திருமால் திருப்புகழ் (100)
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
——————————————————-
’’கண்ணன் வெண்பாக்கள்’’
———————————————–

Keshav
முதலைவாய் சிக்கி, மதகளிறு ஆதி,
முதலைவா வென்றைக்க, மூன்றில் -முதலாய்,
கருடன் அமர்ந்து, கஜேந்திரனைக் காத்த,
புருடனைப் போற்றல் பிழைப்பு….(107)
மூண்ட சமர்தனில், மாண்ட உறவுகள்,
மீண்டெழுந்து கண்ணனை கெக்கலிக்க, -பூண்டோடு,
பாயாசம் சேர்ந்தாற்போல், வெற்றியில் வாடைவர,
ஆயாச மானா னவன்….(108)
முழங்கால் முடிச்சேறி, மொட்டையிட்டு மாலை,
தொழுங்கால் துயரம் தொலையும், -விழுங்கிஆல்,
தன்னில் மிதந்த, தவசுப்ர பாதனவன்,
முன்னில் அவிழும் முடிச்சு….(109)
நாமடைதல் சிற்றின்பம், நாமாதல் பேரின்பம்,
நாமாதல் நாமடைய நாடுவீர், -நாமா
வளிசொல்லி, வேணு விட்டலனை வாழ்த்தி,
களிகொள் அடியார்தம் கூட்டு….(110)
நாவல் நிறத்தனே, நாலாயிரம் போற்றிடும்,
காவலில் தோன்றிய கண்ணனே, -ஆவலால்,
விட்டகன்றாய் அத்வைதம், வந்தாய் விசிஷ்டனாய்,
வெட்டுநீ துண்டிரெண்டு நாம்….(111)
நீலம் அரவணைக்க, நிர்மூலம் ஆகிடும்,
காலம் இடம்பொருள் கொள்கைகள், -கோல,
விடமுறங்கி ஆலில், விளையாடும் பிள்ளை<
உடனிருக்க உற்சாக ஊற்று….(112)
——————————————————————————————————————