட்டிக்காட்டுக் குரலைக் கேளுங்கள்:

ஓர முள்ளுக் காட்டுக்குள்ள

ஒத்தக் குயில் கூவையிலே

நெட்டுக்குக் கெழக்குப்பக்கம் செவக்கும்! பொழுது

நிமிசம் நிமிசமா விடியும்..

ஆம், ஒவ்வொரு நிமிடமும் தலைப்பு மாற்றிக் கொள்கிறது வானப் புடவை. மஞ்சள், வெண்மையாய் மாறுவதற்குள் முடிந்து விடுகிறது சூக்குமம். அதன்பிறகு தொடர்ந்த வெள்ளோட்டமே! ஒவ்வொரு நாளும் புதிதாய்த் தெரிவதற்கும், ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையின் வாசகமாய் மானுடம் எதிர்நோக்குவதற்கும், காலையின் உயிரொளியே காரணம். நேற்றைய பிரச்சினைகள் இன்று இல்லாமற் போவதில்லை. ஆனால், நேற்று தோன்றாத தீர்வுகள் இன்று துளிர்க்குமென்ற நம்பிக்கையைக் காலைதானே தருகிறது! நிகழ்ந்த துயரம் அப்படியே இருக்க, நேர்ந்த சுமைமட்டும் விலகிவிடக் காரணம், வைகறையின் ஆதுரக் கரங்கள்தான்! இன்றிலிருந்து எல்லாம் சரியாகி விடும் என்று தினமும் நமக்குத் தோன்றுவது, அறிவாலோ, ஆருடத்தாலோ அல்ல, அனைவருக்கும் பொதுவாய், அனைத்துக்கும் ஏதுவாய், நடுவானில் சுழலும் ஒளித்திகிரியன்றோ காரணம்! புதிய துவக்கம் என்ற எதிர்பார்ப்பை, சாத்தியத்தை ஏற்படுத்துவது கண்வழியே நுழைந்து உயிரில் விளக்கேற்றும் சூரியனின் அருளன்றோ! எத்தனை யுகங்களாய் இந்தக் கதிரவன் கணம்பிசகாமல் கீழைத் திசையிலிருந்து கிரணங்களை விரித்தபடி எழுகிறானே! இது, புதுமையா, பழமையா?

எது உயிருக்கு விசைப்புத் தருகிறதோ, எது உள்ளத்திற்கு ஊக்கம் வழங்குகிறதோ. எது கண்களுக்கு வெளிச்சம் இடுகிறதோ, எது நம்பிக்கைக்கு ஆதாரமாய் விளங்குகிறதோ அந்தப் பழமைதான் புதுமை! நம்மை எதெல்லாம் பலவீனப்படுத்துமோ, அவையெல்லாம் அப்புறப்படுத்த வேண்டிய பழமை.

இப்படிப்பட்ட அற்புதக் காலையை, இன்பச் சேதிகளாக அள்ளித்தரும் கோலவெழிலைக் காணாமல் அனாதைப் பிணம்போல் துப்பட்டியில் தலைமூடிக்கொண்டு படுத்திருக்கலாமா? பறவைகளும், பாமரரும் காலை என்னும் எழிலோவியத்தின் அங்கங்களாகவே திகழ்கிறார்கள். இந்த அறைகூவலெல்லாம் ‘அனைத்தும் அறிந்த’ நமக்கே!

காலைக் கவிதையை

காக்கை ரசிக்கிறது

என்று ஊசிகுத்துகிறார் கவிஞர் இலந்தை ராமசாமி.

எழுக மன்னுலகே! எழுக மானிடமே! கடலில் குளித்தெழுந்த உஷையின் ஒப்பற்ற பேரெழிலைக் காணுமினோ! கண்ணில் தென்பட்ட கிரணங்கள், காலைப் பனியைக் கவர்ந்துகொள்ளும். உயிரில் நுழைந்த கதிர்கள், உள்ளத்தின் இருளை விலக்கும்.

வாழ்க்கையென்னும் பள்ளியிலே காலைதான் முதல்மணி!

*************************

3. காக்கை குருவி

காவென்று கத்திடுங் காக்கை – எந்தன்

கண்ணுக் கினிய கருநிறக் காக்கை

(பாரதியார்)

கருப்பு கண்ணுக்கினிமையானதற்குக் காரணம் காக்கைதான். கண்ணன் நினைவு பிற்பாடு வந்ததுதான்! ‘காக்கை குருவி எங்கள் சாதி,’ என்று கவிஞர் மார்தட்டுவது சரிதான். இவையிரண்டும்தான் வீட்டுப் பறவைகள். என்றால், இவற்றை நாம் வளர்ப்பதில்லை. மாறாக, நம் வாழ்க்கைக்கு அவை எழில் சேர்க்கின்றன. கோழி, தின்பதற்காகத் தீனிபோட்டு வளர்க்கப் படுவது; மைனாவுக்கோ நமக்கு நாகரிகம் போதாது என்பதாக ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. அது பலகுரல்களில் நம்மைப் பற்றி வம்பளப்பதை நான் கேட்டிருக்கிறேன். எப்போதோ குறுக்கே கிரீச்சிட்டுப் பறக்கின்ற கிளிகளோ நம்மை ஒரு ஜந்துவாகக் கூட மதிப்பதில்லை. இரட்டைவால் கருங்குருவி மின்சாரக் கம்பத்தை விட்டு இறங்கினால் அது விட்டில் பூச்சியைப் பிடிப்பதற்காகத்தான். எழுத்து மறையும் அந்தி நேரத்தில் வானில் இங்குமங்கும் அது பாய்ந்து பாய்ந்து பறப்பதைப் பார்த்திருக்கிறீர்களோ? நம் கண்ணுக்குப் பறவையே தெரியாது, அது கொத்திக்கொள்ளும் பூச்சியா தென்படப் போகிறது?! இவற்றில் எந்தப் பறவையும் வீட்டுக்குள் நுழைவதில்லை.

காக்கையும், குருவியும்தான் நம்மோடு வாழ்பவை. காவல் நாயும் சரி, தெருநாயும் சரி, யார் வந்தாலும் குரைப்பது போல், இந்த இரண்டு பறவைகளும் அப்படித்தான். நகரங்களில், நம்மை எழுப்புவது சேவலல்ல, காக்கைதான். எழுந்தவுடனேயே அது காட்டும் பரபரப்பைப் பார்த்தால் இது எப்படித் தூங்கும் என்றே கேள்வி எழுகிறது. எஃகு அலகு; எண்ணெய்ப் பளபளப்பு. நான்கு வயதில், காக்கை-வடைக் கதையை எனக்கும் சொன்னார்கள். வீட்டிலே வடைபோட்டிருந்தார்கள். ஒருகையால் எப்போதும் முரண்டுபிடிக்கும் அரைநிஜாரைப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையில் வடையை ஏந்தி ‘கா..கா..’ என்று கூவியதும் அலகால் அது தோள்பட்டையில் ஒரு கொத்துக் கொத்தி வடையைக் கவ்விக்கொண்டு பறந்தது. வெகுநாட்களுக்கு அந்த விழுப்புண் தோளில் இருந்தது. ஆனால், எனக்குக் காக்கை மீது எந்தக் கோபமும் கிடையாது.

ஏதாவது கொடுப்பதாயிருந்தால் அதை விட்டுவிட வேண்டும்; கையில் வைத்துக்கொண்டு கூவுவது கொடுத்ததாகாது, அது அநாகரிகம் என்பதுதான் வாழ்க்கை என்னும் பள்ளியில் நான் கற்ற முதற்பாடம். அதைக் காக்காய்தானே சொல்லித் தந்தது!

இப்போதெல்லாம் அதற்கு வீட்டில் விசேடமான ஏற்பாடு. எவர்சில்வர் தட்டொன்றை இரும்பு வளையத்தில் இறுகச் செருகி வைத்திருக்கிறது; அடுத்தொரு சின்ன வளையம். அதில் ஓர் அகலக் கிண்ணத்தில் தண்ணீர் வைத்திருக்கிறது. கூவவெல்லாம் வேண்டியதில்லை. நாம் தட்டின் அருகே வருவதை ஆயிரம் கண்கள் பார்க்கின்றன. காக்காய்க்கு அரைப்பார்வையா, யார் சொன்னது? ராமாயணத்தில் வரும் அசுரனுக்கும், எம்மோடிருக்கும் வன்னக் காக்கைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. நேரம் தாமதமானால், நேரே வந்து தட்டைத்தட்டும். காலைப் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தோமானால், நம்மை ‘என்ன இன்னும் ஒண்ணும் காணும்? காப்பி மட்டும் சரியாய் நடக்கிறதோ?’ என்பதுபோல் பார்க்கும். உடனே உள்ளே சென்று அதற்கென்றே தினந்தினமும் வாங்கிவைக்கும் ரொட்டியைத் துண்டுதுண்டுகளாகச் செய்து போடுவோம். ஒவ்வொரு காக்கையாய்த்தான் தின்கிறது, நான்கைந்து சேர்ந்து வந்தாலும். இடநெருக்கடி மட்டுமன்று, இதில் அழகான முறைமை ஒன்றிருக்கிறது. சில, ஒரு துண்டோடு ஓடிவிடும். இன்னும் சில, ஒவ்வொன்றாய்ப் பல துண்டுகளை அடுக்கிக்கொள்ளும்! ஆனால், ஒவ்வொரு காக்கையும் ரொட்டித் துண்டை, பக்கத்திலிருக்கும் கிண்ணத்துத் தண்ணீரில் நனைத்து மென்மைப்படுத்திக்கொண்டுதான் பறக்கும்! அவ்வப்போது, தட்டையும், கிண்ணத்தையும் கழுவிப் பளபளவென்று வைத்தால், காக்கைக்கு மகிழ்ச்சியுண்டு.

மாடத்தில் உட்கார்ந்தபடி, ஏதேனும் கொஞ்சம் கொறித்தபடிக் காப்பி அருந்தும்போது, வந்து கிராதியில் உட்கார்ந்து, கழுத்தைச் சாய்த்து ஏக்கமாய்ப் பார்க்கும். அப்புறம் என்ன? 60% அதற்கு, மிச்சம் நமக்கு! பின்புறச் சுவர் அவை வரிசையாய் உட்கார வாகாயிருக்கிறது. அங்கே சிறப்பு என்னவென்றால், என் மனைவியின் கையிலிருந்து நேரே வாங்கித் தின்னும். அவளிழுக்க, அதுவிழுக்க பார்க்கவே சுவாரசியமாக இருக்கும். சிலநேரம், வெறும் ரொட்டிதானா என்று போராட்டம் நடத்தும். வேறெதாவது கொண்டுவந்தபின்தான், மறுபடி ரொட்டியைத் தொடும். சாதமும், பருப்பும், நெய்யும் கலந்துவைத்தால் காக்கைக்குப் பிடிக்கும். நெய் ரொம்பப் பிடிக்கும். ஆளில்லாத நேரத்தில், உணவு மேசை மீது வைக்கப்பட்டிருக்கும் நெய்ப் பாத்திரத்தை லாகவமாகத் திறந்து நெய்யுண்டு மகிழும்!

ரொம்ப நாளாக ஒரு நொண்டிக் காகம் வீட்டுக்கு வந்துபோகும். அதற்கு மற்ற காகங்கள் சிரத்தையோடு பணிவிடை செய்வதைப் பலமுறை கண்டு அதிசயித்து நின்றிருக்கிறேன். என்னால் மறக்க முடியாத காட்சியது.

கூடுகட்டிவிட்டால், காக்கைக்குக் குணம்மாறிவிடுகிறது. நம்மைக் கண்டாலே பிடிக்காமல் போகிறது. உணவெடுக்கும் போதும் முரட்டுத்தனமாகவே இருக்கிறது. நாம் வெளியே வந்தாலே, கூட்டைக் கலைத்து விடுவோம், குஞ்சுகளைக் கொன்றுவிடுவோம் என்று சந்தேகம் கொண்டு, பயங்கரமாகக் கூச்சலிடுகிறது. அலகால், இப்படியும் அப்படியும் மரத்தைக் கொத்திக் கோபத்தை வெளிப்படுத்துகிறது. தாயின் உணர்ச்சிகளை, பரிதவிப்பைக் காக்கை மூலம்தான் புரிந்துகொண்டேன். அந்த நேரங்களில் மொட்டை மாடிக்குப் போவதானால் ஹெல்மெட் அணிந்துகொண்டு செல்வதே நலம்! பருந்துக்கும் பேறுக்காலம் அதுதான் போலும்; அதுவும் தலையில் கொத்தத் தயங்குவதேயில்லை!

‘ஏன் இந்தப் பறவைகள் எல்லாம் அழகில்லாமல் இருக்கின்றன?’ என்பது காக்கையிடம் பொதுவாயிருக்கும் கேள்வி. அது எந்தப் பறவையையும் விரட்டுவது, பேட்டைத் தகராற்றினால் இல்லை. அழகுணர்ச்சிப் பிரச்சினைதான்! சும்மா இல்லாமல் கழுகை விரட்டக் கிளம்பிவிடும். கழுகு, உருவத்திலும், வலுவிலும் பெரியது என்றாலும், காக்காயைத் திருப்பித் தாக்காது. ஏனென்றால், காக்கை, கூட்டத்தோடு வரும். ஒரு பெரிய ரெளடிக் கும்பலைச் சமாளிக்கும் வலிமையெல்லாம் கழுகுக்குக் கிடையாது. காகமோ விடாமல் துரத்தும். கழுகென்ன செய்யும்? வட்டமிட்டு வட்டமிட்டுப் பறந்து மெல்ல மெல்ல, ஒவ்வொரு வட்டத்திற்கும் கொஞ்சம் உயரத்தை ஏற்றிக்கொண்டே செல்லும். அவ்வளவுதான்! ஒரு கட்டத்தில், தலைசுற்றிப்போய், உயரத்திலிருந்து காக்கை பறக்க முடியாமல் அந்தரத்தில் பல்டியடித்துக்கொண்டு விழும். கிட்டத்தட்ட மோதிச் சுக்குநூறாகிவிடும் தருணத்தில் எப்படியோ சமாளித்துக்கொண்டு, ஏதாவதொரு மரக்கிளையில் உட்கார்ந்துகொண்டு, மலங்க மலங்க முழித்தபடிக் கொஞ்சநேரம் இருக்கும். இதேபோல், அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு நடுவில், காற்றழுத்த மாற்றங்கள் உள்ள இடங்கள் உள்ளன. பறந்துவரும் காக்கை அங்கே சிக்கிக்கொண்டு தலைகுப்புற விழும்! எப்படியோ சமாளித்து விடுவதுதான் காக்கை கற்றுக் கொடுக்கும் சாமர்த்தியம்.

காக்கைக்கு இயற்கையில் மரணமில்லை, விபத்தால்தான் சாகும் என்பார்கள். மூக்குச் சளியிலிருந்து முந்திரிப்பருப்புவரை எதையும் தின்னமுடிகிற காக்கை எப்படிச் செத்துப்போகும் என்று யோசனை நமக்கும் வருவதுண்டு. அண்டங் காக்கையைக் காட்டி அதுதான் கிருதயுகத்துக் காக்கை என்பாள் பாட்டி. கதைதான், ஒத்துக்கொள்கிறேன். ஆனால், இந்த வாழ்க்கையில் கதைதானே நம்பும்படியாக இருக்கிறது! பத்ரிநாத் 10,000 அடிவுயுரத்தில் இருக்கிறது. அங்கே காக்கைக்குக் காலும் அலகும் மஞ்சளாக இருக்கிறது. ஏன், கயிலை மலையருகே 16,000 அடிவுயரத்தில், அண்டங்காக்கைகளைக் கண்டிருக்கிறேன். சற்றே குரல் கம்மியிருக்கும் அவற்றின் இறக்கைகள் விசேடமாக இருக்கின்றன.

‘கொர்ர்ர்ர்’ என்றவொலி குறட்டைச் சத்தத்திற்கு மட்டுமல்ல, காக்கைக்கும் உண்டு. பள்ளியில் படிக்கும்போது இதை அறிந்தேன். ஓடுபோட்ட வகுப்பு; அதை ஊடுருவித் தாக்கும் உச்சி வெய்யில்; அப்போதுதான் உண்டு முடித்த புளிப்பான மோர்சாதம்; வகுப்போ தமிழிலக்கணம். வாத்தியார் வினையாலணையும் பெயர் என்னும்போது பக்கத்து மரத்திலிருந்து காக்காய் ‘கொர்ர்ர்ர்’ என்று ஒலியெழுப்ப, பெஞ்சே அணையாய் உறக்கம் நம்மை அணைக்கும். தாய்க்காகம் எத்தனை ஊட்டினாலும், போதாது குஞ்சுகளுக்கு. அவை இரைவேண்டிக் கத்தும்போது ஒரு சத்தம்; தாய், இரையை மசித்து வாய்க்குள் திணிக்கும்போது வேறொரு விதமான சத்தம். சில காகங்கள், நாயனக்காரர் சீவாளியைப் பரிசோதிப்பது போலும் சத்தம் எழுப்புவதுண்டு.

மண்ணகலில் நல்லெண்ணெய் விட்டுத் தீபமேற்றியிருப்பார்கள். திருட்டுக் காக்காய், நனைந்த திரியைத் தூக்கிக்கொண்டு போய்விடும்! அதேபோல் பெரிய வாணலியில், கொதிக்கும் எண்ணெயில் முறுக்கு பொள்ளும்போது கொத்திச் சென்ற அதிசூரக் காக்காய்களையும் கண்டிருக்கிறேன்.

காக்காய் இருந்தால் என்னைத் தனிமை கொல்லாது. அதற்குத் துக்கம் கிடையாது. எனவேதான் அதன் அணுக்கம் என் அமைதிக்குத் தோதாக இருக்கும். ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்,’ என்னும் தத்துவத்தைக் காகமல்லவா சொல்லித் தருகிறது! காக்காய்ப் பள்ளிக்கூடம் எல்லா ஊரிலும் பார்க்கும் காட்சிதான். ஆனால், பாடம் நமக்குத்தான். ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதுதான் பிரபஞ்சத்தின் பெரிய சேதி என்றாலும் நாம் கூடி வாழ்வதில்லை. காக்கைகளிடம், சின்னச் சச்சரவுகள் உண்டு, சண்டை கிடையாது. அவர்களில் ஒன்றிறந்தால், அவை கூடி எழுப்புகின்ற ஓலம், நம் கண்ணைத் திறக்கவேண்டும். எப்படிப் பதறுகின்றன தெரியுமா?

தினந்தினமும் எனக்குப் பாடம்சொல்லி என்னைப் பக்குவப்படுத்தும் காகங்களில் ஒன்று மின்சாரம் தாக்கிக் கம்பியில் சிக்குண்டு கிடப்பதுதான் கோரமான காட்சி.

சிட்டுக் குருவிகளை இப்போது காணவே முடிகிறதில்லை. அடுக்குமாடி, கேபிள் டி.வி. என்று அவை காணாமல் போனதற்குக் காரணங்கள் பல சொல்கிறார்கள். ‘சின்னத் தோகை, துளிக்கால்கள்,’ என்று பரவசம் கொள்ளும் பாரதி, சிட்டுக்குருவிதான் விடுதலையின் சின்னம் என்று கண்டு பாடியிருக்கிறார்.

