முக்தி தலம் சுப்பிரமண்யா – 2
— விசாலம்.
நாங்கள் இப்போது பெரிய கோயில் வாசலில் வந்து விட்டோம். அப்போது ஒரு அர்ச்சகர் உள்ளே போய்க்கொண்டிருந்தார்.
அவரை அழைத்து “குருக்களே! உள்ளே முறையாகத் தரிசிப்பது எப்படி எதை முக்கியமாகப் பார்க்க வேண்டும் என்று கொஞ்சம் விளக்குங்கள். அதன்படி செய்தால் சரியான நேரத்தில் நாங்கள் எல்லாம் பார்த்து முடிக்க முடியும்” என்றேன்.
“பேஷா சொல்றேன். உள்ளே கிழக்கு நோக்கி திருச்சன்னிதி இருக்கும். அதில் அருள் புரியும் சுப்பிரமண்யரைத் தரிசிக்க வேண்டும். அந்த கர்பக்கிரகத்துக்குள் செல்ல ஒரு பெரிய மண்டபத்தைக் கடக்கவேண்டும். மண்டபம் வரும் முன் அங்கு அருகில் ஓடும் தர்ப்பணா நதியையும் பார்த்து வரலாம். நான் தற்போது உள்ளே வரவில்லை. ஆலயத்தில் பூஜை செய்ய அன்றைய முறை குருக்கள் ஆலயத்திலேயே வசிக்க வேண்டும் இன்று என் முறையில்லை. “
“பரவாயில்லை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். மிக்க நன்றி” என்றபடி உள்ளே நகர்ந்தோம். மண்டபத்தின் வாயிலில் இரு யானைகள் எங்களை வரவேற்றன. அவை அசையவில்லை. அருகில் செல்ல அவை இரு கல் யானைகள் என்று தெரிய வந்தது. கம்பீரமாக மீசையுடன் இரு தூவரபாலகர்கள் நம்மை வரவேற்கிறார்கள். உள்ளே சுமார் இருபது அடி உயரமான வெள்ளிக்கவசத்துடன் கூடிய பெரிய கம்பம் நிற்கிறது.
“இதுதான் துவஜஸ்தம்பமோ” என்று நான் சொல்ல அங்கிருந்த ஒரு பெரியவர், “இல்லை இதன் பெயர் “கருடஸ்தம்பம்” நீங்கள் பிரதக்ஷிணம் செய்யும் போது இதையும் சேர்த்து செய்யுங்கள்” என்றார்.
“இப்படி செய்ய எதாவது காரணம் இருக்க வேண்டுமே. அப்படி இருந்தால் நான் அதைக்கேட்க ஆர்வமாக இருக்கிறேன்” என்றேன்.
“ஆரம்பிச்சுட்டாயா? எந்தக்கோயில் போனாலும் எதாவது புராணம் உனக்கு தெரியணும். நேரமாச்சு கிளம்பு,” என்றார் என் கணவர்.
ஆனால் நான் விடவில்லை. அதைத் தெரிந்துக்கொண்டு தான் அங்கிருந்து நகர்ந்தேன். அவர் சொன்னது, கருவறையில் வாசுகி நாகம் இருக்கிறது அதன் விஷ மூச்சினால் மக்களுக்கு ஒரு ஆபத்தும் வராமல் இருக்க கருட மந்திரத்தைச் சபித்து இந்தக்கம்பத்தைப்பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.
பின் நாங்கள் சென்றது உமாமகேஸ்வரரின் சன்னிதி. ஆஹா என்ன அழகு! உமா தேவி ஈஸ்வரனின் தொடையில் அமர்ந்திருக்க சுவாமி அம்பிகையை அணைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கரத்தில் மானும், மழுவும் இருக்க; அம்பாள் அங்குசமும், தாமரை மலரையும் தன் கரங்களில் வைத்திருக்கிறாள். அம்பிகையின் முகம் வெட்கப்படும் பாவத்துடன் புன்னகை புரியும் கோலம் நம்மை பரவசப்படுத்துகிறது. அங்கிருந்து மெள்ள நகர்ந்து என் கைகளைக்கூப்பிய வண்ணமே முக்கிய சன்னிதியான சுப்பிரமண்யன் இருக்கும் இடத்திற்கு வந்து நின்றேன். திரை போடப்பட்டிருந்தது. உள்ளே மந்திரங்களின் ஒலியும் அத்துடன் ‘டண் டண்’ என்ற வெண்கல மணியின் நாதமும் என்னை எங்கேயோ அழைத்துச்சென்றது. ‘ஒம் சரவணபவ’ என்று என் வாய் முணுமுணுக்க ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா’ என்ற சப்தம் அங்கு ஒலிக்க திரை விலகியது. அடுக்கு தீபாராதனையாக ஆரத்தி எடுக்கப்பட்டதால் அங்கு பேரொளி வீச சுப்பிரமண்யன், ஞானபண்டிதன், சண்முகன் மயிலின் மேல் அமர்ந்திருந்து அருள் புரிந்தார். அந்த மயிலின் கீழே வாசுகி நாகம் அமர்ந்திருக்கிறது. வாசுகி நாகத்திற்கு கீழே ஆதிசேஷன் இருக்க, கீழே பல சாளக்கிராமங்கள் இருக்கின்றன. கர்ப்பகிரகத்தில் ஒரு பாம்பு புற்றுமிருக்கிறதாம் அங்கிருக்கும் புற்று மண் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
இங்கு கிடைத்த தலபுராணத்தில் இந்தக்கோயிலின் சிறப்பைப் படித்தேன். ஒரு சமயம் வாசுகியை மஹாவிஷ்ணுவின் வாகனமான கருடன் பார்த்துவிட்டு துரத்த ஆரம்பித்தது. வாசுகி பயந்தபடி குமார பர்வதத்தினுள் இருக்கும் ஒரு குகையில் போய் ஒளிந்துக்கொண்டு சிவபெருமானைக்குறித்து தவம் இருந்தது. பரமேஸ்வரனும் வாசுகி முன் தோன்றி “நீ இங்கேயே இரு. சுப்பிரமண்யன் உன்னை அருள் பாலிப்பான். அவனருளால் உனக்கு கருடனிடமிருந்து ஒரு ஆபத்தும் இருக்காது நீ இங்கு குமருனுடன் இருக்க பக்தர்கள் உன்னையும் சேர்த்து பூஜிப்பார்கள் ” என்றார். முருகனும் அதை ஆமோதித்து “வாசுகியுடன் கூடியிருக்கும் என்னை வணங்குபவர்கள் சகல சௌபாக்கியங்களும் பெறுவர்” என்றார்.
படங்கள் உதவிக்கு நன்றி: http://temple.dinamalar.com/en/new_en.php?id=99