இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக   (25)

 

சிலநாட்கள்

{கேட்டு மகிழ}

0_5cd93_2d2431e3_orig[1]

சிலநாட்கள் இப்படித்தான்
கையில் எடுத்ததெல்லாம் கீழே விழும்
காகிதம் கூட கனக்கும்
எத்தைச் சொன்னாலும் தப்பாய்ப் போகும்
அவளுக்கே கூட
என் சொற்கள் சலிக்கும்

சில நாட்கள் அப்படித்தான்
உறங்கவே முடியாத உற்சாகம்
ஒவ்வொர் அடியிலும் வெற்றிக் கல்
அவளாகவே வந்து
கழுத்தைக் கட்டிக்கொள்வாள்

நாட்களே ஏனிப்படி இருக்கிறீர்கள்?
ஏன் நடிப்பு? ஏதுக்கு நொடிப்பு?

தேதியைக் கிழித்தான் சிறுவன்
மீதி,
நாட்காட்டியில்
மிஞ்சிக் கெஞ்சிக் கொண்டிருந்தது
செய்த கப்பலைச் செலுத்த வேண்டி
மணலில் சரிந்து நதியில் இறங்கினான்

வளர்ந்தும் குறுகியும் தளர்ந்தும்
கரைதிமிறும் வெள்ளமாகவும்,
அவ்வப்போது
கரையோடு ஒதுங்கி ஆதங்கம் பேசியும்
வறண்டும் கூட
வளைந்து வளைந்து தொடரத்தான் செய்கிறது நதி.

ஆற்றுக்குக் கடலும் முடிவில்லை என்றால்
அது நடுவே நின்றாலென்ன?
அடித்துக்கொண்டு சென்றாலென்ன?
நதிபோலத்தானே நமது நாட்களும்?
நகர்த்த முடியாத நிறுத்த இயலாத
நிரந்தரத் தொடர்ச்சிதானே?

ஒருநாள்
கெண்டைகள் விழிகண்டு துள்ள, கூந்தலில்
மண்டும் வண்டுகள் கண்ணில் மயங்கவும்
மின்னற் கைகளால் விலக்க, நீரில்
கண்ட முகத்தைக் கண்டு நாணிக்
கல்லெறிந்து முகம் தேடியபடி
ஆற்றங் கரையில் ஆறே உயிர்த்ததுபோல்
தன்னைப் புறந்தள்ளிப் பாயும் கவிதையில்
தானே மயங்கிக் கிடக்கும் கவிஞன்போல்

அந்த மாலைப் பொழுதுகளில்
அவள் தென்படுவாள்
அடுத்தநாள் மாலை
அந்த மாலையாய் இருக்காது
அதற்கு அடுத்த நாள்
மாலையே இருக்காது
ஆனாலும் மாலை மீண்டும் வருமென்று
ஆற்றுக்கும் மீனுக்கும் காற்றுக்கும் தெரியும்

நேற்றைய நிகழ்வின் நினைப்புத்தானே
இன்றைய வெறுமையை, நாளைய மறுப்பைக்
கடப்பதற்கான சுவாசம்?

அவற்றைத் தாண்டி அங்கே நின்றால்
ஆற்றங் கரையில் அவள் இருப்பாள்
அலைகள் புரளப் புன்னகைத்தபடி..

அப்படித்தானே கண்ணே?

படத்திற்கு நன்றி

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சில நாட்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *