இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக   (21)

அவையும் மலர்கள்தான்

{பாடல் கேட்டு மகிழ}

Paintings of rural indian women - Oil painting (9)

வினையாலணையும் பெயர் என்றார்

துயிலாலணையும் இமைகளோடு போராடிக் கொண்டிருந்தேன்

”இலக்கியமும் இலக்கணமும் இரண்டு கண்கள் என்றார்”

இரண்டுமே செருகிவிட்டன

”அன்புதான் பாசம் அதுதான் நேசம் அதுவேதான் நட்பு

அதனால்தான் காதல் அதன்முகமே தேசபக்தி…”

கனவில் கேட்ட வாசகங்களின் விழிப்பில்

கைகளை விலக்கிக் கழுத்தைத் திருப்பினேன்

சன்னல் வழியே மைதானத்தில்……….

 

அழகான மரம் அது

ஒருக்களித்துப் படுத்திருக்கும் ஒய்யார தேவதைகள் போல்

பெருத்தும் சிறுத்தும் விடலை மனங்களைப்

பின்னி எடுத்தபடிப்

புரண்ட கோலத்தில் கிளைகள்

 

ரீதி மாறாத காதல் மனம்போல்

ஒரேவிதமாய் ஆயிரம் மலர்கள்

ஒரே குடும்பம்தான் என்றாலும்

குழுக்களாய்ப் பிரிந்து வம்பளந்து

கூடும்போது குலாவிக் கொள்ளும்

 

விடியும் முன்னேயே ஈரத் தலையை

முடிந்தபடி வந்துநிற்கும் மூக்குத்திப் பெண்ணின்

மூக்கை உரசும் மலர்கள்

பூக்குடலையில் மூச்சுவிட்டுப்

பூசைக்குப் போய்ச்சேரும்

 

பள்ளிக்கூடக் காலை நேரம்

பாரத மாதா புகழ்பாடி

கொடியேற்றி விறைக்கும்போது

நம்பற்குரியோர் சூழ்ந்திருக்கும்

கம்பத்திருந்து கொட்டும் சில

 

கூந்தல் கருமையைக் கூட்டிக்காட்டும் சில

ஏந்தி மண்டியிட்டு

இதயத்தைக் கொடுப்பதற்காகச் சில

 

அம்மாவுக்கும் அக்காவுக்கும்

ஆசை ஆசையாகச் சில

சும்மாவேனும் பறித்துப் பார்க்க்ச் சில

இம்மியும் விலகாமல் மரத்தோடு சில

இறந்தவரின் வெந்த நெஞ்சில் சில

 

ஒரே மரம். ஆயிரம் பூக்கள்

உள்ளுக்குள்ளே நூறு குழுக்கள்

ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பயன்கள்

 

சில மலர்கள் மட்டும்

காயாமலும் கனியாமலும்

யார்கையிலும் சேராமலும்

யாரும் பார்க்காமலும்

அடிமரத்தின் நிழலிருட்டில்

உதிர்கின்றன,

உன் கண்ணில் இன்னும் படாத

என் காதலைப் போல்

 

அவையும் மலர்கள்தான்

அதே மனதைச் சேர்ந்தவைதான்

என்று நீ உணர்கின்ற நேரம்

உதிர்ந்த மலர்கள் உரமாகி

ஒவ்வொரு கிளையிலும் முகங்காட்டி

 

எவ்வழியேனும் உன்

மென்விரல் தீண்ட

எப்படியேனும் உன்

வன்னக் கால்களை வருடிப் பார்க்க

 

எழுந்த கண்ணீரைத் தேனாய் இறுக்கி

ஏங்கிச் சிரித்திருக்கும்…………

 

படத்திற்கு நன்றி

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *