கமல் ரசிகர்களின் சுதந்திர தினக் கொடை
நடிகர் கமல்ஹாசன், இந்தியாவின் 64ஆவது சுதந்திர தினத்தைச் சென்னையில் உள்ள தன் அலுவலகத்தில் 2010 ஆகஸ்டு 15 அன்று கொண்டாடினார்.
தம் ரசிர்கள் முன்னிலையில் மூவண்ணக் கொடியேற்றிய அவர், ரசிகர்கள் சார்பில் சேலைகள், தையல் எந்திரம், மூன்று சக்கர மிதிவண்டி, உறைபனிப் பெட்டி, மாணவர்களுக்கான நாப்கின் எந்திரம் ஆகியவற்றைப் பயனாளிகளுக்கு வழங்கினார்.
கமல்ஹாசன் நற்பணி மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட அன்பர்கள், நாப்கின் எந்திரத்தை வழங்கினர். உறைபனிப் பெட்டியைக் கருநாடக அன்பர்கள் வழங்கினர். கிழக்குக் காஞ்சிபுரம் ரசிகர்கள், தையல் எந்திரத்துடன் சேலைகளையும் வழங்கினர்.
புதுச்சேரி ரசிகர்கள், இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ள நோயாளிகள் இருவருக்குத் தலா ரூ.15 ஆயிரத்தை வழங்கினர். வட சென்னை ரசிகர்கள், மணவர்கள் இருவருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கினர். ராசிபுரம் ரசிகர்கள், 330 மாணவர்களுக்குப் புத்தகங்களை வழங்கினர்.
திருநெல்வேலி ரசிகர்கள், ஜாஸ்மின் என்ற மாணவியின் உயர் கல்விக்காக ரூ.10 ஆயிரம் வழங்கினர். திருவண்ணாமலை ரசிகர்கள், தையல் எந்திரத்தை வழங்கினர். புதுக்கோட்டை ரசிகர்கள், காது கேளாதோர் – வாய் பேச முடியாதோர் பள்ளியில் தண்ணீர்த் தொட்டி கட்டுவதற்காக ரூ.5 ஆயிரம் வழங்கினர்.
திரைப்பட ரசிகர்களை நற்பணியாளர்களாக மாற்றிய வகையில் கமல் மகத்தான வெற்றி அடைந்துள்ளார். கட்-அவுட்டிற்குப் பாலபிஷேகம் செய்வதை விட, எளியோருக்கு இரங்குவதே சிறந்த சேவை எனத் துணிந்த இந்த ரசிகர்கள், பாராட்டுக்கு உரியவர்கள்.