கே.ரவி

மீண்டும் காற்று வீசுகிறது. சாதாரணக் காற்று இல்லை. சண்டமாருதம் என்று சொல்லப்படும் சூறைக்காற்று. ஒரு நிமிடம் என்னோடு வாருங்கள்; காலப்பரப்பில், அல்லது, காலப் பரபரப்பில், சற்றுப் பின்னோக்கி வாருங்கள். பல நூற்றாண்டுகள் இல்லை. சில ஆண்டுகள் அவ்வளவுதான்!

நாள்: 1990, கோடை விடுமுறை. நேரம்: பிற்பகல் சுமார் 2 மணி. இடம் ஏலகிரி (வாணியம்பாடி அருகில்). அங்கே, ‘சாந்தாமணி லாட்ஜ்’ என்றொரு விடுதியில் ஒரு பெரிய பட்டாளத்தோடு நான் தங்கியிருந்தேன். நான், ஷோபனா, என் வளர்ப்புத் தந்தை, என்னிரு பெண்மக்கள், அவர்களுடைய தோழர்கள், தோழிகள் சுமார் எட்டுப் பேர், இவர்களோடு என் நண்பனும், அவன் மனைவியும். அப்பா! இப்பொழுது நினைத்தாலும், அப்பொழுது எப்படி இப்படியொரு பெரும்படையோடு ஏலகிரி, கோடைக்கானல் என்று ஆண்டுதோறும் சென்று கொண்டிருந்தேனோ என்று பிரமிப்பாக இருக்கிறது!

images (5)

அன்று பிற்பகல், லாட்ஜுக்குள் மின்சாரம் இல்லை. ஒரே புழுக்கம். லாட்ஜின் பின்புறம் இருந்த பெரிய தோட்டத்துக்குப் போயமர்ந்தேன். வெளியிலும் காற்றில்லை. வானத்தில் ஒரே மேக மூட்டம். சற்று இருண்டிருந்தது. அப்பொழுது ஷோபனாவும், என் நண்பனும் அங்கே வந்து நான் ஏன் தனியாக அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறேன் என்று கேட்கவும், ‘காற்று வாங்க வந்தேன், ஆனால் காற்றே இல்லை’ என்று சொல்லிவிட்டுத் திடீரென்று பாடத் தொடங்குகிறேன். பாடல் ப்ருந்தாவனி ராகத்தில், வட இந்திய க்ராமிய வயல்வெளிப் பாடல்களின் சாயலில், மடமடவென்று வருகிறது.

பாடணும் நான் பாடணும்
அதக்
கேட்டுப்புட்டுக் காத்துவந்து தந்தனத்தோம் என்றுதாளம்
போடணும் நான் பாடணும்“.

நான் பாடிக்கொண்டே இருக்கிறேன், திடீரென்று பாட்டுக்குப் பின்னணி இசைபோல் ஊய்ய்ய் என்றொரு சத்த்த்த்தம்! காற்று! சூறைக்காற்றில் புழுதி கிளம்பி எங்கள் கண்களை மறைக்க, மரங்கள் தலைவிரித்தாட, இலைகள் பறக்கப் பாட்டு மட்டும் நிற்காமல் தொடர… ஒரே அமளிதான்!

“பாடணும் நான் பாடணும்austin-rosacrutions
அதக்
கேட்டுப்புட்டுக் காத்துவந்து தந்தனத்தோம் என்றுதாளம்
போடணும் நான் பாடணும்

பித்தெடுத்துக் காதலுடன் இத்தரையத் தொட்டுத்தொட்டு
அத்தன மரங்களுமே ஆடணும்
அத்தன மரங்களுமே ஆடணும்
சத்தங்கள வுட்டுப்புட்டு சந்தத்துலக் கட்டுப்பட்டுச்
சத்தங்கள வுட்டுப்புட்டு சந்தத்துலக் கட்டுப்பட்டுச்
சிட்டுக்குரு விக்கூட்டம் கூடணும்
நான் பாடணும்

மேகத்துலத் தோகவிரிச் சாடுகிற வானமயில்
ஓ ஓ ஓ ஓ
மேகத்துலத் தோகவிரிச் சாடுகிற வானமயில்
ராகத்துல சிக்கித்தடு மாறணும் – என்
ராகத்துல சிக்கித்தடு மாறணும்
மோகவலை போலவொரு தாளஅலை பின்னிப்பின்னி
பின்னிப்பின்னிப் பின்னிப்பின்னிப் பின்னிப்பின்னிப் பின்னிப்பின்னி
மோகவலை போலவொரு தாளஅலை பின்னிப்பின்னி
மூச்சுத்தெண றும்படிப் பாடணும்
நான் பாடணும்

பாட்டுக்கொரு போதையுண்டு போதைக்கொரு பாதையுண்டு
ஏ ஏ ஏ ஏ
பாட்டுக்கொரு போதையுண்டு போதைக்கொரு பாதையுண்டு
பாத்துநடந் தால்பறந் தோடலாம்
பாத்துநடந் தால்பறந் தோடலாம்
கூட்டுக்குள்ள நீயிருந்து வாடுறது ந்யாயமில்ல
கூட்டுக்குள்ள நீயிருந்து வாடுறது ந்யாயமில்ல
கூடவந்து களியாட்டம் போடலாம் – என்
கூடவந்து களியாட்டம் போடலாம்

பாடலாம் நாம் பாடலாம் – அதக்
கேட்டுப்புட்டுக் காத்துவந்து தந்தனத்தோம் என்றுதாளம்
போடலாம் நாம் பாடலாம்

பாட்டு முடிந்து பத்து நிமிடங்கள், காற்றுச் சுழன்று சுழன்று அடித்துவிட்டுக் களைத்துப்போய் மெல்ல விசையிழக்கும் வரை, நாங்கள் எதுவும் பேசிக்கொண்டதாக நினைவில்லை. நான், ஷோபனா, அந்த நண்பன், ஒரு கனத்த மெளனம்!

அந்த நண்பன் ஒரு நல்ல கவிஞன். நல்ல குரல்வளத்தோடு கணீரென்று பாடும் கவிஞன். கிருஷ்ண பக்தியில் தோய்ந்த கவிஞன். மராட்டிய அபங் பாடல்களை அவன் பாடிக் கேட்க வேண்டும். இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழன் எக்ஸ்பிரஸ் என்ற இதழின் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்து, சில ஆண்டுகளுக்கு முன் காலமாம் சூறைக் காற்றால் அடித்துச் செல்லப்பட்ட அந்த நல்ல நண்பன், அமரன் சிவகுமாரை நினைத்துக் கொள்கிறேன்.

மீண்டும், இல்லை, மீண்டும் மீண்டும் காற்று வரும், வந்து கொண்டே இருக்கும். சந்திப்போம்.

காற்று வாங்கப் போனேன் – பகுதி 4

 

மேலே சொன்ன சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னால், அதே ஏலகிரி, அதே சாந்தாமணி லாட்ஜ். அதே நபர்கள். ஆம், ஷோபனா, சிவகுமார், நான். லாட்ஜ் அறையில் அமர்ந்திருந்தோம். அப்பொழுதுதான் ஒரு பாடல் உதயமாகியிருந்தது. வழக்கத்துக்கு மாறாக அதை உடனே எழுதியும் வைத்திருந்தேன். மற்ற இருவருக்கும் நான் பாடிக் காட்டுகிறேன்.

என் குரல் ஸ்ருதியோடு போராடும் இழுபறியைப் பொருட்படுத்தாமல் என் நண்பர்கள் என்னைப் பாடச் சொல்லி, மன்னிக்கவும், பாடவிட்டுக் கேட்டிருந்ததெல்லாம் நட்புக் கருதியும், எனக்குள் இருந்து வரும் கவிதையூற்றின் மேல் உள்ள மதிப்பினாலும்.

திணறித் திணறிப் பாடுகிறேன், சிவரஞ்சனி ராகத்தில் (இந்த ராகத்துக்கு ‘சங்கரந்தனப்ரியா’ என்று இன்னொரு பெயரும் உண்டாமே!):

நினைத்துக் கொள்ள நிமிடம் போதும் – உன்னை
நினைத்துக் கொள்ள நிமிடம் போதும் – அதை
நிலைக்க வைக்கும் கவிதை யோகம்
உனக்கும் எனக்கும் உள்ள பந்தம்
ஒன்று மட்டும் என்றும் சொந்தம்
இறைவனே இறைவனே – என்னை
எழுதிடும் கவிதையே

மனைவி மக்கள் என்பதெல்லாம்
மரணம் வரையிலே
மனையும் பொருளும் தேகத்தைநான்
மறக்கும் வரையிலே – நீ
. . . . .

இந்த இடத்தில் ஏனோ என் தொண்டையடைத்துக் கொண்டுவிட்டது. மேலும் பாட வரவில்லை. நான் திணறுவதைப் பார்த்த சிவகுமார் உடனே என்னிடமிருந்து கவிதைத்தாளை எடுத்து த் தொடர்ந்து வந்த வரிகளைப் பாடியதும் மெய்மறந்து போனேன். அடுத்த சரணத்தை நானே சுதாரித்துக் கொண்டு பாடி முடித்தேன்.

உன்னை-siva
நினைத்துக் கொள்ள நிமிடம் போதும்
நிலைக்க வைக்கும் கவிதை யோகம்
உனக்கும் எனக்கும் உள்ள பந்தம்
ஒன்று மட்டும் என்றும் சொந்தம்
இறைவனே இறைவனே – என்னை
எழுதிடும் கவிதையே

மனைவி மக்கள் என்ப தெல்லாம்
மரணம் வரையிலே
மனையும் பொருளும் தேகத் தைநான்
மறக்கும் வரையிலே – நீ
ஏற்றி வைத்த தீபம் மட்டும்
அணைவ தில்லையே – எந்தக்
காற்று வந்து மோதி னாலும்
கலைவ தில்லையே
இறைவனே இறைவனே – என்னை
எழுதிடும் கவிதையே

உன்னைப் பாடும் எண்ணம் என்னுள்
யார் விதைத்தது – அந்தப்
பாட லுக்குள் பரவ சத்தை
யார் வளர்த்தது
பாடப் பாடத் திரைய றுந்து
நான் விழுந்தது
பாடல் உந்தன் பேர்ம றந்து
தேன் பொழிந்தது

உன்னை
நினைத்துக் கொள்ள நிமிடம் போதும்
நிலைக்க வைக்கும் கவிதை யோகம்
உனக்கும் எனக்கும் உள்ள பந்தம்
ஒன்று மட்டும் என்றும் சொந்தம்
இறைவனே இறைவனே – என்னை
எழுதிடும் கவிதையே

‘எந்தக் காற்று வந்து மோதினாலும் அணைவதில்லையே’ என்று சிவகுமார் பாடிய மெட்டு வெகு அலாதியாக என்னை ஈர்த்தது. நானே அந்த வரியைப் பாடியிருந்தால் அவ்வளவு அழகாக மெட்டு அமைந்திருக்க வாய்ப்பில்லை. என் மனத்தில் எழுந்த இசைக் காற்றைச் சற்றே திசைத்திருப்பி மலையமாருதமாய் வளையவரச் செய்த சிவகுமாரை மறக்க முடியுமா?

இப்படியாக என் வாழ்வில் காற்றும் கவிதையும் எத்தனைமுறை உறவாடியிருக்கின்றன!

முன்பொருநாள், இசைக்கவி ரமணனும் நானும் …..

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *