கணவனே சகோதரனாக…
விசாலம்
அல்லாவுதீனின் படை சித்தௌடை நோக்கி நகர்ந்தது . ராஜஸ்தானில் சித்தௌட் ராஜபுத்திரர்களுக்கு மிக முக்கியமான ஒரு தலைநகராக இருந்தது . அந்தத் தலைநகரத்தின் அழகும், இயற்கைக்காட்சிகளும், வளமும் , தனமும் முகம்மதியர்களின் கண்ணை உறுத்தின .அதில் அல்லாவுத்தீன் , ராஜா லக்ஷமண சிம்மனை நாட்டிலிருந்து துரத்திவிட்டு தனக்குப்பிடித்தமான , நன்றியுடையவனுமான மாலதேவன் என்பவனுக்கு அந்த ராஜ்ஜியத்தைக்கொடுக்க எண்ணினான் .ராஜா லகஷ்மண சிம்மன் தன் ராஜ்ஜியத்தையும் குடிமக்களையும் மிகவும் நேசித்தார். முகம்மதிய சுல்தான்களுக்கு இவர் எந்த ஒரு விஷயத்திலும் படிந்து வரவில்லை அனாவசியமாக கப்பம் என்ற பெயரில் பணம் பிடுங்கும் செயலுக்கு மறுப்பும் தெரிவித்தார் . இதனால் அல்லாவுத்தீனின் கோபம் அதிகமாகித் திட்டமிட்டபடி லக்ஷ்மண்சிம்மனைத் துரத்திவிட்டான் . சித்தௌட் இப்போது அவன் கையில் . மாலதேவனுக்குப் பரிசாக ‘சித்தௌட்’ கிடைத்துவிட்டது. எந்த ராஜ்ஜியமாக இருந்தாலும் நல்லவர்களுக்கு நடுவில் ஒரு புல்லுருவி இருக்கத்தான் செய்கிறார்கள்.
லக்ஷ்மண் சிம்மன் ஆந்தாபா என்ற காட்டில் குடும்பம் நடத்தி வந்தான். அவரது மகன் அரிசிம்மனும் தன் அழகான மைந்தன் ஹம்மீருடன் காட்டில் வாழும் வாழ்க்கையிலும் அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் ஒரு நிம்மதி இருந்தது. ஒருநாள் . ஹம்மீர் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து மேலே இருக்கும் இலைகளின் அசைவைப்பார்த்துக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அவனது தாத்தா லக்ஷ்மண சிம்மன் வந்து தன் பேரனைப்பார்த்தார் . தன் பேரன் எதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பதாக தெரிய வந்தது .
“ஹம்மீர் இந்தச்சிறுவயதில் என்ன பலத்த யோசனையோ? “
“பாட்டனார் அவர்களே இந்த முகம்மதியவீரர்களை நான் ஒரு நாள் வென்று ஹிந்துக்களைப் பரிபாலிக்கவும் அவர்களுக்கு அபயம் கொடுக்கவும் நினைக்கிறேன் .தவிர என்னுடைய சத்ருவான மாலதேவனைச் சித்தௌடிலிருந்து விரட்டி பழையபடி நாம் அங்கு ஆட்சி புரிய வேண்டும் .அதுவே என் லட்சியம் சரிதானே!”
“ஆமாம் இளவரசனே .உன் லட்சியம் ஈடேற என் வாழ்த்துகள்.”
“உங்களை விரட்டிய அல்லாவுத்தீனுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் . இந்த மாலதேவன் என்னுடைய பரம விரோதி .அவனை நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? ” தன் இரண்டு முட்டிகளையும் இறுக்கி மூடிக்கொண்டு தன் கோபத்தைக்காட்டினான்.
“ஹம்மீர் செல்லமே .கோபம் காரியத்தைக்கெடுக்கும்.கோபத்தைக்கட்டுப்படுத்திக்கொண்டு சிலரை யுக்தியால் ஜயம் கொள்ள வேண்டும் எல்லாம் சரியாகிவிடும். அந்த ‘ ஜய்பவானி’ காத்தருள்வாள்” என்று மறுமொழி அளித்தார் தாத்தா.
அங்கு சித்தௌட்டில் மாலதேவனும் யோசனையில் ஆழ்ந்திருந்தான் . ஹம்மீர் தன் வீரோதியாகிவிட்டதால் எப்படியாவது தன்னிடமிருந்து சித்தௌடை அபகரிக்க முயலுவான் .ஒருநாள் ஒரு பெரிய படை ஒன்று வந்து தன்னை முற்றுகையிடும் என்று எண்ணி ஹம்மீரைத் தன் கைக்குள் போட்டுக்கொள்ள நினைத்தான் .தன் மகளுக்கு அவனை மணம் செய்வித்தால் இந்த நிலைமை நேராது என்று நினைத்து அதற்குத் தகுந்தாற்போல் திட்டம் தீட்டினான் .
“யார் அங்கே ! என்று கைகளைத்தட்டியபடி சேவகர்களை ஒரு புரோகிதரை அழைத்து வரும்படிபணித்தான். புரோகிதர் அழைக்கப்பட்டார் . அவரிடம் மாலதேவன் இரண்டு தேங்காய்களும் ஒரு கடிதமும் ஹம்மீருக்குக் கொடுத்தனுப்பினான் . புரோகிதர் ஹம்மீரைத்தேடிச்சென்றார் . அவனிடம் தன்னிடமிருந்த தேங்காய்களைக் கொடுத்து செய்தி ஓலையயும் கொடுத்தார் . அவன் அதைப்பிரித்துப்படித்தான்
” என் அன்பு ஹம்மீர் . நீ இனி என் விரோதி அல்ல . என் மகள் உன்னை எங்கேயோ பார்த்திருக்கிறாள் . அதிலிருந்து உன்னையே நினைத்து ஏங்குகிறாள் .உன்னையே மணம் செய்துக்கொள்ள விரும்புகிறாள். உடனே சித்தௌடுக்கு புறப்பட்டு வா.உன்னை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று அதில் எழுதப் பட்டிருந்தது.
ஹம்மீருக்கு தன் தாத்தா ஆண்ட சித்தௌடைப் பார்க்க மிக ஆசையாக இருந்தது . அத்துடன் தன் பாட்டனார் இருந்த அரண்மணை , தங்கள் குடும்பம் கும்பிட்ட கோயில்கள் , என்று பல இடங்களைப் பார்க்கும் ஆர்வம் எழுந்தது . ஆகையால் அங்கு போக ஒப்புக்கொண்டு புறப்பட்டான். சித்தௌடில் நுழைந்தான் . அங்கு ஒரு தோரணமோ அலங்காரமோ இல்லை . மணப்பெண் கமலினி அழகு பிம்பமாக அலங்கரிக்கப்பட்டிருந்தாள் .ஒரு சாதாரணமான கோயிலில் ஒருவரும் அழைக்கப்படாமல் எளிய முறையில் கமலினி ஹம்மீருக்கு மாலையிட்டாள். இது என்ன இப்படி ஒரு திருமணம் என்று ஹம்மீரும் வியந்தான்.
முதலிரவு , இரண்டு கட்டில்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஹம்மீர் தன்னுடைய சிவப்பு வெல்வட் உடையில் அழகான பாரம்பரிய தலைப்பாகையுடன் அமர்ந்திருந்தான் .மூன்று வரிகள் கொண்ட முத்துமாலை அவன் கழுத்தை அலங்கரித்தது காதில் குண்டலங்கள் இங்கும் அங்கும் அசைந்தன கமலினியை மணந்ததற்கு அவனுக்கும் சில காரணங்கள் இருந்தன. தன் பாட்டனார் ஆண்ட சித்தௌடைக் கைப்பற்ற இது சுலபமான வழி என்றும் நினைத்தான்.
மணப்பெண் கமலினியின் நெற்றி பெரிய சூடாமணியால் அலங்கரிக்கப்பட்டு விளங்கியது. அது அவள் அழகை மேலும் கூட்டிக் காட்டியது..கண்ணாடிகளும் நல்முத்துக்களும் அடங்கிய பெரிய காக்ரா என்ற பாவாடையும் , தலையை மூடியபடி நெற்றி வரை தொங்கியபடி இருந்த மெல்லிய சிவப்பு மேலங்கியும் பார்ப்பவரைக்கவரசெய்யும்படி இருந்தன . மெல்லியதாக இருந்த மேலங்கி வழியாக அவள் முகம் ஒரு நிழல் போல் தெரிய ஹம்மீர் அவளை நெருங்கத்துடித்தான் .
அப்போது கமலினி தன் இரு கைகளைக்கூப்பினாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியபடி இருந்தது . “மஹராஜ் என்னை மன்னித்து விடுங்கள்”
” ஏன் ! என் கண்மணியே நீ ஒரு தவறும் செய்யவில்லையே”
” மஹராஜ் உங்கள் மனைவியாக ஆகி உங்களுக்குச் சேவை செய்ய எனக்குக்கொடுத்து வைக்கவில்லை நான் மிக துர்ப்பக்கியசாலி”
” மஹாராணி ! ஒன்றும் புரியவில்லையே . சற்று விளக்கமாகச்சொல்வாயா?”
“என் தந்தை அதான் மால்தேவ்ஜி , உங்கள் எதிரி .உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். உங்களைத் தன் கையில் போட்டுக்கொள்ளவும் உங்களை பொம்மலாட்ட பொம்மைப்போல் ஆக்கவும் செய்த சூழ்ச்சி இது ,”
” கமலினி நீ என் மேல் காதல் கொண்டிருக்கிறாய் .என்னை விவாகம் செய்துக்கொள்ள ஆசைப்படுகிறாய் என்றுதானே உன் தந்தை மால்தேவ்ஜி செய்தியனுப்பினார்.”
“அரசகுமாரரே .எல்லாம் பொய் .எனக்கு இப்படி ஒரு ஆசை ஏற்பட்டதேயில்லை. ஏற்படவும் கூடாது”
“ஏன் கமலினி? ஏன் அப்படிச்சொல்கிறாய்?”
” என் திருமணம் என் சிறு வயதில் நடந்துவிட்டது . நான் பால்யவிதவை என் கணவர் பட்டி வம்சத்தைச் சேர்ந்த சர்தார் . எனக்கு நடுவில் அக்னி எரிந்துக்கொண்டிருந்த ஞாபகத்தைத்தவிர வேறு ஒன்றும் நினைவில் வரவில்லை இருப்பினும் அக்னி சாக்ஷியாக நடந்த விவாகத்திற்கு நான் மரியாதைக்கொடுக்க வேண்டும் .அலட்சியம் செய்வது தவறாகும் என் கணவர் முகம் கூட எனக்கு ஞாபகமில்லை . ஆனாலும் அவர் என் கணவர் .பரலோகம் போய்விட்டார் . என் கற்பைக்காப்பாற்றுவது உங்கள் கையில். தர்மத்தை விட்டும் நம் கலாசாரத்தை விட்டும் விலக நான் விரும்பவில்லை” என்று சொல்லியபடியே கமலினி தேம்பித்தேம்பி அழலானாள்.
தன் மனைவியானவள் அழகுப்பொட்டகமாகத் தன் எதிரே நிற்கிறாள்.அவளை அடைய ஹம்மீருக்கு எல்லா உரிமையும் உண்டு ஆனாலும் அவன் மிகவும் சாந்தமாக இருந்தான் . அவள் மேல் ஏற்பட்ட இரக்கம் மேலும் அதிகமாகியது .
“கமலினி பயப்படாதே உன்னை நான் ஒன்றும் செய்ய மாட்டேன் .உன் கற்புக்குக் களங்கம் விளைவிக்க மாட்டேன் நீ ராஜபுத்ர வம்சத்தின் தர்மத்தை நிலை நாட்டினாய் . இன்று முதல் நீ என் மனைவியல்ல .என் சகோதரி ” என்றான் ஹம்மீர். கமலினி தன் சிவப்பு அங்கியிலிருந்து கொஞ்சம் கிழித்து “ராக்கி” கட்டி தன் கணவனையே சகோதரனாக்கிக்கொண்டாள் . அடுத்தாக சித்தௌடைக்கைப்பற்ற வேண்டும் . என்ன செய்வது ! தன் சகோதரி கமலினியிடம் யோசனை கேட்டான் அவளும் ஒரு வழி சொன்னாள்
“சகோதரரே என் தந்தையிடம் ஜால் என்ற தளபதி இருக்கிறார் , மகா சூரர் .அவர் பங்கு பெறும் போரெல்லாம் வெற்றிதான் . நீங்கள் அவரைத்திருமண வரதக்ஷிணையாகக்கேட்டு வாங்குங்கள் .என் தந்தை ஒன்றும் யோசிக்காமல் கொடுத்து விடுவார் , அதன் பிறகு என் தந்தையை நீங்கள் போர்க்களத்தில் எதிர் கொண்டால் வெற்றி உங்களுக்குத்தான்” என்றாள்.
அவள் சொல்படியே ஹம்மீர் தன் திருமணத்தின் வரதக்ஷணையாக ” ஜால்” என்ற மகாவீரனைப்பெற்றுக்கொண்டான் . ஜால் மாலதேவனின் மிகச்சிறந்த தளபதி .அவனைக்கொடுக்க மாலதேவனுக்கு மனது இல்லாவிட்டாலும் திருமண வரதக்ஷணையாக அந்த வீரனைக்கொடுக்கும்படி ஆயிற்று .
பின் என்ன! சகோதரி கமலினியின் உதவியாலும் ஜால் என்ற வீரனாலும் ஹம்மீர் மாலதேவனுடன் போர் செய்து அவனை சித்தௌடை விட்டே விரட்டினான் . அவன் பாட்டனார் சொன்னது போலவே சித்தௌட் திரும்ப ஹம்மீருக்குக்கிடைத்துவிட்டது . தன் காலம் முடியும் வரை ஹம்மீரும் கமலினியும் சகோதர சகோதரியாகவே இருந்து ராஜ்ஜியத்தை ஆண்டு வந்தனர். அவர்களது இந்த நூதன வரலாறு ராஜபுத்ர சரித்திரத்தில் ஒரு விசேஷ இடம் பெற்றுவிட்டது .
இதுவரை கேட்டிராதா கதை