இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(113)

–சக்தி சக்திதாசன்.

bertrand-russell-on-religion

அன்பினியவர்களே !
இனிய வணக்கங்களுடன் அடுத்தொரு மடலிலே உங்களுடன் கலப்பதில் மிகுந்த மகிழ்வடைகிறேன்.

வாழ்க்கை எம்மீது பல சமயங்களில் விளக்கமில்லா நிகழ்வுகளை சராமாரியாகப் பொழிகின்றது. இது ஏன் நடந்தது ? எப்படி நடந்தது என்னும் விளக்கம் தெரியாமல் திண்டாடிப் போகும் நிலையில் பலர் பல சமயங்களில் அல்லாடுகிறோம்.

இன்றைய இந்த காலக்கட்டமானது விஞ்ஞானயுகம் எனும் அடிப்படையோடு தான் வந்த வழியறியாது வெகு வேகமாக முன்னேறிச் செல்லும் சமூகங்களை உள்ளடக்கிய ஒரு கால கட்டமாகிறது.

காலமாற்றத்தை உள்வாங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். காலத்துக்குக் காலம் மனிதனும் அவன் சார்ந்த சமூகமும் வாழ்வின் மாறுதல்களுக்கு தம்மை உட்படுத்திக் கொண்டிருக்கா விட்டால் மனிதன் இன்னும் கற்காலத்திலேயே உழன்று கொண்டிருந்திருப்பான்.

மனித வாழ்க்கையை வளம்படுத்துவதற்கு ஆத்திகவாதம் எத்தனைதூரம் உதவியிருக்கிறதோ அதே போல நாத்திகவாதமும் தனது பங்களிப்பைச் செய்திருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

இப்படிக் கூறும் நான் ….முழு ஆத்திக நம்பிக்கை கொண்டவன். பின் ஏனிந்தக் கூற்றை முன்வைக்கிறேன்.

இந்த உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வின் பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது என்பதை முழுமையாக நம்புக்கிறவன் நான். அப்படியாயின் நாத்திகவாதம் பேசும் ஒருவரால் இவ்வுலத்திற்கு நன்மை பயக்கக்கூடிய அதிவிசேட கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளும் நாம் ஏன் ஒருவருக்கு இருக்கும் நம்பிக்கையை தனிமனித சுதந்திரத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாது ?

நாம் எவ்வளவுதான் விஞ்ஞானமயப்படுத்த பட்டாலும், மாறுதலை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டாலும், சில அடிப்படை யதார்த்தங்கள் என்றுமே மாறா நிலை கொண்டவை.

குறிப்பாக ஒரு மனிதனின் வாழ்க்கை உறவுமுறைகள் , ஆன்மீக நம்பிக்கைகள் என்பவை மனிதனின் அடிப்படை மன ஓட்டங்களோடு பின்னிப் பிணைந்தவை. அவற்றை மாற்ற முற்படும் போது சமுதாயத்தின் ஆணிவேர்களே அசைத்துப் பார்க்கப்படுகின்றன.

நான் இங்கிலாந்து எனும் இந்த மேலைத்தேச நாட்டினுள் முதன் முதலாகக் கால் வைத்த நாளுக்கும் ஏறத்தாழ நாற்பாதவது வருடத்தினுள் காலடி வைத்திருக்கும் இந்த நாளுக்கிடையே உள்ள இடைக்கால  வேறுபாட்டை என் மனத்தாராசினில் நிறுத்துப் பார்க்க விழைகிறேன்.

இவை ஏதோ சரித்திர உண்மைகளோ அன்றி விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் பட்ட ஆதாரங்களோ அல்ல. வெறும் ஒரு சராசரி புலம்பெயர்த் தமிழன் பார்வையில் விழுந்த வித்தியாசமான கோணமே !

அன்று எவையெல்லாம் பேசப்படுவது சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளப்படமுடியாது என்று தள்ளி வைக்கப்பட்டனவோ, அவை எல்லாம் இன்று பகிரங்கமாக ஊடகங்களில் விவாதிக்கப்படும் ஒரு நிலை உள்ளது.

இவற்றில் சில, காலமாற்றத்தின் காரணத்தால் விவாதிக்கப்படவேண்டிய அவசியம் கொண்டவையாக இருப்பினும், வேறு சில மக்களின் அடிமனதில் இழைந்தோடிய ஆன்மீக பலம் குன்றியமையால் ஏற்பட்டதுவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

காலம்காலமாக இங்கிலாந்து நாட்டில் வாழ்வோரில் பெரும்பான்மையினர் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்களே ! ஏன், இங்கிலாந்து நாடு ஒரு கிரிஸ்துவ நாடென்னும் நம்பிக்கையுடனேயே நான் இந்நாட்டினுள் நுழைந்தேன் ஆனால் இன்றோ இந்நாட்டின் அடிப்படை மதத்தின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை வலுவிழந்து போய்விட்டது போன்றதோர் நிலைமை என்றே எண்ணத் தோன்றுகிறது.

இந்நிலை ஏன் ஏற்பட்டது ?

இந்நாட்டினுள் வந்து குடியேறிய ஆசிய ஆப்பிரிக்க மக்களின் தொகை பெருகியதோடு, அவர்கள் தம்மதங்களின் மீதும் தம்முடைய கலாச்சார விழுமியங்களின் மீதும் கொண்ட ஆழ்ந்த பிடிப்பின் அழுத்தம் கூடிக் கொண்டு போவதை அண்மைக் காலங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.

உதாரணமாக இங்கிலாந்தின் ஒவ்வொரு முக்கிய நகரங்களில் ஒன்றல்ல, இரண்டு மூன்று இந்துக் கோவில்கள் இயங்குகின்றன. அவை மக்கள் சென்று வணங்குவதற்குரிய வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. தம்முடைய உற்சவகாலங்களில் தேரிழுப்பது போன்ற திருவிழா வைபவங்களையும் அங்கு கடைப்பிடிக்கிறார்கள்.

அதே போல இஸ்லாமிய மதத்தவரும் தமது மத அடையாளங்களையும் தமது மத நம்பிக்கைகளையும் மிகவும் அழுத்தமாக இம்மண்ணில் பதித்து வருகிறார்கள். அதே சமயம் இங்கிலாந்தின் சொந்தப் பிரஜைகளான ஆங்கிலேய மக்களோ தமது மத அடையாளங்களாகிய சர்ச்சுகளுக்கு செல்லும் வழக்கம் குன்றிக் கொண்டே போகிறது.

அவர்களது ஆன்மீக உணர்வுகள் மங்கிக் கொண்டே போகிறது. அளவுக்கதிகமான மற்றைய மத அடையாளங்கள் காலாச்சார விழுமியங்கள் என்பனவற்றின் அதிக விகிதாசாராத்திலான ஆக்கிரமிப்புகள் தான் இவ்வீழ்ச்சிக்குக் காரணமா? எனும் எண்ணம் மேலோங்குவது தவிர்க்கப்படமுடியாத ஒன்று.

எது எப்படி இருப்பினும் இத்தகைய ஆன்மீக உணர்வுகளின் அடிப்பட வீழ்ச்சி ஒழுங்கான கட்டமைப்புக் கொண்ட சமுதாய உருவாக்கத்தை தடுக்கும் வகையிலமைந்துள்ளது.

மதம், நிறம் என்ற  வேற்றுமைகள் அதிகமாக மக்கள் மனங்களிடையே துளிர் விடத் தொடங்கியுள்ளது போல் தோன்றுகிறது.

நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் எமது அடையாளத்தை, எமது கலாச்சாரப் பின்னனியை இழந்து விடக்கூடது என்பது முக்கியம்.

ஆனால் அதற்காக நாம் எம்மை அடையாளப்படுத்தும் முகவரியை நாம் வாழும் நாட்டு மக்களின் மீது திணிக்கும் வகையில் நடந்து கொள்வது எந்தவொரு மாற்றத்திற்குமான முன்னேற்றத்திற்குரிய  அறிகுறியாகாது.

நாம் எமது ஆன்மீக உணர்வுகளில் கொண்டிருக்கும் வலிமை எமது மதத்திற்குள் எம்மை நல்வழிப்படுத்தும் மார்க்கத்திற்காகவேயன்றி மற்றொருவர் மனதிலிருக்கும் நம்பிக்கையைக் குன்றச் செய்வதற்காக இருக்கக் கூடாது.

கவியரசரின் வரிகளிலே.

“பழகும் வகையில் பழகிப் பார்த்தால்
பகைவன் கூட நண்பனே
பாசம் காட்டி ஆசை வைத்தால்
மிருகம் கூட நண்பனே “

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

 

 

படம் உதவிக்கு நன்றி:
http://zerobs.net/bertrand-russell-on-religion
[http://zerobs.net/media/bertrand-russell-on-religion.jpeg]

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *