ஸ்ரீஜா வெங்கடேஷ்

ஒரு ஆரவாரமற்ற அழகிய கிராமத்தின் அரசு மருத்துவமனை. தூய வெண்மையான மேலங்கியில் தேவதை போல் நின்றிருந்தார் மருத்துவர் மாலதி. சிக்கலான கேஸ்களை எல்லாம் குணப்படுத்திவிடும் கைராசிக்காரி என்ற பெயர் பெற்றிருந்தார் அவர். வெள்ளைக் கோட்டில் கம்பீரமாக இருந்த அவரை ஒரு குடும்பம் சூழ்ந்து கொண்டு “அம்மா நீங்க தான் தாயீ எங்க குல தெய்வம். எல்லா டாக்டருங்களும் கைவிட்ட என் புள்ளய பத்து காசு செலவில்லாமே காப்பாத்திக் கொடுத்துட்டீங்க அம்மா. உங்களுக்கு நாங்க என்ன கைம்மாறு செய்வோம் தாயீ” என்று உணர்ச்சி வசப்பட்ட குரலில் சொல்லிக் கொண்டிருந்தாள் ஒரு தாய். தன்னால் இயன்ற அளவு சில பத்து ரூபாய்த் தாள்களையும் மாலதியின் கைகளில் திணித்தாள்.

அதை வாங்க மறுத்த மருத்துவர் மாலதி “அம்மா உங்களுக்கு சேவை செய்யத்தான் அரசாங்கம் எனக்கு நல்ல சம்பளம் தருது. உயிர்களைக் காப்பாத்தத்தானே நாங்க படிச்சுட்டு வந்திருக்கோம். இதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல. குழந்தைக்கு நல்ல சத்துள்ள ஆகாரமாக் குடுங்க. வீட்டையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையா வெச்சிக்கிடுங்க , எல்லாம் சரியாய்டும்” என்று சொன்ன அவரை வணங்கி விட்டு விடைபெற்றுக் கொண்டது அந்தக் குடும்பம்.

“ஏய் மாலு ஏந்திரிடி! சீக்கிரமே எழுப்பி விடு படிக்கணும்னு சொன்னியே” என்ற அம்மாவின் கட்டளைக் குரல் மாலதியை கனவுலகத்திலிருந்து கீழிறக்கியது. கனவில் திளைத்து மலர்ந்திருந்த அவள் கருவிழிகள் நிஜத்திற்கு வருவதற்கு சில வினாடிகள் பிடித்தன. “ஓ! எல்லாமே கனவா? மனதுக்கு எத்தனை இதம் தரும் கனவு? இந்தக் கனவு கண்டிப்பாக நனவாகத்தான் போகிறது” என்ற நினைப்புடன் குதூகலத்தோடு எழுந்து அம்மாவை முத்தமிட்டாள் மாலதி. பல் துலக்கி அம்மா தந்த டீயையும் குடித்து விட்டு புத்தகங்களோடு படிக்க உட்கார்ந்தாள்.


பன்னிரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும் மாலதி நன்றாகவே படிப்பாள். நகரின் கழிவுகளை அப்புறப்படுத்தும் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் மகள் இவ்வளவு நன்றாகப் படிக்கிறாளே என்று பள்ளியில் பல ஆசிரியர்களுக்கு இவள் மேல் ஒரு ஆங்காரம் இருந்தது. அதுவும் மாலதியின் வகுப்பாசிரியர் மகளும் மாலதியின் வகுப்பிலேயே படித்ததால் அந்த ஆசிரியைக்கு இவளைக் கண்டாலே பிடிக்காது. காரணம் அவரின் மகள் தொலைக்காட்சி , சினிமா என்று தன் கவனத்தை சிதற விட்டு படிப்பில் கோட்டை விட்டிருந்தாள். சில பாடங்களில் தேறவேயில்லை. அந்த ஆசிரியர் தன் மகளைத் திட்டும் போதெல்லாம் மாலதியின் சாதியைக் குறிப்பிட்டு “அந்த  …… …  கழுதையே இவ்ளோ நல்லா படிக்குது ஒனக்கு என்ன கேடு” என்று சொல்வதை மாலதியே கேட்டிருக்கிறாள். அப்போதெல்லாம் அவள் மனது வலிக்கும். “ஏன் படிப்பு என்பது கூட உங்களுடைய தனியுரிமைப் பொருளா?” என்று சுடச்சுட பதில் சொல்லத் துடிக்கும் நாவை கஷ்டப் பட்டு அடக்கிக் கொள்வாள். அவர்களுக்கு இப்படி வாயால் பதில் சொல்வதை விட செயலால் உயர்ந்து அவர்களை அண்ணாந்து பார்க்க வைக்க வேண்டும் என்ற கனல் அவளுள் ஒளிரும். ஆனால் அவளை ஊக்குவிப்பதற்கும் ஆசிரியைகள் இல்லாமல் இல்லை.

மாலதிக்கு கோட் (தமிழில் மேலங்கி என்று சொல்லலாமா?) என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் மருத்துவர்கள் அணியும் வெள்ளை மேலங்கி மீது அவளுக்கு மாளாக் காதல். ஒரு முறை அவள் அம்மாவுக்கு உடல் நலமில்லாத போது , அவர்களை அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த மருத்துவரிடம் சென்றிருந்தாள் மாலதி. அப்போது அவள் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். வெள்ளை மேலங்கி அணிந்திருந்த அந்தப் பெண் மருத்துவர் நோயாளிகளைக் கையாண்ட விதம் , மற்றவர்கள் அவர்களிடம் காட்டும் மரியாதை , வேதனையோடு வருபவர்களை குணப் படுத்தி அனுப்பும் பாங்கு இவை மாலதியை வெகுவாக் கவர்ந்தன.

அதிலும் அந்த மேலங்கியின் பால் அவள் வெகுவாக ஈர்க்கப் பட்டாள். மற்ற பள்ளிகளில் எல்லாம் மேலங்கி போன்ற ஒரு உடை சீருடையாக அறிவிக்கப் பட்ட போதும் மாலதியின் பள்ளியில் மட்டும் சுடிதாரே சீருடையாக இருந்தது அவளுக்கு அது மேலும் ஏக்கத்தைத் தூண்டியது.மேலங்கியின் மேல் உள்ள ஆசை மருத்துவத் துறையின் மேல் காதலாக வளர்ந்தது. தானும் படித்து மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் வேரூன்றியது. அவள் தன் கனவை மற்றவர்களிடம் கூறிய போது அவர்கள் அவளைக் கேலி செய்தனர். ஆசைப் படலாம் பேராசைப் படக் கூடது என்று அறிவுறுத்தினர். அந்த வார்த்தைகள் அவள் உறுதியை வளர்க்கும் உரமாயின.

இது குறித்து அவள் அப்பாவிடம் பேசினாள். அவர் ” நீ படிடா கண்ணு! நம்மைப் போல அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவங்க நல்லாப் படிச்சு சமூகத்துல ஒரு மரியாதையான இடத்துக்கு வரணும்னு தான் அரசாங்கம் நமக்கு இட ஒதுக்கீடு செய்திருக்கு. நீ கொஞ்சம் கஷ்டப்பட்டு படிச்சு நல்ல மார்க்கு வாங்கினாப் போதும் உனக்கு எப்படியும் ஒரு நல்ல காலேஜுல மெடிக்கல் சீட் கெடச்சிடும் , நான் உன்னைப் படிக்க வெக்கறேன் , நீ டாக்டராகி நம்மைக் கேவலமாப் பேசுறவங்க மொகத்துல கரியப் பூசு ” என்று சொல்லி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மாலதியின் தந்தைக்கு தான் பிறந்த அருந்ததியர் சமூகத்தின் மீது எப்போதும் பெருமை உண்டு. எப்போதாவது அவர் மாலதியையும் அவள் தம்பியையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு அருந்ததியர் இனம் பற்றிக் கூறுவார். மண்ணின் மைந்தர்களாக , பலம் மிக்க வீரர்களாக இருந்த அந்த மக்களை ஆரியர்களின் வர்ணாசிரமம் எப்படி அவர்களை சமூகத்தின் கடைநிலை ஊழியர்களாக்கி சீரழித்தது , ஆரியர்களோடு சேர்ந்து கொண்டு மற்ற மக்களும் எப்படி தம் இனத்தவரை தீண்டத் தகாதவர்கள் ஆக்கினார்கள். என்பதையெல்லாம் விரிவாக எடுத்துச் சொல்வார்.

மாலதிக்கு தங்கள் மூதாதையர் பட்ட துன்பங்கள் கண்களின் நீரை வரவழைக்கும். அந்த நிலை இப்போது கொஞ்சம் மாறி இருந்தாலும் இவர்களை முழுமையாக இன்னும் சமுதாயம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது கண்கூடு. என்னதான் இட ஒதுக்கீடு இருந்தும் , இவர்களில் சிலர் படித்து பெரும் பதவிகள் வகித்தாலும் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்கள் சமூக அங்கீகாரத்திற்காக இன்னமும் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்று அப்பா சொல்வார்.

கிராமப்புற மக்களின் நிலை இன்னும் மோசம் , அவர்கள் விலங்குகளை விட கீழ்த்தரமாக நடத்தப் படுகிறார்கள் , அதிலும் பெண்களின் நிலை மிகவும் மோசம். இரட்டைக் குவளை முறை இன்னமும் சில கிராமங்களில் இருப்பதாக  அப்பா சொல்லக் கேட்டதும் மாலதிக்கு தன் லட்சியம் என்ன என்பது தெரிந்து போனது. ஒரு மருத்துவராகி ஏதாவது ஒரு கிராமத்தில் மக்களுக்கு குறிப்பாக அருந்ததியர் இன மக்களுக்கு சேவை செய்வதே தன் வாழ்வின் லட்சியம் என்று வரித்துக் கொண்டாள்.  அந்த லட்சியத்தை அடைய படிப்பது ஒன்றுதான் அவளூடைய லட்சியத்தை அடைய வழி என்று உணர்ந்து நன்றாகப் படித்தாள்.

அவளுடைய அப்பா அவள் கனவுகளுக்கு குறுக்கே நிற்கவில்லை. தங்கள் சமூகத்தின் விடிவெள்ளியாகத் தன் மகள் விளங்க வேண்டும் என்று அவர் தனக்குள் கனவு கண்டார். அம்மாதான் இவர்களைக் கிண்டல் செய்து கொண்டேயிருந்தாள். ” ஆமா! அப்பனும் பொண்ணும் நல்ல கனவு காணுங்க! நீங்க வாங்குற சம்பளம் உங்களுக்கு குடிக்கவே பத்தாது. இதுல பொண்ணை டாக்குடரு ஆக்கப் போறாராமில்லே”. என்று குத்திக் காட்டினாள்.

ஆமாம்! விவரம் தெரிந்தவராகவும் , விழிப்புணர்வோடும் இருக்கும் மாலதியின் அப்பா குடிப் பழக்கத்திற்கு அடிமையாயிருந்தார். மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக இருக்கும் அவருக்கு வேலை செய்ய மது ஒரு துணைவன். அவர் செய்யும் பணி அத்தகையது. மனிதக் கழிவுகள் வெளியேறும் சாக்கடைகளில் இறங்கிச் சுத்தம் செய்ய வேண்டுமானால்,மனம் மரத்துப் போக வேண்டும். அதற்கு ஒரே வழி மது தான். அதன் போதையில் தன்னைத் தொலைத்தால் தான் அவரால் அந்த வேலையைச் செய்ய முடியும். என்ன செய்வது சுதந்திரம் வந்து அறுபத்து நான்கு வருடங்கள் ஆகியும் அரசியல்வாதிகள் நாட்டை இந்த நிலையில் தானே வைத்திருக்கிறார்கள்.

மாலதியின் அம்மா போன ஆண்டு வரை ஒரு தொழிற்சாலையில் தினக் கூலியாக போய்க் கொண்டிருந்தாள். அங்கு ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மூச்சிறைப்பு ஏற்பட்டு வேலையை விட்டுவிட வேண்டிய நிர்பந்தம். இப்போது அவர்களுக்கு வீட்டு வேலை செய்வதே பெரும்பாடாக இருக்கிறது. “இந்நிலையில் எப்படி தன்னால் மருத்துவம் படிக்க முடியும்? மேல் வருமானத்திற்கு வழியென்ன?”  என்று பலவாறாகக் குழம்பினாள் மாலதி.

அந்தக் கேள்விக்குப் பதில் அகிலா டீச்சர் மூலம் கிடைத்தது. தேசிய மயமாக்கப்பட்ட பல வங்கிகளில் கல்விக் கடன் கொடுக்கிறார்கள். அத்தகைய வங்கி ஒன்றில் தான்  அகிலா டீச்சரின் கணவர்  மேலாளராக இருக்கிறார். அவரிடம் சொல்லி எப்படியாவது மாலதியின் படிப்புக்குத் தேவையான பணம் கடனாக ஏற்பாடு செய்வதாகக் கூறினார் அவர். மேலும் புத்தகங்களுக்கு ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் உதவ முன் வந்தது. மாலதி தன் லட்சியத்தை மிகவும் நெருங்கிவிட்டதாக எண்ணி எண்ணி பூரித்தாள். வானில் சிறகடித்துப் பறந்தாள் , வாழ்வே இனிமையானது அவளுக்கு. இந்த நிலையில் தான் மாலதிக்கு மேற்கூறிய மேலங்கி அணியும் கனவு தோன்றியது.

பன்னிரெண்டாம் வகுப்புப் பரீட்சைகள் முடிந்து விட்டன. மாலதி மிகக் கடினமாக உழைத்துப் படித்திருந்தாள். நிச்சயம் தொண்ணூறு சதவிகிதம் மதிப்பெண் பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது அவளுக்கு. ஆயிற்று இன்னும் பத்துப் பதினைந்து நாட்களில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பப் படிவங்கள் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.மருத்துவப் படிப்பில் சேர்ந்து நனறாகப் படித்து ஒரு சிறந்த மருத்துவராகி தன்னைக் கேலி செய்தவர்களை எல்லாம் தோல்வியுறச் செய்யப் போகிறோம் என்று மனப்பால் குடித்தாள் மாலதி.

அப்போது தான் விதி தன் கொடூர விளையாட்டை ஆடிக் காட்டியது. குடித்துக் குடித்து குடல் , ஈரல் எல்லாம் அழுகிப் போனதால் அவள் தந்தை சிகிச்சைக்கு நேரமே இல்லாமல் ஒரு நாள் இரத்த வாந்தி எடுத்து இறந்து போனார்.  ஒரே நாளில் அவளின் தலையெழுத்தே மாறிப் போனது. தந்தையின் மரணம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது.  ஏற்கனவே அம்மா நோயாளி. தம்பியின் படிப்பு வேறு இருக்கிறது. வீட்டில் மூன்று நபர்கள் சாப்பிட வேண்டும். என்ன செய்வாள் மாலதி? எதற்கென்று அழுவாள் அவள்? தன் எதிர்காலம் கேள்விக் குறியானதேயென்றா? இல்லை குடும்ப பாரம் முழுவதையும் இந்த இளம் வயதிலேயே தாங்க வேண்டி வந்ததே என்றா?

யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காலம் மட்டும் தன்னுடைய கடமையைச் செய்து கொண்டு தான் இருக்கும். அதே காலம் தான் அவர்கள் குடும்பத்தினரின்  இரைப்பையை நிரப்பக் கோரியது. எந்த ஒரு உயிராலும் நிராகரிக்க முடியாத கோரிக்கை அது.

மாலதிக்குத் தலையைச் சுற்றியது. முந்தைய தினம் வரை பிரகாசமாகத் தோன்றிய எதிர்காலம் இப்போது இருளடர்ந்த முட்பாதையாகத் தோன்றியது. அம்மா மீண்டும் வேலைக்குப் போக முன் வந்தாள். ஆனால் அவளால் எதுவும் செய்ய முடியாது என்பதை அவள் உடல் நிலை மாலதிக்கு உணர்த்தியது. அம்மாவை மீண்டும் வேலை செய்யச் சொன்னால் தாயையும் விரைவில் இழக்க நேரிடும் என்று புரிந்து போனது மாலதிக்கு.அந்த சமயத்தில் தான் அவள் தந்தை பணியிலிருக்கும் போதே இறந்து போனதால் அவர் அரசு சார்பாக வேலை பார்த்து வந்த தனியார் நிறுவனம் மாலதியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுக்க முன் வந்தது. அம்மா நோயாளி , தம்பி சிறியவன் எனவே அரசு வேலையை தானே ஏற்றுக் கொள்ள முன் வந்தாள் மாலதி தன் கனவுகளையும் ஆசைகளையும் தீயில் கருகவிட்டுவிட்டு. அம்மாவுக்கும் தம்பிக்கும் கையாலாகாத கோபம் வருத்தம் ஏமாற்றம் எல்லாம் கலந்த ஒரு உணர்வு.  அகிலா டீச்சரோ இவளின் நிலை கண்டு அழுதே விட்டார். மனதை இரும்பாக்கிக் கொண்டாள் மாலதி.

வேலையின் முதல் நாள். நகரத் துப்புரவுத் தொழிலாளர்களின் சீருடையான சாம்பல் வண்ண மேலங்கி அவளுக்குக் கொடுக்கப்பட்டது. வெண்மையான மேலங்கி அணிந்து மருத்தவத் துறையில் பிரகாசிக்க விரும்பிய தன் கனவுகளை நினைத்துப் பார்த்தாள்.கண்களீல் நீர் திரையிட்டது. தன் தம்பியையாவது மருத்துவராக்கி வெள்ளை அங்கி அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்ற உறுதியோடு அந்த சாம்பல் வண்ண மேலங்கியை அணிந்து கொண்டாள் அவள்.

 

 

படங்களுக்கு நன்றி

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “மேலங்கி

  1. மென்மையை கசக்காமல், சொட்டுக்கூட அவசியமில்லாத கழிவிரக்கத்தை நாடாமல், பின்னணி மூலமாகவே முன்னணியை குறிப்பால் உணர்த்திய முத்திரைக்கதை. வாழ்த்துக்கள். ஒரு செய்தி. மாலதியின் உண்மை குடும்பத்தை யான் அறிவேன்.

  2. ஒரு மிக பெரிய விஷயத்தை மிகவும் அற்புதமாக எழுதி உள்ளீர்கள். கஷ்ட படுபவர்கள் பட்டு கொண்டே தான் இருக்கிறார்கள். இந்த சமுதாயம் மாற வேண்டும்.

  3. தங்களின் கட்டுரை மிகவும் அருமை. உழைப்பே உயர்வு தரும் .மாலதியின் கதா பாத்திரம் அருமை. அவள் ஒரு சுமை தாங்கி .

    தன் தம்பியையாவது மருத்துவராக்கி வெள்ளை அங்கி அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்ற உறுதியோடு அந்த சாம்பல் வண்ண மேலங்கியை அணிந்து கொண்டாள் (மாலதி) என்று நினைக்கும் பொது என் மனம் கலங்குகிறது.

    என்றும் அன்புடன்

    திருச்சி ஸ்ரீதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *