கலங்காதிரு மனமே
–கவிஞர் காவிரிமைந்தன்.
கலங்காதிரு மனமே
காரைக்குடிக்கருகே ஒரு சிறிய கிராமம்.. சிறுகூடற்பட்டி.. வாணிபக்குலத்தில் வகையாய் செழித்தவர்கள் மத்தியில் வாழ்க்கையெனும் போராட்டத்தில் வேலைதேடிப் புறப்பட்ட முத்தையா என்னும் இளைஞர்! எட்டாம் வகுப்பு வரை மட்டுமே எட்டிப்பிடிக்க முடிந்த நிலையில் எழுதுதலும் பல்வகை நூல்களைப் படித்தலுமாய்.. இலக்கிய தாகம் கொண்டு தொடங்கிய பயணத்தில்.. பதிப்பகத் துறையில் உதவி ஆசிரியராக .. பணி புரிய விண்ணப்பித்து.. நின்றார் அந்த முதலாளியிடம். அப்போது உன் பெயர் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு விடை தர முத்தையா எடுத்துக்கொண்ட நிமிடம் அரை நிமிடமே. கற்பனையாக தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர்தான்.. இதோ கால வரலாற்றில் நிலைத்த புகழுக்கு உரியவராய்.. அவரின் பெயராக நிலைத்துவிட்டது. கண்ணதாசன்.. அந்தக் காலக்கட்டத்தில் கம்பதாசன், வாணிதாசன், என காளிதாசன் வரிசையில் கவிஞர்கள் புகழ் பெற்றிருக்க.. அதே பாணியில் தன் பெயரை வழிமொழிந்திருக்கிறார்.. கவிஞர். அதைக் கேட்ட முதலாளியும்.. ஆம்… நான் கூட கேள்விப் பட்டிருக்கிறேன்.. ஒரு சில கவிதைகள்.. கதைகள் படித்திருக்கிறேன் என்றாராம்.. இதுதான் உலகம்.. அப்படி சூட்டப்பட்ட புனைப் பெயர்தான்.. தமிழ்த் திரையுலகில் .. இலக்கிய உலகில்.. கவிஞர் என்கிற பெயர் உச்சரிக்கப்படுகிற போதெல்லாம் கண்ணதாசனாய் நினைவிற்கு வருகிற வரலாறாய் மாறியிருக்கிறது.
அதைத் தொடர்ந்து.. கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில்.. வாழ்வின் திருப்பமாக.. இயக்குனர் ராம்நாத் அவர்களின் ஆதரவில்.. கண்ணதாசன் திரைப் படத்திற்காக முதன் முதலாய் பாடல் எழுத வாய்ப்பு அமைந்தது. அந்தப் பாடல் இதோ.. கன்னியின் காதலி திரைப்படத்தில்..
கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே
நம்பிக்கையும் ஆறுதலும் என எண்ணிலாப் பாடல்கள் எழுதிக் குவித்த கவியரசர் தனது முதல் பாடலிலேயே முத்திரைப் பதித்திருக்கும் விதம் மெய் சிலிர்க்க வைக்கிறது! மகா கவிஞனே! உன் யுகம் கவிதைகளின் பொற்காலம்! தமிழ் மொழியை சிம்மாசனத்தில் அமர்த்தி அழகு பார்த்த முத்தையா என்னுமெங்கள் கண்ணதாசனே.. நின் திறம் எண்ணி வியப்பது.. இப்பாடல் முதல் துவக்கமே என்பேன்!
காணொளி: -http://youtu.be/okJTPVr3bUI
பாடல்: கலங்காதிரு மனமே
படம்: கன்னியின் காதலிகலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமேகடினப்படாமல் ஏதும் கைக்கு வராது
கஷ்டப்படுவார் தம்மை கை நழுவாது
அடுத்தடுத்து முயன்றால் ஆகாததெது ஆகாததெது
ஆண்வாடை கூடாதென்ற அல்லியும் ஒருநாள்
அர்ஜுனன் வலைதனில் வீழ்ந்தாள் சரியாய்
(கலங்காதிரு மனமே )பகட்டுக்காக உம்மை பார்க்கவே மறுத்தாலும்
பருவக்காலம் அவளை பாடாய் படுத்திவிடும்
அடுத்த கணம் உன்மேல் ஆசையும் வைப்பாள்
ஆஹா என்று முத்தம் கொடுப்பாள்
(கலங்காதிரு மனமே )
தனது வருகையைப் பதிவு செய்த முதல் பாடலிலேயே நம்பிக்கை நங்கூரங்களை தந்திருக்கும் அதிசயத்தை என்னென்பது? வர கவிஞரா மலையரசி அருள்பெற்ற மகா கவியா? ..
நல்ல பாடல். நான் முதன் முதலாக கேட்கிறேன்
உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே
அடுத்தடுத்து முயன்றால் ஆகாததேது ஆகாததேது
என்று பாடப் படுகிறது.
இதுபோல பழையப் பாடல்கள் பகிருங்கள்.