இசைக்கவி ரமணன்

images (9)
வாக்கினைத் தந்தனள் வாணி, என்
வாழ்வினை வளம்செய்த வற்றாத கேணி
போக்கெதுவும் புரியாத ராணி, இவள்
புயலிலும் கரைசேர்க்கும் பூப்போன்ற தோணி
நாக்கினை இல்லமாக்கி, நித்தம்
நலமான வார்த்தைகள் நவமாகத் தருவாள்
தேக்கங்கள் இல்லாமலே, நான்
தெம்புமிகு நெஞ்சமுடன் திசையெங்கும் பாடவே!

வாய்பேசி டாதிருந்தேன், பின்பு
வாயிருந் தும்பேச்சு வாரா திருந்தேன்
வாயிருந் தும்பேசியும், நல்ல
வார்த்தையொன் றும்நன்கு வாரா திருந்தேன்
தாயிவள் பொறுத்திடாமல், தேன்
தடவினாள் தாம்பூலம் தரித்துப் பகிர்ந்தாள்
வாயெலாம் வாசகங்கள்! வெற்று
வாழ்வினை வெற்றிவாழ் வாக்கினாள் தேவி!

எண்ணத்தின் பின்னிருக்கும், ஓர்
ஏகாந்த மெளனத்தில் வீணையொலி கேட்கும்
வண்ணமாய்ப் பண்கள் புரளும், ஒரு
வார்த்தைவரும் பார்க்கையில் வரிவரிகள் ஓடும்
கண்ணிமைக் கும்நேரத்தில், மிக
கனமான யுகமொன்று மனம்தடவிச் செல்லும்
கண்முன்பு வந்து நின்று, நல்ல
கவிதை கொடுக்கின்ற கருணையென் வாணி!

வாணியெனில் வார்த்தையில்லை, பிறர்
வாழ்ந்திடப் பயன்படும் வாழ்க்கைநெறி யாகும்
ஏணியாய் வாழவேண்டும், பிறர்
ஏற்றமே சேவையென இன்புறுதல் வேண்டும்
கோணிகளில் தோள்சுமக்கும், வெற்றுக்
குப்பையில் அக்கினிக் குஞ்சொன்று நட்டு
வாணியைச் சரண்புகுந்தால், அங்கு
வருவதே வார்த்தை! வளர்வதே வாழ்க்கையே!

உண்மையில் காதல்கொண்டால், நெஞ்சில்
உருவாகும் சொல்லிலே ஒளிவந்து கூடும்
கண்ணெலாம் தீபறக்கும், வினைக்
காடெரியும், மற்றவர் கவலைகள் பொடிபடும்
பெண்மையைப் போற்றவைக்கும், எந்தப்
பேய்வரினும் அஞ்சாத பெருங்கர்வம் தோன்றும்
உண்ணாக்கில் தேன்சொட்டுவாள், என்
உள்ளமெனும் வெள்ளைக் கமலத்தி லுறைவாள்!

01.10.2014 / புதன் / 15.00

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க