பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை, போளூர்
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து திருவண்ணாமலையில் உள்ள போளூரில் ஆகஸ்டு 11 அன்று தேமுதிக சார்பில் கட்சியின் தலைமைக் கழகத் தேர்தல் பணிச் செயலாளர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் மேல் மாநில அரசின் விற்பனை வரியை 12.5 சதவிகிதமாக உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குக் கட்சியின் தலைமைக் கழகத் தேர்தல் பணிச் செயலாளர் மாஃபா பாண்டியராஜன் தலைமை தாங்கினார். கட்சியின் துணைச் செயலாளர் கராத்தே சுரேஷ்குமார், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் டாக்டர் ஜெய்சன் ஜேக்கப், திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் தமிழன்னை பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள், பொதுமக்கள் உட்பட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினார்கள். ஊர்வலத்தின் நிறைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை வருமாறு:
1. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் மீதான வரியை 12.5 சதவிகிதமாகவும் குறைத்து, விலையைக் குறைக்க வேண்டும்.
2. விலைவாசி உயர்வு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்களுக்குக் குடும்ப நல நிதியாக மாதந்தோறும் 500 ரூபாய் வேண்டும்.
3. திருவண்ணாமலை மாவட்டத்தில் கரும்புச் சக்கை போன்ற விவசாயக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
4. நலிவடைந்த நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றப் பட்டு நெசவு தொழிற்கொத்து (கிளஸ்டர் ஸ்கீம்) உருவாக்க வேண்டும்.
5. அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டண உயர்வை மாநில அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.