இன்றொரு நாளேனும்

தமிழ்த்தேனீ
Tamil_thenee
அடிமை வாழ்க்கை தந்த அருவருப்பு
அடித்தள மனத்தில் அனலாய்த் தகித்தது
சுழலும் சிந்தை வெறுப்பை உமிழ்ந்தது
விழலுக்கிரைத்த நீராய் வீரம் அமிழ்ந்தது.

வெளியே வந்த வீரம் வெந்து அழிந்தது
சுய இரக்கம் சுட்டுப் பொசுக்கியது
சுதந்திர தாகம் நெருப்பாய்க் கனன்றது
விடுதலை வேட்கை விளைவாய் எழுந்தது.

வெடித்து வெளியே வந்து எரிந்தது
விடுதலை வேட்கை வெறியாய் மலர்ந்தது
குமுறும் எரிமலை சிதறி வெடித்தது
தாயின் விலங்கு தகர்த்து எரிய

தாகம் என்னும் வீரம் பிறந்தது
எங்கும் சுதந்திரம்  என்பதே பேச்சு
தங்கும் உயிர்களும் விட்டதே மூச்சு
பொங்கும் உணர்வுகள் தொட்டதே சீற்றம்.

எங்கும் விடுதலை முழக்கமே ஏற்றம்
எப்படிப் பெற்றோம் இந்த சுதந்திரம்
இந்தச் சுதந்திரம் கொடுமை கொடுமை
இன்றொரு நாளேனும் நினைத்துப் பார்ப்போம்.

வந்தே மாதரம் என்று முழங்கியே
செந்தணல் வெய்யிலில் வெந்து கருகினோம்
விடுதலை வேண்டி மெழுகாய் உருகினோம்
நினைத்துப் பார்த்தால் நெஞ்சு எரியுது.

ஆசன வாயில் அடைக்கம்பைச் செருகினர்
அசிங்க மலத்தை வாயிலே பூசினர்
செக்கை இழுக்கும் மாடுகள் ஆக்கினர்
கழுவிலே ஏற்றிக் கொன்று புதைத்தனர்.

பெண்டு பிள்ளைகள் கொண்டு சென்றனர்
அண்டிய செல்வம் அடித்துத் தகர்த்தனர்
அடிமை நாய்களே என்று அழைத்தனர்
உரிமை என்ற சொல்லே இல்லை.

உடைமை கேட்க உனகென்ன வேலை
என்றே சிரித்து எக்காளம் இட்டனர்
உறவுகள் உடைமை, உயிர், மானம்
எல்லாம் இழந்து பெற்ற சுதந்திரம்.

எல்லாம் மறந்து இன்றென்ன செய்கிறோம்
அன்றவன் ஆக்கினான் நம்மை அடிமை
இன்றோ பலபேர் இன்னும் செய்கிறார்
என்று உணர்வோம் முன்னோர் தியாகம்?

எப்படிக் காப்போம் இந்த தேசம்?
கடமை உணர்ந்தால் காப்போம் தேசம்.
உடைமை ஒன்றே உயிர் மூச்சு
இன்றொரு நாளேனும் நினைப்போம்!

இந்திய முன்னோர் தியாகச் சரித்திரம்
தேசக் கொடியைச் சட்டைப் பையில்
குத்தும் ஊசி சற்றே தவறி மார்பில்
குத்தித் தாள முடியாத வலியைத் தருதே!
முன்னோர் தாங்கிய வலிகளை நினைப்போம்
இன்று நம் நாட்டின் சுதந்திர தினம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.