கே.ரவி-

‘நந்திவர்மன்’ நாடகம். அதில் நந்திவர்ம பல்லவனாக நான் நடிக்கிறேன். நந்திவர்மன் சகோதரன் காடவர்கோன் என்ற புலவனாக நண்பன் சுகி சிவம் நடிக்கிறான். நாடகம் அரங்கேறும் இடம், சென்னை, புனித தோமையர் தேவாலயத்துக்கு எதிரில் உள்ள சாந்தோம் உயர்நிலைப் பள்ளி வளாகம். நாடகத்துக்குத் தலைமை, அப்போதுதான் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த அறிஞர் அண்ணா. 1968-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி என்று நினைக்கிறேன்.

kr

நாடக உருவாக்கம் எங்கள் தமிழ் ஆசிரியர் தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன். மிகுந்த எதிர்பார்ப்போடு பெருந்திரளாகக் கூடியிருந்த மக்கள் கூட்டம். பின்னாளில், ‘ஆயிரம் நிலவே வா’ என்று எம்.ஜி,ஆரை அழைத்துத் திரைப்படத் துறையில் பிரபல பாடலாசிரியராகப் போகும் புலவர் புலமைப் பித்தன் அப்பொழுது சாந்தோம் உயர்நிலைப் பள்ளியின் தமிழ்த்துறையில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அண்ணாவின் தீவிரத் தொண்டராக அரசியலிலில் கால்பதித்திருந்த அவர் நந்திவர்மன் நாடகத்தில் தண்டமிழ்க் கொண்டல் எழுதியிருந்த அழகுதமிழ், அடுக்குமொழி வசனங்களுக்கெல்லாம் கைத்தட்டலோடு, விசிலும் அடித்துக் கொண்டிருக்கிறார். அந்த அளவுக்கு ஆர்வத் துடிப்பு மேலோங்க எல்லாரும் காத்திருக்கின்றனர், அண்ணாவின் வருகைக்கு.

சிவமும், நானும் பொழிந்து தள்ளும் அடுக்குமொழி வசனங்களுக்கெல்லாம் பலத்த கரகோஷம் காதைப் பிளக்க, அப்போது மேடையில் அவன் வருகிறான். அவன் யார்? என் இனிய நண்பன்; அன்றைய தமிழ்நாட்டு அமைச்சர்கள் பலர் தமிழில் தேர்ச்சி பெறக் காரணமாயிருந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் அ.சிதம்பரநாதன் செட்டியாரின் சகோதரி மைந்தன்; பின்னாளில், கவிஞர் வசந்தப்பிரியன் என்று புகழ்பெற்றுச் சமீபத்தில், அகால மரணத்தால் அமரனாகிவிட்ட அன்றைய அமிர்தலிங்கம். அவன் நந்திவர்ம பல்லவனின் அமைச்சராக அந்த நாடகத்தில் நடிக்கிறான்.

நாடகக் கதை நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். நந்திவர்மனை வீழ்த்தி விட்டுத் தான் நாடாள வேண்டும் என்று அவன் தம்பி காடவர்கோன் திட்டமிடுகிறான். நந்திவர்மனோ மாவீரன். மன்னிக்க வேண்டும், இன்றுபோல் அன்று அந்தச்சொல் ஒரு கெட்ட வார்த்தையில்லை!. மாவீரன் ஆனாலும் அவன் தமிழ்ப்பித்தன். எனவே அவனைப் போர்க்களத்தில் வீழ்த்துவதைக் காட்டிலும் மிக எளிதாகத் தன் புலமையால் வீழ்த்திவிட எண்ணிக் காடவர்கோன் தன் அண்ணா நந்திவர்மன் மீது அறச்சொற்கள் விரவிவரும் வண்ணம் பாடல்கள் புனைகிறான். அப்பாடல்களைப் பாடக் கேட்டால் நந்திவர்மன் தீப்பற்றிக் கொண்டு கருகிப் போய்விடுவான். இதுதான் அவன் திட்டம். பாடல்கள் தயார், ஆனால், கடைசி நேரத்தில் சகோதர பாசம் மேலிட்டுத் தடுக்க, அந்தப் பாடலைப் பாட அவன் மறுக்கிறான். அவன் பாடத் தான் கேட்டால் எரிந்து விடுவோம் என்று தெரிந்த பின்னும், தமிழார்வத்தால் அவன் பாடியே தீர வேண்டும் என்று நந்திவர்மன் தூண்டுகிறான். காடவன் தொடர்ந்து மறுக்க, அவன் பாடத்தான் வேண்டும் என்ற அரச கட்டளையோடு, அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்து “காடவா” என்று நந்திவர்மன், நான் தான், கர்ஜிக்க வேண்டும், உடனே வேறு வழியின்றித் தழுதழுத்த குரலில், “பாடவா” என்று காடவனாக நடிக்கும் சிவம் கேட்டுவிட்டு அறம் பாட வேண்டும். இப்படித்தான் காட்சியமைக்கப் பட்டிருந்தது.

உணர்ச்சி வேகத்தில், ‘காடவா’ என்ற முழக்கத்தோடு நான் சிவத்தின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை, நிஜமாகவே, பலமான அறை, பளார் என்று அடித்துவிட, நிஜமாகவே வலிபொறுக்க முடியாமல் சிவம், ‘பாடவா’ என்று குரல் தழுதழுக்கச் சொன்னதும் எல்லாரும் பலத்த கரகோஷம் எழுப்ப, அந்தச் சத்தம் ஓயவே சற்று நேரமாகியது.

எப்படியும் தானும் கைத்தட்டல் வாங்க வேண்டும் என்ற ஆவலில், நாடக எழுத்துருவில் இல்லாத, தண்டமிழ்க் கொண்டல் எழுதாத ஒரு சுயவசனத்தைச் சொல்லிக் கைத்தட்டலும் வாங்கி விடுகிறான், அமைச்சனாக நடிக்கும் நண்பன் அமிர்தலிங்கம். எப்படி? அது என்ன வசனம்? இப்போது காட்சியைப் பார்ப்போம்.

காடவன் அறம்பாடுகிறான்:

வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
வையகம் அடைந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந்தவுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் புகுந்ததுன் மேனி
யானுமென் கவியும் எவ்விடம் புகுவேம்
நந்தியே எந்தயா பரனே

இப்படித் தான் தண்டமிழ்க் கொண்டல் நந்திக் கலம்பகப் பாடலை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தார். பல பதிப்புகளில் வெவ்வேறு வடிவில் உள்ளது இப்பாடல். ஆனால் மேற்சொன்ன பாடமே மற்றவற்றைக் காட்டிலும் பொருத்தமாகவும், சிறப்பாகவும் உள்ளது என்பது என் பணிவான கருத்து.

அறச்சொற்கள் மிகுந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் நந்திவர்மனாகிய என்னைச் சுற்றி எரிதழல் மூண்டெழ, நான் அத்தழலில் உயிரிழக்க, அப்போது அமைசச்சர், அதுதான் நம் அமிர்தலிங்கம் தன் சுயவசனத்தைப் பேசிக் கைத்தட்டல் வாங்குகிறான். அந்த சுயவசனம் இதுதான்: “ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்ட அண்ணா மீண்டு வருவாரா” என்று நந்திவர்மனின் தம்பி காடவனிடம் அமைச்சராக நின்று அமிர்தலிங்கம் பேசுகிறான்.

காட்சி முடிந்து திரை விழுகிறது. அமிர்தலிங்கத்தின் கன்னத்தில் பலமாக ஓர் அறை விழுகிறது. அடிப்பவர் எங்கள் ஆசான், நாடக ஆசிரியர் தண்டமிழ்க் கொண்டல். “ஏற்கனவே அறம் பாடும் நாடகத்தில் இப்படி நீவேறு சொந்தச் சரக்காக அறம்பாடி விட்டாயே! மாண்ட அண்ணா என்று சொல்லி விட்டாயே!” என்று அவர் குமுறுகிறார். திரைவிழும் முன் ஓர் அறை விழுந்தது; திரை விழுந்ததும் ஓர் அறை விழுந்தது. முதலில் சிவத்துக்கு, அடுத்தது அமிர்தலிங்கத்துக்கு. மொத்தத்தில் அன்றைய நாடகம் இரண்டு அறைகளோடு நிறைவுபெற்றது.

அடுத்த ஆண்டே, அதே மாதம் அதே நாளில் அறிஞர் அண்ணா மாண்டார் என்ற செய்தி இடிபோல் செவிப்பறையில் பலத்த அறையாக விழும் என்று அப்பொழுது யார் நினைத்திருக்க முடியும்?

என்ன சிகா, இப்பொழுது புரிந்து கொண்டாயா, சொல்லின் வலிமையை. கவிஞன் அழைத்தால் அமாவாசையன்றும் நிலா வரும். இசைக்கவி ரமணனின் அருட்குறளில் வருவது போல், தீயென்றால் காடெரியும், தேன் என்றால் பூ மகிழும். அதுதானப்பா வாய்நின்ற பேரருள் வாக்கு!

சிகா முணுமுணுக்கிறான்: “மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்!”

முணுமுணுக்காதே சிகாமணி! மந்திரங்கள் முணுமுணுப்பதற்கல்ல. முழங்குவதற்கு.

நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமு ணென்று சொல்லும் மந்த்ரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

சிவவாக்கியர் சொன்ன சட்டிக்கும், சட்டுவத்துக்கும் தெரியுமோ என்னமோ, எங்கள் வீட்டுச் சட்டுவத்துக்குத் தெரியும். நேற்றுத் தேங்காய் எண்ணையில் அவியலுக்குத் தாளித்த வாசனை இன்று உருளைக்கிழங்குக் கறியிலும் தொற்றிக் கொண்டிருக்கிறதே! சட்டுவத்தை எப்படித் தேய்த்தாலும் மூன்று நாட்களுக்கு அந்த வாசனை இருக்கிறதே! பூர்வ ஜன்ம வாசனையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் போகாது சாமி! சட்டுவமோ, சத்துவமோ! ராஜஸமோ, பூண்டு ரஸமோ! எதுவானால் என்ன?

அதெல்லாம் சரி, இப்பொழுது உருளைக் கிழங்குக் கறியின் வாசனை என் மூக்கைத் துளைக்கிறது. சாப்பிட்டுவிட்டு, உண்ட களைப்புத் தீர்ந்த பிறகு மீண்டும் சந்திப்போம்!

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “காற்று வாங்கப் போனேன் (12)

  1. தங்கள் நாடக அனுபவங்களும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் நெஞ்சம் நெகிழ்த்துகின்றன. சரளமான எழுத்தோட்டம். மிக அருமை. பாராட்டுகள்.

  2. நன்றி சகோதரி. உங்கள் கவிதையோட்டம், அதன் கனம், கரு எல்லாமே மிகச் சிறப்பு. உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், உங்கள் தொலைபேசி எண், மின்னஞ்சல் எனக்கு அனுப்பலாம். என் மின்னஞ்சல் krkavithai1301@gmail.com. என் செல்பேசி எண் 98400 49060. கே.ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *