விநோதமான பிரார்த்தனை

0

விசாலம்

Vishalamதில்லியில் ஒரு சமயம் என்னைப் புத்த மத கூட்டம் ஒன்றுக்கு அழைத்திருந்தார்கள். அதில் எல்லோரும் பிரார்த்தனை, தியானம், பின் அவர்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது என்று நேரத்தைப் பிரித்து, நிகழ்ச்சியை அமைத்திருந்தார்கள்.

அதன் பின் செவிக்கு ரசமான உணவு அதாவது பாஸிடிவ் சிந்தனை கொண்ட பாடல்கள், பின் நடனம் என்று பல அம்சங்கள் அதில் சேர்க்கப்பட்டும் இருந்தன. என்னை அவர்கள் வயலின் வாசிக்க அழைத்திருந்தனர். அதன் பாட்டு “ஹே மாலிக் தெரே பந்தே ஹம்…..” சரி, நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்ததே என்று மகிழ்ந்து, முதன் முதலாக அந்தப் புத்த மதக் கூட்டத்திற்குப் போனேன்.

ஒரு அறையில் அழகான அலமாரி, பர்மா தேக்கினால் ஆனது. அதில் பலவிதமான வேலைப்பாடுகள் கண்களைக் கவர்ந்தன. ஊதுவத்தியின்  நறுமணம் ஊரைத் தூக்கியது. அந்த அலமாரியின் உள்ளே ஏதோ பாலி மொழியில் ஒரு மந்திரம் போல் எழுதி இருந்தது. ஒரு தலைவி ஒரு சேகண்டி எடுத்து, மூன்று முறை டண் டண் டண் என்று தட்டினாள். பின் ஒர் கிண்டிபோல் உள்ளதிலிருந்து தெளிவான சற்று நறுமணமுள்ள தீர்த்தம்  எடுத்துத் தெளித்தாள். சங்கு முழங்கியது. நிறைய பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. பின் எல்லோரும் கண்களை மூடிக்கொண்டனர். தியானம்  ஆரம்பமானது.

பின் அவர்கள் ஒரே குரலில் மந்திரம் சொல்ல ஆரம்பித்தனர். ஆஹா, வண்டுகள் ரீங்காரம் செய்வது போல் ஓம் என்ற சத்தம், என் காதில் கேட்டது. அந்த ஹால் முழுவதும் தென்றல் வீசுவது போல், அந்த மந்திர ஒலி வரிசையாக அடுக்கடுக்காய் வந்தது அவர்கள் சொன்ன மந்திரம்

“நம்யோஹோ ரெங்கே க்யூ” இதைச் சற்று மூக்கால் சொல்லுகிறார்கள். நானும்  கூடச் சொன்னேன். இதைத் தினமும் ஜபித்தால் எல்லா விதத்திலும்   வெற்றிதான் என்கிறார்கள். மன அமைதி கிடைக்கவும் இதைச் சொல்கிறார்கள். இதையே வேகம் குறைவாகவும் பின் வேகமாகவும் மொழிகிறார்கள். அவர்களுக்கு இதற்கென்று சில எண்ணிக்கைகள் இருக்கின்றன. அதன் பிரகாரம் செய்கிறார்கள்.

இந்த இயக்கத்தின் தலைவர், மாகிகுச்சி (Makiguchi nikko shonan joshe Toda). பின் கடைசியில் அவர்கள் தங்கள் குருமார்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு முடிக்கிறார்கள்.

ஷோய் ஷோஹோ ந்யோஸீஸோ (nyo  ze  so)
ந்யோஸீ ஷோ ந்யோ ஸோதாய்,
ந்யோ ஸீரீகீ ந்யோஸீ ஸா
ந்யோ சீ இன் ந்யோஸீ என் ,,
ந்யோ ஸீகா ந்யோஸீ ஹோ
ந்யோ ஸீ ஹான் மக் காக்யோ டோ

சேகண்டியால் மூன்று தடவை டண் டண் டண்…. என்று அடித்து முடிவு பெறுகிறது. அந்த ஹாலில் நல்லலைகள் பரவி, என் உடலுக்குள் ஊடுருவிச் செல்வதை நான் உணர்ந்தேன்.

புத்தம்  சரணம்  கச்சாமி
சங்கம்  சரணம் கச்சாமி
தம்மம் சரண கச்சாமி………

அங்கு இருந்த சலவைக் கல்லினால் ஆன புத்தரின் சிலையின் சாந்தமும் கண்கள் மூடிய நிலையில் அமைதியும் புன்னகையில் ஒரு ஆனந்தமும் கிடைக்கப்பெற்றேன்.

பின் சிலர் பிரார்த்தனையைச் சபை முன் வைத்தனர். சில பிரார்த்தனைகள், நியாயமாக இருந்தன. ஆனால் சில, மிக மிக வருத்தப்படும்படியாக இருந்தது. ஒரு பென்மணியின் பிரார்த்தனை, “என் மாமியார் கூடிய சீக்கிரம் எங்களை விட்டுப் போய்விட வேண்டும்.  அப்போதுதான் வீட்டில் நிம்மதி.”

இப்படி ஒரு பிரார்த்தனையைக் கேட்க, அதிர்ச்சியாக இருந்தது. எத்தனை கொடுமை! மாமியாரானாலும் ஒரு மகனுக்குத் தாயல்லவா?

இன்னொரு பிரார்த்தனை வேடிக்கையாக இருந்தது. அப்போது கிரிக்கெட் விளையாட்டு நடந்துகொண்டிருந்தது. இந்திய அணி படு தோல்வியைத் தழுவிக்கொண்டிருந்தது. ஆனால் ஸ்ரீலங்கா அணி மிகப் பிரமாதமாக ஆடியது. இதை மனத்தில் கொண்டு ஒரு பெண்மணி பிரார்த்தனையில் ஸ்ரீலங்கா தோல்வி அடைந்து, இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று வேண்டச் சொல்கிறாள்.

இதெல்லாம் பார்த்தால் ஒரு மாதிரியாக இருந்து மனம் அங்கு ஒப்பவில்லை. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே பிரார்த்தனைக்கு ஆதாரம். “சர்வே ஜனானாம் சுகினோ பவந்து” என்றே பல இடங்களில் ஆன்மீகக் கூட்டம் முடிவடையும். இங்கு வேண்டிய பல அபத்தமான பிரார்த்தனையில் அதிகச் சுயநலமே கண்டேன்.

ஒரு வேளை, நான் போயிருந்த இடத்தில் அப்படி நடந்திருக்கலாம். அதனால் எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கும் என்று முடிவு கட்டுவது நியாயமில்லை. ஆகையால் அங்கு நடந்த மந்திரங்கள், பஜனைப் பாடல்கள், பின் வயிறுக்கும் விருந்து… இவற்றில் திருப்திக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *