Featuredஇசைக்கவியின் இதயம்இலக்கியம்கட்டுரைகள்

அழைக்கும் தொலைவில் ஆண்டவன்

இசைக்கவி ரமணன்

நீ வேண்டும்! எனக்கு
நீதான் வேண்டும்!!

அம்மா, வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் மகனை அவசரமாக அழைக்கிறாள். `வருகிறேன்,` `வந்துகொண்டிருக்கிறேன்` என்றா சொல்கிறான்? `இதோ வந்துட்டேம்மா!` என்றல்லவா கூவி, தனது கூவல் முடியுமுன்னே மூச்சிரைக்க அம்மாவின் முன்னே வந்து நிற்கிறான்? உலகத்தில் அன்றாட நடப்பே இப்படி இருக்க, எல்லோர்க்கும் தந்தையான இறைவன் அழைத்தால் வரமாட்டானா என்ன?

siva (4)இறைவன் யார்? எங்கும் இருப்பவன். எப்போதும் இருப்பவன். எல்லாமாகவும் இருப்பவன். எல்லோருக்கும் சம அளவில் இருப்பவன். மனிதர்கள், தேவர்கள், ஏன், அரக்கர்கள், விலங்கினங்கள் போன்ற எல்லா உயிர்களுக்கும் சம தொலைவில் இருப்பவன். எல்லோர்க்கும் தந்தை இறைவன்! அவன் நல்லோர்க்கும் தீயோர்க்கும் தலைவன்! ஆம், கடவுள் அனைவருக்காகவும் இருக்கிறான் என்பது மட்டுமல்ல. ஒவ்வொருவருக்கும் அவன் முழுமையாக இருக்கிறான்! `அவன் எனக்கே எனக்கு!` என்று ஒவ்வொருவரும் உரிமை கொண்டாடும் வண்ணம் இருக்கிறான். (‘’Not only God is available for all, all of God is available for everyone!’’) அப்படி இருப்பவனை அழைப்பதென்ன, அவன் அதன் பிறகு வருவதென்ன?

இதயக் கமலத்தில் அவன் இருக்கிறான் என்பதை உணர்வதே அழைத்தல்! உணர்ந்த அந்தக் கணத்தில், அவன் உள்ளில் தெரிவான். வெளியில் விரிவான். உள், வெளி என்னும் கோடழிந்து, ஒன்று பலவாக நின்று விளங்குவதை உணர்த்துவான். திருவள்ளுவர், `மலர்மிசை ஏகினான்,` என்று கடந்த காலமாகச் சொல்கிறார். காலம் என்கின்ற கட்டுப்பாடு கடவுளுக்கு ஏது? எல்லாவற்றையும் ஏற்கனவே ஆண்டு முடித்துவிட்டவன் என்பதால்தானே அவனை ஆண்டவன் என்கிறோம்? உள்ளே இருக்கிறான் என்று உணர்ந்த கணம், உள்ளக் கமலம் விரியும். அங்கே இறை, ஒளிமயமாக வீற்றிருப்பது தெரியும்! ஆக, ஏற்கனவே அங்கே அவன் இருப்பதனால்தான் `ஏகினான்`என்றார் வள்ளுவர்.

மாணிக்க வாசகப் பெருமான், `அவனருளாலே அவன்தாள் வணங்கி,` என்னும் அமர வாசகத்தைச் சொல்வதற்கு முன்னால், அந்த அற்புத நிலைக்கான காரணத்தைப் பொன்னில் பொறிக்க வேண்டிய தேன்தமிழ்ச் சொற்களிலே சொல்கிறார், `சிவனவன் என்றன் சிந்தையுள் நின்ற அதனால்,` என்று. இந்த உணர்வுதான், சிவனையே நேரில் வரவழைத்தது. பரியை நரியாக்கி, அவருடைய உலகாய குற்றத்திற்காக அவருக்கு சிறைவாசத்தைத் தந்து, நரியைப் பரியாக்கி, அவருடைய மட்டற்ற சிவநேயத்திற்காக அவருக்கு சிவலோகமும் தரவைத்தது.

அவன், இருக்கிறான். அவன், என் உள்ளத்தில் நன்றாக வீற்றிருக்கிறான் என்னும் நம்பிக்கையோடு, முழு உணர்வோடு, அவனே கதியென அழைத்தவர்களுக்கு அவன், `நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய்,` வந்து பணிவிடை செய்தான்! இன்றும் செய்து வருகிறான்!

எல்லாம் அவனுடையதே என்பதனால் எதையும் அவனிடம் கேட்கலாம்தான். ஆனால், இரண்டு முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்:

கேட்டதைக் கொடுத்துவிடுவான்
கொடுத்தவுடன் மறைந்துவிடுவான்

உலக வாழ்க்கையில் கூட, நாம் எவரிடம் என்ன கேட்கவேண்டும் என்று சிந்தித்துத்தானே கேட்கிறோம்? சச்சின் டெண்டுல்கரிடம் சங்கீதம் கற்றுக்கொள்ளப் போகிறோமா? பூக்கடையில் நெய்வாங்கப் போகிறோமா? எங்கே என்ன கிடைக்கும், எவரிடம் எதைக் கேட்கலாம் என்ற அறிவும் இங்கிதமும் நமக்கு இல்லாமலில்லை. ஆனால், அருகம் புல்லிலிருந்து ஆன்ம விடுதலை வரை, எதையும் வழங்கவல்ல இறைவனின் முன்னிலையில் இந்த அறிவும் இங்கிதமும் நம்மில் பெரும்பாலானவருக்கு இல்லை என்பதே உண்மை. உலக வாழ்வில் மண்டிக் கிடக்கும் கவலைகளும் கலகங்களுமே இதற்கு நிரூபணம்.

ஒரு ஞானி சொல்கிறார், ‘The problem with desires is that they get fulfilled; if not today, tomorrow. So, one should be careful in desiring only desirable things!’ என்ன ஆழமான வாசகம்! ஆம், ஆசைகளில் இருக்கும் ஆபத்து, இன்றில்லையானால் அவை நாளையேனும் நிறைவேறிவிடும் என்பதுதான்! பல ஆசைகள் நம்மை பந்தத்தில் இறுக்கும். சில ஆசைகள் நம்மை விடுதலையில் உய்க்கும். `எனது தேசம் மேன்மை அடையவேண்டும், நான் வாழும் சமுதாயம் நலிவுகள் நீங்கி நலம்பெறவேண்டும்,` என்பன போன்ற ஆசைகள் ஒருவனை ஒருபோதும் கட்டுப்படுத்தாது. அல்லாமல், அதுவேண்டும் இதுவேண்டும் என்று வேண்டும்போது அவற்றைத் தந்துவிட்டு, அக்கணமே மறைந்துவிடுகிறான் ஆண்டவன் என்பதே சான்றோர்கள் நமக்குக் கூறியுள்ள எச்சரிக்கை.

அவனிடம் அதையும் இதையும் கேட்காமல், அவன்தான் வேண்டும் என்று உறுதியாக நின்றால், அவன் வராமலிருக்க முடியுமா? தன்னைத் தராமல்தான் இருக்க முடியுமா?

ஒரு பொருட்காட்சி. அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு உற்சாகமாகச் செல்கிறான் பையன். எதைப்பார்த்தாலும் வேண்டும்போல் தோன்றுகிறது. குடைராட்டினம், பஞ்சுமிட்டாய், பரிசல் போன்ற பொரித்த அப்பளம், இன்னும் என்னென்னவோ! பார்த்ததையெல்லாம் கேட்கிறான் குழந்தை. அம்மாவும் சலிக்காமல் வாங்கித் தருகிறாள்.

திடீரென்று, கூட்டத்தில் பையன் அம்மாவின் பிடியிலிருந்து நழுவி, தொலைந்துபோய்விடுகிறான். அனைத்தாலும் கவரப்பட்ட அந்த அரங்கத்தில், எதுவுமே கண்ணில் படாமல் அவன் அம்போவென்று நிற்கிறான். அடிமனத்திலிருந்து துயரம் பொங்க ஓவென்று அழுகிறான். காவல் துறையினர் பார்க்கிறார்கள். இது அம்மாவின் பிடியைவிட்டுத் தொலைந்த குழந்தை என்பதை உடனேயே புரிந்துகொண்டு அதைச் சமாதானம் செய்ய முயல்கிறார்கள். `பையா, அம்மாவைக் கண்டுபிடிக்கலாம், இந்தா அப்பளம்.`

— வேண்டாம், எனக்கு அம்மாதான் வேண்டும்

`அம்மாவிடம் போகலாம் தம்பி, அழாதே, இந்தா பஞ்சு மிட்டாய்.`

— வேண்டவே வேண்டாம் எனக்கு அம்மாதான் வேண்டும்

`வா, குடைராட்டினத்தில் மூன்று சுற்று சுற்றலாம்.`

— ஒண்ணுமே வேணாம், அம்மாதான் எனக்கு வேணும்….`

இலவசமாகவும், நிறையவும் எதைக் கொடுத்தாலும் எதிலும் விருப்பமின்றி கண்ணில் தெரியாத அம்மா ஒன்றே குறியாகி அழுகிறது குழந்தை. இதைத்தான் ரவீந்திரநாத் தாகூர்,

நீ வேண்டும்! எனக்கு
நீதான் வேண்டும்!!

என்று கீதாஞ்சலியில் இறைவனிடம் பாடுகிறார்.

அவனிடமிருந்து பெறும் வேறு எதனாலும் நீடித்த இன்பமோ, நிலையான நிம்மதியோ கிடைக்கப்போவதில்லை. இதை நாம் உணரும் வரையில், கோரிக்கைகள் நம் உள்ளத்தில் அலையலையாகப் பெருகிக்கொண்டுதான் இருக்கும். கேட்டுக் கேட்டுப் பெற்றுப் பெற்று, எதிலும் திருப்தி வராமல், எதிலும் சலிப்பே நேரும்போதுதான் நாம் உள்ளே திரும்ப எத்தனிக்கிறோம். அதற்காகவே உள்ளே அவன் காத்திருக்கிறான்.

நாம் என்ன கேட்டாலும் அளிக்கவல்லவன், எல்லாவற்றுக்கும் மேலான ஒன்றை நமக்கு வழங்குவதற்காகக் காத்திருக்கிறான், நாம் கேட்டால்! விழைந்தால்! அதுதான் வேண்டும் என்று அடம்பிடித்தால்! அதுதான் அவன்! எனவே, தாகூரின் பல்லவியை வாங்கிக்கொண்டு, நாம் இன்னும் இரண்டு வரிகளைச் சேர்த்துக் கொண்டு இப்படிப் பாடலாம்:

வேறு
நினைவறியாத
நிலை விரும்பாத
மனம் முழுதாக
மலர்ந்திருக்கும், அந்த

நீ வேண்டும்! எனக்கு
நீதான் வேண்டும்!!

அந்தக் குருட்டு தர்பாரில், அனைவரின் முன்னே அவமானப் படுத்தப்பட்டபோது, பாஞ்சாலி என்ன செய்தாள்? மந்திரங்களை ஜெபித்தாளா? தோத்திரங்களைச் சொன்னாளா? அரற்றினாளா? `கண்ணா! இது உனக்கு நியாயமென்று தோன்றுமானால், எனக்கும் இது சம்மதமே!` என்ற தெளிவில் சரணடைந்தாள். அந்தக் கணமே, ’ தம்பி கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய், அவை வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே!` “நான் கடலில் எறியப்பட்டு, சுறாக்கள் என்னைக் கடித்துக் குதறவேண்டும் என்பதுதான் உன் விருப்பமென்றால் எனக்கது சம்மதமே,` என்னும் மனநிலைதான் சரணாகதி.

`எது நடந்தாலும், நடக்காது போனாலும், அது இறைவா உன் சித்தம். அது என் நலன் கருதியே, என் நன்மைக்காகவே!` என்றிருப்பதே பக்தன், யோகி, ஞானி அனைவருக்கும் பொதுவான நிலை. அந்த நிலையில் இருந்து அழைத்தவர்களுக்குக் கடவுள் எப்போது கூப்பிடும் தொலைவில் பணிசெய்யக் காத்திருந்தான்!

`அழைத்தால் வருபவனே ஆண்டவன்,` என்ற ஆந்திர வசனம்தான் எத்தனை உண்மை!

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க