சின்ன வயது ஞாபகமொன்று. கிணற்றுச் சுவரில் ஒரு கணம் அமர்ந்திருக்கும்; மறுகணம் ஜிவ்வென்று கிணற்றுக்குள் குதித்துவிடும்; ஐயோ என்று பதறிக் குனிந்து பார்த்தால், தண்ணீரைத் தொடும் கணத்தில் விசுக்கென்று சிறகுகளை விரித்து, பூச்சியைக் கவ்விக்கொண்டு, கணப்பொழுதில் மேலே வந்துவிடும்! காக்கைக் கூட்டில் முள்ளிலிருந்து, சட்டை மாட்டும் ஹேங்கர் வரை எல்லாவற்றையும் பார்க்கலாம். குருவிக்கூடு சொகுசு மெத்தை! வைக்கோல், புல், பஞ்சு என்று ஏதெல்லாம் மென்மையோ அவற்றைக் கொணர்ந்து வனையும். இல்லையில்லை, அது எதைக்கொண்டு வந்தாலும், அதன் அலகு பட்டு மிருதுவாகிவிடும்! ஆண்குருவிக்குக் கண்ணில் மையிட்டது போலிருக்கும். பெண்குருவியின் இறகுகளில் புள்ளிக்கோலமிருக்கும். முன்பெல்லாம் அரிசிமாவால், வாசலில் கோலம் போடுவார்கள். குருவிகள் கூடிவந்து அதைத்தின்னுவதே அழகுக் கோலம்! அரிசி பிடிக்கும்; நெல்பிடிக்கும்; வெந்த சோற்றை விரும்பித் தின்னும். அதன்பின் இருக்கவே இருக்கின்றன புழுக்கள், பூச்சிகள்.

மின்சார மீட்டருக்கு மேல் செருப்போடு வரும் அட்டைப் பெட்டியில் கதவு செய்து, உள்ளே துணி, பஞ்சு எல்லாம் சேர்த்து அதற்கு வீடு செய்திருப்போம். அதுவும் கச்சிதமாய் வாழும். அது மின்விசிறிக்கு மேலுள்ள கிண்ணத்தில் கூடுகட்டி, விசிறியில் அடிபட்டுச் சாவதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு. குருவிக் குஞ்சை மட்டும் பார்க்கவே சிரமமாக இருக்கும். இந்த ஜீவன் எப்படிப் பிழைக்கும் என்பது போல் தள்ளாடும் சின்னச் சதைத்துண்டாயிருக்கும். கொஞ்சநாள்தான்! பிறகு திடீரென்று பெரிதாகிவிடும். அம்மா, பறக்கக் கற்றுத்தரும் அழகே அழகு. வார்த்தையால் சொல்லும். நாலெட்டு முன்னும் பின்னும் நடந்து காட்டும். சற்றே பறந்து வந்து, இவ்வளவுதான் என்கும். அப்படியும் தயங்கும் குஞ்சைத் தள்ளிவிட்டுவிடும்!

எனக்கு அணிலிடம் பிடிக்காத ஒரே விஷயம், அது குருவிக் கூட்டுக்குள் புகுந்து முட்டையைத் திருடிக்கொண்டு போய்விடுவதுதான். குருவிகள் பாவம், குய்யோ முறையோ என்று கத்தும். ஆனால், குஞ்சைக் கவ்விக் கொண்டு பறக்கின்ற காக்கையைத் தாயும் தந்தையும் ஆத்திரத்தோடு துரத்துவதைக் கண்டு மலைத்துப் போயிருக்கிறேன். உயரமும் எடையுமா வலிமை? வீரமும், வலிமையும் நெஞ்சில் இருப்பன, எதிர்க்கத் தயங்கவே கூடாது என்பதை எனக்குக் குருவிகளே சொல்லித் தந்தன. நமக்கென்ன ஆகிவிடுமோ என்ற எண்ணம் வந்துவிட்டால், பிறர்க்குத் துணைக்குப் போவது என்பது நடக்கவே நடக்காது.

பிறக்கும் முன்னிலிருந்தே ஒவ்வொரு கணமும் ஆபத்து மயமாயிருக்கும் அவற்றின் வாழ்க்கை. ஆனால், ‘தின்று விளையாடி இன்புற் றிருந்து வாழ்வீர்,’ என்பதை எனக்குக் காக்கையும் குருவியுமே சொல்லித் தந்தன.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *