அமெரிக்க அரசியல் வானில் புதிய மேகங்கள்

0

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை
Nageswari_Annamalaiஅமெரிக்கா என்ற புதிய கண்டம் கண்டுபிடிக்கப்பட்டதும் ஐரோப்பாவிலிருந்து, முக்கியமாக இங்கிலாந்திலிருந்து, பலர் புதிய கண்டத்திற்குக் குடியேறினர்.  புதிய கண்டத்தில் ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருந்த பல பழங்குடியின மக்களை அவர்கள் இடத்திலிருந்து விரட்டி தங்கள் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டனர்.  குடியிருப்புகள் அதிகமாக, அதிகமாக தாங்கள் குடியேறிய இடங்களைக் காலனிகளாக உருவாக்கிக்கொண்டனர்.  தங்களுக்குள் அரசுகளையும் அமைத்துக்கொண்டனர்.  ஆயினும் இந்தக் காலனிகளுக்கு, தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் வணிகத்திற்காகவும், இங்கிலாந்தின் உதவி தேவைப்பட்டது.  இங்கிலாந்து இவர்களுக்கு ராணுவ உதவி அளித்ததோடு இவர்களோடு நடந்துவந்த வணிகத்தையும் கட்டுப்படுத்தி வந்தது.  பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் இவர்கள் இருந்தாலும் இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் இவர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை.  பிரான்ஸோடு இங்கிலாந்து நடத்திய யுத்தத்தால் இங்கிலாந்திற்கு நிறைய பொருள் இழப்பு ஏற்பட்டதால் அரசை நடத்திச் செல்ல இங்கிலாந்திற்கு நிதி தேவைப்பட்டது.  அமெரிக்கக் காலனிகள் உட்பட தன் ஆதிக்கத்தில் இருந்த காலனிகள் மீது வரி விதிக்க இங்கிலாந்து முடிவு செய்தது.  இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்குச் சுங்க வரி விதிக்க இங்கிலாந்து முடிவு செய்ததை அமெரிக்கக் காலனியில் வாழ்ந்து வந்தவர்கள் எதிர்த்தனர்.

அமெரிக்கக் காலனிவாசிகளிடமிருந்து ஏற்பட்ட எதிர்ப்பால் இங்கிலாந்து தேயிலையைத் தவிர மற்ற எல்லாப் பொருள்களின் மீதும் விதித்த வரியை நீக்கிக்கொண்டுவிட்டது.  தேயிலையிலிருந்து தயாரிக்கப்படும் தேநீருக்கு அமெரிக்கக் காலனிவாசிகள் பழகிவிட்டதால் வரி விதித்தாலும் அவர்கள் தேயிலையை வாங்குவார்கள் என்று இங்கிலாந்து அரசு கணக்குப் போட்டது.  ஆனால் ஏற்கனவே இங்கிலாந்தின் ஆதிக்கம் தங்கள் மீது அதிகமாக இருப்பதாக நினைத்த அமெரிக்கக் காலனிவாசிகள், பல வகைகளில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர்.  இப்போது தேயிலைக்கு வரி விதித்ததைச் சாக்காக வைத்துக்கொண்டு இங்கிலாந்தை முழுமையாக எதிர்க்க முடிவு செய்தனர்.

இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவின் நான்கு துறைமுகங்களுக்கு – நியுயார்க், பிலடெல்பியா, பாஸ்டன் மற்றும் சார்ல்ஸ்டன் – ஏழு கப்பல்களில் தேயிலை அனுப்பப்பட்டது.  இந்தக் கப்பல்களை எப்படியும் உள்ளே விடுவதில்லை என்று முடிவு செய்த காலனிவாசிகள் துறைமுகங்களிலிருந்தே அந்தக் கப்பல்களைத் திருப்பி அனுப்ப முடிவு செய்தனர்.  பாஸ்டன் தவிர மற்ற காலனிகளுக்கு அனுப்பப்பட்ட கப்பல்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன.  ஆனால் பாஸ்டன் துறைமுகத்திற்கு வந்த நான்கு கப்பல்களையும் திருப்பி அனுப்ப அனுமதிக்கப் போவதில்லை என்று அப்போது அந்தக் காலனியின் ஆளுநராக இருந்த, இங்கிலாந்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பபட்ட ஆளுநர் (சில காலனிகளுக்கு ஆளுநர்கள் இங்கிலாந்திலிருந்தே அனுப்பப்பட்டனர்) முடிவு செய்தார்.  இவருடைய மகன்கள் இருவர் இந்தத் தேயிலையை அமெரிக்காவில் மொத்தமாக வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.  திருப்பி அனுப்பப் போவதில்லை என்று இவர் எந்த அளவிற்கு முடிவு செய்திருந்தாரோ அந்த அளவிற்குக் காலனிவாசிகளும் திருப்பி அனுப்பியே தீருவது என்று முடிவு செய்திருந்தனர்.  இரவோடு இரவாக இருநூறு காலனிவாசிகள் தேயிலையைச் சேமித்து வைத்திருந்த கிடங்குகளுக்குள் நுழைந்து, தேயிலை சுற்றி வைத்திருந்த பாக்கெட்டுகளைக் கிழித்து எல்லாத் தேயிலையையும் கடலில் எறிந்தனர். கடலில் எறியப்பட்ட தேயிலைக்குரிய விலையைக் கொடுத்தலொழிய பாஸ்டனோடு வணிகம் செய்வதில்லை என்று இங்கிலாந்து அரசு முடிவு செய்தது என்பது ஒரு தனிக் கதை.

தேயிலையை பாஸ்டனில் கடலில் எறிந்த சம்பவத்தை பாஸ்டன் டீ பார்ட்டி (Boston Tea Party) என்று பின்னால் அழைக்கத் தொடங்கினர்.  அமெரிக்கக் காலனிவாசிகள், இங்கிலாந்தை முழுமையாக எதிர்க்கத் தொடங்கி, அமெரிக்கக் காலனிகள் இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற, இந்தச் சம்பவம் ஆரம்பமாக அமைந்ததால் அமெரிக்க அரசியல் வரலாற்றில் இது முக்கிய இடம் வகிக்கத் தொடங்கியது.

2006இல் டீ பார்ட்டி என்று (Tea Party) என்று ஒரு கட்சியை அரசின் மீது அதிருப்தி கொண்டவர்கள் ஆரம்பித்து, தங்கள் கட்சியை பாஸ்டன் டீ பார்ட்டியோடு ஒப்பிட்டுக்கொண்டனர்.  அப்போது காலனிவாசிகள் இங்கிலாந்து அரசை எதிர்த்தது போல் தாங்கள் அரசை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டனர்.  இப்போது இதில் பல பழமைவாதிகள் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள்.  அதிலும் ஒபாமா ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்பட்டதும் இதில் அங்கத்தினர்களாக ஆனவர்களின் எண்ணிக்கை கூடியது.  ஓயாது ஒபாமாவை விமர்சிப்பது இவர்களின் வேலையாக இருக்கிறது.  ஒபாமா அமெரிக்கரே இல்லை என்றும் அவர் கென்யா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் கூறுவோர்கள் இதில் இருக்கிறார்கள்.

ஓபாமா கொண்டுவந்த மருத்துவச் சீரமைப்புச் சட்டம், நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் சட்டம் ஆகியவை இவர்களுக்கு வேப்பங்காயாகக் கசக்கின்றன.  ஏழை மக்களுக்கு அரசு எதுவும் செய்யத் தேவையில்லை என்றும் அரசின் தலையீடு சமூகத்தில் சிறிய அளவே இருக்க வேண்டும் என்றும் முதலாளித்துவ பொருளாதாரமே அமெரிக்காவிற்குச் சிறந்தது என்றும் மேலே குறிப்பிட்ட சட்டங்களைக் கொண்டுவந்த ஒபாமா ஒரு சோஷலிசவாதி என்றும் பிரச்சாரம் செய்கின்றனர்.  முன்னாள் அலாஸ்கா ஆளுநர் சாரா பேலின் போன்றவர்களை வைத்துக் கூட்டங்கள் நடத்தி, மக்களைக் கவர முயல்கிறார்கள்.  சாரா பேலினை ஒபாமாவிற்கு எதிராக 2012 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடச் செய்யப் போவதாகக் கூடப் பேச்சு அடிபடுகிறது.

புதிதாக அமெரிக்காவிற்குக் குடியேறுபவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது இவர்கள் கட்சி.  ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டு வெள்ளை அமெரிக்கர்களின் சொத்துகளாக நடத்தப்பட்டு வந்த ஆப்பிரிக்கர்களுக்கு 1866இல் சுதந்திரம் வழங்கப்பட்டது.  அதையடுத்து 1868இல் அவர்களுக்கும் அவர்களுடைய வாரிசுகளுக்கும் அமெரிக்கக் குடியுரிமை வழங்குவதற்காக அமெரிக்க மண்ணில் பிறந்த எல்லாக் குழந்தைகளும் அமெரிக்கப் பிரஜைகள் என்ற 14ஆவது அரசியல் சாசன திருத்தத்தைக் கொண்டுவந்தனர்.  அப்படி ஏற்படுத்தப்பட்ட திருத்ததையே இவர்கள் மாற்ற வேண்டுமென்று கோருகிறார்கள்.  பணக்கார வெள்ளை அமெரிக்கர்களின் பணத்தை (வரிகள் மூலம்) பெற்று, ஏழை அமெரிக்கர்களுக்கு, குறிப்பாக ஏழைக் கருப்பர்களுக்கு, அரசு கொடுப்பதாக இவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.  பழமைவாதிகள் பலர் இந்த இயக்கத்தில் சேருகிறார்கள்.

அமெரிக்கா என்ற நாடு உருவானதே ஐரோப்பாவிலிருந்து இங்கு குடியேறிய குடியேறிகளால்தான்.  அதன் பிறகு தங்கள் வயல்களிலும் வீடுகளிலும் உழைப்பதற்காக ஆப்பிரிக்காவிலிருந்து பலரை அவர்கள் விருப்பத்திற்கு மாறாகக் கொண்டுவந்து அவர்களைத் தங்களுக்காகக் கடினமாக உழைக்க வைத்தனர்.  தங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் பிற நாடுகளிலிருந்து பலரை தங்கள் நாட்டிற்குள் அனுமதித்தனர்.  அமெரிக்காவின் பலம் ஓங்க, ஓங்க உலகின் பல மூலைகளிலிருந்தும் பலர் இங்கு குடியேறி இந்த நாட்டை மேலும் வளமைப்படுத்தினர்.  குடியேறிகளால் உருவான நாடுகளில் அமெரிக்கா ஒன்றுதான் தடையில்லாமல் உலகின் பல மூலைகளிலிருந்து வந்தவர்களை நாட்டிற்குள் அனுமதித்தது.  இவற்றையெல்லாம் இப்போது இந்த டீ பார்ட்டி அங்கத்தினர்கள் மாற்றப் பார்க்கிறார்கள்.

இந்தக் கட்சியின் பலம் ஓங்கிக்கொண்டே போனாலும் இந்த இயக்கம் நீண்ட நாட்களுக்கு நிலைக்கப் போவதில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.  அவர்கள் கூற்று மெய்யாகும் என்று நம்புவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.