கே.ரவி

0 Rநான் மூன்று முறை கவிஞரை நெருக்கத்தில் சந்தித்திருக்கிறேன். எந்தக் கவிஞரை என்று கேட்கக் கூடாது. எப்படி பாரதி என்றதும் எந்த பாரதி என்ற கேள்வி எழாதோ, எழக் கூடாதோ, அப்படியே கவிஞர் என்றால் எந்தக் கவிஞர் என்ற கேள்வியெழ வாய்ப்பே இல்லை. கவிஞர் என்றால் கண்ணதாசனே. அவருடன் நான் நெருங்கிப் பழகாத போதும் ஏனோ அவரிடம் எனக்கு ஓர் ஈர்ப்பு; அதைவிட, அவரை நினைக்கும் போதெல்லாம் ஒரு பாச உணர்வு என் நெஞ்சில் பொங்கியெழும்.

முதல்முறை அவரை நெருக்கத்தில் சந்தித்தது சென்னை, லயோலா கல்லூரியில் நடந்த ஒரு கவிதைப் போட்டியில். 1969-ஆம் ஆண்டு, நான் விவேகானந்தா கல்லூரியில், புகுமுக வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் என் கல்லூரியின் சார்பில் கலந்து கொள்ள நானும் இன்னொரு மாணவரும் தேர்வு செய்யப்பட்டிருந்தோம். யாரந்த இன்னொரு மாணவர் என்று எனக்கு அப்பொழுது தெரியாது. அந்தப் போட்டியில் கலந்து கொள்ள நான் லயோலா கல்லூரிக்குச் சென்றிருந்தேன். அங்குதான் கவிஞரை முதன் முதலில் சந்தித்தேன். அவர்தான் கவிதைப் போட்டிக்கு நடுவர்.

அந்த இடத்தில் அப்போது இரண்டு பெரிய கவிஞர்களைச் சந்திப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கவிஞர் ஒரு மாக்கவிஞர்; இன்னொருவர்? ஏன், அந்த இன்னொருவரைச் சந்தித்து வெகுநாட்கள் வரையிலும் அந்த இன்னொருவரை ஒரு சிறந்த கவிஞர் என்று நான் அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை. அந்த இன்னொருவர்தான் விவேகானந்தா கல்லூரி சார்பில் அந்தக் கவிதைப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த இன்னொரு மாணவர். அவர் அப்போது இளங்கலை வகுப்பு, பி.எஸ்.சி தாவரவியல், மூன்றாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன்.

நானும் அவரும் முதன்முதலாக லயோலா கல்லூரியில், அதுவும் அங்கிருந்த ஓய்வறையில் சந்தித்துக் கொண்ட போதுதான் ஒருவரை ஒருவர் இன்னார் என்று தெரிந்து கொண்டோம். அன்று கவிதைப் போட்டியின் தலைப்பு ‘அழியா அழகு’. பல கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட அந்தப் போட்டியில் எந்தப் பரிசும் நாங்கள் இருவருமே பெறவில்லை. ஆனால், என் கவிதையிடையே தெறித்த சில வரிகளை, அதுவும் குறிப்பாகக் ‘கலையும் கலையும்” என்றும் “மறையும் மறையும்” என்றும் முடியும் வரிகளைக் கவிஞர் ரசித்துக் கேட்டார் என்ற ஒரு பேறே போதுமென்றாலும், என் சக மாணவராய் வந்திருந்த அந்த இன்னொருவரைச் சந்தித்த பெரும் வாய்ப்புக்கு வேறெந்தப் பரிசுகளும் ஈடாகாது.

அந்த இன்னொருவரை அதற்குப் பிறகுச் சில ஆண்டுகள் சந்திக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மீண்டும், 1970-களில் நாங்கள் சந்தித்துக் கொண்டதும், என்னுள் இயல்பாக இருந்த இசைவேட்கைக்குத் தூண்டுகோலாக அவருடைய பாடல்கள் அமைந்ததும் ஒரு தனி வரலாறு. அவர், ரமணன், நான் ஆகிய நாங்கள் மூவரும் இன்றைய கவிதையுலகின் கவிமூவர் என்று போற்றப் படுவோமோ என்று கூட நான் நினைத்துப் பார்த்திருக்கிறேன். கர்வம் யாரை விட்டது?

இமை வாசலின் ஓரத்திலே – ஏனோ
முத்துக்கள் பனிக்கின்றன – அவை
வந்ததும் பூத்ததும் வீழ்ந்ததும் பின்னிழை
நீர்க்கரை ஆனதும் யார்புகல்வார்

இப்படித்தான் ஒருநாள் அமிர்தவர்ஷினி ராகத்தில் அவர் பாடினார். அப்போது அவர் ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டிருந்தார். நான் பின்னால் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தேன். இடம், லஸ் அமிர்தாஞ்சன் எதிரில் விவேகானந்தா கல்லூரி போகும் சாலையில், இசையமைப்பாளர் திரு.ஆர்.சுதர்சனம் அவர்கள் வீட்டுக்கு அருகில். அப்போது ஒரு பொறிதட்டியது. அவர் ஏதோ சாதரணமான கவிஞர் இல்லை. நிச்சயம் ஒரு மிகப்பெரிய கவிஞர் என்று எனக்குள் ஒரு பட்சி சொன்னது.

vaveesuநாளாக நாளாக எங்கள் கவிதை நட்புச் சுடர் விட்டு வளர்ந்தது. அவர், ஆம், விவேகானந்தா கல்லூரியில் என் சக மாணவர், பின்னாளில் அதே விவேகானந்தா கல்லூரியின் முதல்வராக நற்பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் தாவரயியல் பேராசிரியர், அவரே என் கவிதையார்வம் சரியான தடத்தில் செல்ல உதவ இருப்பவர்களில் ஒருவர் என்று அன்று அவரை அடையாளம் கண்டு கொண்டேன். அவரே வ.வே.சு. என்றும் வி.வி.எஸ். என்றும் நான் அழைக்கும் இனிய நண்பர். ஸ்கூட்டர் தேரில் அர்ஜுனன் போல் நான்…!

மறுபடியும் கவிஞரிடம் வருவோம்.

கவிஞரை நான் இரண்டாவது முறை சந்தித்தது விவேகானந்தா கல்லூரியிலே. 1970-ஆம் ஆண்டு விவேகானந்தாimages கல்லூரியில் கவிதைப் போட்டிக்கு அவர் நடுவராக வந்திருந்தார். நானும் போட்டியில் கலந்து கொண்டேன். போட்டித் தலைப்பு ‘வாய்மையே வெல்லும்’. முதலில் அவர் கவிதையாகவே பேசும் போது சொன்னார்: ‘நான் எதையும் மறைப்பதில்லை, என் குடிப்பழக்கம் உட்பட. குடித்தாலும் குடிக்கின்றேன் என்று சொல்லிக் குடிக்கின்றேன். அதனால் நான் வாய்மை தவறாதவன். வாய்மையே வெல்லும் என்ற தலைப்பில் நடக்கும் இந்தக் கவியரங்கத்துக்குத் தலைமை தாங்கும் தகுதியுள்ளவன்’. இப்படியாக அவருடைய முன்னுரை அமைந்தது.

அன்று இளமைக்கே உள்ள துடிப்போடும், குறும்போடும் கவிதை படித்தேன்; மன்னிக்கவும், இப்பவும் உண்டுங்க. நான் எப்பவும் இளைஞன் தானுங்க. (அடாடா, இந்தப் பல்லவி நல்லா இருக்கே!).

நான் என் கவிதை படிக்கும் போது சொன்னேன்:

குடித்தாலும் குடிக்கின்றேன் என்று சொல்லிக்
குடிப்பதுதான் வாய்மையெனச் சொல்லி விட்டார்
குடியாலே குழறுகிற நாவில் உண்மை
குடியிருக்க முடியாது மறந்து விட்டார்
பிடிவாதம் செய்யாமல் விடச்சொல் கின்றேன்
பிழைதிருத்த வரவில்லை விண்ணப் பம்தான்

இப்படிப் படித்த பிறகு நமக்கெங்கே பரிசு தரப் போகிறார் என்று கவிதைப் போட்டி முடியும் வரைக்கும் காத்திருக்காமல் நான் வீட்டுக்குச் சென்று விட்டேன். அப்போது என் வீடு கல்லூரிக்குப் பக்கத்தில், மயிலை பலாத்தோப்பில் இருந்தது. இரவு 9 மணிக்கு என் வீட்டுக் கதவை யாரோ தட்டுகிறார்கள். திறக்கிறேன். என்ன ஆச்சரியம், எங்கள் கல்லூரி மாணவர் பேரவையின் தலைவர், ராஜகோபாலும், சில நண்பர்களும் என் கையைப் பற்றி இழுத்துக் குலுக்கி “உனக்குத்தான் கவிஞர் முதல் பரிசு அறிவித்தார், ஏன் வந்து விட்டாய்” என்றதும் அசந்து போய்விட்டேன். என்ன பெருந்தன்மை. கவிஞர் முதலில் ஒரு மஹா ரசிகர் என்பதைப் புரிந்து கொண்டேன்.

கவிஞருடன் மூன்றாவது சந்திப்புப் பற்றி நாம் அடுத்த முறை சந்திக்கும் போது சொல்கிறேனே.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “காற்று வாங்கப் போனேன் – பகுதி 13

  1. அருமையான நினைவலைகள். நானும் விவேகாநந்தா காலேஜ் மாணவன் தான் (1951 -1954) நாம் எல்லாரும் சேர்ந்து ஒரு நாள் காலேஜில் கலாய்ப்போமே!

  2. நன்றி. கட்டாயம் ஏற்பாடு செய்கிறேன். நான் விவேகானந்தா கல்லூரி நிர்வாகக் குழுவிலும் உறுப்பினராக இருக்கிறேன். உங்கள் மின்னஞ்சல், தொலைபேசி ஆகிய தொடர்புத் தகவல்கள் அனுப்பி வையுங்கள். என் மின்னஞ்சல் krkavithai1301@gmail.com. என் செல்பேசி 9840049060. உங்கள் பெயரைத் தமிழ் வடிவில் பார்க்க விரும்புகிறேன், சரியாக உச்சரிக்க. கே.ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *